Published:Updated:

மனித உயிருக்கு மிகவும் ஆபத்தான உயிரினம் - அதை அழிக்க ஆய்வைத் தொடங்கியிருக்கும் ஐ.சி.எம்.ஆர்!

ஐ.சி.எம்.ஆர் ஆய்வு
ஐ.சி.எம்.ஆர் ஆய்வு ( freepik )

உலகில் மற்ற எல்லா உயிரினத்தையும்விட அதிக மனித உயிர்களைக் காவு வாங்கும் அந்த அதி பயங்கர உயிர்க்கொல்லி எது தெரியுமா?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

மனிதர்களுக்கு ஊறு விளைவிக்கும் உலகின் மிகவும் ஆபத்தான உயிரினம் எது தெரியுமா? சிங்கம் புலி என வேட்டையாடும் மிருகங்களோ, படையே கண்டு நடுங்கும் பாம்போ என நினைத்தீர்களானால் அது தவறான விடை. உலகில் மற்ற எல்லா உயிரினத்தையும்விட அதிக மனித உயிர்களைக் காவு வாங்கும் அதி பயங்கர உயிர்க்கொல்லி கொசு. மலேரியா, யெல்லோ பீவர், சிக்குன்குன்யா, வெஸ்ட் நைல், டெங்கு, பிளரியாசிஸ், ஜிகா போன்ற பல நோய்களைப் பரப்புவதன் மூலம் ஓர் ஆண்டுக்கு ஏழு லட்சம் மனித உயிர்கள் கொசுவால் பறிக்கப்படுவதாகத் தரவுகள் சொல்கின்றன.
 ஏடிஸ் கொசு
ஏடிஸ் கொசு

அதுவும் இந்தியா போன்ற வெப்பமண்டல நாடுகளில் கொசு ஒரு தேசியத் தொல்லை. இந்தியச் சுகாதாரத் துறை இந்தக் கொசுவை அழிப்பதற்காகத் தொடர்ந்து பல முயற்சிகள் செய்துவருகிறது. வீடுகளிலோ, மற்ற பொது இடங்களிலோ தேங்கியிருக்கும் நன்னீரில்தான் கொசு முட்டையிட்டு வளர்ந்து அதிக எண்ணிக்கையில் பரவுகிறது. அப்படி தண்ணீர் தேங்கவிடாமல் தடுப்பதற்கு விழிப்புணர்வு விடீயோக்கள் தொடங்கி நேரில் வீடுகளுக்குக் கள ஆய்வு மேற்கொள்வது வரை பல நடவடிக்கைகளை மேற்கொண்டது அரசாங்கம்.

இந்நிலையில், இதற்கு மற்றொரு புதிய தீர்வைக் கண்டிருக்கிறது ஒரு தனியார் நிறுவனம். இந்த நிறுவனம் தயாரித்துள்ள மாத்திரையைத் தேங்கியிருக்கும் தண்ணீரில் போட்டவுடன் அந்த மாத்திரை கரைந்து, தண்ணீரில் இருக்கும் கொசுக்களின் லார்வாக்களை அழித்துவிடும். அதன்பிறகு அந்தத் தண்ணீரை நாம் பயன்படுத்தவும் முடிவும். இந்த மாத்திரைக்கு அதிகாரபூர்வமாக ஒப்புதல் வழங்க இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் ஆய்வு செய்யவுள்ளது.

கொசு
கொசு

ஐ.சி.எம்.ஆர்., நிறுவனத்தின் கீழ், புதுச்சேரியில் செயல்பட்டு வரும் பூச்சியியல் கட்டுப்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம் இந்த மருந்தின் தன்மை, எந்தத் தண்ணீரில் இந்த மாத்திரை கரையும் என்பது உள்ளிட்டு எல்லாக் கோணங்களிலும் ஆராய்ச்சி செய்யவுள்ளது. இந்த சோதனை வெற்றிபெற்றால் நல்ல தண்ணீரில் வளரக்கூடிய, ஏடிஸ் கொசுவை லார்வா நிலையிலேயே அழிக்க முடியும்.

‘முடக்கம் தேவையில்லை; முழுக்கவனம் வேண்டும்!’

கட்டாக் நகரத்தில் கொசுத் தொல்லை பகலில், அதுவும் வீட்டிற்கு உள்ளேயும்கூட அதிகரித்துள்ளது. கொசுவின் எண்ணிக்கை கடந்த ஒரு மாதத்தில் பெருமளவு அதிகரித்துவிட்டதாகத் தெரிந்த நிலையில், சமீபத்தில் மிகத் தீவிர நடவடிக்கைகள் எடுத்து கொசுத்தொகையைக் கட்டுப்படுத்தியது.

கட்டாக் முனிசிபல் கார்ப்பரேஷன் மட்டும் கொசுவைக் கட்டுப்படுத்த ஆண்டுக்கு 3.5 கோடி ரூபாய் செலவழிக்கிறது. இப்படி இந்தியாவின் ஒவ்வொரு கார்ப்பரேஷன் கழகமும் செலவிடும் தொகையின் மொத்தம் பல கோடிகளைத் தாண்டும். இதைக் குறைக்கவே கொசுக்களை ஒழிப்பது தொடர்பாக, பல்வேறு ஆய்வுகள் நடைபெறுகின்றன.

இந்நிலையில் மக்கள் உயிரைக் காப்பது, அரசாங்கத்தின் செலவைக் குறைப்பது என இரண்டிற்கும் இந்த ஆய்வின் வெற்றி வழிவகுக்கும்.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு