Published:Updated:

இமயமலையில் அதிகரிக்கும் பனி உருகல்; ஆபத்தில் சிந்து, கங்கை, பிரம்மபுத்திரா நதிப்படுகை மக்கள்!

இமயமலை
இமயமலை ( Photo: Pixabay )

அடுத்து வரும் பருவகாலங்களில், இமயமலை பனி உருகல் காரணமாக அதிகரித்த நதியின் நீர்மட்டம் மற்றும் நிலையற்று மாறிக் கொண்டிருக்கும் பருவநிலை ஆகியவற்றால் அதிக அளவிலான நீரியல் சீற்றங்கள் ஏற்படும்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சிந்து, கங்கை, பிரம்மபுத்திரா நதிப்படுகைகளைச் சார்ந்து வாழும் லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் தற்போது ஆபத்துக்கு உள்ளாகியுள்ளது. இமயமலை-காரகோரம் மலைத்தொடரில் புவி வெப்பமயமாதலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், பனிப்பாறைகள் உருகி நதிகளின் நீர்மட்டம் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. மேலும், அப்பகுதியின் பருவநிலையில் ஏற்படும் மாறுதல்கள், விவசாயம், நீரியல் மின் உற்பத்தித்துறை மற்றும் அப்பகுதியைச் சார்ந்து வாழும் மக்களின் இதர வாழ்வாதாரங்கள் ஆகியவற்றின் மீது எதிர்மறை தாக்கத்தை இது ஏற்படுத்தும் என்று சமீபத்தில் வெளியான ஓர் ஆய்வு எச்சரித்துள்ளது. இந்தூர், ரூர்க்கி, டெல்லி, பெங்களூரு, அகமதாபாத், நேபாள் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த ஆய்வாளர்கள் இந்த ஆய்வில் ஈடுபட்டனர்.

பனி உருகல்/ Representational Image
பனி உருகல்/ Representational Image
AP Photo
ஊழிக்காலம் - 25: காலநிலை மாற்றமும் ஒரு பேரிடர்தான்! இறுதி யுத்தத்தில் நாம் செய்யவேண்டியது என்ன?

ஜம்மு-காஷ்மீர், லடாக் ஆகிய யூனியன் பிரதேசங்கள், இமாசலப் பிரதேசம், பஞ்சாப் மற்றும் வடக்கு ஹரியானா, ராஜஸ்தானின் சில பகுதிகள் ஆகியவை சிந்து நதிப்படுகையைச் சார்ந்துள்ளன. உத்தரகாண்ட், டெல்லி, ஹரியானாவின் மற்ற பகுதிகள், உத்தரப் பிரதேசம், பீகார், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம், மத்தியப் பிரதேசம் ஆகியவை கங்கை நதிப்படுகையைச் சார்ந்துள்ளன. சிக்கிம், அருணாச்சலப் பிரதேசம், அஸ்ஸாமின் ஒரு பகுதி, மேகாலயா, நாகலாந்து மாநிலங்கள் பிரம்மபுத்திரா நதிப்படுகையைச் சார்ந்துள்ளன. இந்தப் பகுதிகளில் வாழும் மக்கள் அடுத்து வரும் பருவகாலங்களில், இமயமலை பனி உருகல் காரணமாக அதிகரித்த நதியின் நீர்மட்டம் மற்றும் நிலையற்று மாறிக் கொண்டிருக்கும் பருவநிலை ஆகியவற்றால் அதிக அளவிலான நீரியல் சீற்றங்களைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்று இந்த ஆய்வு கூறுகிறது. டெல்லி, லாகூர், கொல்கத்தா, கராச்சி, டாக்கா ஆகிய பெருநகரங்களில் வாழும் மக்கள் இதனால் பாதிக்கப்படுவர்.

இமயமலை-காரகோரம் பகுதியிலுள்ள நதிகளில் ஓடும் நீரானது, கோடைக்காலங்களில் உருகும் பனி மலைகள் மற்றும் பனிப்பாறைகள், மழைப்பொழிவு, நிலத்தடி நீர் ஆகியவற்றிலிருந்தே கிடைக்கிறது. இமயமலை-காரகோரம் பகுதியின் பாதிக்கும் மேற்பட்ட பனி, பனிமலைகளில் உறைந்திருக்கின்றன. இங்கிருந்து பனிமலைகள் உருகும் வேகம், வெவ்வேறு பருவகாலங்களில் இருக்கக்கூடிய நதிநீரின் போக்கை மாற்றுகிறது. பொதுவாக, ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான கோடைக்காலங்களில் உருகிய பனிக்கட்டிகளிலிருந்து வரும் நீரைச் சுமந்து இந்த நதிகள் ஓடும். அக்டோபர் மாதத்தில் பனிப்பாறைகள் உருகி நீராக ஓடும். பின்னர் பனிக்காலம் தொடங்கும்போது மீண்டும் பனிக்கட்டிகளாக, பனிப்பாறைகளாக உறைந்துவிடும்.

இமயமலை
இமயமலை
AP Photo

புவி வெப்பமயமாதல் இந்தச் செயல்முறையைக் குலைத்துக் கொண்டிருக்கிறது. நிலையற்ற மழைப்பொழிவு மற்றும் பனி உருகல் இரண்டுமே பருவநிலையை மாற்றியமைப்பதோடு, 2050-ம் ஆண்டுக்குள் பனிப்பாறைகளின் பெரும்பகுதியை உருக்கிவிடும் என்று இந்த ஆய்வு எச்சரிக்கிறது.

``இமயமலை-காரகோரம் படுகைகளின் மொத்த பரப்பளவு 2.75 மில்லியன் சதுர கிலோமீட்டர். அதில் 5,77,000 சதுர கி.மீ விவசாய நிலம் இந்தப் படுகையைச் சார்ந்துள்ளது. 26,432 மெகாவாட் நீரியல் மின் உற்பத்தி நடைபெறுகிறது" என்று இந்த ஆய்வு கூறுகிறது. மேலும், ``நதி நீரோட்டத்தில் ஏற்படும் மாற்றங்கள், பனி உருகும் அளவு மற்றும் காலகட்டம் ஆகியவற்றில் நிகழும் மாறுதல்கள், பாசனத்துக்கான நீர்த்தேவை உள்ள காலகட்டத்தோடு முரண்பட்டு, விவசாய உற்பத்தியில் பாதிப்புகளை உண்டாக்கலாம். அதேபோல், நீரியல் மின் உற்பத்தியிலும் இது பின்விளைவுகளைக் கொண்டுவரும்" என்று சொல்லப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த ஆய்வுக்குழுவில் ஒருவரான முனைவர் மொகமத் ஃபரூக் ஆசாம், ``எதிர்காலத்தில் அதீத பனிப்பாறை உருகல் நடந்து நம்மிடையே அளவுக்கு அதிகமான பனி உருகிய நீர் இருந்து, கூடுதலாக மழைப்பொழிவும் அதீதமாக இருந்தால், நம் நதிகளிலும் நீர் அதற்கு ஏற்ப அதீதமாகத்தான் இருக்கும். வழக்கத்துக்கு மாறாக, ஜூன் மாதத்துக்குப் பதிலாக ஏப்ரலுக்கு முன்னமே அவை உருகுகின்றன. அப்படியென்றால், பனி உருகிய நீர் நமக்குக் கிடைக்கும் பருவம் மாறுகிறது. இந்த மாற்றம், அந்தக் குறிப்பிட்ட பருவத்தின்போது பனி உருகிய நீரைச் சார்ந்திருந்த மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

Melting Ice/ Representational Image
Melting Ice/ Representational Image
AP Photo

சிந்து நதி பனிப்பாறைகள் உருகுவதை அதிகம் சார்ந்திருந்தால், கங்கையும் பிரம்மபுத்திராவும் பருவமழையை அதிகம் சார்ந்துள்ளது. உள்ளூர் அளவில் தொடங்கி உலக அளவில் காலநிலை வடிவம் புவி வெப்பமயமாதலால் மாறும்போது, அதன் தாக்கம் இந்த நதிகளின் நீரியல் சுழற்சியிலும் பாதிப்புகளை ஏற்படுத்தும். சிந்து நதியின் மொத்த நீரோட்டத்தில், 22 முதல் 49 சதவிகிதம் வரை உருகிய பனி மூலம் கிடைக்கிறது. அதுவே, கங்கையில் 20 சதவிகிதம் பனி உருகலில் இருந்தும் 66 சதவிகிதம் மழைப்பொழிவிலிருந்தும் 14 சதவிகிதம் நிலத்தடி நீரிலிருந்தும் கிடைக்கிறது. இப்போது நிகழும் அதீத பனிப்பாறை உருகல், ஏற்கெனவே இமயமலை நதிகளின் இந்தச் செயல்முறையைக் குலைத்துக் கொண்டிருக்கிறது.

அதன்விளைவாக மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்துகொண்டிருந்த பல்வேறு நீரூற்றுகள் வற்றிக் கொண்டிருக்கின்றன. மேலும், இதன் விளைவாக எதிர்காலத்தில் அதிகரிக்கும் நதிநீர் மட்டம் கீழ்நிலை நீரோட்டப் பகுதியிலுள்ள நிலங்களில் வெள்ளப்பெருக்கையும் அதனால் மக்களின் உயிர் மற்றும் வாழ்வாதாரச் சேதங்களை உருவாக்கும் என்று இந்த ஆய்வு எச்சரிக்கிறது. இதன்விளைவாக, நதிகளின் கீழ்நிலை நீரோட்டப் பகுதிகளில் வாழும் மக்கள் சமூகங்கள் காலநிலை பேரிடர் ஆபத்துகளுக்கு எளிதில் பாதிக்கப்படலாம். கடந்த 20 ஆண்டுகளில் இதுபோன்ற பேரிடர்கள் அதிகரித்தும் உள்ளன. ஏற்கெனவே, உலக அளவில் அதிக மக்கள் தொகை அடர்த்தியுடைய, வறுமையின் பிடியில் அதிகமாகச் சிக்கியுள்ள மக்கள் வாழும் மலைப்பகுதிகளில் ஒன்றாக இமயமலைப் பகுதி உள்ளது. இந்த அபாயங்கள் அந்த நிலையை இன்னும் மோசமாக்கும்.

கங்கை நதி
கங்கை நதி
AP Photo
கடுங்குளிர், மின்சாரம் இல்லை, தண்ணீர் இல்லை... டெக்ஸாஸ் திணறக் காரணம் என்ன?!

பனிப்பாறைகளின் ஆய்வு மற்றும் நீரியல் ஆய்வுக்கு இடையிலான இடைவெளியைக் குறைக்க வேண்டிய தேவை உள்ளதாக இந்த ஆய்வை முன்னெடுத்த குழுவினர் குறிப்பிடுகின்றனர். பனிப்பாறைகளுக்கும் காலநிலை மாற்றத்துக்கும் இமயமலை-காரகோரம் மலைத்தொடருக்குமான தொடர்பு மற்றும் அதன்விளைவாக அந்த நிலவியலின் நீரியலில் ஏற்படும் பாதிப்புகளைக் கண்டறிய பனிப்பாறைகள் மற்றும் நீரியல் ஆய்வுகளை இணைத்து மேற்கொள்ள வேண்டும் என்கின்றனர் இந்த ஆய்வுக்குழுவைச் சேர்ந்தவர்கள்.

காலநிலை ஆபத்து குறித்த எச்சரிக்கை உலக அளவில் மட்டுமன்றி, இந்திய அளவிலும் பல்வேறு ஆய்வுக் குழுவினரால் முன்வைக்கப்படுகிறது. இந்திய அரசு, நகர்ப்புற கட்டுமானங்களின்போது இன்றளவும்கூட, இயற்கைப் பேரிடர்களையோ, வறட்சி, வெள்ளம் போன்ற காலநிலைப் பேரிடர்களையோ கருத்தில் எடுத்துச் செயல்படுவதில்லை. நகரத் திட்டமிடுதலின்போதே இதுபோன்ற சிக்கல்களை எப்படிச் சமாளிப்பது என்ற திட்டங்களையும் வகுக்க வேண்டிய அவசியத்தையே இந்த ஆய்வு உணர்த்தியுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு