Published:Updated:

``ஒரு காடு சார்... அதுல ஒரு கேம் சார்..!’’ - காட்டைக் காக்கும் இளைஞரின் முயற்சி

கேமின் முடிவில் `ஒரு துளி நீருக்காக நாம் படவிருக்கும் இன்னல்கள் இவ்வளவா' எனச் சிந்திக்க வைக்கும். மனிதர்கள் வாழும் பகுதியில் விலங்குகளும், விலங்குகள் வாழும் காடுகளில் மனிதர்களும் இடம் பெயர்ந்ததால் இருவருக்குமே நஷ்டம்தான் என்பதைத் தெளிவாக உணர்த்தும்.

அப்துல் ரகுமான்
அப்துல் ரகுமான் ( ஈ.ஜெ.நந்தகுமார் )

``அம்மா கிரவுண்டுக்கு விளையாடப் போகிறேன் " என்ற சொற்கள் மாறி  ``அம்மா பப்ஜி விளையாடணும்... ஹாட்ஸ்பாட் ஆன் பண்ணுங்க" என்று குழந்தைகள் சொல்லும் அளவுக்குத் தொழில்நுட்பம் நம்மை மாற்றியிருக்கிறது. மாணவர்களின் மனதில் நீங்கா இடம்பெற்று வருகிறது நவீன வீடியோ கேம்கள். இந்த நிலையில், புதிய  கேம் ஒன்றைக் கண்டுபிடித்து அதன் மூலம் மாணவர்களுக்கு நல்ல கருத்துகளை இளைஞர் ஒருவர் எடுத்துச் செல்கிறார் என்ற செய்தியைக் கேட்டவுடன் அவரைச் சந்திக்கும் ஆர்வம் அதிகமானது.

அப்துல் ரகுமான் என்ற அந்த இளைஞர் உருவாக்கிய கேமைப் பற்றி அவரிடம் கேட்டபோது ``என்னால் முடிந்த மாற்றத்தைச் சமூகத்தில் கொண்டு வர வேண்டும் என நினைத்தேன். காடுகளும் மற்ற உயிரினங்களும் அழிந்துகொண்டே வருகின்றன. அதற்கு மூலகாரணம் மனிதர்களாகிய நாம்தான். இனி போர் என்று ஒன்று வந்தால் அது ஆயுதங்களால் வராது. இயற்கைக்கும் செயற்கைக்குமான போராகத்தான் இருக்கும். இது குறித்த விழிப்புணர்வை `அசூய்டு' என்ற இந்த கேமின் மூலம் கொண்டு வர நினைத்தேன். குழந்தைப் பருவம் என்பது நாம் எதைக் கற்றுக்கொடுக்கிறோமோ அதை அப்படியே உள்வாங்கும் பருவம். குழந்தைகளும் மாணவர்களும் அதிகமாக ஆர்வம் காட்டும் பகுதி விளையாட்டு. எனவே, விழிப்புணர்வுடன் கூடிய விளையாட்டைக் குழந்தைகளிடமிருந்து தொடங்கினேன். பார்ப்பதற்குச் சதுரங்க விளையாட்டைப் போல் இருக்கும். ஆனால், முற்றிலும் சதுரங்கத்திலிருந்து மாறுபட்டது இந்த `அசூய்டு'. அசூய்டு  என்றால் `உலகத்தின் தினம்' எனப் பொருள். ஜப்பானிய மொழியிலிருந்து எடுக்கப்பட்ட சொல் இது. இதன் பலகையைச் சரிபாதியாக வகுத்துக்கொண்டு ஒரு பாதி மனிதர்கள் வாழும் பகுதியாகவும் மற்றொரு பாதி விலங்குகள் வாழும் பகுதியாகவும் பிரித்து காய்களை நகர்த்த வேண்டும். சதுரங்கத்தைப் போல் எதிரில் உள்ள காய்களை அடித்து வெளியேற்ற வேண்டிய அவசியம் இதில் இல்லை. சற்று சுவாரஸ்யமாக எதிரில் உள்ள காய்க்கு எச்சரிக்கை விடும் வகையில் இந்த விளையாட்டை வடிவமைத்துள்ளேன்.

அசூய்டு விளையாட்டு
அசூய்டு விளையாட்டு
ஈ.ஜெ.நந்தகுமார்

இந்தப் பலகையில் உலக வரைபடம் வரையப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கேமின் முடிவில் `ஒரு துளி நீருக்காக நாம் படவிருக்கும் இன்னல்கள் இவ்வளவா' எனச் சிந்திக்க வைக்கும். மனிதர்கள் வாழும் பகுதியில் விலங்குகளும், விலங்குகள் வாழும் காடுகளில் மனிதர்களும் இடம் பெயர்ந்ததால் இருவருக்குமே நஷ்டம்தான் என்பதைத் தெளிவாக உணர்த்தும். இதைக் குழந்தைகள் விளையாடும்பொழுது ஆர்வத்துடன் ``சார் காடுகளை நாம் ஆக்கிரமித்துக்கொண்டேயிருந்தால் இந்த கேமில் உள்ளவாறு ஒருநாள் நடக்குமா" என என்னிடம் கேட்கிறார்கள். இந்தக் கேள்விதான் அவர்களைச் சமூகத்தில் வருங்கால தூண்களாக மாற்ற வழி செய்கிறது. குழந்தைகள் மட்டுமல்லாமல் பெரியவர்கள் நால்வர்  சேர்ந்தும் விளையாடலாம். வாழ்க்கையைப் பற்றிய தெளிவும் விட்டுக் கொடுத்து வாழும் மனப்பான்மையையும் இந்த கேம் கண்டிப்பாக கற்றுத் தரும்.

ஆரம்ப காலகட்டத்தில் இந்த கேமை  எப்படி அனைவரிடமும் எடுத்துச் செல்வது என்று புரியவில்லை. அதற்காகத் தொடங்கிய நிறுவனம்தான் `பிரைன் லைட்'. இந்த நிறுவனத்தின் மூலம் மாணவர்களுக்கு நல்ல கதைகளையும், நல்ல கருத்துகளையும், சிறப்பு முகாம்களையும் நடத்திவருகிறேன். நூறு நிலைகளில் இந்த கேமை விளையாடலாம். எத்தனை முறை விளையாடினாலும் சலிப்பு என்பது ஏற்படாது. எதிர்பார்த்ததைவிடக் குழந்தைகள் மிகவும் ஆர்வத்துடன் விளையாடுகிறார்கள். சில தனியார் பள்ளிகளுக்கு  இந்த கேமை கற்றுக்கொடுக்கச் செல்கிறேன். குழந்தைகளின் ஆர்வத்தின் மிகுதியால் இன்னும் பல பள்ளிகளில் இருந்து அழைப்பு வருகிறது. நானும் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்கும்போது மிகவும் உற்சாகத்துடன்  உணர்கிறேன். நான் கல்லூரியில் படிக்கும்போது எல்லோரும் என் ஏரியாவைச் சொல்லி கிண்டல் செய்வார்கள். காரணம் அது மிகவும் பின்தங்கிய பகுதி. அங்கிருந்து படிக்கச் சென்றவன் நான்" என முடித்தார்.

வரவிருக்கும் அக்டோபர் 20-ம் தேதி அன்று அசூய்டு கேமிற்காக அப்துல் ரகுமான் அவர்களுக்கு கலாம் விருது தர உள்ளனர். நம் வாழ்த்துகளை அவருக்குத் தெரிவித்துவிட்டு விடைபெற்றோம்..