Published:Updated:

நாட்டுக்கு சுமையாகிப் போன நீர் மின் நிலையங்கள்; என்ன செய்ய வேண்டும் இந்தியா?

கடந்த 10 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் நீர்மின் அணைக்கட்டுகள் மீத்தேன் வாயு உமிழ்வில் முக்கியப் பங்களிக்கின்றன என்றும், இது பசுமை இல்ல வாயு கரியமில வாயுவைவிட 28 - 34 மடங்கு ஆற்றல் கொண்டது என்றும் கூறுகின்றன. இது சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதுடன், பேரழிவுக்கும் காரணமாகிறது.

கிளாஸ்கோவில் நடைபெற்ற சிஓபி 26 பருவநிலை மாற்றம் தொடர்பான உச்சிமாநாட்டுக்கு ஒரு மாதத்துக்கு முன்பு 69 நாடுகளைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட அமைப்புகள் `நீர்மின் அணைக்கட்டுகளுக்கு நிதி உதவி வழங்கக் கூடாது’ என்று அரசுகளை வலியுறுத்தின. மேலும், உலக வெப்பமயமாதலுக்கு எதிராக 2015-ம் ஆண்டு பாரிஸ் ஒப்பந்தத்தின் கீழ் எடுத்துக்கொண்ட உறுதிமொழியின்படி, அனைத்து தேசிய அளவிலான தீர்மானிக்கப்பட்ட பங்களிப்பு (Nationally Determined Contributions – NDC) இலக்குகளிலிருந்து அணைக்கட்டுகளை நீக்க வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்தன.

நீர்மின் திட்டங்கள் சுத்தமானவை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பானவை என்ற நம்பிக்கையில் அவற்றை ஊக்குவித்துக் கொண்டிருந்த இந்தியாவைச் சேர்ந்த 26 சுற்றுச்சூழல் குழுக்களும் இக்கோரிக்கையை விடுத்தன.

COP26 climate conference in Glasgow, Scotland
COP26 climate conference in Glasgow, Scotland
AP Photo/Scott Heppell
`மக்கள் முக்கியமா, அனல்மின் நிலையங்கள் முக்கியமா?' - புதிய வழியைக் காட்டும் ஆய்வறிக்கை

கடந்த பத்தாண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் நீர்மின் அணைக்கட்டுகள் மீத்தேன் வாயு உமிழ்வில் முக்கியப் பங்களிக்கின்றன என்றும், இது பசுமை இல்ல வாயு கரியமில வாயுவைவிட 28 - 34 மடங்கு ஆற்றல் கொண்டது என்றும் கூறுகின்றன.

25 மெகாவாட் ஆற்றலுக்கும் குறைவான சக்தி கொண்ட சிறிய நீர்மின் திட்டங்களே புதுப்பிக்கத்தக்க ஆற்றல் ஆதாரங்கள் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், திடீரெனப் பெரிய நீர்மின் திட்டங்களையும் `புதுப்பிக்கத்தக்க ஆற்றல்’ ஆதாரங்கள் என்று 2019-ல் இந்திய அரசு அறிவித்தது. மேலும், இது தொடர்பான கடன் தவணைகளை எளிமையாக்கல், வெள்ளத் தடுப்புத் திட்டங்கள், சாலை அமைத்தல் உள்ளிட்ட கட்டமைப்புகளுக்குத் தேவையான நிதி ஆதாரங்களை வழங்கவும் முடிவானது. இமயமலைப் பிராந்தியத்தில் பல்வேறு காரணங்களுக்காக நிறுத்தப்பட்ட நீர்மின் திட்டப் பணிகளை மீண்டும் தொடங்கவும் பரிந்துரைத்தது.

நீர்மின் அணைக்கட்டுகள் சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதுடன், இயற்கைப் பேரழிவுகளையும் துரிதப்படுத்துகின்றன. `நிலக்கரிக்கு மாற்று சுத்தமான, பசுமையான, சுற்றுச்சூழல் பாதுகாப்பான நீன்மின் ஆற்றல் என்னும் எண்ணத்தில் எந்த உண்மையும் இல்லை’ என்கிறார் அணைக்கட்டுகள், ஆறுகள் மற்றும் மக்களுக்கான தெற்கு ஆசிய வலையமைவின் தலைவர் ஹிமான்ஷு தாக்கர்.

2013-ல் 5,000-க்கும் அதிகமானோர் உயிரிழந்த உத்தரகாண்ட் கேதார்நாத் வெள்ளப் பெருக்கு குறித்து ஆய்வறிக்கை அளிக்க உச்ச நீதிமன்றம் குழுவை அமைத்தது. குறிப்பாக, இங்குள்ள அணைக்கட்டுகள் இயற்கைப் பேரழிவுகள் ஏற்படுத்திய சேதாரங்களைக் கணிசமாக அதிகப்படுத்துகின்றனவா என்ற கோணத்திலும் ஆய்வுகளை மேற்கொள்ள ஆணையிட்டது.

நீர்மின் திட்டங்கள்
நீர்மின் திட்டங்கள்

இந்தியாவிலுள்ள மொத்த அணைக்கட்டுகளின் எண்ணிக்கை 4,407 ஆகும். சீனா (23,841), அமெரிக்கா (9,263) ஆகியவற்றுடன் ஒப்பிடுகையில், இந்தியா அணைக்கட்டுகள் அதிகமுள்ள மூன்றாவது நாடாகும். இவற்றிலிருந்து உற்பத்தியாகும் நீர்மின் திறன் 146 ஜிகாவாட் ஆகும். இதில் 78% அல்லது 112 ஜிகாவாட் இமயமலை மாநிலங்களில் அமைந்துள்ளது. 2020-ம் ஆண்டு நவம்பர் வரை 38 பெரிய நீர்மின் நிலையங்களின் கட்டுமானப் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன.

2030-ம் ஆண்டுக்குள் 450 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திறன் கொண்ட மின் நிலையங்களை அமைக்க அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்த இலக்கில் நீர்மின் நிலையங்கள் 31%, சூரிய சக்தி மற்றும் காற்றாலை 69% உட்பட இதுவரை 146 ஜிகாவாட் திறன் கொண்ட மின் நிலையங்கள் மட்டுமே நிறுவப்பட்டுள்ளன.

நீர்மின் நிலைய ஆற்றல் பசுமைக்கான மாற்றம் அல்ல

பல்வேறு ஆய்வுகளின்படி அணைக்கட்டுகளின் கீழுள்ள அழுகும் தாவரங்கள் மீத்தேன் வாயுவை உமிழ்கின்றன. மேலும் அணைக்கட்டுகளுக்குள் பாயும் ஆறுகள் கணிசமான அளவில் கரிமப் பொருள்கள், வண்டல் மண், வேளாண் பணிகள், உரங்கள், மனிதக் கழிவுகள் ஆகியவற்றிலிருந்து உருவாகும் நைட்ரஜன் மற்றும் ஃபாஸ்பரஸ் அமிலங்களை நீரோட்டத்தில் அடித்துக் கொண்டு வரும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இவை நீர்ப்பாசி வளர்ச்சியை ஊக்குவிப்பதுடன், மீத்தேனாக உடைந்து உருமாற நுண்ணுயிர்களுக்குத் தேவையான கூட்டுப் பொருள்களையும் வழங்கும். இயற்கையான ஏரிகளின் நீர்மட்டத்தை விடவும் அணைக்கட்டுகளின் நீர் மட்டம் ஏற்ற இறக்கத்துடன் காணப்படும். நீர் மட்டம் குறையும்போது அடியிலிருக்கும் மீத்தேன் வாயு வளிமண்டலத்தில் வெளியேற்றப்படும்.

``நீர்மின் திட்டங்களுக்கான இந்தியாவின் நிதியுதவி சுற்றுச்சூழலுக்கு உவப்பானது என்னும் எண்ணம் தவறானதாகும். நிலக்கரி மாசு வெளியேற்றம் அனல்மின் நிலைத்தின் திறன் விகிதாசாரத்துக்கு ஏற்ப அமையும். ஆனால், நீர்மின் அணைக்கட்டுகள் வெளியேற்றும் மீத்தேன் மாறுதலுக்கு உட்பட்டது. எனவேதான் அதிகமான அணைக்கட்டுகள் உள்ள இமயமலைப் பிராந்தியத்தில், சுற்றுச்சூழல் சீரழிவு காரணமாக நச்சு வெளியேற்றம் அதிகமிருக்கலாம் என்னும் ஐயப்பாடு நியாயமானதே" என்கிறார் ஆய்வு நிபுணர் ஸ்ரீபாத தர்மாதிகாரி.

Hydro electric powerplant
Hydro electric powerplant
Pixabay

2000-ல் உலக வங்கி நிறுவிய அணைக்கட்டுகளுக்கான ஆணையம் உலகெங்குமுள்ள அணைக்கட்டுகள் திறன் மற்றும் செயல்பாடு குறித்த ஆய்வை மேற்கொண்டது. ஆய்வு முடிவில் அணைக்கட்டுகள் சுற்றுச்சூழல் உவப்பானவை இல்லையென்றும், அவை தொடர்பான நிதி, சுற்றுச்சூழல், மனித ஆற்றல் செலவுகள் ஏராளம் என்றும் அறிக்கை வெளியிட்டது.

`புவி வெப்பமயமாதலின் முதல் காரணம் கரியமில வாயு. இரண்டாவது மீத்தேன் வெளியேற்றம். ஆனால், கரியமில வாயுவைவிடவும் மீத்தேன் வெப்ப விளைவு 28 - 34 மடங்கு அதிகம். அணைக்கட்டுகளிலிருந்து பசுமை இல்ல வாயு வெளியேற்றம் முன்பு கணித்ததைவிடவும் 29% அதிகமாகும். அணைக்கட்டுக்குள் செல்லும் மீத்தேன் வாயு நீரோட்டத்தில் குமிழ்களாக வெளியேறும். இந்த மீத்தேன் வளிம நீக்கம் முன்பு கணக்கில் கொள்ளப்படவில்லை’ என்கின்றனர் அமெரிக்க வாஷிங்டன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள்.

சமூகப் பொருளாதார விளைவுகள்

200-க்கும் அதிகமானோர் உயிரிழந்த பிப்ரவரி 2021-ல் உத்தரகாண்ட் கமோலி பேரழிவின்போது பனிப் பாறைகள் 1,800 மீட்டர் உயர இமயமலை ரோண்டி சிகரத்திலிருந்து உருகி அருவியாக ஓடின. பாறை மற்றும் வண்டலுடன் கலந்து பிரம்மாண்ட குப்பையாக உருண்டு திரண்டு ஓடிச் சாலைகள், பாலங்கள் மற்றும் நீர்மின் அணைக்கட்டுகளைச் சேதப்படுத்தின.

`` `சுத்தம்’ என்பதன் புரிதல் அணைக்கட்டுகள் நச்சுப் புகையை உமிழ்வதில்லை என்னும் குறைந்தபட்ச குறுகிய கருத்துதான். ஆனால், பெரிய அணைக்கட்டுகளால் ஏற்படும் காடுகள் அழிப்பு, பல்வகை உயிரினங்கள் அழிப்பு, மக்கள் குடியிருப்பு இடமாற்றம் உள்ளிட்ட சமூக மற்றும் சுற்றுச்சூழல் பேரழிவுகள் போதிய கவனம் பெறுவதில்லை.

வழக்கமான அணைக்கட்டுகளில் காணப்படும் பெரிய நீர்த்தேக்கங்கள், நீரோட்டத்துக்கு ஏற்ப நிறுவப்படும் நீர்மின் நிலையங்களில் இல்லை. எனவே, சுற்றுச்சூழல் பாதிப்பு குறைவாகவே இருக்கும். இவ்வகை நீர்மின் நிலையங்கள் 2,000-ம் ஆண்டுக்குப் பின்னரே கட்டப்பட்டன. இவை பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தைக் குறைக்கும் இலக்குடன், ஐக்கிய நாடுகளின் கியோடோ புரோடோகால் ஒப்பந்தத்தின்படி கட்டப்படுகின்றன.

Hydroelectric Dam
Hydroelectric Dam
Pixabay

கட்டப்பட்ட பெரிய அணைகள் இடப்பெயர்வுக்கு உள்ளான பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு மாற்றுக் குடியிருப்பு வசதிகளை வழங்கத் தவறிவிட்டன. ஹிராகுட், சர்தார் சரோவர் உள்ளிட்ட அணைக்கட்டுகளால் இடம் பெயர்ந்த மக்களுக்கு இன்னும் முழுமையான மாற்றுக் குடியிருப்புகள் வழங்கப்படவில்லை. நில ஆர்ஜிதம், காடு மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் தடையில்லாச் சான்றிதழ், மறுவாழ்வுக்கான குடியிருப்புகள், புவியியல் மாற்றங்கள், நிதி ஆதாரங்கள் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால் பல்வேறு நீர்மின் அணைக்கட்டுத் திட்டங்கள் தாமதமாகின்றன அல்லது கைவிடப்பட்டுள்ளன. 24 நீர்மின் திட்டங்கள் 12 முதல் 189 மாதங்கள் தாமதமாக இன்னும் கட்டி முடிக்கப்படாமல் உள்ளன. உரிய காலத்தில் கட்டி முடிக்கப்படாததால் இவற்றின் செலவுகளும் 473% அதிகரித்துள்ளன.

அதிக அளவிலான முதலீடுகளுடன், பொருளாதார ரீதியாகவும் சாத்தியப்படாததால், நீர்மின் திட்டங்கள் கட்டுமானப் பணியிலிருந்து தனியார் துறை விலகிக்கொண்டது. எனவே, பொதுத்துறை நிறுவனங்கள் அவற்றைக் கட்டி முடிக்கக் களமிறங்கி உள்ளன. உதாரணத்துக்குப் பொதுத்துறை நிறுவனமான என்ஹெச்பிசி 6000 மெகாவாட் (6 ஜிகாவாட்) திறனுள்ள நீர்மின் திட்டத்தைக் கட்டி முடிக்கத் திட்டமிட்டுள்ளது.

விலை குறைந்த பசுமைத் தீர்வுகள் உள்ளன

நீர்மின் அணைக்கட்டுகளின் முக்கியப் பங்களிப்பு புதுப்பிக்கத்தக்க மின் வழங்கலில் அவ்வப்போது ஏற்படும் தடைகளைச் சமன்படுத்துவதே ஆகும். ஆனால், பெரும்பான்மை நீர்மின் அணைக்கட்டுகள் இந்தப் பணியைச் செய்வதில்லை.

Hydroelectric Powerplant
Hydroelectric Powerplant
Pixabay
விஷவாயுக்களை அளவு மீறி உமிழும் தொழிற்சாலைகள்; அடுத்த போபாலாக மாறும் வடசென்னை; கவனிக்குமா தமிழக அரசு?

மின் விநியோகத்தைச் சமன்படுத்த மின் நுகர்வு அதிகமிருக்கும் நேரத்தில் மட்டுமே செயல்படுவதற்குப் பதிலாக எந்நேரமும் இயங்கிக்கொண்டிருக்கின்றன. ஹைட்ரஜன் சேமிப்பு, மின்கலச் சேமிப்பு ஆகியவை செலவு குறைந்தும், சுற்றுச்சூழலுக்குப் பாதுகாப்பாகவும், நம்பகத்தன்மையுடனும் இருக்கும் நிலையில், இனி அணைக்கட்டுகளின் தேவையே இருக்காது" என்கிறார் தர்மாதிகார்.

2025-க்குள் இந்தியாவிலுள்ள சுமார் 1,115 அணைக்கட்டுகள் 50 ஆண்டுகள் பழமையாகிவிடும். வண்டல் மண் அதிகம் சேருவதால் இவற்றின் செயல்பாடு குறையும். ஆனால், பாரமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். எனவே, அணைக்கட்டுகளின் செயல்பாடு, சுற்றுச்சூழல், ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களின் பாதுகாப்பு ஆகியவை குறித்த ஆய்வுகளை நடத்த வேண்டும்.

- ஜனனி ரமேஷ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு