Published:Updated:

கட்டெறும்பு vs சுள்ளெறும்பு... உணவுக்காக நடந்த போர்... ஸ்பாட் ரிப்போர்ட்! #MustRead

எறும்புகள்
எறும்புகள் ( Pixabay )

எறும்புகளின் கூட்டுச் சமுதாய வாழ்க்கைமுறை மனித நாகரிகங்களை ஒத்த சிறப்புடையவை. அவற்றின் வாழ்வியல், புத்திசாலித்தனத்தைத் தாண்டிய ஆழமான பல பண்புகளைக் கொண்டது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

எறும்புகள் மிகச் சிறியவை. அவை தீங்கற்றவை. ஒருவேளை, உணவுக்கான தேடலில், வாழ்விடத்துக்கான போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் எறும்புக்கு நீங்கள் ஊறு விளைவித்தால், அவை நிச்சயம் உங்களிடம் எதிர்த் தாக்குதல் நடத்தும்.

Battle of Ants
Battle of Ants

அதன் பின்னால் நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான எறும்புகள் நிற்கின்றன என்பதை நீங்கள் உணர்ந்தால், நிச்சயம் அந்த எறும்பிடம் வம்புக்கு நிற்க மாட்டீர்கள். மனித இனம் தங்களை அழிக்க எடுத்த அத்தனை முயற்சிகளிலிருந்தும் தப்பித்து வெற்றிகரமாகப் பல காலனிகளைக் கட்டமைத்து வாழ்ந்துகொண்டிருக்கும், இல்லை ஆட்சி செய்துகொண்டிருக்கும் எறும்புகளை இனி வம்புக்கு இழுக்கும்முன் ஒருமுறைக்கு இருமுறை சிந்தித்துச் செயலாற்றுங்கள். ஆம், எறும்புகள் நம்மைப்போல் தனித்தனியாக இல்லை. அவை பல சமுதாயங்கள்.

உயிரினங்களின் புத்திசாலித்தனத்தைப் பற்றிய பேச்செடுத்தாலே நம் பட்டியலில் முக்கியமாக இடம்பிடிப்பவை குரங்குகள்தான். அவற்றையும் தாண்டிய அறிவார்ந்த, சமுதாய மனப்பான்மையுடைய உயிரினம் இருக்கிறதென்றால் அவை எறும்புகள்தான். எறும்புகளின் கூட்டுச் சமுதாய வாழ்க்கைமுறை மனித நாகரிகங்களைப் போலவே சிறப்புடையவை. அவற்றின் வாழ்வியல், புத்திசாலித்தனத்தைத் தாண்டிய ஆழமான பல பண்புகளைக் கொண்டது.

உலகில் இதுவரை தோன்றிய உயிரினங்களிலேயே மனித இனம் மட்டுமே கால்நடைகளை வளர்க்கவும், விவசாயம் செய்யவும் கற்றுக்கொண்ட நாகரிகமடைந்த உயிரினமென்று கூறி நமக்கு நாமே பெருமையடித்துக்கொண்டிருக்கிறோம். அது உண்மையில்லை. மனிதனைவிடப் பல மடங்கு சிறப்பான விவசாயத்தை, சிறப்பான நகரங்களைக் கட்டமைக்கும் திறனுடைய ஓர் உயிரினம்தான் எறும்பு.

எறும்புகள் மனிதர்களுக்குச் சமமான, மனிதர்களைவிட அறிவாற்றல் மிகுந்த ஆனால், நம்மைப்போல் மற்ற உயிரினங்களுக்குச் சங்கடம் விளைவிக்காத உயிரினம்
லூவிஸ் தாமஸ், உயிரியலாளர்

என்னைப் பொறுத்தவரை எறும்புகள் மனிதர்களுக்குச் சமமான உயிரினமல்ல. மனிதனைவிட உயர்ந்த உயிரினம். அவற்றால், இயற்கைக்குப் பாதகமின்றி விவசாயம் செய்யமுடியும். தன் காலனியில் வாழும் அனைத்து எறும்புகளுக்கும் சமமாக உணவைப் பிரித்துக் கொடுக்கமுடியும். அவரவர் வேலையைப் பிரித்துக்கொண்டு திறம்படச் செய்துமுடிக்க முடியும். இவை எல்லாவற்றையும்விட முக்கியமாக, எறும்புகள் தேவைக்காக மட்டுமே போர் புரிகின்றன. அடுத்த காலனிகளை ஆக்கிரமிக்கின்றன. ஆசைக்காகவோ தனியொரு எறும்பின் விருப்பு வெறுப்புகளை முன்னிட்டோ அவை போருக்குத் தயாராவதில்லை. ஆச்சர்யமாக உள்ளதா! ஆம், எறும்புகள் போர் புரியும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எறும்புகள் உணவு சேகரிக்கும்; பிற காலனிகள்மீது போர் தொடுக்கும்; தற்காப்புத் தாக்குதல் நடத்தும்; தன் கூட்டத்தைச் சேர்ந்தவர்களைத் தொடர்புகொள்ள வேதிம சமிக்ஞைகளைச் செய்யும். ஒளி மற்றும் ஒலியைப் பயன்படுத்திப் பெருவாரியான எறும்புக் கூட்டங்கள் தகவல் பரிமாற்றம் செய்கின்றன. மதச் சடங்குகள், அரசியல் சித்தாந்தங்கள், இசை போன்றவற்றின் மூலம் நாம் வெகுஜன மக்களை எப்படி நெருங்குகிறோமோ அதைப்போலவே ஆய்வாளர்கள் இவற்றின் இத்தகைய தொடர்பு யுக்திகளைப் பார்க்கிறார்கள்.

எறும்பு
எறும்பு
Pixabay

அன்று மாலை, வீட்டு வாசலில் நடந்துகொண்டிருந்த வாழ்வா சாவா என்ற அந்தப் போரைப் பார்க்கும் அரிய வாய்ப்பு எனக்கும் கிடைத்தது. வாசற்படியில் அமர்ந்து கைப்பேசியில் பேசிக்கொண்டிருந்தேன். அப்போது, ஒரு கட்டெறும்பு தன் சகா ஒருவரை இழுக்க முடியாமல் இழுத்துச் சென்றுகொண்டிருந்தது. இழுத்துச் சென்ற கட்டெறும்பு வேலைக்கார எறும்பு. உருவத்தில் மிகவும் சிறியது. தன் வாழ்வின் கடைசி நிமிடங்களை எண்ணிக் கொண்டிருந்த ஒரு காவல்கார எறும்பைக் காப்பாற்ற அந்த வேலைக்கார எறும்பு போராடிக்கொண்டிருந்தது. தன் சிறிய உடலின் ஒட்டுமொத்த சக்தியையும் திரட்டித் தன்னைவிட உருவத்தில் மூன்று மடங்கு பெரிய காவல்காரக் கட்டெறும்பின் உடலை இழுத்துச் சென்றுகொண்டிருந்தது.

வேலைக்கார எறும்புகளின் உருவம் காவல்கார எறும்புகளைவிடவும் சிறிதாகத்தானிருக்கும். அவை, தம் காலனியைக் கட்டமைப்பது, ராணி எறும்பு மற்றும் அதன் முட்டைகளைக் கவனித்துக்கொள்வது போன்ற வேலைகளில் ஈடுபடுகின்றன. முட்டைகள் லார்வாக்களாக மாறி, லார்வாக்கள் குக்கூன்களாக உருப்பெரும் வரை வேலைக்கார எறும்புகளின் பராமரிப்பு அவற்றுக்கு இருக்கும். அதேசமயம், லார்வாக்களாக இருக்கும் காலகட்டத்தில் தம் காலனியின் புதிய வாரிசுகளுக்கு உணவு கொண்டுவரும் வேலையும் வேலைக்கார எறும்புகளுடையதுதான்.

இந்தச் சமயத்தில்தான், அவற்றின் வேலை மிக அதிகமாக இருக்கும். ஏனென்றால், முட்டைகள் பொரித்து லார்வாக்கள் வெளியேறும் சுமார் எட்டு முதல் பத்து வாரங்கள்வரை ராணி எறும்பு எதுவும் சாப்பிடாது. முட்டைகளுடனேதான் ராணியும் இருக்கும். அதனால், தன் உடலின் எடையில் 50 சதவிகித ஆற்றலை இழந்து பலவீனமாக இருக்கும் ராணிக்கு மீண்டும் ஊட்டச்சத்து கிடைக்கும் வகையில் அவை துரிதமாகச் செயல்பட்டு நிறைய உணவைக் கொண்டுவர வேண்டும். அதேசமயம், புதிதாகப் பிறந்த லார்வாக்களுக்கும் உணவு கொண்டுவர வேண்டும்.

அடிபட்ட எறும்பை இழுத்துச் செல்லும் வேலைக்கார எறும்பு
அடிபட்ட எறும்பை இழுத்துச் செல்லும் வேலைக்கார எறும்பு

இதற்கு அடுத்த சுற்றில் ராணி இடும் முட்டைகள் மிக ஆரோக்கியமாக இருக்கும். அதிக உணவு சாப்பிட்டதால் ராணியின் முட்டையிடும் திறன் முன்பைவிட அதிகமாக இருக்கும். இதற்குப் பிறகு பிறக்கும் அடுத்தத் தலைமுறை வேலைக்கார எறும்புகள் உருவத்தில் கொஞ்சம் பெரிதாகவும் வலிமையாகவும் மூர்க்கமாகவும் இருக்கும். ஏனென்றால், அதிகமாகச் சாப்பிட்ட ராணியின் மூலம் அதிக ஊட்டச்சத்துகள் கிடைக்கும். காலனி அமைக்கும் சமயத்தில் இடப்படும் முட்டைகள், கைவசம் இருக்கும் உணவுகளை மட்டுமே சாப்பிட்டு ராணி இடுபவை போதிய உணவு இல்லாததால், அவற்றிலிருந்து பிறக்கும் எறும்புகள் உருவத்தில் சிறிதாகவும் மென்மையாகவும் இருக்கும்.

காலனி நன்கு அமைக்கப்பட்ட பிறகு பிறக்கும் அடுத்தடுத்த தலைமுறைகளிலிருந்துதான், ஆரோக்கியமான ராணிகளும் அதோடு இனப்பெருக்கம் செய்யும் வல்லமையுள்ள ஆண் எறும்புகளும் பிறக்கின்றன. இவை பிறப்பதற்குச் சில ஆண்டுகள்கூட ஆகலாம். அதுவரை, வேலைக்கார எறும்புகளும் மிக மூர்க்கமான காவல்கார எறும்புகள் என்று அழைக்கப்படும் பெரிய உருவம் கொண்ட வேலைக்கார எறும்புகளும் மட்டும்தான் பிறந்துகொண்டிருக்கும். இந்த எறும்புகள்தான், பல்வேறு சுரங்கப் பாதைகளோடு ஆழமான மற்றும் விரிவான காலனிகளை அமைக்கின்றன.

அடிபட்ட கட்டெறும்பைச் சிரமப்பட்டு இழுத்துச் சென்ற அந்த வேலைக்கார எறும்பும்கூட அதன் கூட்டிலிருக்கும் ராணி, எங்கள் வீட்டு வாசலில் புதிய கூட்டை அமைத்த சமயத்தில் பிறந்த முதல் தலைமுறையாகத்தான் இருக்க வேண்டும். அதைவிட உருவத்தில் பெரிதாக இருந்த அந்த எறும்பு அதற்கு அடுத்தத் தலைமுறையாக இருக்க வேண்டும்.

அங்கிருந்து சில அடி தூரத்தில் இன்னொரு கட்டெறும்பும் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த மற்றொன்றைச் சுமந்தவாறு வேகமாகச் சென்றுகொண்டிருந்தது. அதன் வேகம் அபரிமிதமாக இருந்தது. அநேகமாக அது அதன் நண்பராக இருக்க வேண்டும்.

எப்படியாவது தன் நண்பரைக் காப்பாற்றிவிட வேண்டுமென்ற எண்ணம்கூட அந்த வேகத்துக்குக் காரணமாக இருக்கலாம். மேற்குப் பக்கமாகச் சுமார் நான்கடி தூரம் சென்றிருக்கும்... திடீரென்று தூக்கி வந்த தன் நண்பரைக் கீழே படுக்க வைத்துவிட்டு அந்த இடத்தைச் சுற்றி வட்டமிட்டது. அங்கிருந்து சில அடி தூரத்துக்கு நான்கு திசையிலும் எதையோ தேடியது. வடக்குப் பக்கமாக இருந்த மண் தரையில் சுமார் ஏழு சுள்ளெறும்புகள் நின்றிருந்தன. அவற்றைப் பார்த்ததும், திரும்பி வந்து தெற்குப் பக்கமாக இருந்த சுவரின் ஓரத்துக்குத் தூக்கிச் சென்று, சுவரை ஒட்டியபடியே தூக்கிச் செல்லத் தொடங்கியது.

ஏன் சுள்ளெறும்புகளைப் பார்த்துவிட்டுத் திசைமாறிச் செல்லவேண்டுமென்ற எண்ணம் மேலோங்கவே அந்த இடத்துக்குச் சென்று பார்த்தேன். அங்கு சில சுள்ளெறும்புகள், நான்கைந்து கட்டெறும்புகளைக் கொன்றுவிட்டிருந்தன. அங்கிருந்து சில அடிகள் நகர்ந்து வந்தால், அங்கும் ஒரு படைவீரன் சிக்கிக் கொண்டிருந்தான். அப்போதுதான் கட்டெறும்புகள் மீது படையெடுத்து வந்த சுள்ளெறும்புகள்தான் இந்தச் சேதங்களுக்குக் காரணமென்று புரிந்தது.

சண்டையில் உயிரிழந்த கட்டெறும்பு
சண்டையில் உயிரிழந்த கட்டெறும்பு

ஆங்காங்கே உடல் வெட்டப்பட்டு இரண்டு துண்டுகளாகக் கிடந்த கட்டெறும்புகளைப் பார்க்க முடிந்தது. கட்டெறும்புகளின் பக்கம், சேதம் அதிகம்தான். வீட்டு வாசலிலேயே சுமார் இருபது சடலங்கள் கிடந்தன. சுள்ளெறும்புகளின் கொடுக்கு, மிகக் கூர்மையாகவும் ரம்பம் போலவும் இருக்கும். அதை வைத்துத்தான் அது குச்சிகளை அறுப்பது முதல் உணவுகளைத் தூக்கிச் செல்வதுவரை எல்லா வேலைகளையும் செய்கின்றன. சில நேரங்களில் தாக்குதலுக்கு உள்ளாகும் தன் நண்பர்களைத் தலைக்கு மேலே தூக்கி வைத்து விழாமல் வேகமாகக் கொண்டு செல்லவும் அவை அந்தக் கொடுக்குகளைப் பயன்படுத்துகின்றன. இந்தச் சண்டையில், தம் எதிரிகளின் தலைகளைத் துண்டாக்க அந்தக் கொடுக்குகளைப் போர் ஆயுதமாக அவை பயன்படுத்தியுள்ளது தெரிந்தது.

சேதங்களைப் பார்த்துக்கொண்டே வந்தபோது, ஓரிடத்தில் காவல்காரக் கட்டெறும்பு ஒன்று படுகாயமடைந்து கிடந்தது. அதன் பின்புறம் தாக்கப்பட்டு, இரண்டு பின்னங்கால்கள் உடைந்து அசைய முடியாமல் இருந்தது. போரின்போது எதிரிகளின் நடுவே சிக்கிக்கொள்வது எவ்வளவு கொடுமை என்பதை அப்போதுதான் உணர்வுபூர்வமாகப் புரிந்துகொண்டேன்.

அடிபட்ட கட்டெறும்பு
அடிபட்ட கட்டெறும்பு

எறும்புகள், சாகும்வரை போராடும் துணிச்சல் கொண்டவை. போர் என்று வந்துவிட்டால், வெற்றி அல்லது வீர மரணம் என்பதே அவற்றின் நோக்கமாக இருக்கும். அதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. ஒருவேளை, அவை தோற்றுவிட்டால் தம் கூட்டிலிருக்கும் நூற்றுக்கணக்கான முட்டைகள், எதிர்காலச் சந்ததிகளாக வளரவுள்ள லார்வாக்கள், முழுப் பிறவியெடுப்பதற்காகத் தூக்கத்திலிருக்கும் குக்கூன்கள் அனைத்தையும் எதிரிப்படை அபகரித்துச் சென்றுவிடும். பெரும்பாலும் இதுபோன்ற படையெடுப்புகள் மழைக்காலத்தின் போதும் உணவுப் பற்றாக்குறையின் போதும்தான் நடைபெறும்.

மனிதர்களைப் போல் அவை பேராசையோடு, ஒருசிலருக்கான லாப நோக்கோடு போர் புரிவதில்லை. மொத்தக் காலனியின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக மட்டுமே இன்னொரு காலனிமீது படையெடுக்கின்றன. சில நாள்களாகச் சென்னையில் விட்டுவிட்டுப் பெய்யும் மழை சுள்ளெறும்புகளுக்கு உணவுப் பற்றாக்குறையை ஏற்படுத்தியிருக்கலாம். அதுகூட அன்றைய படையெடுப்புக்குக் காரணமாக இருக்கலாம்.

எறும்புகள், சின்ன சின்ன இலைகளைச் சுமந்து செல்வதையும் குச்சிகளைத் தம் கொடுக்குகளால் குட்டி குட்டியாக வெட்டியெடுத்துக் கூட்டுக்குக் கொண்டு செல்வதையும் பார்த்திருப்போம். அதைத் தம் கூட்டுக்குள் வைத்துப் பூஞ்சைகளை வளர்த்து உணவாக்கிக் கொள்கின்றன. கட்டெறும்புகள் அப்படிச் சேர்த்து வைக்கும் உணவுகளையும், அவற்றின் லார்வாக்களையும் அபகரித்துச் செல்லச் சுள்ளெறும்புகள் முயன்றிருக்கலாம்.

அன்றைய போர்க்களத்தில் உயிர்த்தியாகம் செய்து சடலங்களாகக் கிடந்தவை, அந்த அபகரிப்பிலிருந்து தம் சந்ததிகளைக் காப்பாற்றப் போரிட்டிருக்கின்றன.
தாக்குதல்
தாக்குதல்

அப்படிப் போரிட்டுக் கால் உடைந்து எதிரிகளுக்கு மத்தியில் அசைய முடியாமல் சிக்கியிருந்த அந்தக் கட்டெறும்பு, இன்னமும் உயிரோடு இருக்க வேண்டுமா என்பது போன்ற சித்ரவைதையை அனுபவித்துக் கொண்டிருந்தது. அதைக் கடந்து செல்லும் சுள்ளெறும்புகள் எல்லாமே ஒவ்வொன்றாகச் சிறுகச் சிறுகத் தம் கொடுக்குகளால் அதன் தலையிலும் உடலிலும் குத்திக் குத்திக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொன்றுகொண்டிருந்தன. தங்களுக்கான உணவைச் சேகரிக்கச் சுள்ளெறும்புகள் போராடிக் கொண்டிருந்தன. தங்கள் உணவைப் பாதுகாக்க, வாரிசுகளைப் பாதுகாக்கக் கட்டெறும்புகள் போராடிக் கொண்டிருந்தன.

வானம் இருட்டிக் கொண்டிருந்தது. அன்றைய போர்ச் சூழலும் இறுதிக்கட்டத்தை நெருங்கியது. அனைத்து எறும்புகளும் தத்தம் படையில் இறந்த எறும்புகளின் சடலங்களைத் தூக்கிச் சென்றுகொண்டிருந்தன. அந்தத் தியாகிகள் அன்று தம் கூட்டைக் காப்பாற்றிவிட்டார்கள். தம் உடலை மற்ற எறும்புகளுக்கு உணவாகக் கொடுப்பதன் மூலம், அடுத்து வரும் நாள்களிலும் அவர்கள் அதையே செய்யப் போகிறார்கள். காயம்பட்ட எறும்புகளைத் தூக்கிச் செல்லும் மற்ற எறும்புகள் அவற்றின் காயங்களைக் குணப்படுத்திக் காப்பாற்றும். அதேபோல், இறந்த எறும்புகளையும் கூட்டுக்குக் கொண்டுபோகும். உயிரோடிருக்கும் எறும்புகள், அந்தச் சடலங்களைச் சாப்பிடுவதன்மூலம் தமக்குத் தேவையான புரதச் சத்தைச் சேகரித்துக்கொள்கின்றன.

சிக்கிக்கொண்ட கட்டெறும்பு மீது நடத்தப்படும் தாக்குதல்
சிக்கிக்கொண்ட கட்டெறும்பு மீது நடத்தப்படும் தாக்குதல்

அன்றைய சண்டைதான் முடிந்தது. போர் இன்னும் முடியவில்லை. கட்டெறும்புகளின் உணவைச் சூறையாடச் சுள்ளெறும்புகள் மீண்டும் வரும். மழைக்காலத்தில் அவற்றாலும் உணவின்றி வாழமுடியாது. இது உணவுக்கான போராட்டம். உயிர்த்திருப்பதற்கான போராட்டம். இரண்டுமே ஏதாவதொரு வகையில் தத்தம் கூட்டை உயிர்த்திருக்கச் செய்தாக வேண்டும். அப்போதுதான் ராணி உயிர்த்திருக்க முடியும். ராணி பிழைத்திருந்தால்தான், அந்தக் கூட்டினுடைய அடுத்தடுத்த சந்ததிகள் பிறக்கும்.

இயற்கை அனைவருக்கும் ஒரு வழியைக் கொடுத்துள்ளது. அதைக் கண்டுபிடிப்பதில்தான் வாழ்வின் சுவாரஸ்யமே அடங்கியிருக்கிறது. அந்த வழிகளைக் கண்டுபிடித்து வழிகாட்டியோடு கையில் கொண்டு வந்து கொடுக்கும்வரைக் காத்திருக்க அவை மனிதர்களல்ல, எறும்புகள். அந்த வழிகளில் ஒன்றை நிச்சயம் கண்டுபிடிக்கும்.
70 குண்டுகள்; தந்தத்துக்கான வேட்டை! - கொடூரமாகக் கொல்லப்பட்ட ஆண் யானை
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு