Published:Updated:

ஏரியில் கொட்டப்படும் மருத்துவக் கழிவுகள்!- வேடந்தாங்கல் பறவைகளுக்குத் தொற்றுநோய் அபாயம்

மதுராந்தகம், திருப்போரூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள ஏரிகளில் மருத்துவக் கழிவுகளும் பிராய்லர் கோழிக்கழிவுகளும் கொட்டப்படுகின்றன.

மேல்மருவத்தூர் ஏரி
மேல்மருவத்தூர் ஏரி

வேடந்தாங்கலில் பறவைகள் சீஸன் தொடங்கிவிட்டது. போதிய அளவு மழை இல்லாததால் வேடந்தாங்கல் ஏரியில் தண்ணீர் இல்லை. வழக்கமாக வரும் பறவைகள் வேடந்தாங்கல் ஏரியில் வந்து தங்குகின்றன. சுற்றுவட்டாரப் பகுதிகளை ஆய்வுசெய்து எங்கு தண்ணீர் இருக்கிறதோ அந்தப் பகுதிகளில் தற்காலிகமாகத் தங்கத் தொடங்கிவிட்டன. கடந்த வருடம் மழை பொய்த்துப்போனதால் பெரும்பாலான பறவைகள் வேடந்தாங்கலுக்கு வரவில்லை. வந்த ஒருசில பறவை இனங்களும் கடந்த முறை வையாவூர், கலியனூர், நத்தப்பேட்டை போற்ற பகுதிகளில் தற்காலிகமாகத் தங்கின.

மேல்மருவத்தூர் ஏரி
மேல்மருவத்தூர் ஏரி

இந்த ஆண்டும் வடகிழக்குப் பருவமழை போதிய அளவில் பெய்யாததால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஏரிகளில் தண்ணீர் இல்லை. பொதுப்பணித்துறை வசம் உள்ள 909 ஏரிகளில் சிறிய அளவிலான சுமார் 60 ஏரிகள் மட்டுமே நிரம்பியுள்ளன. சுமார் 350-க்கும் மேற்பட்ட ஏரிகளில் ஒருசில அடிகூட தண்ணீர் இல்லை. தற்போது மேல்மருவத்தூர் ஏரியில் ஓரளவு தண்ணீர் இருப்பதால் அங்கு கூழைக்கடா பறவைகள் அதிக அளவில் வரத்தொடங்கி இருக்கின்றன.

இதனால் குட்டி வேடந்தாங்கலைப்போல மேல்மருவத்தூர் ஏரி இருக்கிறது. வேடந்தாங்கல் ஏரியில் தண்ணீர் வரும் வரை இந்தப் பறவைகள் இங்கேயே தற்காலிகமாகத் தங்கி இருக்கும். கடந்த சில தினங்களுக்கு முன்பு ஊராட்சி நிர்வாகம் சார்பில் மேல்மருவத்தூர் ஏரியைத் தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றது. மீன்குஞ்சுகளும் ஏரியில் விடப்படுகின்றன.

அந்த ஏரியின் நீர் பிடிப்புப் பகுதியிலேயே ஆன்மிக நிறுவனத்துக்குச் சொந்தமான தனியார் திருமண மண்டபம் கட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏரியிலேயே கார்பார்க்கிங், கட்டணக் கழிப்பிடம், ஜெனரேட்டர் அறை உள்ளிட்டவை இருக்கின்றன. மேலும் அங்குள்ள மருத்துவமனையின் மருத்துவமனைக் கழிவுகளும் தண்ணீரில் கலக்கின்றன. இதனால் பறவைகளுக்கு நோய்த்தொற்றும் அபாயம் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கிறார்கள்.

வேடந்தாங்கல் பறவைகள்
வேடந்தாங்கல் பறவைகள்

இதேபோல் மதுராந்தகம், திருப்போரூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள ஏரிகளிலும் மருத்துவக்கழிவுகளும் பிராய்லர் கோழிக் கழிவுகளும் கொட்டப்படுகின்றன. காஞ்சிபுரம் நகராட்சி கழிவு நீர் முழுவதும் நத்தப்பேட்டை ஏரியில் கொட்டப்படுகின்றன. இதனால் ஏரிகளில் உணவு தேடிச் செல்லும் பறவைகளுக்குத் தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. நீர்நிலைகளில் கழிவுகளைக் கலக்காமல் தடுத்தால் மட்டுமே பறவை இனங்கள் தொற்றுநோயிலிருந்து தப்பும் நிலை உள்ளது. உடனடியாக இதில் தமிழக அரசு இதில் கவனம் செலுத்த வேண்டும் எனக் கவலை கொள்கின்றனர் பறவை ஆர்வலர்கள்!