Published:Updated:

`ஈசலை கீச்சான் இப்படியும் சாப்பிடுமா?!' பறவை நோக்கலில் கிடைக்கும் சுவாரஸ்ய அனுபவங்கள்

பறவை நோக்கல்
News
பறவை நோக்கல் ( Pixabay )

ஒருமுறை வடகிழக்குப் பருவமழை முடியும் மாலை வேளையில் பறவை நோக்கலின்போது ஈசல்கள் அதிகமாக வெளியில் வந்தன. நான் பார்த்து ரசித்துக் கொண்டிருந்த சின்ன கீச்சான் ஒன்று விநோதமான முறையில் உணவு சேகரித்ததைக் கண்டு வியந்துபோனேன்.

புறச்சூழலைப் பற்றிய அறிவியல் அறிவை கற்றுத்தரும் அறிவுக் கலைகளில் ஒன்று பறவை நோக்கல் அல்லது பறவை பார்த்தல். இயற்கையை ரசிக்கத் தெரிந்த, பறவைகளை நேசிக்கும் தன்மையும் கொண்ட எவரும் பறவை நோக்கல் என்னும் இந்த அறிவியல் அறிவுத்தளத்தில் மகிழ்ச்சியாகப் பயணிக்கலாம்.

பறவை நோக்கல் என்பது தொடக்கத்தில் பொழுதைக் கழிப்பதற்கானதாகத் தோன்றினாலும், நாளடைவில் அது நம்மை ஆராய்ச்சி செய்யும் மனநிலைக்கு அழைத்துச் சென்றுவிடும்.

பறவை நோக்கல்/ பூநாரைகள்
பறவை நோக்கல்/ பூநாரைகள்
Pixabay

பறவை நோக்கல் என்ற அறிவு சார்ந்த தளம், நம்முள் சமூக அக்கறையை உறுதியாக ஏற்படுத்திவிடும். ஆம், பறவைநோக்கலில் மூழ்கித் திளைக்கும்போதுதான் புறச்சூழல் பற்றிய உண்மைத் தன்மையை உறுதியாக நாம் அறிந்துகொண்டு மதிப்பிட முடிகிறது.

பறவைகளைப் பற்றி அறிந்துகொள்ள நமக்கு தேவையானவை: முதலில் ஆர்வமும் பொறுமையும்; பைனாகுலர் என்ற இரு கண்ணோக்கி 8×40 என்ற அளவும் இருந்தால் போதுமானது. பறவைகள் பற்றிய படங்களுடன்கூடிய கையேடு. குறிப்புகளை எழுதுவதற்கான குறிப்பேடு ஒன்று.

பறவை நோக்கல் என்ற அறிவியல் கலையில் கவனிக்க வேண்டியவை: பறவையின் பொதுவான நிறம், உடல் அளவு, கண்களின் நிறம், கால், இறகுகள், வாலின் அமைப்பு, கழுத்து, அலகுகளின் நீளம் நிறம் முதலியவை.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

பார்த்த இடம், நேரம், நாள், பறவையின் வாழிடம், பறவைகள் நீரில் உள்ளனவா அல்லது நிலத்தில் உள்ளனவா அல்லது மலைப்பகுதியில் உள்ளனவா என்பதையும் குறிப்பிட வேண்டும்.

பறவைகளின் உணவுமுறைகளைக் குறிப்பெடுக்கலாம். தொடர்ந்து இது போன்ற குறிப்புகளை எடுத்த பின்னர், நாம் நம்மிடம் உள்ள பறவைகளின் படங்கள் அடங்கிய கையேட்டின் மூலம் அதன் பெயரைத் தெரிந்துகொள்ளலாம்.

பறவைகளே பெரும்பாலும் புறச்சூழலைப் பேணுகின்றன. இதன்மூலம் மனிதனின் வாழ்க்கைக்கும் அதிகமாக நன்மை பயக்கின்றன.

நாளடைவில் நாம் பார்த்த பறவைகள் எதை உணவாகச் சாப்பிடுகின்றன என்பதையும் அதன் பறக்கும் விதத்தையும் அதனுடைய குரலொலியையும் நம்மையறியாமலேயே உள்வாங்குவோம். பின்னர் இப்பறவைகள் என்ன செய்கின்றன? எதற்காக இந்த வண்ணங்களைக் கொண்டுள்ளன, பல்வேறு விதமான பறவைகளின் நோக்கம் என்ன என்பதை ஆய்வு செய்தால், பறவையியலின் அறிவியல் நமக்குப் புலப்படும். பறவைகளின் வாழிடம், உணவு முறை எனக் கவனிக்கத் தொடங்கும்போதுதான் பறவைகள் நமக்கு எவ்வாறு நன்மை பயக்கின்றன என்பதையும் அதன் வாழிடங்கள் ஏன் காப்பாற்றப்பட வேண்டும் என்ற புரிதலும் நமக்குள் ஏற்படும். அதுமட்டுமல்லாமல் பறவைகளை அழிவிலிருந்தும் தடுக்க வேண்டுமானால் நாம் பறவைகளுடைய வாழ்க்கை முறைகளை உற்று நோக்கித் தெரிந்துகொண்டால் மட்டுமே காப்பாற்ற முடியும். அதற்குப் பறவை நோக்கல் ஓரளவுக்கு உதவுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பறவைகளால் மரங்கள் பரவலாக்கப்பட்டு காடுகள் உயிர்ப்போடு இருக்கின்றன. பறவைகள் பூச்சிகளை வேட்டையாடி உணவாக்கிக் கொள்வதால் பூச்சிகள் கட்டுப்படுத்தப் படுகின்றன. இதன் மூலம் விவசாயத்துக்கு நன்மை ஏற்படுவதால் உணவு உற்பத்திக்கும் பறவைகள் உதவுகின்றன.

அயல் மகரந்தச் சேர்க்கையிலும் பறவைகள் முக்கிய பங்காற்றுகின்றன. மேலும், சில கொறி விலங்குகளை வேட்டையாடுதல், நீர் நிலைகளின் வளம் காத்தல் போன்ற முக்கியமான பணிகளைப் பறவைகளே லட்சக்கணக்கான ஆண்டுகளாகச் சிறப்பாகச் செய்து வருகின்றன.

கான மயில், ராஜஸ்தான்
கான மயில், ராஜஸ்தான்
Mohib Uddin

பறவைகளை முறையாகப் பார்த்து பதிவு செய்வதை ஆண்டு முழுவதும் செய்யலாம். இதன் மூலம் வலசை வரும் பறவைகளின் நடவடிக்கைகளையும் உள்ளூர் பறவைகளின் வாழ்க்கை முறையையும் பதிவு செய்யும்போது அவற்றின் இருப்பு உறுதிசெய்யப்பட்டு அதன்மூலம் சூழல் சீர்கேடுகள் மதிப்பிடப்படுகிறது. பறவைகளைப் பார்த்து முறையாகப் பதிவு செய்வதால் நாமும் இவ்வுலகின் சூழலுக்கு நம்மாலான உதவியைச் செய்ய முடிகிறது எனப் பெருமை கொண்டு மனம் மகிழலாம்.

பகலிலும் இரவிலும் கானகங்களிலும் நீர்நிலைகளிலும் இடையறாது உணவு தேடிச் செல்லும் பறவைகளால்தான் நம் வாழ்வும் கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதை நாம் உணர வேண்டியது அவசியம்.

பறவைகளில் கட்டைவிரல் அளவு சிறிய `பூஞ்சிட்டு'களில் இருந்து கானமயில், பாறு கழுகுகள், இருவாச்சி எனப் பெரும் பறவைகள் வரை இந்தியாவில் சுமார் 1,300 வகைகள் உள்ளன. இவையனைத்தையும் பார்த்து ரசித்து புரிந்துகொள்ள நமக்கிருக்கும் வாழ்நாள் போதாது.

பறவைநோக்கல் சிறந்த அறிவியல் அறிவுத்தளம். இந்த நுழைவாயிலில் நாம் நம்மை நுழைத்துவிட்டால் நம்மையறியாமலேயே எளிமையான வாழ்க்கை முறைக்கு மாறி அழகான மகிழ்ச்சியான புது வாழ்க்கை முறையில் புதிய உலகை வலம் வரலாம்.

பெரும் பொருள்செலவுகள் எதுவுமில்லாத மனதிற்கினிய எளிய கானகப் பயணங்களும் அறிவியல் நுட்பத்தை அறிந்துகொண்ட அமைதியான வாழ்க்கை முறையையும் பறவைநோக்கல் நமக்கு கற்றுக் கொடுப்பதோடு அறிவுத்தளத்தில் நம்மை படைப்பாளிகளாகவும் மாற்றிவிடும் என்பதே இதன் சிறப்பு.

ஈசலைப் பிடித்து முள்ளில் குத்தி வைக்கின்ற சின்னக் கீச்சான்
ஈசலைப் பிடித்து முள்ளில் குத்தி வைக்கின்ற சின்னக் கீச்சான்
க.வி.நல்லசிவன்

பறவைநோக்கலின் போது நாம் புதிதாகப் பல்வேறு விஷயங்களைக் கற்றுக்கொள்ள முடியும். ஒவ்வொரு பறவையின் அழகும் அறிவார்ந்த அதன் செயல்களும் நம்மை வியக்க வைக்கும். ஒருமுறை வடகிழக்குப் பருவமழை முடியும் மாலை வேளையில் பறவை நோக்கலின்போது ஈசல்கள் அதிகமாக வெளியில் வந்தன. நான் பார்த்து ரசித்துக்கொண்டிருந்த சின்ன கீச்சான் ஒன்று விநோதமான முறையில் உணவு சேகரித்ததைக் கண்டு வியந்துபோனேன். அந்தப் பறவை ஒவ்வோர் ஈசலாகப் பிடித்து வந்து முட்களில் குத்தி சேகரித்து வைத்துவிட்டு பின்னர் ஒவ்வொன்றாக உண்பதைப் பார்த்து மகிழ்ச்சியோடு அதைப் பதிவு செய்தேன். மற்றோர் இடத்தில் குளத்துக் கரையையொட்டிய நீர்த் தாவரத்துக்குள் நின்றிருந்த மயில் உள்ளான் என்ற நீர்ப்பறவையின் அழகைக் கண்டு மெய்ம்மறந்து ரசித்துள்ளேன். அதன் கண்கள் மிகமிக அழகாக இருக்கும். நீண்ட அலகும் அடர்த்தியான வண்ணங்களும் பார்த்துக்கொண்டே இருக்கத் தூண்டும்.

பறவைநோக்கல் அறிவியல் அறிவைக் கொடுப்பதோடு மனதிற்கினிய காட்சிகள் மூலம் நம் மனதையும் மகிழ்வோடு வைத்துக்கொள்ள உதவும் என்பதே உண்மை.