இன்று மார்ச் 3-ம் தேதி வன உயிரின நாள். வனத்தில் வாழும் உயிரினங்களைப் பாதுகாக்கும் பொருட்டும் அவற்றைப் பற்றி அறிந்துகொள்ளும் பொருட்டும் இன்றைய நாள் முக்கிய நாளாகப் பார்க்கப்படுகிறது. வனத்தில் வாழும் உயிரினங்களில் சிங்கம், புலி, கரடி, மான், யானை பற்றி அதிகம் கேள்விப்பட்டிருப்போம். அதேபோன்று பறவைகளும் அதற்கு இணையான பங்கைப் பெற்றிருக்கின்றன. காடுகள் உருவாக்கத்தில் பறவைகளுக்கு மிகப் பெரிய பங்குண்டு.
தற்போது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கும் உயிரினம் என்றால் அது பறவையாகத்தான் இருக்க முடியும். பறவைகளைப் பார்க்காத மனிதர்களே இல்லையென்று சொல்லலாம். கிராமப் பகுதிகளில் வாழ்பவர்களுக்குப் பறவைகளைத் தினம்தோறும் பார்க்கும் வாய்ப்பு கிடைத்திருக்கும். நகரப் பகுதிகளில் வாழ்பவர்கள் சுற்றுலா செல்லும்போதோ வீட்டின் அருகே இருக்கும் மரங்களிலோ பார்த்திருப்பார்கள். இந்தப் பகுதிகளிலெல்லாம் குறிப்பிட்ட பறவையினங்களைத்தான் கண்டிருக்க முடியும்.

இதைத்தாண்டி பலவித பறவையினங்கள் இருக்கின்றன. நாம் அடிக்கடி பார்க்கும் பறவையினங்களைப் பற்றியும், அதிகம் பார்க்க முடியாத பறவையினங்களைப் பற்றியும் இந்தத் தொடரில் பார்க்க இருக்கிறோம். ஓர் உயிரினத்தை இனங்கண்டறிவது அது குறித்த அடிப்படை தகவல்களை அறிந்து கொள்வதுதான் முதல்படி. ஓர் உயிரினத்தைப் பாதுகாக்க வேண்டும் என முற்படுவோருக்கு அந்த உயிரினம் குறித்து அடிப்படை புரிதல்கள் அவசியம். அப்படி அடிப்படையான தகவல்களைத் தருவதே இந்தத் தொடரின் நோக்கம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSபறவை சூழ் உலகு
இவ்வுலகில் கிட்டத்தட்ட 11,000 பறவை சிற்றினங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் சுமார் 1,350 பறவை சிற்றினங்களும், தமிழ்நாட்டில் சுமார் 580 பறவை சிற்றினங்களும் பதிவாகியுள்ளன.
நெடுந்தூரம் பயணிக்கும் பட்டைவால் மூக்கான் தொடங்கி, பறக்கவே இயலாத பெங்குவின் வரை உலக அளவில் பலவிதமான பறவை இனங்கள் இருக்கின்றன.
8 செ.மீ அளவே உள்ள மிகச்சிறிய பூங்கொத்தி தொடங்கி நான்கடி உயரமுடைய கானமயில் போன்ற பெரிய பறவை இனங்களும் இந்தியாவில் உள்ளன.
காதலிக்காக நுட்பமாகக் கூடமைக்கும் தூக்கணாங்குருவி தொடங்கி கூடே கட்டாத குயில் இனங்களும் நம்மூரில் உள்ளது.
தோகை மயிலை ரசிக்காத ஆள் இருக்க முடியுமா? கால்நடைகளின் மேல் கம்பீரமாக சவாரி செய்யும் கரிச்சானை கண்டால் பயம் பறந்தோடும். பெரிய பருந்தைக்கூட மிகச் சாதுர்யமாகத் துரத்தியடிக்கும் இந்தக் கரிச்சான்.
கொக்கு, நாரைகள், குயில்கள், சிட்டுகள் போன்ற பலவிதமான பகலாடிகளும் ஆந்தைகள், வக்காக்கள், பக்கிகள் போன்ற இரவாடிகளும் நம்மூரில் உண்டு.

தனித்து நிற்கும் பறவைகள்
பறக்கும் திறமை பறவைகளுக்கு மட்டுமா என்றால் இல்லையென்றே சொல்லலாம். வெளவால் போன்ற பாலூட்டிகளும் நெடுந்தொலைவு பறக்கும் திறனைப் பெற்றுள்ளன. முட்டையிடுவது மட்டும் பறவைகளின் தனிச்சிறப்பா என்றால் அதுவும் இல்லை.
பாம்புகள், பல்லிகள், ஆமைகள் போன்ற ஊர்வனங்களும் முட்டையிடும். பறவைகள் மட்டும்தான் கூடுகட்டி அடைகாக்குமா என்றால் அதுவும் கிடையாது; ராஜநாகம் போன்ற பாம்புகளும் கூடமைத்து அடைகாக்கும். அப்படியென்றால் பறவைகளின் தனித்துவம்தான் என்ன என்ற கேள்வி எழும்.
அதன் சிறகுகள்தான் அதன் தனித்துவம். இந்தச் சிறகுகள்தான் பறவைகளை மற்ற உயிரினங்களிலிருந்து தனித்துக் காட்டுகிறது. எவ்வாறு பாலூட்டிகளின் உடல் மயிரால் மூடப்பட்டுள்ளதோ அது போல் பறவைகளின் உடல் சிறகுகளால் மூடப்பட்டிருக்கும், இதுதான் பறவைகளை மற்ற உயிரினங்களிலிருந்து தனித்துக் காட்டுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
சிறுவயதில் என்னைக் கவர்ந்த பறவை
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகில் உள்ள ஜமீன் சிங்கம்பட்டிதான் எனது சொந்த ஊர். மணிமுத்தாறு மலை அடிவாரத்தில் பச்சை பசேலென்று வயல்வெளிகளால் சூழப்பட்டிருக்கும் எங்கள் ஊர். ஆங்காங்கே ஆலமரங்களும், அரச மரங்களும் எங்கள் ஊரை அலங்கரிக்கும். மாங்குயில்களும், பூங்குயில்களும் விருந்தாளிகளை வரவேற்கும். எங்கள் பாட்டி வீட்டுப் புறவாசலில் நின்று மஞ்சணத்தி மரப் பழங்களை குயில்களுடன் இணைந்து நாங்களும் சாப்பிட்டது உண்டு. ஊருக்கு மேற்கே எங்களுக்கு சிறு வயல், வயலுக்கருகில் வற்றாத மணிமுத்தாறு, தெற்கிலிருந்து வடக்கு நோக்கி பாயும். வயலுக்குச் சென்றால் ஆற்றில் குளித்து விட்டுதான் வீட்டிற்குச் செல்வோம். இந்த ஆற்றில் எனக்கும் என் சிறுவயது நண்பர்களான குட்டிக்கண்ணன், சரவணன், நம்பி, ஆதிமூலம் ஆகியோர்கள் நீச்சல் கற்றுக்கொண்ட இடம் வட்டக்குளம் என்னும் பகுதி.

வேகமாகப் பாய்ந்தோடும் ஆற்றுநீர் வட்டக்குளம் பரப்பில் அகலமாக இருக்கும் காரணத்தால் அந்த இடத்தில் வேகமாக ஓடாது. வட்டக்குளத்தில் உள்ள ஒரு பாறையின் பெயர் குருவிக்கல். அந்தக்கல்லில் கறுப்பு, வெள்ளை நிறக் குருவிகள் ஏராளமாகக் காணப்படும், அதனால்தான் அதற்கு குருவிக்கல் என்று பெயர். பாறை முழுவதும் குருவிகளின் எச்சம்தான் காணப்படும். அந்தக் குருவியின் பெயரை எங்களுக்கு யாரும் சொல்லித் தந்ததாக நினைவில்லை. அது வாலை ஆட்டிக் கொண்டே பாறையில் திரிந்துகொண்டிருக்கும்; நாங்கள் அதை வாலாட்டிக்குருவி என்று சொல்வோம். நாங்கள் அந்தப் பாறையைச் சுற்றி சுற்றி நீச்சல் அடிப்போம். பாறையில் அங்கும் இங்கும் தாவுவதும் உண்டு. ஆனால், அவற்றையெல்லாம் அந்தக் குருவி பொருட்படுத்தாமல் இரைகளைப் பிடித்துத் தின்று கொண்டிருக்கும். வாலாட்டிகளில் நான்கு இனங்கள் இருப்பது என்னுடைய ஆசான் முனைவர் தி.கணேஷ் அவர்கள் பறவை நோக்கல் குறித்து கற்றுக்கொடுத்த பின்புதான் தெரிய வந்தது. மெலிந்த உடலையும் நீண்ட வாலையும் கொண்ட அந்த நான்கு குருவிகளை இங்கு காணலாம்.
கறுப்பு வாலாட்டி (White-browed Wagtail)
பண்புகள்: நீர்நிலைகளுக்கு அருகில் அல்லது நீர்நிலைகள் அல்லாத பகுதிகளிலும் உணவு தேடும், வேகமாக ஓடியும் திடீரென நின்றும் வாலை அடிக்கடி மேலும் கீழுமாக ஆட்டிய படியும் உணவு தேடி திரிந்துகொண்டிருக்கும். மற்ற வாலாட்டிகளைவிட உருவத்தில் சற்று பெரியது. ஜோடியாக இரை மேய்ந்து கொண்டிருக்கும்.
வரையறை: உடல் கறுப்பு மற்றும் வெள்ளை நிறமானது, கண் புருவம் வெண்ணிறமானது. பெண் பறவை மங்கலான நிறமுடையது.

இனப்பெருக்கம்: மார்ச் - மே, நீர்நிலைகளுக்கருகில் உள்ள பாறைகளின் அடிப்பகுதி. இந்த வாலாட்டிக் குருவி மட்டும்தான் நம் பகுதிகளில் கூடமைத்து இனப்பெருக்கம் செய்கிறது. கூடு கட்டும் காலங்களில் ஆண்பறவை அழகாகப் பாடி பெண் பறவையைக் கவரும்.
வெள்ளை வாலாட்டி (White Wagtail)
பண்புகள்: வேகமாக ஓடும், வாலை மேலும் கீழுமாக ஆட்டும். ஆற்றங்கரைகள், குளக்கரைகள், மைதானங்கள், திறந்த புல்வெளிகளில் அங்குமிங்கும் ஓடி சுறு சுறுப்பாக பூச்சிகளை பிடித்துத் தின்னும். சிறகுகளை சுருக்கியும் விரித்தும் அலையடிப்பது போன்று அழகாகப் பறக்கும்.

வரையறை: கறுப்பு மற்றும் வெள்ளை நிறப் பறவை. உடலின் அடிப்பகுதி, நெற்றி மற்றும் முகம் வெள்ளை நிறமானவை. மேல் பாகம் சாம்பல் நிறமாகவும் அடிப்பாகம் வெண்ணிறமாகவும் இருக்கும்.
இனப்பெருக்கம்: வெள்ளை வாலாட்டிகளில் ஒரு பிரிவு காஷ்மீர் பள்ளத்தாக்குகளில் இனப்பெருக்கம் செய்கிறது.
மானம் பார்த்தான் (Grey Wagtail)
பண்புகள்: வேகமாக ஓடி பூச்சிகளைத் துரத்திப் பிடிக்கும். வளைந்து நெளிந்து பறக்கும். வாலை மேலும் கீழுமாக ஆட்டும். பெரும்பாலும் மலைகளில் உள்ள நீரோடைகளில் தனியாக அங்குமிங்கும் ஓடிக்கொண்டு பூச்சிகளைப் பிடித்துத் திண்ணும்.

வரையறை: உடலின் மேல் பகுதி சாம்பல் மற்றும் மஞ்சள் நிறமானது, வால் நீளமானது. இனப்பெருக்கக் காலத்தில் ஆண் பறவைக்கு கழுத்தில் கருநிற வளையம் இருக்கும். மற்றக் காலங்களில் ஆண், பெண் பறவைகள் தோற்றத்தில் ஒன்றாகவே இருக்கும்.
இனப்பெருக்கம்: காஷ்மீர் மற்றும் மேற்கு இமயமலைப் பகுதிகளில் கூடமைத்து இனப்பெருக்கம் செய்கிறது.
மஞ்சள் வாலாட்டி (Yellow Wagtail)
பண்புகள்: சுறுசுறுப்பாக சதுப்பு நிலங்களில் ஓடியபடி இரை தேடும். வலசை போவதற்கு முன்னால் பெருங்கூட்டமாக ஒன்று சேரும்.
வரையறை: உடலின் மேல் பகுதி மஞ்சள் அல்லது இளம்பச்சை நிறமாகவும், அடிப்பகுதி மஞ்சள் நிறமாகவும் இருக்கும்.

இனப்பெருக்கம்: காஷ்மீர் மற்றும் வடமேற்கு இந்தியா
இந்த நான்கு வாலாட்டிகள் போக கொடிக்கால் காட்டு வாலாட்டி (Forest Wagtail) மற்றும் எலுமிச்சை வாலாட்டி (Citrine Wagtail) ஆகியவையும் நம் பகுதிகளுக்கு வலசை வருகின்றன. இந்த ஆறு சிற்றினங்களுள் கறுப்பு வாலாட்டியை மட்டுமே நாம் வருடம் முழுவதும் நம் பகுதிகளில் காண முடியும். மற்ற ஐந்து சிற்றினங்களும் குளிர்காலங்களில் வலசை வருபவை.
கட்டுரையாளர் பற்றி

மு.மதிவாணன், மூத்த ஆய்வாளர், அகத்தியமலை மக்கள்சார் இயற்கை வள காப்பு மையம், மணிமுத்தாறு.
கடந்த 18 ஆண்டுகளாகப் பல்லுயிர் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். தாமிரபரணி நிலப்பரப்பில் மக்கள் அறிவியல் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து வருகிறார். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பல்லுயிர் பாதுகாப்பு களப் பயிற்சிகளைத் தொடர்ந்து நடத்தி வருகிறார். தென் தமிழக நீர்வாழ் பறவைகள் என்ற புத்தகத்தின் இணை ஆசிரியர்.