Election bannerElection banner
Published:Updated:

ஏரியில் கட்டப்பட்ட காவல் நிலையம்; எதிர்த்துக் கேட்டதற்கே பாய்ந்த வழக்கு... என்ன செய்கிறது அரசு?

சோழிங்கநல்லூர் தாமரைக்கேணி ஏரியில் கட்டப்படும் காவல் நிலையம்
சோழிங்கநல்லூர் தாமரைக்கேணி ஏரியில் கட்டப்படும் காவல் நிலையம்

ஏற்கெனவே பெரும் பரப்பளவு நிலத்தை இழந்து நிற்கும் ஏரியில், மீதமிருக்கும் 25 ஏக்கரிலும் ஆக்கிரமிப்பு நடப்பது சரியா... அதையும் அரசாங்கமே செய்வது சரியா?

சோழிங்கநல்லூரில் அமைந்துள்ள தாமரைக்கேணி ஏரி, கடந்த 30 ஆண்டுகளில் பெரியளவில் ஆக்கிரமிக்கப்பட்டு, தற்போது மிகக் குறைந்த பரப்பளவில் உயிர் பிழைத்திருக்கப் போராடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், அந்த ஏரிக்குச் சொந்தமான நிலத்தில் செம்மஞ்சேரி காவல் நிலையம் அமைப்பதற்காகத் திட்டமிடப்பட்டு, அதற்கான வேலைகள் 2019-ம் ஆண்டு தொடங்கின.

இந்நிலையில், சோழிங்கநல்லூரிலுள்ள முக்கிய நீராதாரமான அந்த ஏரியின் நிலத்தை காவல்துறை ஆக்கிரமிக்கிறது என்று குறிப்பிட்டு, அந்தக் கட்டுமான வேலைகளை நிறுத்த வேண்டுமென்றும் இதுவரை நடந்துள்ள கட்டுமானங்களைத் தகர்க்க வேண்டுமென்று, அறப்போர் இயக்கம் சார்பில், சென்னை மெட்ரோ வளர்ச்சி ஆணையத்தில் (CMDA) புகார் அளிக்கப்பட்டது.

காவல் நிலையம் கட்டப்பட்டுக்கொண்டிருந்தபோது...
காவல் நிலையம் கட்டப்பட்டுக்கொண்டிருந்தபோது...

2017-ம் ஆண்டு, இந்திய சுற்றுச்சூழல் அமைப்பு (Environmentalist Foundation of India) என்ற அமைப்பு தாமரைக்கேணி ஏரியின் 60 ஹெக்டேர் பரப்பளவைத் தூர்வாரியது. அதன்பிறகு, ஏரியின் நீர்ப்பிடிப்புப் பகுதியின் அளவு குறிப்பிடத்தக்க வகையில் அதிகரித்துக்கொண்டிருந்தபோது, மீண்டும் ஏரி நிலத்துக்குள் நடைபெற்ற செம்மஞ்சேரி காவல் நிலைய கட்டுமான வேலைகளால், மீண்டும் சுமார் அரை ஏக்கர் நீர்ப்பிடிப்புப் பகுதியை ஏரி இழக்க வேண்டி நேர்ந்தது. அறப்போர் இயக்கம் 2019-ம் ஆண்டில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் சென்னை மெட்ரோ வளர்ச்சி ஆணையத்திடமிருந்து பெற்றிருந்த தகவல்களில், அந்த நீர்நிலையின் 0.6 ஏக்கர் பரப்பளவின் நில வகைப்பாடு கட்டுமான வேலைகளுக்கென மாற்றப்பட்டிருப்பது தெரியவந்தது. ஆர்.டி.ஐ மூலம் கிடைத்த ஆவணங்களின்படி, செம்மஞ்சேரி காவல் ஆய்வாளர், சென்னை மாநகராட்சி மூலமாக, சி.எம்.டி.ஏ-விடம் 2017-ம் ஆண்டு அனுமதி கேட்டிருந்தது தெரியவந்தது.

ஏரி நிலத்தை, நிலப் பயன்பாட்டுக்கானதாக வகைப்படுத்த வேண்டுமென்ற அந்தக் கோரிக்கையின் அடிப்படையில் பெறப்பட்ட அனுமதியோடு காவல் நிலையம் கட்டுவதற்கான வேலைகள் தொடங்கின. 2015-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் வெளியிட்ட ஓர் உத்தரவின்படி, அதிகாரிகள் நீர்நிலைகளை மனித வளர்ச்சிக்காக என்று கூறி அழிக்க முடியாது. அவற்றின் நிலப் பயன்பாட்டை மறு வகைப்படுத்தும் அதிகாரம் அவர்களுக்குக் கிடையாது.

இந்நிலையில், 2019-ம் ஆண்டு ஏரியின் ஆக்கிரமிப்புப் பகுதிகளைப் பார்வையிட்டுக் கொண்டிருந்த அறப்போர் இயக்கத்தைச் சேர்ந்த ஹாரிஸ் சுல்தான் உள்ளிட்ட குழுவினர் மீது, செம்மஞ்சேரி எல்லைக்குட்பட்ட காவல்நிலையம் கிரிமினல் வழக்கு போட்டது. அவர்கள், அனுமதியின்றி அங்குப் பார்வையிட்டுக் கொண்டிருப்பதாகக் குற்றம் சாட்டி தொடரப்பட்ட வழக்கு, கடந்த மாதம் 29-ம் தேதியன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இந்த வழக்கு சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தியதுதானே தவிர, வேறு ஒன்றுமில்லை என்று குறிப்பிட்டு நிராகரித்தார்.

சிவப்பு வட்டத்துக்குள் காட்டப்பட்டிருக்கும் கட்டுமானங்கள், ஏரி நிலத்துக்குள் அமைந்திருக்கும் காவல் நிலையம் மற்றும் மின்வாரிய கட்டடங்கள்
சிவப்பு வட்டத்துக்குள் காட்டப்பட்டிருக்கும் கட்டுமானங்கள், ஏரி நிலத்துக்குள் அமைந்திருக்கும் காவல் நிலையம் மற்றும் மின்வாரிய கட்டடங்கள்

இதுகுறித்துப் பேசிய அறப்போர் இயக்கத்தைச் சேர்ந்த ஹாரிஸ் சுல்தான், ``செம்மஞ்சேரியிலுள்ள தாமரைக்கேணி ஏரி ஏறக்குறைய 152 ஏக்கர் பரப்பளவு கொண்டது. அதில் இப்போது மிச்சமிருப்பது என்னவோ வெறும் 25 ஏக்கர்தான். இப்போது ஏரி நிலத்தில் கட்டப்பட்டிருக்கும் காவல் நிலையத்துக்கு அருகிலேயே ஒரு மின்சார வாரிய கட்டடம் இருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்னர் அதுவும் நீர்நிலையாகத்தான் இருந்தது. EFI என்ற சுற்றுச்சூழல் அமைப்பு ஏரியைத் தூர்வாரி, அதைச் சுற்றியும் சுவர் எழுப்பினார்கள். செம்மஞ்சேரி காவல் நிலையக் கட்டுமானத்துக்காக அந்தச் சுவரை இடித்து, மண் கொட்டி மேடாக்கி வேலைகளைத் தொடங்கினார்கள்.

2019-ம் ஆண்டு அவர்கள் கட்டட வேலைகளைச் செய்துகொண்டிருந்தபோது, அந்த இடத்துக்கு நேரில் சென்று ஒரு வீடியோ எடுத்தோம். அதில் 2015-ம் ஆண்டு பெருவெள்ளத்துக்கான முக்கியக் காரணமே இதைப் போல் நீர்நிலைகளை ஆக்கிரமித்ததுதான் என்று களத்தில் நின்று பேசினோம். ஏற்கெனவே பெரும் பரப்பளவு நிலத்தை இழந்து நிற்கும் ஏரியில், மீதமிருக்கும் 25 ஏக்கரிலும் ஆக்கிரமிப்பு நடப்பது சரியா, அதையும் அரசாங்கமே செய்வது சரியா என்று அந்த வீடியோ பேசியது.

அதைத்தொடர்ந்து ஜெயராம் மீது தவறான தகவலைப் பரப்புவதாகக் குற்றம் சாட்டி செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு முழுக்க முழுக்க, எங்களை நீர்நிலை ஆக்கிரமிப்புக்கு எதிராகக் கேள்வியெழுப்ப விடாமல் முடக்குவதற்காகவே தொடரப்பட்டது" என்று கூறியவர், மேலும் ``அரசாங்க நிறுவனங்களே, சுற்றுச்சூழல் குறித்த அக்கறையின்றி நீர்நிலைகளை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தால், தனியார் நிறுவனங்களால் ஏற்படும் சூழலியல் சீர்கேடுகளை அரசு எப்படி நேர்மையாகக் கேள்வியெழுப்பும்?" என்றார்.

2001-ல் உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற ஹின்ச் லால் திவாரி மற்றும் கமலா தேவிக்கு இடையிலான வழக்கில், நீதிபதிகள் சையத் ஷா காத்ரி மற்றும் எஸ்.என்.புகான், ``காடுகள், குளங்கள், ஏரிகள், மலைக்குன்றுகள், மலைப்பகுதிகள் போன்ற சமூக நன்மைக்கு வித்திடும் வளங்கள் இயற்கையுடையது. அவை, மிக நுண்ணிய சூழலியல் சமநிலையைப் பேணுகின்றன. முறையான மற்றும ஆரோக்கியமான சுற்றுச்சூழல் நிலைப்பதற்கு அவற்றைப் பாதுகாக்க வேண்டியது அவசியம். அப்போதுதான், இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிர்வு 21 (Article 21) கூறும் அடிப்படை உரிமைகள் மக்களுக்கு முழுமையாகக் கிடைத்து வளமாக வாழமுடியும். வருவாய் அதிகாரிகள் உட்பட, அனைத்து அரசு நிறுவனங்களுமே இதைக் கருத்தில் கொண்டே செயல்பட வேண்டும்.

ஒரு குளம் அழிந்துகொண்டிருக்கிறது என்றால், அதை அரசு பாதுகாப்பதற்குரிய முயற்சிகளை எடுக்க வேண்டும். அது, சூழலியல் பேரிடரைத் தடுப்பதிலும் பொதுமக்களுக்கு வளமான சுற்றுச்சூழலை நல்குவதிலும் முக்கியப் பங்கு வகிக்கும்" என்று குறிப்பிட்டுள்ளனர்.

சென்னை மெட்ரோ வளர்ச்சி ஆணையம்தான் இங்குள்ள நீர்நிலைகளின் பொறுப்பாளியாக இருப்பதால், மக்களின் சார்பாக நீர்நிலைகளைப் பாதுகாக்க வேண்டியது அவர்களுடைய கடமை.

சோழிங்கநல்லூர் தாமரைக்கேணி ஏரியில் கட்டப்படும் காவல் நிலையம்
சோழிங்கநல்லூர் தாமரைக்கேணி ஏரியில் கட்டப்படும் காவல் நிலையம்

அதேநேரம், நீர்நிலைக்குச் சொந்தமான நிலத்தை வேறு பயன்பாடுகளுக்காக மாற்றும் உரிமை அவர்களுக்குக் கிடையாது. சி.எம்.டி.ஏ நீர்நிலைகளின் பொறுப்பாளர்தானே தவிர உரிமையாளர் அல்ல. நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டியுள்ள காவல் நிலையத்தை அகற்றக்கோரி அறப்போர் இயக்கம் வழக்கு தொடர்ந்துள்ளது. அதில் அந்தக் கட்டடத்தைப் பயன்படுத்த தடை விதித்து, தாமரைக்கேணி ஏரிக்குச் சொந்தமான இடத்தைப் பாதுகாக்க ஆவன செய்ய வேண்டும் என்பதே அறப்போர் இயக்கத்தின் நோக்கம்.

இப்போது நம் சுற்றுச்சூழலில் இதுபோல் உயிர்ப்போடு இருக்கின்ற ஏரிகளையாவது பாதுகாத்திட வேண்டுமென்பதே பொதுமக்களின் ஆசையும். அதையுணர்ந்து அரசு நிறுவனங்கள் செயல்பட வேண்டும்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு