Published:Updated:

World Environment Day: நகரங்களை நஞ்சாக்கும் ஃப்ளெக்ஸ் பேனர்; துணி பேனர்களுக்கு மாறவேண்டிய நேரமிது!

ஃப்ளெக்ஸ் பேனர்

முதல்வர் ஸ்டாலின் சால்வைகளுக்குப் பதில் புத்தகங்களை ஆதரிப்பது போன்று அரசின் ஆய்வுக்கூட்டங்களில் இடம் பெறும் ஃப்ளெக்ஸ் பேனர்களுக்குப் பதில் துணி பேனர் பயன்படுத்த உத்தரவிட்டால் மாற்றம் சாத்தியமாகும்.

World Environment Day: நகரங்களை நஞ்சாக்கும் ஃப்ளெக்ஸ் பேனர்; துணி பேனர்களுக்கு மாறவேண்டிய நேரமிது!

முதல்வர் ஸ்டாலின் சால்வைகளுக்குப் பதில் புத்தகங்களை ஆதரிப்பது போன்று அரசின் ஆய்வுக்கூட்டங்களில் இடம் பெறும் ஃப்ளெக்ஸ் பேனர்களுக்குப் பதில் துணி பேனர் பயன்படுத்த உத்தரவிட்டால் மாற்றம் சாத்தியமாகும்.

Published:Updated:
ஃப்ளெக்ஸ் பேனர்

கல்யாணம், காது குத்து, மஞ்சள் நீராட்டு விழா, மாரியம்மன் திருவிழா, அரசியல் கட்சிக் கூட்டம், அரசியல் தலைவர்கள் வருகை, அரசின் ஆய்யுக்கூட்டம் என எந்த இடத்தில் பார்த்தாலும் ஃப்ளெக்ஸ் பேனர்கள் பளிச்சிட்டு நிற்கின்றன. துரிதமாகத் தயாரித்து விடலாம், எளிதில் கட்டிவிடலாம் எனப் பல சௌகரியங்கள் இருப்பதால் இன்று ஃப்ளெக்ஸ் பேனர்கள் இடம்பெறாத நிகழ்ச்சிகளே இல்லை எனலாம். 

முன்பெல்லாம் சுவர் விளம்பரங்கள், துணி பேனர்கள் என இருந்த நிலைமாறி இன்று அனைத்து இடங்களிலும் நீக்கமற ஃப்ளெக்ஸ் பேனர்கள் இடம்பெறுகின்றன. இப்படி ஃப்ளெக்ஸ் பேனர்கள் தேவை அதிகரிப்பதால், ஒரு நாளைக்கு டன் கணக்கில் இவை உற்பத்தி செய்யப்படுகின்றன. ஒரு மணி நேரத்தில் ஒரு ஃப்ளெக்ஸ் பேனரை தயாரித்துவிட முடியும். ஆனால், அதை மட்க வைத்து அழிப்பதற்கு பல நாள்கள் ஆகின்றன. இந்த பேனர்கள் தயாரிப்பதற்குப் பயன்படுத்தும் மூலப்பொருள் பாலிவினைல் குளோரைடு. இது விஷத்தன்மை கொண்ட ரசாயனம் என கிரீன் பீஸ் ஆஃப் இந்தியா (greenpeace) என்கிற அமைப்பு சொல்கிறது.

ஃப்ளெக்ஸ் பேனர்
ஃப்ளெக்ஸ் பேனர்

பேனரின் நெகிழ்வுத் தன்மையை அதிகரிப்பதற்காக பேத்தலட்ஸ் (phthalates) என்கின்ற மூலப் பொருளும் சேர்க்கப்படுகிறது. இதைப் பயன்படுத்துவதால் புற்றுநோய், சிறுநீரகப் பிரச்னை, நுரையீரல் பிரச்னை மற்றும் இனப்பெருக்க அமைப்பில் கட்டிகள் ஏற்படும் என்று ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. ஃப்ளெக்ஸ் பேனர்களை எளிதாக அழித்துவிடலாம் என்று நினைத்து எரிக்கப்படுகிறது. அப்படி எரிக்கப்படும்போது சல்பைடு, நைட்ரேட்ஸ் போன்ற மாசுப் பொருள்கள் காற்றில் கலக்கின்றன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதோடு கார்பன் மோனாக்சைடு, ஹைட்ரஜன் குளோரைடு, பாலி சைக்கிளிக் அரோமேட்டிக் ஹைட்ரோ கார்பன் போன்றவையும் காற்றில் கலக்கின்றன. இவை காற்றில் கலக்கும்போது காற்று மாசடைகிறது. மேற்சொன்ன அனைத்து வாயுக்களும் பிளாஸ்டிக் கலந்த ஃப்ளெக்ஸ் பேனர் எரிப்பதன் மூலம் வரும் மூலப்பொருள்கள். இவை அனைத்தும் காற்றில் கலந்து இதைச் சுவாசிக்கும் மனிதர்கள், கால்நடைகள், பறவைகள் என அனைத்து உயிரினங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதோடு சுற்றுச்சூழலுக்கும் தீங்காய் அமைகிறது.

ஃப்ளெக்ஸ் பேனர்
ஃப்ளெக்ஸ் பேனர்

பிளாஸ்டிக் (நெகிழியை) கலந்த ஃப்ளெக்ஸ் பதாகைகள் ஏற்படுத்தும் குப்பைகள் மழை நீரால் அடித்துச் செல்லப்பட்டு ஆற்றில் கலக்கின்றன. ஆறுகள் அதைக்கொண்டு கடலில் கலப்பதால் இந்த நெகிழிப் குப்பைகளை உட்கொண்டு பல லட்சம் கடல்வாழ் உயிரினங்கள் இறப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால் அரிய உயிரினங்களாகக் கருதப்படும் திமிங்கிலங்களும், பல்வேறு கடல்வாழ் உயிரினங்களும், பறவைகளும் அழியும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றன. குளம், ஏரி, ஆறு, நிலத்தடி நீர் என எல்லா நீர் வளமும் இந்த நெகிழிப் பதாகைகளால் மாசடைகின்றன. எனவே நாமும் இதன் தீமை அறியாமலே பாதிப்புக்கு உள்ளாகி வருகிறோம். நெகிழிகள் சாக்கடையை அடைப்பதால் சாக்கடை கழிவுநீர் தெரு வழியே வழிந்து சாலையில் ஓடுகிறது. அதிலிருந்து வரும் துர்நாற்றம் மிக்க காற்றை சுவாசிக்கும் போதும், அதன் மீது நடக்கும்போதும் நமக்கு பல தொற்று நோய்களைத் தோற்றுவிக்கிறது. 

அதேபோன்று பிளாஸ்டிக் குப்பையை எரிப்பதால் டையாக்சின் வாயு வெளியேறுகிறது. இது புற்றுநோயை ஏற்படுத்தும் ஆபத்து கொண்டதாகும். நெகிழிகளை உண்ணும் விலங்குகளின் உணவுக்குழாய்கள் பாதிக்கப்பட்டு அவை இறக்க நேரிடுகிறது. இவை வேளாண் நிலங்களில் தங்கி அதன் வளத்தைக் குறைத்து நஞ்சாக்குகின்றன. நெகிழிப் பொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளின் மூலம் வெளியேறும் வாயுக்கள் நச்சுத்தன்மை கொண்டவை. இதனால் அந்தப் பகுதியில் வசிப்பவர்களுக்கு மூச்சுக்குழல் பாதிப்பு, குடல் புண், செரிமானமின்மை, ரத்தச் சிறுநீரகச் செயல்பாடு குறைபாடு போன்றவை ஏற்படக்கூடும் என ஆய்வுகள் கூறுகின்றன.

பிளாஸ்டிக் கழிவுகள்
பிளாஸ்டிக் கழிவுகள்

நீதிமன்றங்கள் ஃப்ளெக்ஸ் பேனர்களுக்கு தடை விதித்திருந்தாலும் அவை முற்றிலும் நடைமுறையில் பின்பற்றப்படுவதில்லை. இதனால், மக்களுக்கு ஏற்படும் பிரச்னைகளைக் கண்டு கொள்ளாமல், சாலையை மறித்து, ஃப்ளெக்ஸ் பேனர்கள், விளம்பர பேனர்கள் வைக்கப்படுவது என்பது தொடர்கதையாகவே இருக்கிறது.  

இதற்கு மாற்றாகத் துணி பேனர்களைத்தான் முன்வைக்கிறோம். எங்கள் அமைப்பு சார்பாக நடைபெறுகிற நிகழ்ச்சிகளில் துணி பேனர்களைத்தான் பயன்படுத்துகிறோம். சாதாரண காடா துணியில் வரைந்து பயன்படுத்துகிறோம். இதில் எழுதப்படும் பெயின்ட் மட்டுமே ரசாயனம். வாய்ப்பிருந்தால் இயற்கை சாயத்தைப் பயன்படுத்திகூட எழுதலாம். மத்தபடி துணி பேனர்கள் சுற்றுச்சூழலுக்கு மிகவும் பாதுகாப்பானது. 3 மணி நேரத்தில் துணி பேனர்களைத் தயார் செய்துவிட முடியும். எரிக்க வேண்டிய தேவையிருக்காது. இதனால் காற்று மாசுபாடு ஏற்பட வாய்பில்லை. ஃப்ளெக்ஸ் பேனர்கள் ஆக்கிரமிப்பு நிறைந்திருக்கும் இந்த உலகில் துணி பேனர்களா என்ற கேள்வி எழலாம். ஆனால், எதிர்காலத்துக்கும் சுற்றுச்சூழலுக்கும் நாம் ஏதாவது செய்ய வேண்டுமென்றால் துணி பேனர்களை ஆதரிப்பதே வழி. 

துணி பேனர்
துணி பேனர்

முதல்வர் ஸ்டாலின் சால்வைகளுக்குப் பதில் புத்தகங்களை ஆதரிப்பதுபோன்று அரசின் ஆய்வுக்கூட்டங்களில் இடம் பெறும் ஃப்ளெக்ஸ் பேனர்களுக்குப் பதில் துணி பேனர் பயன்படுத்த உத்தரவிட்டால் மாற்றம் சாத்தியமாகும். இந்தச் சுற்றுச்சூழல் தினத்தில் வைக்கும் முக்கிய கோரிக்கை இதுவே.

- டி.கணேசன்,

சுற்றுச்சூழல் ஆர்வலர்,

கூடுகள் அமைப்பு.