Published:Updated:

130 வயது... 2 ஏக்கர் பரப்பளவு... பிரேசிலின் அடையாளமான ஒற்றை முந்திரி மரம்!

மிகப்பெரிய முந்திரி மரம்
மிகப்பெரிய முந்திரி மரம் ( www.bloglevitatur.com.br )

ஒரு மரம் இன்று பிரேசிலுக்கே அடையாளம். இதை வைத்து இன்னும் ஏராளமான மரங்களை நடும் முயற்சியில் இறங்கியிருக்கிறது, பிரேசில்.

தனிமரம் தோப்பாகாது என்பது நமது வழக்கில் உள்ள பழமொழி. ஆனால், தனியொரு மரம் இன்று தோப்பு அளவுக்கு பரந்துவிரிந்திருக்கிறது. ஆம், பிரேசில் நாட்டில் இருக்கும் முந்திரி மரம் ஒன்று தோப்பையே மிஞ்சும் அளவுக்கு வளர்ந்து நிற்கிறது. கழுகுப் பார்வையில் இருந்து பார்த்தால், ஒரு காடுபோல காட்சியளிக்கிறது. கிட்டத்தட்ட நகருக்குள் ஒரு பூங்கா இருப்பது போல அந்த மரம் காட்சியளிக்கிறது. இதன் பரப்பளவைப் பற்றி எளிதாகச் சொல்ல வேண்டுமானால், இரண்டு கால்பந்தாட்ட மைதான அளவைக் கொண்டிருக்கிறது. இந்த ஒரே ஒரு ஒரு மரம் 2 ஏக்கர் பரப்பளவில் தனது கிளைகளைப் பரப்பி நிற்கிறது. 70 முந்திரி மரங்களை வைத்தால் எவ்வளவு பசுமை கிடைக்குமோ, அதை இந்த ஒரு மரம் கொடுத்துக் கொண்டிருக்கிறது. இது உலகின் மிகப்பெரிய மரம் என்பதற்காக 1994-ம் ஆண்டு கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றது. இந்த முந்திரி மரத்தைக் காண்பதற்கு ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து கொண்டிருக்கின்றன.

நுழைவு வாயில்
நுழைவு வாயில்
www.atlasobscura.com

இந்த பழங்களை பழப்பாகு மற்றும் பழச்சாறுகளை உற்பத்தி செய்வதற்கும் பயன்படுத்துகிறார்கள். பழைமை வாய்ந்த இந்த மரத்தின் கிளைகள் உயரமாக வளராமல், பக்கவாட்டில் வளர்ந்துள்ளன. இந்த மரம் 1888-ம் ஆண்டு லூயிஸ் இனாசியோ டி ஒலிவேரா (Luiz Inacio de Oliveira) என்பவரால் நடப்பட்டதாகச் சிலர் கருதுகிறார்கள். இன்னும் சிலரோ ஆயிரம் ஆண்டுகள் பழைமையானது என்கிறார்கள். வருடங்கள் பல கடந்தாலும், இன்னும் முந்திரிகள் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறது. இதன் உண்மையான வயது அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை. இவ்வாறு நிலைத்து நிற்பதற்கு மரத்தின் திசுப்பிறழ்வு ஒரு காரணமாக இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். கிளைகள் பக்கவாட்டில் வளர்வதால், எடை அதிகமானவுடன் பூமியைத் தொடும். பூமியைத் தொடும் கிளையானது வேர்களை விட்டு புதிய மரம்போல வளரும். இவ்வாறுதான் தனது எல்லையை விரிவாக்கம் செய்து இன்று பரந்துவிரிந்து நிற்கிறது.

பிரேசிலின் நோர்டே மாநிலத்தில் பிரயா டி பைராங்கி (பைராங்கி பீச்) அருகே அமைந்துள்ளது. பைராங்கி பீச்சிலிருந்து 20 நிமிடத்தில் மரத்தை அடைந்துவிடலாம். மரத்தைப் பார்வையிடுவதற்கு 2 டாலர் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதையும் அந்த மரத்தைப் பராமரிப்பதற்காக பயன்படுத்துகிறார்கள். இந்த மரத்திற்குக் கீழே நடக்கும்போது, ஒரு வனத்துக்குள் நடப்பது போன்ற உணர்வைக் கொடுக்கும். இந்த மரத்தை உள்ளூர் மக்களும், அரசு அதிகாரிகளும் அக்கறையுடன் பாதுகாத்து வருகிறார்கள். இந்த மரத்தைச் சுற்றிப்பார்க்க செல்வோர், பிளாஸ்டிக் உபயோகம், மது அருந்துதல், புகை பிடித்தல் என எதிலும் ஈடுபடக்கூடாது என்பதுதான் முதல் நிபந்தனை. இங்கு இலவச வைஃபை வசதியும் இருக்கிறது.

மரத்தின் உள் அமைப்பு
மரத்தின் உள் அமைப்பு
www.atlasobscura.com

இந்த மரத்தை பெருமைப்படுத்தும் வகையில் ஆங்காங்கு ராட்சத முந்திரிப் பழங்கள் செயற்கையாக உருவாக்கப்பட்டு மரக்கிளைகளில் தொங்கவிடப்பட்டுள்ளன. உலக நாடுகளில் ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு அடையாளம் இருக்கும். அவற்றில் பெரும்பாலும், மனிதனால் செயற்கையாக உருவாக்கப்பட்டிருக்கும். ஆனால், இந்த உலகின் மிகப்பெரிய முந்திரி மரம், இயற்கையால் உருவாக்கப்பட்டு பிரேசிலுக்கு அடையாளமாகவே திகழ்கிறது. இதன் பழம் மஞ்சள் நிறத்தில் இருக்கும். பழத்தில் விட்டமின் 'சி' இருக்கிறது. இங்கு செல்வோர் சுற்றுலாப் பயணிகள் சுற்றுலா குழுக்களாக சென்றால் இந்த மரத்தில் பழம் பறிக்க அனுமதிக்கப்படுகிறார்கள்.

மரம் இவ்வளவு வியப்பைக் கொடுத்தாலும், சுற்றுலா செல்வோர் சிலவற்றைப் பின்பற்ற வேண்டும். இந்த மரத்தில் மஞ்சள் கம்பளிப்பூச்சிகள் அதிகம் வாழும். இவை விரல் அளவுக்குப் பெரிதானது. அவை தெளிவற்றதாகவும், கவர்ச்சியானதாகவும் தோன்றலாம். ஆனால், அவை உண்மையில் விஷமானவை. தோலில் மிகுந்த அரிப்பை உண்டாக்கி விடும். அதனால் மரத்தைச் சுற்றிப்பார்க்கும்போது, அவற்றைக் கண்டால் கவனமுடன் இருக்க வேண்டும். இந்த மரம் பற்றிய முழுமையான தகவல்கள் ஆங்கிலம் மற்றும் ஸ்பானிஷ் மொழி பேசும் சுற்றுலா வழிகாட்டிகளால் வழங்கப்படுகின்றன. அங்கே 6 மீட்டர் உயரமுள்ள ஒரு கண்காணிப்பு தளத்திற்குச் செல்வதன் மூலம் பெரிய மரத்தின் பரந்து விரிந்திருக்கும் புகைப்படம் எடுக்கலாம்.

இலவச வைஃபை
இலவச வைஃபை

ஒரு மரம் இன்று பிரேசிலுக்கே அடையாளம். இதை வைத்து இன்னும் பல மரங்களை நடும் முயற்சியில் இறங்கியிருக்கிறது, பிரேசில்.

அடுத்த கட்டுரைக்கு