Published:Updated:

சூழலியல் பாதுகாப்பில் பின்தங்கிய இந்தியா...

சூழலியல்
பிரீமியம் ஸ்டோரி
சூழலியல்

“கடுமையான கட்டுப்பாடுகள் இல்லாததே காரணம்!”

சூழலியல் பாதுகாப்பில் பின்தங்கிய இந்தியா...

“கடுமையான கட்டுப்பாடுகள் இல்லாததே காரணம்!”

Published:Updated:
சூழலியல்
பிரீமியம் ஸ்டோரி
சூழலியல்
சுற்றுச்சூழல் சீர்கேடு... பல்லாயிரக்கணக்கான மக்களின் வாழிட இழப்புக்கு முக்கியக் காரணி. இதனால் ஏற்படும் சமூக, பொருளாதாரப் பின்னடைவுகளும் ஏராளம்.

‘சுற்றுச்சூழலுக்கும் சமூகப் பொருளாதாரத்துக்கும் என்ன தொடர்பு?’ என்று கேட்பவர்களுக்கு நிகழ்கால சாட்சியாக நிற்கிறது இன்றைய பேரிடர் காலம்.

கொரோனா பேரிடரை எப்படிக் கையாள்வது என்று உலக நாடுகள் திகைத்து நிற்கின்றன. க்யூபா, தைவான், நியூசிலாந்து போன்ற சில நாடுகள் விரைவாகக் கற்றுக் கொண்டு திறமையாகச் செயலாற்றியுள்ளன. ஆனாலும், அங்கு மீண்டும் கொரோனா தொற்று வராது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. இந்தியா, ஈராக், அமெரிக்கா போன்ற நாடுகள் திறம்படச் செயல்படாததால், மோசமான விளைவுகளைச் சந்தித்துக் கொண்டிருக் கின்றன.

‘கொரோனா பரவ காடழிப்பும் ஒரு முக்கியக் காரணம்’ என்று ஆய்வாளர்கள் தொடர்ந்து சொல்லிவருகிறார்கள். உண்மைதான்... இது போன்ற தொற்றுநோய்கள் பரவுவதைத் தடுப்பதிலும் கட்டுப்படுத்து வதிலும் சூழலியல் பாதுகாப்பு முக்கியப் பங்கு வகிக்கிறது. சூழலியல் பாதுகாப்பில் நாம் எந்த அளவுக்குச் சரியாகச் செயல்பட்டிருக்கிறோம் என்பதுதான், பேரிடர் காலத்தை நம்மால் எந்த அளவுக்குத் திறம்பட கையாள முடியும் என்பதையும் முடிவு செய்யும்.

சூழலியல் பாதுகாப்பில் பின்தங்கிய இந்தியா...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை உலகப் பொருளாதார மன்றம், யேல் பல்கலைக் கழகத்துடன் இணைந்து சர்வதேச சூழலியல் பாதுகாப்பில் உலக நாடுகளின் நிலை குறித்த தரப் பட்டியலை வெளியிடும். 2018-ம் ஆண்டு அந்தப் பட்டியல் வெளியானபோது, இந்தியா 180 நாடுகளில் 177-வது இடத்தில் இருந்தது. இந்த ஆண்டு வெளியான பட்டியலில் இந்தியா 168-வது இடத்தில் இருக்கிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

2010-ம் ஆண்டுக்குப் பிறகு, ஒவ்வோர் ஆண்டும் ஏதாவது ஓர் இயற்கைச் சீற்றத்தை நாம் சந்தித்தபடி இருக்கிறோம். காலநிலை மாற்றம், புவி வெப்பமயமாதல் போன்ற செயல்பாடுகள் தீவிரமடைந்ததே இதற்குக் காரணம். இந்தியா 168-வது இடத்தில் இருப்பதை மேலோட்டமாகப் பார்த்தால், கடந்த முறையைவிட முன்னேற்றம் கண்டிருப்பதைப்போலத் தெரியும். ஆனால், 2018-ம் ஆண்டில் நமக்குக் கிடைத்த மதிப்பெண்ணையும், இப்போது கிடைத்துள்ள மதிப்பெண்ணையும் ஒப்பிட்டுப் பார்த்தால்தான் உண்மைநிலை புரியும். 2018-ம் ஆண்டில் இந்தியாவுக்குக் கிடைத்த மதிப்பெண், 100-க்கு 30.57. இந்த முறை 100-க்கு 27.6 மதிப்பெண்களையே பெற்றுள்ளோம். இது, முந்தைய தரப்பட்டியலில் நாம் இருந்த நிலையைவிட மோசம்.

பட்டியலின் ரேங்க் அடிப்படையில் நாம் முன்னேற்றம் கண்டிருக்கிறோம் என்பது, பிற நாடுகள் நம்மைவிட மோசமாகச் செயல் பட்டதால் கிடைத்த விளைவு. அதேசமயம் மதிப்பெண் குறைவாக பெற்றிருக்கிறோம் என்பது இந்தியாவின் சூழலியல் சீர்கேடுகளால் கிடைத்த விளைவு. உற்று ஆராய்ந்தால் மட்டுமே இந்த வித்தியாசத்தை உணர முடியும்.

அதேசமயம் இந்தியா மட்டுமன்றி, உலக நாடுகள் அனைத்துமே கடந்த மதிப்பாய்வின் போது செயல்பட்டதைவிட மோசமாகவே செயல்படுகின்றன. கானா, ஹைட்டி, புருண்டி, சாலமன் தீவுகள், ச்சாட், மடகாஸ்கர், கினியா, கோட் டிவோய்ர், சியர்ரா லியோன், ஆப்கானிஸ்தான், மியான்மர், லைபீரியா போன்ற நாடுகள் இந்தியாவுக்கு அடுத்தபடியாக பட்டியலில் பின்தங்கியுள்ளன. டென்மார்க், லக்ஸம்பர்க், சுவிட்சர்லாந்து, இங்கிலாந்து, பிரான்ஸ், ஆஸ்திரியா, ஃபின்லாந்து, ஸ்வீடன், நார்வே, ஜெர்மனி போன்ற நாடுகள் முதல் பத்து இடங்களில் இருக்கின்றன. தெற்காசிய நாடுகளிலேயே ஆப்கானிஸ்தான் மட்டும்தான் இந்தியாவைவிடப் பின்தங்கியுள்ளது. பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை, நேபாளம், பூட்டான், மாலத்தீவுகள் என்று தெற்காசிய நாடுகள் அனைத்துமே பட்டியலில் நம்மைவிட முன்னிலை வகிக்கின்றன.

2018-ம் ஆண்டின்போது, பாகிஸ்தான் 169-வது இடத்தில் இருந்தது. தற்போது, 142-வது இடத்துக்கு 33.1 மதிப்பெண்களோடு முன்னேறியுள்ளது.

டெல்லியில் இயங்கிவரும் அறிவியல் மற்றும் சுற்றுச்சூழலுக்கான மையம் (Centre for Science and Environment), கடந்த பிப்ரவரி மாதம் வெளியிட்ட 2020-ம் ஆண்டுக்கான இந்தியாவின் சுற்றுச்சூழல் நிலை குறித்த அறிக்கைப்படியும்கூட, தெற்காசியாவிலுள்ள மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது, நீண்டகாலத்துக்குரிய நிலையான வளர்ச்சி இலக்குகளில் இந்தியா மிகவும் பின்தங்கியே இருக்கிறது.

சூழலியல் பாதுகாப்பு தரப்பட்டியல்!
சூழலியல் பாதுகாப்பு தரப்பட்டியல்!

மையத்தின் இயக்குநர் சுனிதா நரேன் அந்த ஆய்வறிக்கையை வெளியிட்டுப் பேசியபோது, ‘‘இந்த ஆய்வறிக்கை எதிர்காலச் சூழலியல் பாதுகாப்புக்கு வளர்ச்சி குறித்த புதிய அணுகு முறைகள் அவசியம் என்பதை வலியுறுத்துகிறது. ஆனால், இயற்கை வளங்களுக்கு அச்சுறுத்தல் இருக்கும்வரை இதை நம்மால் சாதிக்க முடியாது. நம்முடைய சூழலியல் நிர்வாக முறையை, நீண்டகால நிலைத்த தன்மைக்குரிய வகையில் மாற்றாதவரை நம்மால் எதுவும் சாதிக்க முடியாது. பசுமையான வளர்ச்சி வேண்டும் எனில் இதுவரை இருந்ததைவிட இரண்டு மடங்கு அதிக கவனத்துடன், நீடித்த நிலைத்த தன்மைகளைக் கொண்ட திட்டங்களை வகுக்க வேண்டும்’’ என்றார்.

இந்தியா ஏன் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் பின்தங்கியே இருக்கிறது? ‘பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பைச் சேர்ந்த சுந்தர்ராஜனிடம் பேசினோம். ‘‘முதல் காரணம், ஆளக்கூடிய அரசுகளுக்கு சூழலியல் பாதுகாப்பின் முக்கியத்துவம் தெரியவில்லை. இரண்டாவதாக, நாம் இன்னும் பெருநிறுவனங்களுக்கு எப்படி இயற்கை வளங்களைத் திறந்துவிடுவது என்ற நோக்கிலேயே வளர்ச்சித் திட்டங்களை வகுக்கிறோம். அத்துடன், மேலைநாடுகளில் பின்பற்றக்கூடிய அளவுக்குச் சுற்றுச்சூழல் கட்டுப்பாடுகளை நாம் பின்பற்றுவ தில்லை. மிகவும் மெத்தனமாகவே செயல்படுகிறோம். நம்முடைய தரக்குறியீடுகளை மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது மிகக் குறைவாக இருக்கின்றன. பாலாறு ஏன் நஞ்சானது? அங்கிருக்கும் தோல் தொழிற்சாலைகள் தங்கள் கழிவுகளை அங்கே கொட்டுவதால்தானே! இதையெல்லாம் தடுக்கக்கூடிய அளவுக்குக் கடுமையான கட்டுப்பாடுகள் இங்கு இல்லை. இதை முதலில் சரிசெய்ய வேண்டும்’’ என்றார்.

இந்தியாவில் நடந்துகொண்டிருக்கும் சூழலியல் அநீதிகளைக் கட்டுப்படுத்தத் தேவையான முயற்சிகளைப் பலரும் எடுக்கிறார்கள்தான். ஆனாலும், குற்றங்களும் விதிமீறல்களும், அவற்றால் எளிய மக்கள் அனுபவிக்கும் இன்னல்களும் குறைந்தபாடில்லை. இங்கு பிரச்னை, சுற்றுச்சூழல் பிரச்னைகளின்மீதான இந்திய அரசாங்கத்தின் பார்வையில் இருக்கிறது. ‘பொருளாதார முன்னேற்றமும், சுற்றுச்சூழல் முக்கியத்துவமும் எதிரெதிர்த் திசையில் இருக்கக் கூடாது’ என்பதைப் புரிந்துகொள்ள நமது அரசாங்கம் தவறிவிட்டது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பொருளாதார வளர்ச்சி... இரண்டையும் சமமாகத் தராசில் வைத்து அணுகக்கூடிய பசுமைப் பொருளாதாரத் திட்டங்களை இந்தியா முன்வைக்க வேண்டும். அதுவே சரியான வளர்ச்சிக்கான தீர்வாக இருக்கும்!