Published:Updated:

இறைச்சி சாப்பிடுவதை நிறுத்தினாலே பூமியைக் காப்பாற்றிவிடலாமா? வீகன் பிரசாரமும் உண்மையும்

இறைச்சி உணவின் மூலம் கணிசமான கரிம வெளியீடு நிகழ்கிறது. அது மறுப்பதற்கில்லை. ஆனால், அதைவிட அதிகமான கரிம வெளியீட்டை இன்னும் பல துறைகள் மேற்கொள்கின்றன.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

``இறைச்சி சாப்பிடுவது காலநிலைக்குக் கேடு விளைவிக்கும். அசைவப் பிரியர்களே! சைவ உணவுக்கு மாறுவதன் மூலம் காலநிலை மாற்றத்தைச் சரிகட்ட உங்களால் முடிந்த பங்களிப்பைச் செய்யுங்கள்"

- கடந்த சில ஆண்டுகளில் இப்படியான அறிவுரைகளைத் திரும்பிய திசையெல்லாம் கேட்க முடிகிறது. உலக அளவில் காலநிலை மாற்றத்துக்கு எதிராகச் செயல்படும் மக்களில், ஒரு தரப்பினர், இறைச்சிகளை முற்றிலுமாகத் தவிர்ப்பதன் மூலம் பூமியைக் காப்பாற்றிவிட முடியும் என்று உறுதியாக நம்புகிறார்கள்.

உண்மையாகவே உலக மக்கள் முழு முற்றாக, அசைவ உணவுகளைத் தவிர்த்துவிட்டால் பூமியைக் காப்பாற்றிவிடலாமா?

வீகன் உணவுமுறை (மாதிரி படம்)
வீகன் உணவுமுறை (மாதிரி படம்)
Pixabay

முற்றிலும் விலங்கு சார்ந்த எதுவுமே இல்லாத முழுமையான சைவ உணவு முறை வீகன் உணவுமுறை என்றழைக்கப்படுகிறது. அத்தகைய வீகன் உணவுமுறையைப் பின்பற்றிவரும் அரவிந்த் இதுகுறித்து நம்மிடையே பேசியபோது, ``உலகின் விவசாய நிலங்களில் 17 சதவிகிதத்துக்கும் குறைவான நிலங்கள்தான் உழவுக்குப் பயன்படுகின்றன. மீதமுள்ள 83 சதவிகிதத்துக்கும் அதிகமான நிலங்கள் இறைச்சிக்காக விலங்குகளை வளர்க்கப் பயன்படுகின்றன (மாட்டிறைச்சிக்கு 60%; ஆடு, கோழி, பன்றி இறைச்சி மற்றும் மீன் வளர்ப்புக்கு 23%). அதாவது 17% நிலங்களிலிருந்து தயாரிக்கப்படும் தானியங்கள் நமக்கு 90% கலோரிக்களைக் கொடுக்கையில் மீதமுள்ள 10 சதவிகிதத்துக்கும் குறைவான கலோரிக்களைப் பெற 83 சதவிகிதத்துக்கும் அதிகமான நிலங்களைப் பயன்படுத்தி வருகிறோம். இறைச்சியை நிறுத்துவதன் மூலம் பெரும் பகுதி (முக்கால் பங்குக்கும் மேல்) காடுகள் அழிக்கப்படுவதைத் தடுக்கலாம் என்பது இதிலிருந்து தெளிவாகும்.

உலக அளவில் உழவின் மூலம் உற்பத்தி செய்யப்படும் உணவில், சுமார் 60 முதல் 70 சதவிகித உணவு தானியங்களை நாம் இறைச்சிக்காக வளர்க்கப்படும் விலங்குகளுக்குக் கொடுத்து அவற்றை வளர்க்கிறோம். பிளேக் (plague) முதல் கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் வரை உலகின் அனைத்து தொற்றுநோய்களும் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு வந்தவை. தாவரங்களை உண்பதால் இதுவரை எந்த நோயும் வந்ததாக வரலாற்றில் இல்லை" என்று கூறினார்.

எந்த வகையிலும் விலங்குகளை உட்படுத்தாமல் பெறப்படும் உணவுமுறையே ஆங்கிலத்தில் வீகன் (Vegan) என்றழைக்கப் படுகிறது. இதைக் கவிஞர் தாமரை நனிசைவம் என்று தமிழ்ப்படுத்துகிறார். நனிசைவத்தைத் தீவிரமாகப் பின்பற்றிவரும் கவிஞரிடம் பேசியபோது, ``புவி வெப்பமயமாதல் என்னும் பேராபத்தில் முக்கியப் பங்கு வகிப்பது, `விலங்கு வேளாண்மை' எனப்படும், விலங்குகளை ஏதோ பயிர்கள் போல் கருதி, தொழிற்சாலைகளில் அவற்றை உற்பத்தி செய்து, கொன்று மனித நாக்குகளுக்கு உணவாக்கும் ஈவிரக்கமற்ற இறைச்சி வணிகம்!

Vegan Diet (Representational Image)
Vegan Diet (Representational Image)
Pixabay

உலக மக்கள் தொகை 780 கோடியெனில், வேளாண் விலங்குகளின் எண்ணிக்கை சுமார் 7800 கோடி! பத்து மடங்கு பெருக்கி வைத்திருக்கிறோம். இவை எதை உண்ணும்? தாவரங்களைத்தானே! அந்தத் தாவரங்களை வளர்க்க நிலம், தண்ணீர், மனித ஆற்றல்? மக்கள் தொகையில் 25% அன்றாடம் பசியோடு படுக்கப்போகும்போது, 7800 கோடி விலங்குகளுக்குத் தாவரங்களை உணவாக்குகிறோமே, ஏதேனும் ஏரணம் இருக்கிறதா இந்த செயல்பாட்டில்! நேரடியாக மனிதர்களுக்கே கொடுத்து விட்டால் உலகில் பசிக் கொடுமையே இருக்காதே!

இந்த விலங்கு வேளாண் பண்ணைகளிலிருந்து வெளியாகும் பசுங்குடில் வளிமங்களால்தான் சுற்றுச்சூழல் கெடுகிறது, புவி வெப்பமடைகிறது. 70% என, மற்ற காரணிகளை விட முன்னணியில் நிற்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எனவே அறம் சார்ந்து புலாலைக் கைவிடவில்லையெனினும், உலகத்தை அழிவிலிருந்து காப்பாற்றவேனும் அனைவரும் நனிசைவத்துக்கு மாறவேண்டிய கட்டாயத்தை இயற்கை ஏற்படுத்தி விட்டது.

பாரிஸ் சுற்றுச்சூழல் மாநாட்டிற்குப் பிறகு உலக நாடுகள் விழித்துக் கொண்டு, உரையாடல் நிகழ்த்தி வருகின்றன. மேற்கத்திய நாடுகளில் புலாலைத் தவிர்க்கச் சொல்லிப் பரப்புரைகளை அரசாங்கங்களே எடுக்க ஆரம்பித்துவிட்டன. இந்தியாவில் மட்டும்தான் இது மதம்/அரசியல் பிரச்னையாக்கப்படுகிறது. அந்த நிலையும் விரைவில் மாறும் என நம்புகிறேன்" என்று கூறினார்.

கால்நடை வளர்ப்பு
கால்நடை வளர்ப்பு

அமெரிக்காவின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு, அந்நாட்டில் ஓராண்டுக்கான மொத்த பசுமை இல்ல வாயு வெளியீட்டில் 14.5 சதவிகிதம் விவசாயத் துறையிடமிருந்து வெளியாவதாகக் கூறுகிறது. அதாவது, அந்த ஒரு துறை மட்டும் 6500 மெகா டன் கரிம வாயுவை வெளியிடுகிறது. அதில் கால்நடை உற்பத்தி துறை வெளியிடும் கரிம வாயுவின் அளவு 235 மெகா டன்கள் என்கிறது அதன் தரவுகள்.

இந்தியாவில் 481 மெகாடன் கரிம வாயு, விவசாயம் மற்றும் கால்நடை துறையிலிருந்து வெளியாகின்றன. அதில் 42 சதவிகிதம் விவசாயத்திலும் 58 சதவிகிதம் கால்நடை உற்பத்தியிலும் வெளியாகிறது.

உலக அளவில், 18 சதவிகிதம் பசுமை இல்ல வாயு வெளியீட்டில் கால்நடை உற்பத்தி பங்கு வகிப்பதாக, 2006-ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் அமைப்பு வெளியிட்ட அறிக்கை குறிப்பிட்டது. ஆனால், ஒரு காட்டு நிலம் மேய்ச்சல் நிலமாக மாற்றப்படுவது, தீவனம் உற்பத்தி, பிறப்பிலிருந்து இறப்பு வரை கால்நடை வெளியிடும் மீத்தேன் வாயு, உரம் உற்பத்தி என்று என்னென்ன வகையான அளவீடுகளைக் கருத்தில் எடுத்துக்கொள்ள முடியுமோ அத்தனையையும் இதில் எடுத்துக்கொண்டு இந்தப் பகுப்பாய்வைச் செய்துள்ளார்கள்.

இறைச்சி உணவு
இறைச்சி உணவு

ஆனால், இதற்கு அடுத்ததாக போக்குவரத்து மூலம் உண்டாகக்கூடிய கரிம வெளியீட்டைக் கணக்கிடும்போது, ஒரு வாகனத்தையும் அதன் பாகங்களையும் உற்பத்தி செய்யும்போது வெளியான கரிமம், அவற்றை குறிப்பிட்ட இடங்களுக்குக் கொண்டு சேர்க்க ஆகும் பயணங்களின்போது வெளியாகும் கரிமம், இந்த வாகனங்களைப் பயன்படுத்துகின்ற சாலைகள், மேம்பாலங்கள், விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள் ஆகியவற்றை உருவாக்கும்போதும் பராமரிக்கும்போதும் வெளியாகும் கரிம வாயு போன்றவை கணக்கில் எடுக்கப்படவில்லை.

அவை, வாகனங்களாகப் பயன்படுத்தப்படும்போது வெளியாகும் கரிம வாயு மட்டுமே கணக்கில் எடுக்கப்பட்டது. இந்தப் பகுப்பாய்வில் கால்நடை உற்பத்தி சரியாகக் கணக்கிடப் படவில்லை என்று பின்னாளில், இந்த ஆய்வறிக்கையின் தலைமை ஆசிரியரான ஹென்னிங் ஸ்டெயின்ஃபீல்ட் (Henning Steinfeld) தெரிவித்தார். இந்தத் தவற்றை 2010-ம் ஆண்டு மார்ச் 22-ம் தேதியன்று சான் ஃபிரான்சிஸ்கோவில் ஆய்வாளர்களுக்கு இடையே நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியின்போது அவர் குறிப்பிட்டுள்ளார். பின்னர், உணவு மற்றும் விவசாய அமைப்பும் (FAO) அதை ஒப்புக்கொண்டது.

வீகன் உணவுமுறை மற்றும் கரிம வெளியீட்டுக்கு இடையே உலக அளவிலும் இந்தியளவிலும் இருக்கும் தொடர்பு குறித்துப் பேசிய பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுற்றுச்சூழல் வழக்கறிஞர் வெற்றிச்செல்வன், ``அமெரிக்கா போன்ற நாடுகளைப் பொறுத்தவரை இதுவொரு சிக்கலான பிரச்னைதான். அங்கு உணவு உற்பத்தித்துறை வெளியிடும் மொத்த கரிம அளவு 30%.

Henning Steinfeld/ FAO
Henning Steinfeld/ FAO
Hayden Montgomery/ Special Representative, Global Research Alliance on Agricultural Greenhouse Gases/ Twitter
`தலைக்குமேல் தொங்கும் காலநிலை மாற்றம் எனும் கத்தி!' - இனியாவது சூரிய ஆற்றலை ஊக்குவிக்குமா அரசு?

ஹார்மோன் ஊசிகளைப் போடுவதில் தொடங்கி, கொடுக்கப்படும் உணவு வரை அனைத்திலுமே மீத்தேன் போன்ற வாயு வெளியீடு அதிக அளவில் இருப்பதால், அங்கு இது முக்கியப் பிரச்னையாகக் கருதப்படுகிறது. மற்றபடி, இந்தியா போன்ற நாடுகளில் பார்த்தால், நிலக்கரி சார்ந்த துறைகள், போக்குவரத்து ஆகியவைதான் கரிம வெளியீட்டில் அதிகம் பங்கு வகிக்கின்றன. இவைபோக சுமார் 15% தான் ஒட்டுமொத்த விவசாயத் துறையுமே பங்களிக்கிறது. இந்தக் கணக்கிலும் பால், இறைச்சி போன்ற பல்வேறு காரணங்களுக்காக வளர்க்கப்படும் கால்நடைகள் வழியாக வெளியாவது அதிகபட்சமாக 10% தான். அதையுமே பசுமை நிறைந்த பகுதிகளில் மேற்கொள்ளும்போது, இந்த வெளியீட்டையும் கட்டுப்படுத்த வாய்ப்புகள் உள்ளன.

இந்தியாவில் கரிம வெளியீடு குறித்த ஒரு சிறிய ஒப்பீடு செய்துபார்த்தால் நமக்கு புரியும். ஒரு சராசரி இந்தியர் ஓராண்டுக்கு 5.6 கிலோ ஆட்டு இறைச்சியை எடுத்துக் கொள்கிறார். அந்தக் குறிப்பிட்ட அளவிலான ஆட்டு இறைச்சியை உற்பத்தி செய்வதில் தொடங்கி, இறுதியில் அவர் உட்கொண்ட பிறகு வெளியாகும் கரிம வாயு வரை மொத்தமாக ஓராண்டுக்கு 140 கிலோ.

அவரே, டெல்லியிலிருந்து லண்டனுக்கு விமானத்தில் பயணித்துத் திரும்புகிறார். அவர் லண்டனுக்குச் செல்லவும் அங்கிருந்து டெல்லிக்குத் திரும்பி வரவும் மேற்கொண்ட விமானப் பயணத்தின் மூலம், 1,862 கிலோ (டெல்லி-லண்டன் பயணத்துக்கு 931கிலோ கரிமம் வெளியாகிறது) கரிம வாயு வெளியேறுகிறது. அவருடைய விமானப் பயணத்தில் வெளியான கரிம வாயுவோடு, அவர் சாப்பிட்ட இறைச்சியிலிருந்து வெளியான கரிம வாயுயை ஒப்பிட்டால், இறைச்சி உணவில் வெளியானதைவிட 13 மடங்கு அதிகமான கரிமத்தை விமானப் பயணம் வெளியிட்டுள்ளது. இதன்மூலம், அதிக அளவிலான கரிம வெளியீட்டை மேற்கொள்ளும் மற்ற பல துறைகள் இருக்கின்றன என்பதும் இறைச்சி உற்பத்தியைவிட அதிகக் கவனம் அவற்றுக்குத் தேவைப்படுவதையும் புரிந்துகொள்ள முடிகிறது.

Eggs (Representational Image)
Eggs (Representational Image)
Pixabay
IPCC ரிப்போர்ட்: `காலநிலை மாற்றம்' டு `காலநிலை ஆபத்து'- விஞ்ஞானிகளின் இறுதி எச்சரிக்கை சொல்வது என்ன?

இறைச்சி உணவின் மூலம் கணிசமான கரிம வெளியீடு நிகழ்கிறது. அது மறுப்பதற்கில்லை. ஆனால், அதைவிட அதிகமான கரிம வெளியீட்டை இன்னும் பல துறைகள் மேற்கொள்கின்றன. இறைச்சி, முட்டை, பால் போன்ற உணவுகள் பெரும்பகுதி மக்களுடைய ஊட்டச்சத்து மிக்க உணவுமுறையில் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கின்றன. குறிப்பாக, முட்டை, பால் போன்றவற்றுக்கு மாற்றாக இருக்கும் வீகன் உணவுகள் எளிய மக்கள் விலை கொடுத்து வாங்கக்கூடிய அளவுக்கு இல்லை. ஒருவருடைய உணவுமுறையில் கை வைப்பதைவிட முக்கியமாக, அதைவிட அதிக கரிமத்தை வெளியிடும் துறைகளின் மீது கவனம் செலுத்துவதுதான் இப்போதைய தேவை" என்று கூறினார்.

மேலும், அசைவ உணவைப் போலவே, பெருமுதலாளித்துவம் மேற்கொள்கிற பெருவிவசாய உற்பத்தியால், சைவ உணவுப் பொருள்கள் மற்றும் விவசாய உற்பத்திகளுக்காக அழிக்கப்படும் பெருமளவு மழைக்காடுகளையும் தவிர்த்துவிட முடியாது. போர்னியோ மழைக்காட்டின் மொத்தப் பரப்பளவில் 2006 முதல் 2017 வரையிலான காலகட்டம் வரை சுமார் 10 சதவிகிதம் மழைக்காடுகள் சோயா பயிரிடுதலுக்காக அழிக்கப்பட்டுள்ளது. அதேபோல், சோயா, பாதாம், சூரியகாந்தி போன்றவற்றின் ஒற்றைப் பயிரிடுதல் முறை தென்னமெரிக்கா, தென் கிழக்கு ஆசியாவிலுள்ள பல லட்சம் ஹெக்டேர் மழைக்காடுகளை அழித்துக் கொண்டிருக்கிறது

நாட்டுக் கோழி வளர்ப்பு
நாட்டுக் கோழி வளர்ப்பு
`இரவு நேரத்தில் முட்டை சாப்பிடலாமா?' முட்டை பற்றிய A to Z டவுட்களும் விளக்கங்களும்!

காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதில் ஒவ்வொரு தனிமனிதரின் பங்கும் உள்ளது உண்மைதான். அதேநேரம், பெருமுதலாளிகளின் தொழிற்சாலைகள், ஆக்கிரமிப்புகள் மற்றும் இயற்கைவிரோத நடவடிக்கைகளைக் கட்டுக்குள் கொண்டுவருவது பெருமளவிலான கரிம வெளியீட்டைக் குறைப்பதில் பங்கு வகிக்கும் என்பதே உலகளவிலான சூழலியலாளர்கள் வலியுறுத்தும் முதன்மையான விஷயமாக இருக்கிறது.

அதோடு, சூழலியலாளர்களில் ஒரு தரப்பினர், ``வீகன் உணவுமுறையைப் பின்பற்றுவோர், போக்குவரத்து மூலம் அதிக அளவிலான கரிம வாயு வெளியாகிறது என்று கூறி விமானம், ரயில் சேவைகளைப் பயன்படுத்தாமலே இருந்துவிடலாம் என்று கூறுவார்களா? தனிமனித மாற்றம் என்ற பெயரில், பெரும்பகுதி மக்களுடைய உணவுமுறையில் கைவைப்பதைவிட, மேலதிக கரிம வாயுவை வெளியேற்றும் துறைகளில் கரிம வெளியீட்டைக் குறைப்பதற்கான மாற்று வழிகள் இருந்தும் அதை அவசரக்கால அடிப்படையில் மேற்கொள்ளாமல் காலம் தாழ்த்துவது குறித்துக் கேள்வியெழுப்புவதே அவசியமானது" என்று கூறுகின்றனர்.

கால்நடை வளர்ப்பு (மாதிரி படம்)
கால்நடை வளர்ப்பு (மாதிரி படம்)
Pixabay
வந்துவிட்டது செயற்கை இறைச்சி... அனுமதி கொடுத்த சிங்கப்பூர்... இந்தியாவுக்கும் வருமா?

அவர்கள் கூறுவதுபோல், மின்சார உற்பத்தி, போக்குவரத்து, கனிம வள உற்பத்தி போன்ற பல்வேறு துறைகளில் ஏற்படும் கரிம வெளியீட்டு அளவு மிதமிஞ்சிப் போய்க்கொண்டிருக்கிறது. நவீன கால தொழில் வளர்ச்சியின் மூலம் கடந்த இரண்டு நூற்றாண்டுகளில் வளர்ச்சியடைந்த அவற்றைவிட, மக்களுடைய ஆரோக்கியத்தில் பங்கு வகிக்கும் இறைச்சி உணவின் மூலம் வெளியாகும் கரிம வாயு அவ்வளவு முக்கியமா என்ற கேள்வி எழாமல் இல்லை.

``தனிமனித கரிம தடங்களைக் குறைக்க முயல்வது தார்மீக அடிப்படையில், நிச்சயம் நல்ல சிந்தனைதான். ஆனால், அதுவே பிரச்னைக்கான முக்கியப் பொறுப்பாளர்கள் மீதான நம் கவனத்தை திசை மாற்றுவதாக அமைந்துவிடக் கூடாது. - மார்டென் ஃபிபிகெர் பைஸ்கோவ் (Morten Fibieger Byskov), ஆராய்ச்சியாளர், வார்விக் பல்கலைக்கழகம், இங்கிலாந்து."

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு