Published:Updated:

ஸ்டெர்லைட் ஆலை விருந்தில் கலந்துகொண்டார்களா காவல் ஆய்வாளர்கள்? - தூத்துக்குடி சர்ச்சை

இ.கார்த்திகேயன்
ப.கதிரவன்

ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் நடத்திய பிரியாவிடை விருந்து நிகழ்ச்சியில் தூத்துக்குடியில் உள்ள முக்கிய காவல் நிலைய ஆய்வாளர்கள் கலந்துகொண்டதாக ஒரு தகவல் பரவி வருகிறது.

மனு அளித்த கூட்டமைப்பினர்
மனு அளித்த கூட்டமைப்பினர்

தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ளது ஸ்டெர்லைட் ஆலை. இக் காவல்நிலையத்தின் ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்தவர் தில்லை நாகராஜன். இவர் கடந்த வாரம் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை காவல் நிலையத்துக்கு பணிமாற்றம் செய்யப்பட்டார்.

தூத்துக்குடி எஸ். பி அலுவலகம்
தூத்துக்குடி எஸ். பி அலுவலகம்

ஆய்வாளர் தில்லை நாகராஜனுக்கு, ஸ்டெர்லைட் ஆலை ஊழியர் குடியிருப்பில் வைத்து பிரியாவிடை விருந்து நிகழ்ச்சி நடந்தது என்கிறார்கள். இதில், தூத்துக்குடி வடக்கு, தெற்கு, மத்திய பாகம், தெர்மல்நகர் உள்ளிட்ட காவல் நிலையங்களின் ஆய்வாளர்கள் கலந்துகொண்டதாகவும், சம்பந்தப்பட்ட ஆய்வாளர்கள் மீது எஸ்.பி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வாட்ஸ்அப்களில் தகவல் வைரலாகப் பரவி வந்தது.

இந்த நிலையில், இத்தகவலின் அடிப்படையில் அதன் உண்மை அறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பினர் மாவட்ட எஸ்.பி-யிடம் மனு அளித்துள்ளனர். இக்கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தியிடம் பேசினோம்.

``சுற்றுச்சூழலுக்கும் உயிர்ச்சூழலுக்கும் பேராபத்தை ஏற்படுத்தி வரும் ஸ்டெர்லைட் நச்சாலையை தமிழக அரசு மூடியுள்ள நிலையில் கடந்தவாரம், இந்த ஆலை வளாகத்தில் உள்ள தாமிரா-1-ல் வைத்து ஆலை நிர்வாகம் சார்பில் பணிமாறுதலாகிச் சென்ற ஆய்வாளருக்கு பிரியாவிடை நிகழ்ச்சி ஒன்றை நடத்தியுள்ளது.

இதில், முக்கிய காவல் நிலையங்களின் ஆய்வாளர்கள் கலந்துகொண்டுள்ளனர். எஸ்.பி., அருண்பால கோபாலன் சம்பந்தப்பட்ட ஆய்வாளர்களிடம் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியுள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன. கடந்த மே 22-ம் தேதி ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் 13 அப்பாவிகளை சுட்டுவீழ்த்திய காவல்துறையினர் மீது மக்களின் ஆதங்கம் தீராத நிலை இருக்கிறது. இந்த நிலையில், அந்தக் கொடூரச் சம்பவத்துக்கு மூல காரணமான ஆலை நிர்வாகம் அளித்துள்ள விருந்தில் கலந்துகொண்டது பெரும் வலியை ஏற்படுத்தியுள்ளது. அரசின் கொள்கை முடிவுக்கு எதிராக அரசு பணியாளர்களாக பணிபுரிபவர்கள் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக செயல்பட முயல்வது தமிழக அரசுக்கு எதிரான சதிச் செயலாகவே பார்க்கப்பட வேண்டும்.

ஸ்டெர்லைட் எதிர்ப்ப்பு மக்கள் இயக்கத்தினர்
ஸ்டெர்லைட் எதிர்ப்ப்பு மக்கள் இயக்கத்தினர்

இச்சதிச் செயலில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகளின் செயல்பாடுகள் கண்டறியப்பட்டு பணிநீக்கம் உள்ளிட்ட குற்றவியல் சட்ட ரீதியிலான நடவடிக்கைகளை மாவட்ட காவல்துறை எடுக்க வேண்டும். இதில், மெத்தனப் போக்கு ஏற்பட்டால் காவல்துறையைக் கண்டித்து பெரிய அளவில் போராட்டத்தை நடத்துவோம்” என்றார். ஸ்டெர்லைட் ஆலை வழக்கு சம்பந்தமாக எஸ்.பி-யிடம் மனு அளிக்க வந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கத்தினரும், இப்புகாரில் இதே கருத்தையே கூறினர். இப்புகார் மனு தூத்துக்குடி மாவட்ட காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.