Published:Updated:

'குட்டிப் பையனாகக் குட்டி முதலையை வீட்டுக்குக் கொண்டு வந்திருக்கேன்!' #ManvsWild-ல் மோடி #Highlights

#ManvsWild மோடி ஹைலைட்ஸ்
News
#ManvsWild மோடி ஹைலைட்ஸ் ( Discovery )

இந்தச் சிறப்பு எபிசோடில் பியர் க்ரில்ஸிடம் வாழ்க்கை அனுபவங்கள் பலவற்றையும் பகிர்ந்துகொள்கிறார் பிரதமர் மோடி!

டிஸ்கவரி சேனலில் நம் பலருக்கும் விருப்பமான நிகழ்ச்சி 'மேன் வெர்சஸ் வைல்ட்'. கடுமையான சூழல்கள் கொண்ட வனப்பகுதிகளில் இறக்கிவிடப்படும் சர்வைவல் எக்ஸ்பெர்ட் பியர் க்ரில்ஸ் எப்படி அங்கிருந்து உயிர்பிழைத்து வெளியே வருகிறார் என்பதுதான் இந்தத் தொடரின் சாராம்சம். பிரபலங்கள் பலரையும் இப்படிச் சாகச பயணங்களுக்கு அழைத்துச் சென்றிருக்கும் பியர் க்ரில்ஸின் புதிய கெஸ்ட் நமது பிரதமர் நரேந்திர மோடி. இந்தத் தகவல் வெளியானதுமே நிகழ்ச்சியின் மீதான எதிர்பார்ப்பு எகிறியது. சைவம் மட்டுமே சாப்பிடும் மோடி கிடைத்த எதையும் சாப்பிடும் பியர் க்ரில்ஸுடனான பயணத்தில் என்ன சாகசம் எல்லாம் செய்யப்போகிறார் எனப் பார்க்கத் தயாராகினர் மக்கள். புல்வாமா தாக்குதலின்போது இந்த ஷூட்டிங்கில்தான் மோடி இருந்தார் என்ற சர்ச்சை வேறு ஒருபுறம் இருந்தது. இந்நிலையில் இந்தச் சிறப்பு எபிசோடு பல்வேறு மொழிகளில் நேற்று இரவு ஒளிபரப்பானது. இந்த எபிசோடின் ஹைலைட்ஸைதான் இப்போது பார்க்கப்போகிறோம்.

பியர் க்ரில்ஸ்
பியர் க்ரில்ஸ்
Discovery

எப்போதும்போல தனக்கே உரிய பாணியில் ஜிம் கார்பட் தேசிய பூங்காவுக்கு ஹெலிகாப்டரில் வந்து இறங்குகிறார் பியர் க்ரில்ஸ். அங்கிருந்து மோடியைச் சந்திக்கும் இடத்துக்கு 6 கிலோமீட்டர் பயணிக்க வேண்டும். இந்தப் பாதை நெடுக புலிகள், யானைகள், முதலைகள் என கார்பட் பூங்காவின் ஆபத்துகளை நமக்கு விவரித்துக்கொண்டே செல்கிறார் பியர் க்ரில்ஸ். முந்தைய தினத்தில் தங்கள் குழு நேருக்கு நேர் சந்தித்த புலி பற்றியும் தெரியப்படுத்துகிறார். இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்யும் சூழல் நிலவுகிறது. அப்போதுதான் அங்கு பாதுகாப்புப் படை சூழ ஜீப்பில் வந்து இறங்குகிறார் நரேந்திர மோடி.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

பியர் க்ரில்ஸை வரவேற்று ஜிம் கார்பட் பூங்கா பற்றி அவரிடம் விவரிக்கிறார் நம் பிரதமர். 100 மொழிகள், 1,600 வட்டார வழக்குகள் எனப் பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவைப் போலவே இந்த காட்டுக்கும் அத்தனை முகங்கள் இருக்கின்றன என்கிறார். இடிசத்தம் கேட்டு பியர் க்ரில்ஸ் 'இயற்கையின் மொழியும் இங்கு இருக்கிறதே' எனக் கூற அங்கிருந்து அவர்களின் 8 கிலோமீட்டர் பயணம் தொடங்குகிறது.

மோடியை சந்திக்கும் க்ரில்ஸ்
மோடியை சந்திக்கும் க்ரில்ஸ்
Discovery

போகும் வழியில் மோடியின் இளமைப் பருவம் பற்றி தெரிந்துகொள்கிறார் பியர். குஜராத்தில் ஒரு சிறிய நகரத்தில் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்ததைப் பற்றி பேசிக்கொண்டிருக்கும்போதே யானையின் கழிவைப் பார்க்கும் மோடி, "பாருங்கள், யானை ஒன்று இப்போதுதான் இந்த வழி கடந்து சென்றிருக்கிறது" என்று பியரிடம் கூற அவரும் அதை எடுத்துப்பார்த்து அதை உறுதிசெய்கிறார். ஆப்பிரிக்காவில் நீர் சரியாகக் கிடைக்கப்பெறாததால் இப்படியான சாணம் ஒன்றைப் பிழிந்து குடித்த அனுபவத்தைப் பியர் பகிர்ந்துகொள்ள குபீரென சிரிக்கிறார் மோடி.

'குட்டிப் பையனாகக் குட்டி முதலையை வீட்டுக்குக் கொண்டு வந்திருக்கேன்!' #ManvsWild-ல் மோடி #Highlights
Discovery

பிறகு மீண்டும் மோடியின் இளமைப் பருவம் பற்றிய உரையாடல் தொடர்கிறது. "சிறிய குடும்பம் என்றாலும் எப்போதும் இயற்கையையொட்டியே எங்கள் வாழ்க்கை இருந்தது. அங்கிருக்கும் அரசுப் பள்ளியில்தான் படித்தேன்" எனக் கூற, பியர், "நன்றாகப் படிக்கும் மாணவரா நீங்கள்?" எனக் கேட்கிறார். "அப்படி உறுதியாகச் சொல்லிவிட முடியாது" என்கிறார் மோடி.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

முன்பு அனைத்து தேவைகளையும் இயற்கையே தீர்க்கும் என்பதை விவரிக்கத் தொடங்குகிறார் மோடி. "பனிக்காலங்களில் பனித்துளிகள் அப்படியே உப்பு போன்ற ஒரு சிறிய படிவத்தை உண்டாக்கும். அதைதான் துவைப்பதற்கும் குளிப்பதற்கும் டிடெர்ஜென்ட்போல பயன்படுத்துவோம்" என்கிறார். அயர்ன்பாக்ஸ் இல்லாமல் சட்டைகளை அயர்ன் செய்தது, தந்தைக்கு உதவியாக ரயில் நிலையங்களில் டீ விற்றது எனத் தனது பால்ய காலங்களை நினைவுகூர்கிறார்.

ஆயுதம் தயார் செய்த போது
ஆயுதம் தயார் செய்த போது
Discovery

அப்படியே பயணத்தின் முதல் டாஸ்க்குக்கு வருகிறோம். புலிகள் சகஜமாகச் சுற்றித்திரியும் இந்தப் பூங்காவில் பாதுகாப்பாக இருக்க ஒரு ஆயுதம் செய்ய வேண்டியது முக்கியம் எனக் களத்தில் இறங்குகிறார் பியர் க்ரில்ஸ். நீண்ட கம்பு மற்றும் கத்தியைக் கொண்டு மோடியின் உதவியுடன் ஈட்டி போன்ற ஆயுதத்தைத் தயார் செய்கிறார். இதற்கு நடுவில் ஜிம் கார்பட்டின் வீரதீர சாகசங்கள் பற்றியும் புலிகள் பாதுகாப்புக்கு அவர் செய்த பணிகள் பற்றியும் பேசுகிறார் மோடி. பதற்றத்துடன் இருக்கும் பியர் க்ரில்ஸிடம் "கடவுளிடம் விட்டுவிடுங்கள், அவர் அனைத்தையும் பார்த்துக்கொள்வார்" என நம்பிக்கை தருகிறார்.

பியர் க்ரில்ஸ் "மலைகளுக்குச் சிறுவயதிலேயே வந்துருக்கிறீர்களா?" எனக் கேட்க 17, 18 வயதில் இமயமலைக்குச் சென்ற ஆன்மிகப் பயணம் குறித்து பேசுகிறார் மோடி, "வாழ்க்கையில் என்ன செய்வதெனத் தெரியாமல் இருந்த நான் இமயமலை துறவிகளைச் சந்தித்து அவர்களுடன் சில காலம் தங்கியிருந்தேன். அது ஒரு அற்புதமான அனுபவம். எந்த ஒரு ஆசையுமின்றி இயற்கைக்கு எந்த ஒரு தொந்தரவும் தராமல் அவர்கள் வாழ்கின்றனர்."

ஆயுதம் தயாராகிறது, எப்படிப் பயன்படுத்துவது என பியர் க்ரில்ஸ் விளக்குகிறார். அதற்கு "என் வளர்ப்பு எந்த ஒரு உயிரையும் கொல்ல கற்பிக்கவில்லை" என்கிற மோடி "ஆனாலும் உங்கள் பாதுகாப்புக்காக இதை எடுத்துக்கொள்கிறேன்" எனச் சிரித்துக்கொண்டே ஆயுதத்தை எடுத்துக்கொள்கிறார். இருவரும் அருகில் இருக்கும் நதியை நோக்கிப் பயணப்படத் தொடங்குகின்றனர்.

18 ஆண்டுகளில் இதுதான் முதல் வெகேஷன்
நரேந்திர மோடி

"ஒரு புலியிடமிருந்து தப்பிக்க நான் எவ்வளவு வேகமாக ஓட வேண்டும் தெரியுமா?" எனக் கேட்கிறார் பியர் க்ரில்ஸ். "நீங்களே சொல்லுங்க" என மோடி கூற "உங்களைவிட வேகமாக ஓடினால் போதும் புலி உங்களைத் தின்றுவிடும்" என்கிறார். மோடி ஒருமாதிரி முழிக்க, "மோசமான காமெடிதான் நானே ஒத்துகிறேன்" என நடையைக் கட்டுகிறார். நதியை வந்தடைகின்றனர். மோடி அரசியல் வாழ்க்கை பற்றிப் பேசத்தொடங்குகிறார். "மக்கள் என்னை இந்தப் பணியைச் செய்ய தேர்ந்தெடுத்திருக்கின்றனர். இதில் என் முழு கவனத்தையும் செலுத்தியிருக்கிறேன். இதைச் சுற்றுலாப் பயணமாக எடுத்துக்கொண்டால் 18 ஆண்டுகளில் இதுதான் முதல் வெகேஷன்" என்கிறார்.

பியர் க்ரில்ஸ் முந்தைய நாளே தயார் செய்துவைத்திருந்த சிறிய தோணி போன்ற படகில் நதியைக் கடக்க முயல்கின்றனர். முதலைகள் இருக்கும் இந்த நதி ஆபத்தானது என்கிறார் பியர் க்ரில்ஸ். "சிறுவயதில் குளத்தில் குளிப்பது என் வழக்கம். அப்படி ஒரு நாள் குளிக்கும்போது ஒரு குட்டி முதலையைப் பார்த்தேன். அதை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு வந்துவிட்டேன். என் தாயார் இது தவறு எனக் கண்டிக்க மீண்டும் அதைக் குளத்துக்குச் சென்று விட்டுவந்தேன்" என முதலைகளுடனான பால்ய அனுபவத்தைப் பகிர்கிறார். "இயற்கையைக் கண்டு நாம் எப்போதும் அச்சப்படக் கூடாது. அப்படி இயற்கையை எதிரியாகப் பார்ப்பதில்தான் பிரச்னை தொடங்கிறது. சிறிய வருமானம் பெற்றாலும் மழைக்காலம் தொடங்கியதும் எங்கள் ஊரில் மழை பெய்யத் தொடங்கிவிட்டது எனச் சுமார் 30 உறவினர்களுக்கு போஸ்ட்கார்டுகள் அனுப்புவார் என் தந்தை. அப்போது புரியாது, ஆனால், இப்போது மழையின் மகத்துவம் என்னவென்று எனக்குத் தெளிவாக விளங்குகிறது" என்றார்.

"உங்களுக்குப் பயம் என்று ஏதாவது இருக்கிறதா, பெரிய மேடைகள் ஏறுவதற்கு முன் பதற்றமடைவீர்களா?" எனப் பியர் கேட்க "பதற்றம் என்பது என்ன என்பதையே என்னால் பிறருக்கு விளக்க முடியாது. எனது சுபாவமே உறுதியானது, அனைத்து விஷயங்களிலும் நல்லதை மட்டுமே பார்ப்பேன்" என்கிறார். தோணியில் மோடி உட்கார குளிர்ந்த நீரில் பியர் க்ரில்ஸ் அதை தள்ள நதியைக் கடக்கின்றனர். பயணம் முற்றுப்பெறுகிறது. மோடியின் நலனுக்காகவும் இந்தியாவின் நலனுக்காகவும் சிறிய பிரார்த்தனையுடன் விடைபெறுகிறார் பியர்.

பியர் க்ரில்ஸுடன் செல்ஃபி எடுக்கும் பிரதமர் மோடி
பியர் க்ரில்ஸுடன் செல்ஃபி எடுக்கும் பிரதமர் மோடி
Discovery

மற்ற பியர் க்ரில்ஸ் பயணங்களைப் பார்த்து எதிர்பார்ப்புடன் வந்திருந்தவர்களுக்கு ஏமாற்றமே தந்தது இந்த நிகழ்ச்சி. மொத்த எபிசோடும் மோடியுடனான நேர்காணல் போலவே கடந்தது. பியர் க்ரில்ஸும் மோடி புராணமே பாடுகிறார். மோடி போன்ற பெரிய தலைவர் செல்லும்போது இதுவே அதிகம் என்ற வாதம் ஒருபுறம் வைக்கப்பட்டாலும் அப்போதைய அமெரிக்க அதிபர் ஒபாமாவுடனான எபிசோடில் இன்னும் பல சுவாரஸ்ய நிகழ்வுகள் இருந்தன. அதிலும் வாழ்க்கை பகிர்வுகள் இருந்தன, இல்லை என்று சொல்லவில்லை. ஆனால், காட்டுப்பகுதியில் கிடைத்த இலையில் டீ போடுவது, கரடி தின்று மிச்சம் வைத்த மீனை சமைத்துத் தின்பது, பனிப்பாறையிலிருந்து நீர் எடுத்து அருந்துவது என உரையாடல்கள் தாண்டிய விஷயங்கள் பல இருந்தன. அது இங்கு மிஸ்ஸிங்.

பியர் க்ரில்ஸுடன் ஒபாமா
பியர் க்ரில்ஸுடன் ஒபாமா
Discovery

மற்றபடி மக்களிடம் இயற்கையைப் பாதுகாப்பது முக்கியம் என விழிப்புணர்வு ஏற்படுத்த முற்படும் இந்த முயற்சி பாராட்டத்தக்கதுதான்.