Published:Updated:

வேட்டையாடியிடமிருந்து இரை விலங்கைக் காப்பாற்றுவது சரியா, தவறா? ஓர் அலசல்

Lion ( Photo: Pixabay )

சில நாள்களுக்கு முன்னர் ட்விட்டரில் ஒரு காணொளிப் பதிவு வைரலானது. அந்தப் பதிவில், பந்திப்பூர் சாலையில் ஒரு மலைப்பாம்பு மான் ஒன்றை வேட்டையாடி, சாப்பிடுவதற்காக அதன் உடலை முற்றிலுமாக வளைத்துப் பிடித்து எலும்புகளை நொறுக்கிக் கொண்டிருக்கிறது.

வேட்டையாடியிடமிருந்து இரை விலங்கைக் காப்பாற்றுவது சரியா, தவறா? ஓர் அலசல்

சில நாள்களுக்கு முன்னர் ட்விட்டரில் ஒரு காணொளிப் பதிவு வைரலானது. அந்தப் பதிவில், பந்திப்பூர் சாலையில் ஒரு மலைப்பாம்பு மான் ஒன்றை வேட்டையாடி, சாப்பிடுவதற்காக அதன் உடலை முற்றிலுமாக வளைத்துப் பிடித்து எலும்புகளை நொறுக்கிக் கொண்டிருக்கிறது.

Published:Updated:
Lion ( Photo: Pixabay )

அந்த சாலையின் வழியே பயணித்துக் கொண்டிருந்த ஒருவர் அதைக் காணப் பொறுக்காமல், மான் மீது கரிசனம் கொண்டு மலைப்பாம்பிடமிருந்து அதைக் காப்பாற்றுகிறார்.

அவர் செய்தது சரியா, தவறா என்ற விவாதம் ட்விட்டரில் எழுந்தது. இதைப் பகிர்ந்துள்ள ஒருவர், ``பலரும் இதைத் தவறு என்று கூறலாம். ஆனால், அந்த மான் இருந்த இடத்தில் ஒரு மனிதர் இருந்திருந்தால் நீங்கள் உதவியிருப்பீர்களா இல்லையா!" என்ற கேள்வி எழுப்பியிருந்தார்.

உண்மைதான், ஒருவேளை மானுக்குப் பதிலாக மனிதன் சிக்கியிருந்தால் நிச்சயம் காப்பாற்றியிருப்போம். அதற்காக, மானைக் காப்பாற்றியது சரிதானென்று நம்மால் வாதிட முடியாது. அது நிச்சயமாகத் தவறுதான்.

``அட என்னப்பா நீ! அந்த இடத்துல மனுஷன் இருந்தா காப்பாத்தணும்-னு சொல்ற... மான் இருந்தா காப்பாத்தக் கூடாதுனு சொல்ற... மனுஷன் உசுரு அவ்ளோ ஒசத்தி, மான் உசுரு அவ்ளோ குறைவா உனக்கு. ரெண்டுமே உசுருதானே. அதையும் காப்பாத்துன என்ன தப்பு" என்று பலரும் காட்டமாக நீங்கள் கேட்கும் கேள்விகள் இப்போதே என் காதில் ஒலிக்கிறது.

மலைப்பாம்பு, புலி, சிறுத்தை போன்ற வேட்டையாடிச் சாப்பிடும் விலங்குகளிடமிருந்து எப்போது எந்தெந்த உயிர்களைக் காப்பாற்றலாம், எந்தெந்த உயிர்களைக் காப்பாற்ற முயலக்கூடாது என்று சில கட்டுப்பாடுகள் உள்ளன. இந்தக் கட்டுப்பாடுகள் உயிரியல் ரீதியாகவும் தத்துவார்த்தமாகவும் சில முரண்பாடுகளுக்கு உட்படுகின்றன. அறிவியலுக்கும் தத்துவவியலுக்கும் இடையிலுள்ள அந்த முரண்பாட்டைக் களைந்து ஒரு தெளிவுக்கு வருவதற்கே இந்தக் கட்டுரை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

`எதையெல்லாம் காப்பாற்றலாம், எதையெல்லாம் காப்பாற்றக் கூடாது?' என்ற கேள்விக்கான பதிலை முதலில் சொல்லிவிடுகிறேன். அடுத்ததாக ஒவ்வொன்றுக்குமான காரணத்தை விளக்குகின்றேன்.

மனிதர்கள் வளர்க்கின்ற கால்நடைகளையோ மனிதர்களையோ வேட்டையாடி விலங்குகள் வேட்டையாட முயன்றால், எப்பாடுபட்டாவது அவற்றிடமிருந்து மனிதர்களையும் கால்நடைகளையும் காப்பாற்ற முயற்சி செய்யலாம். அதைத் தவறு என்று சொல்லிவிட முடியாது. அதேநேரம், மான், காட்டுப்பன்றி போன்ற காட்டுயிர்களை வேட்டையாடும்போது அதை நிச்சயமாகத் தடுக்கக் கூடாது. அவற்றை வேட்டையாடிகளிடமிருந்து காப்பாற்றுவது மிகப் பெரும் தவறு. அப்படியென்றால், காட்டுயிர்களை மீட்பதே தவறான செயலா என்றால் இல்லை.

கால்நடை
கால்நடை
Wikimedia
அவை, மனிதச் செயல்களால் துன்பத்திற்கு ஆளாகும்போது, காயப்படும்போது அவற்றை மீட்டு குணப்படுத்தி காப்பாற்றலாம். ஆனால், வேட்டையாடப்படும் சூழலில் அவற்றைக் காப்பாற்றுகிறேன் பேர்வழியில் முயற்சி மேற்கொள்ளக் கூடாது.

இப்படியாக, சூழ்நிலையைப் பொறுத்து நம்முடைய அணுகுமுறையும் மாற வேண்டும். ஒருவருடைய கால்நடையோ வளர்ப்புப் பிராணியோ வேட்டையாடப்பட்டால் காப்பாற்றுவது தவறில்லை. உலகின் பல்வேறு பகுதிகளில் தம் வளர்ப்பு உயிரினங்களைக் காப்பாற்றத் தேவையான முயற்சிகளை மேற்கொள்வது சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக, அடிபட்ட அல்லது வயது முதிர்ந்த வேட்டையாடி விலங்குகளே அத்தகைய கால்நடை வேட்டைகளை மேற்கொள்ளும். அவற்றுடைய வேட்டைத் திறன் குறையும்போது, வேகம் குறையும்போது இப்படியான எளிமையான இரைகளை நோக்கிக் கவனம் திரும்புகின்றது. அவற்றிடம் கால்நடைகளை இழப்பதால் மனிதர்கள் பொருளாதார இழப்புகளுக்கு ஆளாகிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தங்கள் வாழ்வாதாரம் அதைச் சார்ந்து இருப்பதால் மனிதர்களால் அத்தகைய இழப்புகளைச் சமாளிக்க முடியாது. ஆகவே அந்தச் சூழ்நிலையில் வேட்டை விலங்குகளிடமிருந்து கால்நடைகளைக் காப்பற்றலாம். ஆனால், வேட்டையாடி இழுத்துச் செல்லப்ட்ட கால்நடைகளைத் தேடிச் சென்று அதன் சடலத்தில் விஷம் தடவி வைத்துவிட்டு வருவதன் மூலம் புலி போன்ற விலங்குகளைப் பலி வாங்குவது மிகவும் தவறான செயல். கடந்த ஏப்ரல் மாதமே ஆனைமலை பகுதியில் இரண்டு புலிகள் இதுபோன்ற விஷம் வைப்பால் கொல்லப்பட்டுள்ளன. அவை பன்றி மாமிசத்தில் விஷம் கலந்திருந்ததாகத் தெரியவந்துள்ளது. இதுபோன்ற எல்லைமீறல் இரண்டு புறத்திலும் இழப்புகளை அதிகரிக்கவே செய்யும்.

Raptor
Raptor
Photo: Pixabay

இரண்டாவதாக மனிதர்கள் மற்றும் காட்டுயிர்கள் தொடர்பானது. மனிதர்கள் மற்றும் காட்டுயிர்கள் குறித்த சில அடிப்படைகளை நாம் புரிந்துகொள்ள வேண்டும். பரிணாம வளர்ச்சியின் பாதையில் மனித இனம் சில மில்லியன் ஆண்டுகளே எடுத்துக் கொண்டது. பூமியில் 5.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர்தான் இரண்டு கால்களில் எழுந்து நடக்கத் தொடங்கினான். ஆனால், மான்கள் பரிணாம வளர்ச்சியடையவே 30 மில்லியன் ஆண்டுகள் எடுத்துக்கொண்டன. இன்றைய புலிகளின் மூதாதை 62 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே புவிமீது நடந்தது. நிலத்தின்மீது நடந்த பரிணாம வளர்ச்சியில், மிகக் குறைந்த வயதுள்ள விலங்கு மனிதன் மட்டும்தான். நம்மைவிட மற்ற அனைத்து உயிர்களுமே மூத்தவை. இருந்தும் அவற்றிடமிருந்து நாம் கடந்த சில ஆயிரம் ஆண்டுகளில் பிரிந்து, தனித்து வந்துவிட்டோம்.

ஆரம்பத்தில் காடுகளில் மற்ற விலங்குகளைப் போலவே, வேட்டையாடிக் கொண்டிருந்த விலங்குதான் மனிதன். அந்த நேரத்தில் காட்டுயிர் வேட்டையாடிகளுக்கு நாமும் ஓர் இரை விலங்கைப் போலவே உணவுச் சங்கியிலிருந்தோம். பின்னர் அதிலிருந்து வேறுபட்டு, நாம் நாகரிகம் என்ற பெயரில் தனித்து வாழத் தொடங்கிவிட்டோம். எப்போது காடுகளிலிருந்து பிரிந்து நமக்கெனத் தனி குடியிருப்பு அமைத்து, ஒரு சமூகமாக வாழத் தொடங்கிவிட்டோமோ, அப்போதே நாம் இயற்கையின் சங்கிலியிலிருந்து பிறழத் தொடங்கிவிட்டோம். இந்த நிலையில், தொடர்ந்து வளர்ந்த நாகரிகங்கள் மற்றும் `மனித' வளர்ச்சிகள் நம்மை முற்றிலுமாகவே இயற்கையின் சுழற்சியிலிருந்து பிறழ்ந்து நிற்க வைத்துள்ளது. இப்போது நமக்கும் காடுகளுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை.

Cheetah
Cheetah
Photo: Pixabay

காடுகள்தான் இயற்கையின் உறைவிடமாகப் பூமியில் உயிரோட்டம் தொடங்கியதிலிருந்து இருந்துவருகிறது. அதில், பாலைவனக் காடுகள், புல்வெளிக் காடுகள், வெப்பமண்டல மழைக்காடுகள் என்று பல்வேறு வகைகள் உள்ளன. அவையனைத்துமே இயற்கையின் செயல்பாட்டில் முக்கியமானவை. ஒவ்வொரு நிலவியலின் பங்கும் ஒவ்வொரு நிலவியலில் வாழும் ஒவ்வொரு வகையான உயிரினத்தின் பங்குமே முக்கியமானது. இயற்கையினுடைய சுழற்சியில் அனைத்துக்குமே தொடர்புண்டு. சிறிய பூச்சியைச் சாப்பிடும் பாறைப்பல்லியில் தொடங்கி, தாவரங்களைச் சாப்பிடும் மான்களை வேட்டையாடும் சிறுத்தை, புலி ஆகியவை வரை அனைத்துமே இயற்கையின் உணவுச் சங்கிலியில் உள்ளன. ஒருகட்டத்தில் காடுகளிலிருந்து பிரிந்து வந்த மனிதன், இந்தச் சங்கிலியிலிருந்து விலக்கப்பட்டுவிட்டான். ஆகவே, அந்த உணவுச் சங்கிலிக்கும் நமக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை.

அதேபோலத்தான் கால்நடைகள், வளர்ப்புப் பிராணிகளும். நம்முடைய தேவைகளுக்காகச் சில உயிரினங்களைப் பழக்கப்படுத்தி அவற்றையும் நம்முடனே காடுகளிலிருந்து வெளியே கொண்டுவந்துவிட்டோம். அவை உணவுச் சங்கிலியிலிருந்து முற்றிலுமாக விடுபட்டுவிடவில்லை எனினும், அந்தச் சங்கிலியிலுள்ள கடைசி வாய்ப்பாக வேட்டையாடிகள் மத்தியில் திகழ்கின்றன. ஆகவே, ஒருவிதத்தில் அவையும் நம்மைப் போலவேதான். ஆனால், மற்ற உயிரினங்கள் அப்படியல்ல. அவை இன்றளவும் காடுகளின் ஒரு பகுதியாகவே வாழ்கின்றன. அவற்றின் பிறப்பும் இறப்பும் காட்டின் சமநிலையைப் பராமரிப்பதன் ஒருபகுதியாகவே இருக்கின்றன. நாம் பள்ளிப்படிப்பின்போது, தாவரங்கள் சூரிய ஒளியில் உணவு சமைத்து வாழ்கின்றன, அவற்றை மான்கள் சாப்பிடுகின்றன, மான்களைப் புலிகள் வேட்டையாடுகின்றன என்று படித்திருப்போம். அந்த மான்கள் புலிகளுக்கு மட்டுமில்லை, சிறுத்தை, செந்நாய், மலைப்பாம்பு ஆகிய பல்வேறு வேட்டையாடிகளுக்கு உணவாக அமைகின்றது.

Deer
Deer
PxFuel

மான்களின் வேகத்திற்கு ஈடுகொடுத்து வேட்டையாட, அவை பெரும் பிரயத்தனம் எடுக்க வேண்டும். சில நேரங்களில் ஒன்றிரண்டு வாரங்களுக்குக்கூட இரை விலங்கை வேட்டையாடவே முடியாமல் அவை பசியில் வாடியிருக்க நேரலாம். மேற்கண்ட ட்விட்டர் பதிவிலுள்ள காணொலியில் அந்த மனிதர் மலைப்பாம்பிடமிருந்து மானைக் காப்பாற்றப் போராடுகிறார். அந்தப் போராட்டம் வீணானது. அந்த மலைப்பாம்பு கடந்த சில நாள்களுக்கோ ஏன் சில வாரங்களுக்கோ கூட இரை எதுவும் கிடைக்காமல் பசித்திருக்கலாம். அந்த மானை வேட்டையாடியதே அது உயிர்பிழைத்திருக்க, பசியாற்றிக் கொள்ளக் கிடைத்த கடைசி வாய்ப்பாக இருக்கலாம். அந்த வாய்ப்பில் தன் உடலின் முழு ஆற்றலையும் பயன்படுத்தி வெற்றியடைந்திருக்கலாம். அப்படியிருக்க, அது சிரமப்பட்டு, உழைத்துச் சம்பாதித்த உணவைச் சங்கடமே படாமல் பிடுங்குவது எந்தவிதத்தில் நியாயமாகும்.

இரண்டுமே உயிர்வாழ்வதற்கான போராட்டத்தில் ஈடுபடுகின்றன. அதனால்தான், டார்வின் `வலியன பிழைக்கும்' என்று குறிப்பிட்டார். இந்தச் சுழற்சி முறையிலிருந்து மனிதன் விலகி வந்து சில ஆயிரம் வருடங்கள் கடந்துவிட்டன. அதற்காக, நாம் மற்ற உயிரினங்களையும் அப்படியே பார்க்க வேண்டும் என்பது தவறான அணுகுமுறை.

இதுபோன்ற வேட்டையாடிகளிடம் மனிதர்கள் சிக்கினால் காப்பாற்றுவதற்குக் காரணம் சமூக அக்கறை. நம்முடைய சமுதாயக் கட்டமைப்பின் குழந்தையே அந்த உணர்வு. அதை விலங்குகள் மத்தியிலும் கையாளக் கூடாது என்று கூறுவதற்குக் காரணம் அணுகுமுறை. உயிரியலும் சமூகவியலும் சமநிலையில் பேணப்பட வேண்டியது காடும் நாடும் பாதுகாப்பாக இருப்பதற்கு மிகவும் அவசியமானது. அதற்கு, நாம் காடு சார்ந்த செயல்பாடுகளில் தலையிடாமல் விலகியிருப்பதே, இயற்கைக்குச் செய்கின்ற பேருதவியாக இருக்கும்.

Deer
Deer
Photo: Pixabay

கொறி உயிரினங்களை வேட்டையாடுகின்ற காட்டுப்பூனை தொடங்கி காட்டுமாடுகளையே வேட்டையாடும் திறனுடைய புலிகள் வரை இதுதான் இயல்பு. பூமியிலுள்ள உயிரினங்களை மனிதனே காப்பாற்றுகிறான் என்று ஓர் இருமாப்பு நம்மிடம் இருக்கத்தான் செய்கின்றது. அதை மறுக்க இயலாது. நாம் இல்லையென்றால், இந்த மான் என்னவாகும், நாம் உணவூட்டவில்லையெனில் இந்தக் காட்டுமாடு என்னவாகும் என்று நாம்தான் அவற்றைப் பாதுகாப்பது போன்ற மனநிலைக்கு நாம் ஆட்பட்டுவிடுகிறோம். உண்மையில், அவை சந்திக்கும் இன்னல்களுக்குக் காரணமே நாம்தான். நாம் இல்லையென்றால் அவற்றின் வாழ்வு செழிப்பாகவே இருக்கும். அதையுணர்ந்து அவற்றின் வாழ்வியலில் ஊடுருவ வேண்டாம் என்பதே ஆய்வாளர்களின் கருத்து.

ஆம், மனிதனோ மானோ இரண்டுடைய உயிருமே உன்னதமானதுதான். உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் மான்கள் நம்மைவிட உன்னதமானவை. இருப்பினும், புலியிடமிருந்து அதைக் காப்பாற்றுவதன் மூலம் இயற்கையின் சுழற்சியைக் குலைப்பதை அதை வைத்து நியாயப்படுத்திவிட முடியாது.

இந்த விஷயத்தில் உங்களுக்கு ஏதேனும் கருத்துகள் இருப்பின் கமென்ட்களில் பதிவுசெய்யுங்கள்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism