Published:Updated:

கொசுக்கள் உண்மையில் இந்த உலகத்துக்கு தேவைதானா? சூழலியலில் அதன் பங்கு என்ன?

கொசுக்கள்
News
கொசுக்கள் ( Pixabay )

கொசுக்களை முற்றிலுமாக பூமியிலிருந்து துடைத்தழிப்பது அவ்வளவு அவசியமா? அப்படிச் செய்வது சரியா? புவியில் கொசுக்களின் பங்குதான் என்ன?

கொசுக்கள் உண்மையில் இந்த உலகத்துக்கு தேவைதானா? சூழலியலில் அதன் பங்கு என்ன?

கொசுக்களை முற்றிலுமாக பூமியிலிருந்து துடைத்தழிப்பது அவ்வளவு அவசியமா? அப்படிச் செய்வது சரியா? புவியில் கொசுக்களின் பங்குதான் என்ன?

Published:Updated:
கொசுக்கள்
News
கொசுக்கள் ( Pixabay )

மனித சமுதாயத்தின் உலகளாவிய பிரச்னையாக கொசுக்கள் இருந்து வருகின்றன. அவற்றை அழிப்பதற்காக மனித இனம் செய்யாத வேலையில்லை, கண்டுபிடிக்காத மருந்துகளோ தொழில்நுட்பங்களோ இல்லை. ஆனால், இன்றளவும் கோடிக்கணக்கான கொசுக்கள் மனித சமூகத்தின் அத்தனை முயற்சிகளுக்கும் போக்கு காட்டிக் கொண்டிருக்கின்றன. கொசுக்களை முற்றிலுமாக பூமியிலிருந்து துடைத்தழிப்பது அவ்வளவு அவசியமா? அப்படிச் செய்வது சரியா? புவியில் கொசுக்களின் பங்குதான் என்ன?

நகர்ப்புற குடிசைப் பகுதிகளில் வாழும் எளிய மக்களிடையே, சுகாதாரமற்ற, பாதுகாப்பற்ற சூழலில் வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டவர்களிடையே உலகிலேயே கொடிய உயிரினம் எதுவென்று கேட்டால், அவர்கள் சற்றும் தயங்காமல் கொசுக்களைத்தான் கைகாட்டுவார்கள்.

கொசுக்கள்
கொசுக்கள்
Pixabay

கொசுக்கள் எங்கு வேண்டுமானாலும் உயிர் பிழைத்திருக்கும். அவற்றுக்குப் பெரிய சுகாதாரமான வாழிடமோ, அதிகமான உணவோ தேவையில்லை. அவை மிகவும் மோசமான சாக்கடையிலும்கூட உயிர்வாழ்ந்து எண்ணிக்கையில் பெருகிவிடக்கூடிய அளவுக்கு மிக எளிய வாழ்வியல் சுழற்சியைக் கொண்டவை.

அவற்றால், இன்றளவும் ஆண்டுக்கு உலக அளவில் சுமார் 20 கோடி பேர் பல்வேறு நோய்களுக்கு ஆளாகிறார்கள். டெங்கு, மஞ்சள் காய்ச்சல், மலேரியா, சிக்கன்குன்யா என்று கொசுக்கள் மனிதர்களிடையே பரப்பும் நோய்களின் பட்டியல் நீண்டுகொண்டே போகும். ஏடஸ் வகைப்பாட்டைச் சேர்ந்த ஒரு வகைக் கொசு பரப்பும் டெங்கு உலக அளவில் ஓராண்டுக்கு 40,000 மரணங்களுக்குக் காரணமாக அமைகிறது. இவ்வளவு ஆபத்துகளை மனிதர்களிடையே கொசுக்கள் ஏற்படுத்துவதால், அடிப்படையிலேயே நமக்கு அவற்றின்மீது ஒரு வெறுப்பு ஏற்படுகிறது.

ஆனால், பூமியிலுள்ள அத்தனை கொசுக்களும் நம்மிடையே நோய் பரப்பத்தான் இருக்கின்றனவா?

இதற்கு, இல்லையென்பதுதான் ஆய்வாளர்களின் பதில். உலக அளவில் இதுவரை சுமார் 3,500 வகையான கொசுக்கள் வாழ்கின்றன. பெண் கொசுக்கள் குட்டை, பூந்தொட்டி, நீர்த்தேக்கம், மழைநீர் தேங்கியிருக்கும் பகுதிகள் போன்ற இடங்களில் தண்ணீரின் மீது முட்டையிடுகின்றன. அந்த முட்டைகளுக்குச் சிறிய அளவு நீர் இருந்தாலே பிழைத்துக்கொள்ளப் போதுமானது. அதிலிருந்து வெளியேறும் லார்வாக்கள், அந்த நீரிலேயே இருக்கும் நுண்ணுயிரிகள், பாசி போன்றவற்றைச் சாப்பிட்டு வளர்ந்து, கொசுக்களாக உருப்பெற்ற பிறகு, பறந்து செல்கின்றன.

அப்படி வளர்ந்து பறந்த கொசுக்களில் பெரும்பாலானவை சைவப் பிரியர்கள்தான். பூவிலுள்ள தேன், தாவரத்தின் சாறு போன்றவற்றைத்தான் சாப்பிடுகின்றன. கொசுவின் உயிரினக் குடும்பதந்துக்குள் வருகின்ற பெரும்பாலானவை இப்படித்தான் சாப்பிடுகின்றன. இதில் யானைக் கொசு (elephant mosquito) என்றொரு கொசு வகை உண்டு. இவை மற்ற கொசுக்களைவிட உருவத்தில் சற்று பெரியவை, அதோடு ரத்தம் குடிப்பதில்லை. இவற்றால் நமக்குப் பலனும்கூட உண்டு. இந்தக் கொசுக்களின் லார்வாக்கள் மற்ற சிறிய கொசுக்களின் லார்வாக்களை உணவாகச் சாப்பிடுகின்றன. அதன்மூலம், மனிதர்களிடையே நோய்ப்பரவலுக்குக் காரணமான சில வகைகளின் எண்ணிக்கையைக் குறைக்கின்றன.

யானைக் கொசு
யானைக் கொசு
Katja Schulz from Washington/ Wikimedia Commons

இதுவரை பதிவு செய்யப்பட்டதில், சுமார் 200 வகையான கொசுக்கள்தான் மனிதர்களிடையே ரத்தம் குடிக்கின்றன. மற்ற ரத்தம் குடிக்கும் கொசு வகைகள், பறவைகள், பல்லிகள், சிறிய பாலூட்டிகளிடையேதான் ரத்தம் குடிக்கின்றன. அப்படி நம்மிடையே ரத்தம் குடிக்கும் கொசுக்களிலும் அனைத்துமே நோய்களைச் சுமந்து வருவதில்லை. நமக்கு நன்கு தெரிந்த மலேரியாவைப் பரப்புவது அனோஃபிலெஸ் (Anopheles) வகைப்பாட்டைச் சேர்ந்த கொசுக்கள்தான். இந்தக் கொசுக்களில் ஒட்டிக்கொண்டுதான், மலேரியா நோய்க்குக் காரணமான ப்ளாஸ்மோடியம் என்ற ஒட்டுண்ணி வாழ்கிறது. இந்த வகைப்பாட்டின் கீழ் வரும் 460 வகையான கொசுக்களில் சுமார் 100 வகைகளில்தான் இந்த ஒட்டுண்ணியால் வாழமுடிகிறது. அதிலும்கூட 30 முதல் 40 வகையான கொசுக்கள்தான் மனிதர்களிடையே ரத்தம் குடிக்கின்றன. அவற்றிலும்கூட, ஐந்து வகையான கொசுக்கள்தான் நம்மிடையே நோய்த்தாக்குதலை ஏற்படுத்தும் வீரியமுள்ள ப்ளாஸ்மோடியம் ஃபால்சிபாரம் என்ற தனித்த வகை ஒட்டுண்ணியைச் சுமக்கின்றன. இதுவோர் உதாரணம் மட்டுமே. இப்படி நம்மிடையே பறக்கும் கோடிக்கணக்கான கொசுக்களில் சில வகைகளே நோய் கிருமிகளைச் சுமக்கின்றன.

இந்த பூமிக்கு கொசுக்கள் அவசியமா?

மனிதர்களிடையே நோய்களைப் பரப்புவதாகச் சொல்லப்படுவதையும் தாண்டி, அவை பல சூழலியல் சேவைகளைச் செய்கின்றன. லார்வாக்களாக இருக்கும்போது, நீரிலுள்ள உயிரியல் கழிவுப் பொருள்களைச் சாப்பிடுகின்றன. யானைக் கொசுக்களைப் போன்ற சில வகைக் கொசுக்களின் லார்வாக்கள், மற்ற கொசுக்களுடைய லார்வாக்களையே சாப்பிடுகின்றன.

அதுபோக, இவை தட்டான், ஊசித்தட்டான் போன்றவற்றின் இளம்பருவக் குஞ்சுகளுக்கு, தலைப்பிரட்டைகளுக்கு, நீர்வாழ் ஆமைகளுக்கு, மீன்களுக்கு மற்றும் இன்னும் பல வகையான நீர்வாழ் பூச்சிகளுக்கு உணவாகின்றன. இதுமட்டுமின்றி நன்கு வளர்ந்த கொசுக்கள், பறவை, வௌவால், தவளை, இன்னும் பல பூச்சிகளுக்கு உணவாகின்றன. அதோடு, தம் உணவுக்கான செயல்முறையில் பல தாவரங்களுக்கு அவை மகரந்தச் சேர்க்கையும் செய்கின்றன.

தலைப்பிரட்டைகள்
தலைப்பிரட்டைகள்
Pixabay

இப்படியாக வாழ்ந்து முடிந்து உயிரிழக்கும் கொசுக்கள், மீண்டும் நுண்ணுயிரிகளுக்கு உணவாகி, உயிரியல் கழிவாகின்றன. அதன்மூலம், அவை தாவரங்களுக்கான ஊட்டச்சத்துகளைத் தருகின்றன. இப்படியாக, அவை தம் வாழ்வியல் சுழற்சியைப் பூர்த்தி செய்கின்றன. எந்தவொரு மோசமான சூழலிலும் இவற்றால் வாழ்ந்துவிட முடியும். மழை பெய்து தேங்கிய மிகச் சிறிய நீர்த் தேக்கத்திலேயே தன் வாழ்வியல் சுழற்சியை முடித்துக்கொள்ள முடியும். ஆனால், அவற்றைச் சாப்பிடக்கூடிய உயிரினங்களால் மோசமான சூழலில் வாழ முடியாது. அத்தகைய மோசமான சூழல் இன்று அதிகமாகி வருவது, கொசுக்களின் வேட்டையாடிகளால் வாழமுடியாத சூழலில் அவை நன்கு பெருகி வாழும் வாய்ப்பைக் கொடுக்கிறது. அவற்றின் எண்ணிக்கைப் பெருக்கத்துக்கு இதுவும் ஒரு காரணம்.

கொசுக்களைப் பற்றிய ஆய்வை மேற்கொண்ட சுற்றுச்சூழல் ஆய்வாளர் தணிகைவேல் இதுபற்றிப் பேசியபோது, ``மனிதர்களுடைய வாழ்வியலோடு தொடர்புபடுத்தும் போதுதான், கொசுக்களைப் பற்றிப் பேசுகிறோம். சமூக-சூழலியல் ரீதியாகப் பார்க்கையில், அது பல ஒட்டுண்ணிகளுக்கு ஒம்புயிரிகளாகச் (Host) செயல்பட்டு நோய்களைப் பரப்புவதால், நம்மிடையே மருத்துவ மற்றும் பொருளாதார பாதிப்புகளை எதிர்கொள்கிறோம். ஆகையால், அந்தப் பார்வையில் மட்டும்தான் கொசுக்களை அணுகுகிறோம். அடிப்படையில், ஏடஸ், க்யூலஸ், அனோஃபிலெஸ் ஆகிய மூன்று வகைப்பாடுகளைச் சேர்ந்த கொசுக்கள்தான் மனிதர்களிடையே பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.

கொசு லார்வாக்கள்
கொசு லார்வாக்கள்
Pixabay

அதேபோல், வளர்ப்பு உயிரினங்களிலும் சில கொசுக்கள் பாதிப்புகளை உண்டாக்குகின்றன. அப்படிப்பட்டவை மீதுதான் அதிக ஆய்வுகள் நடக்கின்றன. அதையும் தாண்டி, இன்னும் பல வகையான கொசுக்கள் இருக்கின்றன. அவற்றால் நமக்கு பலனோ, ஆபத்தோ இல்லாததால், நாம் கவனம் செலுத்துவதில்லை. கொசுக்கள் உணவுச் சங்கிலியில் பங்கு வகிக்கின்றன. ஆனால், உணவுச் சங்கிலியில் அவை இல்லையெனில் மிகப்பெரிய இழப்பு ஏற்படுமா என்பது பற்றிய ஆய்வுகள் இதுவரை முழுமையாக நடைபெறவில்லை. பறவை, வௌவால், தவளை எனப் பல உயிரினங்களுக்கு இவை உணவாகச் செயல்படுகின்றன. ஆனால், அவைதான் பிரதான உணவு என்றில்லை.

இன்னும் பல புதிய வகை கொசுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுக் கொண்டேதான் இருக்கின்றன. அப்படியொரு சூழலில், கொசுக்களைப் போன்ற சிற்றுயிர்களின் அடிப்படைச் சூழலியல் சேவைகள், ஒரு சூழலியல் அமைப்பில் அவற்றின் இருப்புக்குரிய பொதுக் காரணிகளைத் தாண்டி, நுண்ணிய வாழ்விட அளவில் முழுமையான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது.

கொசுக்களை முற்றிலுமாக அழித்துவிட்டால், அது சூழலியல் அமைப்பில் எவ்வகையான மாற்றங்களைக் கொண்டுவரும் என்பது பற்றி இன்னும் ஆழமாகப் புரிந்துகொள்ள வேண்டிய தேவை இருக்கிறது. அடிப்படையில் பூச்சிகள் உட்பட அனைத்து உயிரினங்களுக்கும் ஒவ்வொரு பங்கு இருக்கிறது. இங்கு எதுவுமே தேவையின்றி இல்லை. கொசுக்களைப் பொறுத்தவரை அதன் பங்கு என்ன என்பதை விரிவாக ஆய்வு செய்ய வேண்டும்.

கொசுக்களை அழிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லிகள், அவற்றை மட்டுமன்றி அந்தச் சூழலியலில் வாழும் மற்ற பூச்சிகளையும் அழிக்கும். அது, மோசமான எதிர்வினைகளைக் கொண்டுவரும் என்பதையும் மறுக்க முடியாது" என்று கூறினார். கொசுக்களுக்கும் பூக்கும் தாவரங்களுக்கு இடையே மிகவும் பழைமையான ஓர் உறவு இருப்பதாக 2011-ம் ஆண்டு வெளியான ஒரு தொல்லியல் ஆய்வு கூறுகிறது. பூக்கும் தாவரங்களின் எண்ணிக்கை பெருகிய அதேநேரம், இயற்கை வரலாற்றின் மரபணு ஆதாரங்கள் கொசுக்களின் எண்ணிக்கையும் பெருகியதாகச் சொல்கிறது.

பூவின் மீது அமர்ந்திருக்கும் கொசு
பூவின் மீது அமர்ந்திருக்கும் கொசு
Pixabay

பூக்களுடைய பழங்காலத் தொல்லெச்சங்களின்மீது கொசுக்கள் இருந்ததன் ஆதாரங்களும் சுமார் 100 மில்லியன் ஆண்டுகளுக்கும் முன்பே கிடைத்துள்ளன. மனித இனத்தின் பரிணாமப் பயணம் தொடங்குவதற்கும் பல மில்லியன் ஆண்டுகளுக்கும் முன்பிருந்தே அவை இப்பூமியில் வாழ்கின்றன.

கொசுக்களால் ஏற்படும் சமூக-பொருளாதார இழப்புகளைக் கருத்தில் எடுத்துப் பார்க்கையில் அவற்றின் எண்ணிக்கைப் பெருக்கத்துக்குமே கூட, மனிதக் குடியிருப்புகளைச் சுற்றியிருந்த இயற்கையான சூழலியல் அமைப்புகள் இல்லாமல் போனதும் அவற்றை உண்ணும் உயிரினங்கள் குறைந்ததும் இதற்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது. இதையெல்லாம் அடிப்படையாக வைத்துச் சிந்திக்கையில், இன்று கொசுக்களிடமிருந்து நிகழும் நோய்ப்பரவல் அதிகரிப்பதற்கும்கூட மனிதர்களே காரணமா என்ற கேள்வியும் எழாமல் இல்லை.