சமீப காலமாகவே தேசிய புலிகள் காப்பகத்தின் கீழ் இயங்கும் வனப்பகுதிகளில் புலிகள், யானைகள் உள்ளிட்ட வன விலங்குகள் தங்கள் வனப்பகுதிகள், காப்புக்காடுகளை விட்டு வெளியே வருவது அதிகரித்து வருகின்றது. சாலைகளில் உலா வருவதும் குடியிருப்பு பகுதிகளில் சுற்றித் திரிவதும் பார்க்கும் மனிதர்களை பயம் கொள்ளச் செய்கின்றன. மனிதர்களின் செயல்பாடுகள் விலங்குகளையும் பயம் கொள்ள வைக்கிறது. இதனால் மனித - வன விலங்குகள் இடையேயான மோதலும் அதிகரிக்கிறது, உயிரிழப்பும் அதிகரிப்பது வேதனையானது.
வனங்களை அழித்தல், வனவிலங்குகள் வாழும் மலை, காட்டுப்பகுதிகளில் செய்யும் ஆக்கிரமிப்புகள் இதனால் தான் வனங்களை விட்டு விலங்குகள் வெளியே வருகிறது.
கொல்லப்பட்ட யானைகள் :
2018 முதல் 2021 வரையில் நாடு முழுவதும் மின்சாரம் தாக்கியதில் 222 யானைகளும், ரயில்களில் மோதியதில் 45 யானைகளும், வேட்டைக்காரர்களால் கொல்லப்பட்டதில் 29 யானைகளும், விஷம் வைத்து கொல்லப்பட்டு 11 யானைகளும் பலியாகியுள்ளன.
கொல்லப்பட்ட புலிகள்:
2019 முதல் 2021 வரை வேட்டையாடியதில் 29 புலிகள் கொல்லப்பட்டுள்ளன. 197 புலிகள் இறந்து போனது குறித்து காரணம் தெரியவில்லை, அது குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்த ஆண்டு இதுவரை நாடு முழுவதும் 74 புலிகள் உயிரிழந்துள்ளன. அவற்றில் புலிகள் அதிகம் உள்ள மத்தியபிரதேசத்தில் மட்டும் 27 புலிகள் உயிரிழந்துள்ளன. புலிகளுக்கு இடையிலான எல்லை மோதல், வயதான நிலை, உடல்நல பாதிப்பு, வேட்டை மற்றும் மின்வேலியில் சிக்குவது போன்ற காரணங்களால் புலிகளின் இறந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கொல்லப்பட்ட மனிதர்கள் :
அதே நேரத்தில் 2019 முதல் 2022 வரை மூன்று ஆண்டுகளில் யானைகள் தாக்கி 1,579 மனிதர்கள் இறந்துள்ளனர். 2019 முதல் 2021 வரை `புலிகள் காப்பகங்களில்' புலிகள் தாக்கி 125 மனிதர்கள் இறந்துள்ளனர். இதில் மகாராஷ்டிராவில் மட்டும் 61 பேர் இறந்துள்ளனர்.
வன விலங்கு ஆர்வலர்களின் கோரிக்கை
காடுகள், மலையடிவாரங்களில் உள்ள மேய்ச்சல் நிலங்கள் விவசாய நிலங்களாக மாறியதால் யானை, மான் உள்ளிட்ட விலங்குகளுக்கு உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே அவை விவசாய நிலங்களில் புகுகின்றன. இதனால் இரு தரப்பிலும் உயிர்சேதங்கள் ஏற்படுகின்றன. கடந்த ஓராண்டு காலத்திற்குள் முதுமலை புலிகள் காப்பகத்தில் ஐந்து செந்நாய்கள், இரண்டு புலிகள், இரண்டு யானைகள் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளன.

கூடலூர் வனக்கோட்டத்தில் பாதுகாக்கப்பட்ட புலிகள் சரணாலயத்தில் புலி உள்ளிட்ட விலங்குகள் விஷம் வைத்து கொல்லப்பட்டுள்ளன. வன அலுவலர்களின் அலட்சிய போக்கே இதற்கு கரணம் என்று வன விலங்கு ஆர்வலர்கள் புகார் கூறுகின்றனர். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து வருவதால், வனத்துறை அலுவலர்கள் இதனை தடுக்க முயற்சிகள் எடுக்க வேண்டும். காப்புக்காடுகளின் அருகே வாழும் உள்ளூர் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி மனித-விலங்குகள் மோதலை தடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்துள்ளனர்.
மனித – விலங்கு மோதல்களை தடுக்க
மனிதனுக்கும் வனவிலங்குகளுக்கும் மோதல் ஏற்பட முக்கிய காரணம் விலங்குகள் வாழிடத்தில் ஏற்படும் மாற்றங்கள். மனித - வனவிலங்கு மோதல்கள், அதனால் ஏற்படும் உயிரிழப்புகள் பெரும்பாலும் வன விலங்கு வசிப்பிடத்தில் நிகழும் ஆக்கிரமிப்பு, வாழ்விட சீரழிவு போன்றவற்றால் ஏற்படுகிறது. சட்டவிரோதமாக வனப் பொருட்களை எடுக்க செல்லும் மனிதர்களை வனத்துறை கண்காணித்து தடுக்க வேண்டும்.
வனப்பகுதிகளில் இருந்து மனித நடமாட்டம் உள்ள நிலப்பரப்புகளுக்கு உணவு மற்றும் தண்ணீருக்காக வனவிலங்குகள் இடம் பெயர்ந்து வருகின்றன. வனப்பகுதிக்குள் விலங்குகளுக்கு தேவையான நீர்நிலைகள் மற்றும் உணவுத் தேவை கிடைப்பதை வனத்துறை உறுதி செய்ய வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

மலை பிரதேசங்களில் விவசாயம் செய்யும் விவசாயிகள் தங்கள் பயிரிடும் முறையை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். வன விலங்குகளை விவசாய நிலங்களுக்கு ஈர்க்கும் பயிர் முறைகளை பயிரிட கூடாது என்பது மிக முக்கியம். தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் மலை பிரதேச விளைநிலங்களில் உள்ள விவசாயிகள் பெரும்பாலும் இந்த பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. அவர்கள் விலங்குகளை ஈர்க்காத பயிர்களை சாகுபடி செய்வது அவசியம். வன விலங்குகளின் சூழலுக்கு ஏற்ப பயிரிட வேண்டும்.
அதிகரிக்கும் வனவிலங்குகளின் எண்ணிக்கையும் ஒரு காரணமாக இருந்தாலும் வனங்கள் வசிப்பிட சூழல் சரியாக அமையும்போது மனித – விலங்கு மோதல் பாதிப்புகள் அதிகம் இருக்காது.