Published:Updated:

சிறகடிக்கும் சத்தமே இல்லாமல் ஆந்தை பறப்பது எப்படி? - சுவாரஸ்ய உயிரியல்!

ஆந்தை
ஆந்தை ( Pixabay )

ஆந்தைகளைப் பார்க்கும் ஒவ்வொருவருக்குமே இந்தக் கேள்வி எழும். அவை ஓசையின்றிப் பறக்கும் என்று அனைவருக்குமே தெரியும். ஆனால், அவற்றால் எப்படி ஓசையின்றிப் பறக்க முடிகிறது?

சென்னை, திருவான்மியூரிலுள்ள ஜெயந்தி சிக்னலையொட்டி ஒரு மிகப்பெரிய காலியிடம் உள்ளது. ஒன்றரை வருடங்களுக்கு முன்பு அந்த இடத்திற்குப் பின்புறத்திலிருந்த ஒரு வீட்டில்தான் தங்கியிருந்தேன். அங்கு தங்கியிருந்தபோது, தினமும் இரவு 7 மணிக்கு மொட்டை மாடிக்குச் சென்றால் இரண்டு புள்ளி ஆந்தைகளைப் பார்க்கலாம்.

அங்குமிங்கும் அலைந்தபடி, இரை தேடிக் கொண்டிருக்கும் அவற்றைப் பார்க்க, பெரும்பாலும் தவறாமல் சென்றுவிடுவேன். அந்த இடத்தைச் சுற்றிப் போடப்பட்டிருந்த இரும்புச் சுவர்களின் நுனியில் அமர்ந்துகொண்டு தலையை நன்றாகத் திருப்பி அங்குமிங்கும் இரையை நோட்டமிட்டுக்கொண்டிருக்கும். இரையை எங்கேனும் கண்டுவிட்டால், நேரம் பார்த்துச் சீறிப் பாய்ந்து வேட்டையாடும். கிட்டத்தட்ட ஓராண்டுக் காலம் அந்த வீட்டில் தங்கியிருந்தேன். ஆனால் ஒருமுறைகூட, வேட்டையாடச் சீறிப் பறக்கும்போதும் சரி, வழக்கமாகப் பறக்கும்போதும் சரி புள்ளி ஆந்தை பறக்கும் சத்தம் கேட்டதே இல்லை. அதன் இறக்கைகளில் மட்டும் எப்படிச் சத்தமே வருவதில்லை என்ற கேள்வி அது பறப்பதைப் பார்க்கும் போதெல்லாம் எழுந்துகொண்டேயிருக்கும்.

புள்ளி ஆந்தை
புள்ளி ஆந்தை
Pixabay

அதன்பிறகு, எம்.ஜி.ஆர் சினிமா கல்வி நிறுவனத்தின் சாலையில், ஐ.ஐ.டி-க்குப் பின்புறத்திலுள்ள ஒரு வீட்டிற்கு மாறினோம். வீட்டிற்குப் பின்புறத்திலேயே கிண்டி தேசியப் பூங்காவும் ஐ.ஐ.டி-யும் அமைந்திருப்பதால் செம்மீசைச் சின்னான் முதல் தவிட்டுக் குருவி வரை பல்வேறு பறவைகளைத் தினமும் காண முடியும். அவற்றைக் காணுவது மட்டுமின்றி, அவை பறக்கையில் இறக்கைகள் அடிக்கும் ஓசையையும் நன்றாகவே கேட்கமுடியும். தினம் இரவு 8 மணியளவில் எம்.ஜி.ஆர் சினிமா கல்வி நிறுவனத்திற்கு எதிரே நடந்துசெல்லும் நேரங்களில், அங்கு கூகையைக் காண்பேன்.

சாலையோரங்களில் அமைந்துள்ள புதர்ச்செடிகளுக்குள் இரைதேடிவிட்டுச் சரியாக அந்த நேரத்திற்குக் குறிப்பிட்ட இடத்தில் வந்து அமரும். அது எதற்கு அங்கு வந்து அமர்கிறது, அதுவும் குறிப்பிட்ட நேரத்திலேயே தினமும் வந்து ஏன் அமர்கின்றது என்பதெல்லாம் கூகைக்குத்தான் தெரியும். எனக்குத் தெரிந்ததெல்லாம் எவ்வளவு வேகமாகப் பறந்தாலும் அந்தக் கூகையிடமிருந்து ஒரு சிறிய ஓசைகூட எழுவதில்லை. இரவாடிப் பறவைகளாக அறியப்படும் ஆந்தைகள் பறக்கும்போது இப்படிச் சிறிய ஓசைகூட எழுப்புவதில்லையே ஏன் என்ற கேள்வி அவற்றைப் பார்க்கும் போதெல்லாம் தொடர்ந்து எழுந்துகொண்டே இருந்தது.

ஆந்தைகளைப் பார்க்கும் ஒவ்வொருவருக்குமே இந்தக் கேள்வி எழும். அவை ஓசையின்றிப் பறக்கும் என்று அனைவருக்குமே தெரியும். ஆனால், அவற்றால் எப்படி ஓசையின்றிப் பறக்க முடிகிறது? முழங்கை அளவுக்குப் பெரிதாக இருக்கும் ஒரு பறவை, இறக்கை அடிக்கும் சத்தம்கூட இல்லாமல் எப்படிப் பறக்கின்றது?

இங்கிலாந்தில் கேம்பிரிட்ஜுக்கு அருகிலிருந்த ரேப்டர் ஃபௌண்டேஷன் (Raptor Foundation) ஆந்தைகளைப் பழக்கி, பார்வையாளர்களுக்கு வெகு அருகில் பறக்க வைக்கின்றனர். அதில் கலந்துகொண்ட ஜஸ்டின் ஜவோர்ஸ்கி என்பவர், ``அது என் தலைக்கு அருகே வந்ததும் நான் கீழே குனிந்துகொண்டேன். என்னைக் கடந்து சென்ற ஆந்தையிடமிருந்து மிக மெல்லிய சலசலப்பைத் தவிர எந்தச் சத்தத்தையும் நான் கேட்கவில்லை" என்று பதிவு செய்துள்ளார். ஆந்தைகளுக்கும் மனிதர்களுக்கும் இடையே மூன்று அடிக்கும் குறைவான தூரம் இருந்தால் மட்டுமே அந்த மெல்லிய சலசலப்பைக்கூடக் கேட்கமுடியும். உயிரியலாளர்களும் பொறியாளர்களும் ஆந்தைகளுடைய இந்த வித்தையைப் புரிந்துகொள்ளப் பல ஆண்டுகளாக முயன்று வருகின்றனர். டர்பைன் பிளேடுகள், விமான இறக்கைகள் போன்றவற்றை இதைப் போலவே ஓசையின்றிச் செயல்படும் வகையில் வடிவமைக்க இந்தக் கேள்விக்கான விடை தெரியவேண்டும். அப்படிக் கண்டுபிடிக்கப்படுபவை மூலம், சராசரியாகக் கேட்கும் ஓசையில் 10 டெசிபெல் வரை குறைக்கமுடியும்.

1934-ம் ஆண்டு ஆங்கிலேய விமானியும் பறவை ரசிகருமான ராபர்ட் ரூல் கிரஹாம் என்பவர், ஆந்தைகளின் இறக்கையிலுள்ள மூன்று வடிவங்களை அவற்றின் ஓசையின்மைக்குக் காரணமாக முன்வைத்தார். 80 ஆண்டுகளுக்கும் மேல் கடந்துவிட்ட போதிலும்கூட அவருடைய அந்த மூன்று வடிவக் கூற்று, ஆந்தை இறக்கைகள் குறித்த ஆய்வுக்கட்டுரைகள் அனைத்திலுமே மேற்கோள் காட்டப்படுகின்றன. ராபர் ரூல் கிரஹாம் பறவை ரசிகராக இருந்தது மட்டுமின்றி, ஏரோனாட்டிகல் பொறியாளராகவும் இருந்ததால் அவருக்கு அதுகுறித்த ஓர் அடிப்படையைக் கட்டமைக்க முடிந்தது. 1930-களில் இருந்ததைப் போன்ற அத்தகைய தனித்துவத்தோடு யாரும் இதுவரை இல்லை என்று கூறியுள்ளார் கலிஃபோர்னிய பல்கலைக்கழகத்தில் பறவை ஆய்வாளராகவுள்ள கிரிஸ்டோபர் கிளார்க்.

கூகை/Barn Owl
கூகை/Barn Owl
Pixabay

அவர் முதலில் குறிப்பிட்டது, ஆந்தையின் இறக்கையில் இருக்கக்கூடிய சீப்பு போன்ற அமைப்பு. இறக்கையின் இருபுறத்திலும் நுனியிலிருந்து உடலை ஒட்டியுள்ள பகுதி வரை அந்த அமைப்பு நீள்கின்றது. இரண்டாவதாக, ஆந்தையின் இறக்கை முழுவதுமே வெல்வெட் போன்ற இறகுகளால் மூடப்பட்டிருந்ததைக் கண்டார். இறுதியாக, இறக்கையின் நுனியிலுள்ள இறகுகள் கூர்மையான விளிம்பை உருவாக்குகின்றன. இன்றும்கூட, பல்வேறு ஆய்வாளர்கள் இந்த மூன்றும் ஏதோவொரு வகையில் அவற்றின் ஓசையின்மைக்கு அடிப்படைக் காரணமாக இருப்பதாக ஒப்புக்கொள்கின்றனர். ஆனால், ஆந்தையிடம் இன்னும் பல நுட்பமான வழிமுறைகள்கூட இருக்கலாம். அதன் ஓசையின்மையைத் தொழில்நுட்பங்களில் பயன்படுத்த வேண்டுமெனில், முதலில் ஓசை எங்கிருந்து வருகிறது என்பதைக் கண்டுபிடிக்கவேண்டும். தரையிரங்கும் விமானத்தைப் பொறுத்தவரை, பெரும்பான்மைச் சத்தம் விமானத்திற்குக் கீழே சுழலும் காற்றினால்தான் ஏற்படுகின்றது. குறிப்பாக, இறக்கைகளுடைய நுனியில் அந்தச் சத்தம் வருகின்றது. இந்த ஓசையைக் குறைக்க ஆந்தையின் இறக்கைச் செயல்பாடுகளைப் பின்பற்றி விமான இறக்கையை வடிவமைக்கலாம்.

ஆந்தைகள் பறக்கும்போது அவற்றுடைய இறக்கைகள் 1,600 ஹெர்ட்ஸ் அதிர்வெண்ணுக்கும் அதிகமாக உள்ள ஓசைகளைக் கழித்துவிடுகின்றன. குறிப்பிட்ட அளவுக்கு மேலிருக்கும் ஓசையைத் தன்னுடைய உடலமைப்பின் மூலம் அவை கட்டுப்படுத்திக்கொள்வதால் இரையைத் துல்லியமாக வேட்டையாட முடிகின்றது. அவை எதிர்பார்க்காத நேரத்தில் தாக்குதல் தொடுக்க முடிகின்றது. இது அவற்றுடைய பரிணாமத்தின் ஒரு பகுதி.

Owl Flight
Owl Flight
Pixabay

அதேநேரம், ஏரோனாட்டிகல் பார்வையில் மட்டுமே அதைப் பார்ப்பதன்மூலம் அதே முறையை விமானங்களுக்கும் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று பொறியாளர்கள் கருதுகின்றனர். ஆனால், அதன் இறக்கையிலுள்ள இயற்பியலை அவர்கள் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்று கிளார்க் போன்ற பறவை ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆந்தைகள் பறக்கும்போது அவற்றின் இறக்கைகள் உரசுகின்றன. மேலும் கீழுமாகச் செயல்படுகின்றன. இதை விமான இறக்கைகளில் செய்யமுடியாது. பறப்பதிலுள்ள அடிப்படையான அம்சம்தான், மேலும் கீழுமாக இறக்கைகளை அடிப்பது. திசை மாறும்போது அவை ஒன்றோடு ஒன்று உரசிக்கொள்கின்றன. அப்போது ஓசை எழுகின்றது. அந்த ஓசை, காற்றோடு மோதுவதால் ஏற்படுவதல்ல. இறக்கைகள் உரசுவதால் ஏற்படுகிறது.

ஆந்தையின் வெல்வெட் இறகுகள் மற்றும் கூர்மையான நுனிப் பகுதி, இறக்கைகள் அடிக்கும்போது ஓசை ஏற்படாமல் இருக்க வழி செய்கின்றன. இந்த இடத்தில் ஆந்தைகள் பறக்கும்போது ஏன் ஓசை ஏற்படுவதில்லை என்ற கேள்வியைப் பறவை ஆய்வாளர் கிளார்க் சற்று திருப்பி மற்ற பறவைகள் ஏன் ஓசையெழுப்பிக்கொண்டே பறக்கின்றன என்று கேட்கிறார். பறவைகளுடைய உடலமைப்பிலுள்ள அதிசயமிக்க ஓர் அமைப்புதான் இறகுகள். அவை வெற்றிகரமாகப் பறக்கவும் இறகுகள் ஒரு முக்கியக் காரணம். இறகுகளால் உருவான இறக்கை இருப்பதால் மற்ற பறவைகளிடத்தில் ஓசை எழுகின்றது. ஒன்றையொன்று உரசும் சத்தம் நன்றாகவே கேட்கின்றது. ஆனால் ஆந்தைகள் அத்தகைய சத்தம் எழும்பாதவாறு தம்மைத் தகவமைத்துக் கொண்டன.

ஆந்தைகள் மட்டுமல்ல, ஆஸ்திரேலியத் தவளை வாயன் (Australian frogmouth) என்ற ஒருவகைப் பறவையும்கூட இதேபோல் ஓசையெழுப்பாமல் பறக்கும் திறனைத் தம் தகவமைப்பின் மூலம் பெற்றுள்ளது. இதுவும் வேட்டையாடிப் பறவைதான். அதன் இறக்கைகளும் மெல்லியதாக, சீப்பு போன்ற வடிவமுடையதாகவே இருக்கின்றன. 1930-களில் தவளைவாயனும் ஆந்தையோடு உறவுடைய உயிரினம்தான் என்று கருதினர். ஆனால் பின்னாளில் இரண்டுக்கும் தொடர்பில்லை என்பது நிரூபிக்கப்பட்டது. தவளை வாயன் ஆந்தைகளைப் போன்ற தகவமைப்பைச் சுயமாகச் செய்துகொண்டவை. `பரிணாம வளர்ச்சி' மிகவும் கரடுமுரடான குழப்பம் மிகுந்த ஒரு பாதை. இரண்டு வேறுபட்ட உயிரினங்களுக்கு ஒரே மாதிரியான தகவமைப்பை அவற்றின் தேவையறிந்து பரிணாமவியல் தந்துள்ளது. இங்கு அவற்றுக்கு இடையிலான உறவைவிட, அவற்றின் தேவையே முதன்மையாகியுள்ளது.

ஆஸ்திரேலியத் தவலை வாயன்/ Australian Frogmouth
ஆஸ்திரேலியத் தவலை வாயன்/ Australian Frogmouth

ஆந்தைகளிடம் ஏன் எந்தச் சத்தமும் வருவதில்லை என்ற கேள்விக்கு விடைகாண நாம் பொறியியல் ரீதியாகவும் உயிரியல் ரீதியாகவும் அணுகினால் மட்டும் போதாது... அதன் உணர்வுபூர்வமான செயல்பாடு குறித்து நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஆந்தையின் வாழ்வியலில் அந்த இறக்கைகளுடைய தனித்துவமான பங்கு குறித்துப் புரிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் அதை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியும் என்கின்றார் கடலோர கலிஃபோர்னிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ரோய் கூர்கா.

இதுகுறித்து ஆய்வாளர்கள் விவாதித்துக்கொண்டிருக்க, அதைப் பற்றிச் சிறிதும் கவலைப்படாமல் சத்தமின்றி தினமும் பறந்துகொண்டிருக்கின்றது நான் பார்த்த கூகையும் புள்ளி ஆந்தையும்.

அடுத்த கட்டுரைக்கு