Published:Updated:

ஒரு எலி கூட இல்லாத ஆல்பர்ட்டா மாகாணம்; ஊர் மக்கள் ஒன்றுசேர்ந்து சாத்தியமாக்கியது எப்படி?

எலி பிரச்னையே இல்லாத ஆல்பர்ட்டா மாகாணம் ( Pixabay )

இலவச எலி மருந்து, எலிகளைக் கண்டுபிடிப்பதற்கான பேட்ரோல் என்று எலிகளுக்கு எதிராக மிகவும் கடுமையான அணுகுமுறையை ஆல்பர்ட்டா மாகாணம் கைக்கொண்டுள்ளது.

ஒரு எலி கூட இல்லாத ஆல்பர்ட்டா மாகாணம்; ஊர் மக்கள் ஒன்றுசேர்ந்து சாத்தியமாக்கியது எப்படி?

இலவச எலி மருந்து, எலிகளைக் கண்டுபிடிப்பதற்கான பேட்ரோல் என்று எலிகளுக்கு எதிராக மிகவும் கடுமையான அணுகுமுறையை ஆல்பர்ட்டா மாகாணம் கைக்கொண்டுள்ளது.

Published:Updated:
எலி பிரச்னையே இல்லாத ஆல்பர்ட்டா மாகாணம் ( Pixabay )

கனடாவிலுள்ள ஆல்பர்ட்டா என்ற மாகாணத்தில் உள்ள பெஸ்ட் கன்ட்ரோல் (Pest Control) அமைப்புக்கு ஒரு நாள் ஓர் அழைப்பு வருகிறது. அந்த அழைப்பை எடுத்த அங்கு பணிபுரியும் ஃபில் மெர்ரில் என்பவர் தகவலைக் கேட்டதும் அதிர்ச்சியடைகிறார். அதேநேரம் இப்படியான எலி வேட்டையில் ஈடுபட்டு பல நாள் ஆனதால் அவருக்கு மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. இந்த விஷயம் குறித்து 24 மணிநேர சேவை எண்ணில் தகவல் தெரிவித்த நபர், அவர் பார்த்த எலி ஆல்பர்ட்டாவிலுள்ள கால்கரி என்ற பகுதியிலுள்ள ஒரு காகித மறுசுழற்சி ஆலையில் ஒளிந்திருப்பதாகச் சொல்கிறார். மெர்ரில் அங்கு சென்று ஆராய்ந்தபோதுதான், ஓர் எலி மட்டுமல்ல, மொத்தம் ஆறு எலிகள் அங்கிருப்பது தெரியவந்தது.

ஆல்பர்ட்டா
ஆல்பர்ட்டா

அங்கிருந்த காகிதங்களுக்கு நடுவே புகுந்து எலிகளைக் கண்டுபிடித்து வேட்டையாடுவது சிரமமாகத்தான் இருந்தது. இறுதியில் பிடித்து, அவற்றைக் கொன்றும்விட்டார்கள். கனடாவின் அந்தப் பகுதியில் ஒரு எலி சிக்கியதையே ஆச்சர்யமாகப் பார்க்கும் நிலையில்தான் இன்றைய சூழல் உள்ளது. அமெரிக்கா, நியூசிலாந்து என்று பல நாடுகள், எலிகளின் எண்ணிக்கை அதிகமாவதைக் கட்டுக்குள் கொண்டு வர முடியாமல் திணறிக்கொண்டிருக்கின்றன. இவர்கள் அனைவரும் மெர்ரிலோடு உட்கார்ந்து பேச வேண்டும். கனடாவிலுள்ள ஆல்பர்ட்டா மாகாணம் மட்டும் எப்படி, எலிகளே இல்லாத மாகாணமாக மாறியது என்ற கேள்விக்கான பதிலை 68 வயதான அவர் மூலமாகத் தெரிந்துகொள்வது, அவர்கள் எலி பிரச்னையைக் கட்டுக்குள் கொண்டு வர உதவலாம். இலவச எலி மருந்து, எலிகளைக் கண்டுபிடிப்பதற்கான பேட்ரோல், சகிப்புத்தன்மை இல்லாமை என்று எலிகளுக்கு எதிராக மிகவும் கடுமையான அணுகுமுறையை ஆல்பர்ட்டா மாகாணம் கைக் கொண்டுள்ளது.

1950-ம் ஆண்டு முதலே ஆல்பர்ட்டா மாகாணம், எலிகளைத் தம் எல்லைக்குள் வராமல் தடுப்பதில் மிகுந்த கட்டுப்பாடுகளோடு செயல்பட்டு வருகிறது.

அவர்கள் அங்கு வரவிடாமல் தடுத்துக்கொண்டிருக்கும் நார்வே எலிகள், மிகவும் தனித்துவமானவை. கனடாவில் மனிதர்களுக்கு நடுவே, மனிதக் கட்டுமானங்களில் மட்டுமே இவற்றால் வாழ முடியும். இவற்றால் கனடாவின் காலநிலையில், இயற்கையான சூழலில் பிழைத்திருக்க முடியாது. இந்த எலிகள் வட அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்டவை அல்ல. 1770-களின்போது வட அமெரிக்காவின் கிழக்கு கடலோரம் வழியாக வந்த கப்பல்களில் இருந்து அங்கு குடியேறி, காலப்போக்கில் கண்டம் முழுக்கப் பரவிவிட்டன. அப்படியே வட அமெரிக்காவின் மேற்குக் கோடி வரை அவை பரவி, இன்று விளைநிலங்களுக்கு அருகிலுள்ள குடியிருப்புப் பகுதிகளைப் பெரிதும் ஆக்கிரமித்து வாழ்ந்துகொண்டிருக்கின்றன.

நார்வே எலிகளை அழிப்பதற்கான விழிப்புணர்வுப் பிரசாரம்
நார்வே எலிகளை அழிப்பதற்கான விழிப்புணர்வுப் பிரசாரம்

இந்த எலிகள், ஆல்பர்ட்டாவில் 1950-ம் ஆண்டுதான் முதன்முதலில் காணப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதிர்ஷ்டவசமாக, அப்போதே ஆல்பர்ட்டாவில் எலிகளைப் போன்ற உயிரினங்களைக் கட்டுக்குள் வைப்பதற்கான பெஸ்ட் கன்ட்ரோல் சட்டம் அமலில் இருந்தது. விவசாய நிலங்களில் இழப்புகளை உண்டாக்கும் இத்தகைய உயிரினங்களைக் கட்டுப்படுத்த `Agricultural Pests Act of Alberta, 1942' என்ற சட்டத்தை அப்போதைய விவசாயத்துறை அமைச்சகம் கொண்டு வந்திருந்தது. ஆகையால், அந்தச் சட்டத்தின் அடிப்படையில் இந்த நார்வே எலிகளையும் கட்டுப்படுத்த 1950-களில் இருந்தே முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன்விளைவாக இன்று, வட அமெரிக்காவில் எலிகளே இல்லாத மாகாணமாக ஆல்பர்ட்டா திகழ்கிறது.

எலிகள் எண்ணிக்கையில் அளவுக்கு அதிகமாகப் பெருகினால் ஏற்படுத்தக்கூடிய பொருளாதார இழப்புகளைப் பற்றிய புரிதல் அப்போதே இருந்தபோதிலும், எலிகள் பிளேக் நோயைப் பரப்பிவிடுமோ என்றுதான் அதிகாரிகள் அதிகமாக பயந்தனர். அதனால், இந்தப் பிரச்னை விவசாயத் துறையிடமிருந்து சுகாதாரத் துறையின் கைக்குப் போனது.

அதன் பிறகு, 1942-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டத்தின் அடிப்படையில், கால்நடைகளுக்கோ பயிர்களுக்கோ சேதங்களை உண்டாக்கும் உயிரினங்களை அழிப்பதற்கான செயல்வடிவம் உருவானது. அதன்படி, ஒவ்வொரு நகராட்சியும் ஏன் ஒவ்வொரு தனிநபருமே, ஆபத்தானவை, கட்டுப்படுத்தப்பட வேண்டியவை என்று பெஸ்ட் பட்டியலில் இருக்கும் உயிரினங்களை அழிப்பதை நோக்கமாகக் கொண்டு செயல்பட வேண்டும். எங்கு இதை முழுவீச்சில் கொண்டு செல்ல முடியவில்லையோ, அங்கெல்லாம் அந்தந்தப் பிராந்திய அரசு ஈடுபட்டு, தேவையான நடவடிக்கைகளை எடுத்து பிரச்னையைக் கட்டுப்படுத்தும். அதன் பிறகு, அதற்கான செலவுகளை நகராட்சியிடம் பெற்றுக்கொள்ளும்.

1952-ம் ஆண்டில் தனியார் நிறுவனம் பிடித்த எலிகள்
1952-ம் ஆண்டில் தனியார் நிறுவனம் பிடித்த எலிகள்

இதன்மூலம், தனிமனிதர்களில் தொடங்கி, அரசாங்கம் வரை, ஆல்பர்ட்டாவுக்குள் எலிகள் இல்லாமல் இருப்பதை உறுதி செய்ததோடு, புதிதாக எலிகள் இங்கு ஊடுருவாமல் இருக்க வேண்டும் என்பதற்காக கண்காணிக்கவும் செய்தார்கள். ஆனால், இதில் ஒரு சிக்கல் இருந்தது. அங்குள்ள பெரும்பான்மையான மக்கள், நார்வே எலிகளை இதற்கு முன் பார்த்ததே இல்லை. அப்படியிருக்க அவற்றின் பரவலை எப்படிக் கட்டுப்படுத்துவது என்றும் அவர்களுக்குத் தெரியவில்லை. இந்த அறியாமையை நீக்கிட, அரசு சார்பில், பொதுமக்களுக்கு இதுகுறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதற்கென 1951-ம் ஆண்டில் சராசரியாக ஓராண்டில் 2,000 போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. லட்சக்கணக்கான நோட்டீஸ்களை விநியோகித்தார்கள்.

ஆல்பர்ட்டாவிலுள்ள 6 நகரங்களில் இதற்காகவே மாநாடுகளையும் நடத்தினார்கள். ஆனால், அந்த மாகாணத்தில் எலிகளைக் கட்டுப்படுத்துவதில் பெரிய அனுபவம் யாருக்கும் தொடக்கத்தில் இருக்கவில்லை. அதனால், தனியார் கம்பெனிகளுக்கு இதற்கான ஒப்பந்தத்தைக் கொடுத்து, கட்டுப்படுத்தச் சொன்னார்கள். 1952 மற்றும் அதற்கு அடுத்த ஆண்டில் மட்டும் சுமார் 63,600 கிலோ எலி மருந்து பவுடர், 8,000 கட்டடங்களிலும் 2,700 விளைநிலங்களில் எலிகளைக் கொல்வதற்காகத் தூவப்பட்டன. இதற்காக அந்த ஆண்டில் செலவிடப்பட்ட தொகை 1,52,670 கனடிய டாலர்கள். அதன்பிறகு, ஆர்சனிக் கலந்த இந்த எலி மருந்துகள் கால்நடைகளுக்கும் மக்களுக்கு ஆபத்து விளைவிப்பதை உணர்ந்து, ஆர்சனிக் கலக்காத எலி மருந்துக்கு மாறினார்கள்.

எலிகளுக்கு எதிராக ஒட்டப்பட்ட போஸ்டர்
எலிகளுக்கு எதிராக ஒட்டப்பட்ட போஸ்டர்

அரசு நிர்வாகம் இந்தப் பிரச்னையைச் சமாளிக்கும் அளவுக்குத் திறன் பெறும் வரை, தனியார் கான்ட்ராக்ட் முறை அமலில் இருந்தது.1959-ம் ஆண்டில் நகராட்சிகளில் பெஸ்ட் கன்ட்ரோல் இன்ஸ்பெக்டர் நியமிக்கப்பட்டார். இது இன்றளவும் அமலில் உள்ளது. இந்த அதிகாரியினுடைய முக்கியமான பொறுப்புகள்:

  • அவருடைய எல்லைக்குட்பட்ட 29 கி.மீ சுற்றளவிலுள்ள அனைத்து வளாகங்களையும் சீரான இடைவெளியில் கண்காணிக்க வேண்டும்.

  • எலிப்பொறிகளை மக்களிடையே விநியோகித்து, அவை முறையாகப் பயன்படுத்தப்படுகின்றனவா என்பதைக் கவனிக்க வேண்டும்.

  • கட்டடங்களை எலிகள் ஆக்கிரமிக்காதவாறு அமைப்பது, அவற்றுக்கான உணவு கிடைக்கும் வழிகள் ஏதுமில்லாமல் இருப்பது போன்றவற்றை உறுதி செய்ய வேண்டும்.

  • எலிகள் காணப்பட்டால், அவற்றை முற்றிலுமாக அழித்துவிட்டு, மீண்டும் அங்கு எலிகள் வராதவாறு தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

சில எலிகள், வளர்ப்புப் பிராணி விற்பனையாளர்களால், உயிரியல் ஆசிரியர்களால் ஆல்பர்ட்டாவுக்குள் கொண்டுவரப்பட்டன. அவை பிறகு வெளியேறி எண்ணிக்கையில் பெருகுவதும் ஒரு வழக்கமாக இருந்தது.

2012-ம் ஆண்டில் எலி ஒன்று பிடிக்கப்பட்ட போது, அதைச் செய்தியாக்கிய ஊடகங்கள்
2012-ம் ஆண்டில் எலி ஒன்று பிடிக்கப்பட்ட போது, அதைச் செய்தியாக்கிய ஊடகங்கள்
Mike Drew

அதேபோல், வெளியூரிலிருந்து இங்கு வருவோரின் வாகனங்களிலும் ஒளிந்திருந்து எலிகள் இங்கு ஊடுருவின. அப்படி வருவனவற்றைக் கண்காணித்து அகற்றவும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். அதோடு, விலங்கு காப்பிடங்கள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்களில் மட்டுமே எலிகளை வைத்துக்கொள்ள ஆல்பர்ட்டாவில் உரிமை உண்டு. நார்வே எலிகளை மக்கள் வளர்ப்புப் பிராணியாக வளர்க்கக்கூட அங்கு உரிமையில்லை.

இன்னமும் ஆண்டுக்கு 36 முதல் 120 எலிகள் வரை அவ்வப்போது காணப்படுகின்றன. அவற்றையும் பரவவிடாமல் கட்டுப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இவ்வளவு ஆண்டுகளுக்குப் பிறகு, இப்போதும்கூட ஆல்பர்ட்டா மக்களுக்கு எலிகளைக் கட்டுக்குள் வைப்பது ஒருவித பெருமித உணர்வையே அவர்களுக்குக் கொடுக்கிறது.