Published:Updated:

"அடுத்து, மனிதனை விண்ணுக்கு அனுப்பும் `ககன்யான்' திட்டம் தயாரிப்பு!"– மகேந்திரகிரி இஸ்ரோ தலைவர் தகவல்

இ.கார்த்திகேயன்

'ககன்யான்' எனப்படும் மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் அடுத்தகட்ட திட்டத்திற்காக, இயந்திர வடிவமைப்புக்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருவதாக, மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தின் இயக்குநர் மூக்கையா தெரிவித்துள்ளார்.

மகேந்திரகிரி இஸ்ரோ தலைவர் மூக்கையா
மகேந்திரகிரி இஸ்ரோ தலைவர் மூக்கையா

'ககன்யான்' எனப்படும் மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் அடுத்த புராஜெக்ட்டுக்காக இயந்திர வடிவமைப்புத் திட்டங்கள் தயாரிக்கப்பட்டுவருவதாக, மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தின் இயக்குநர் மூக்கையா தெரிவித்துள்ளார்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையமான இஸ்ரோ, நேற்று சந்திரயான்-2 செயற்கைக்கோளை விண்ணில் வெற்றிகரமாக செலுத்தியது. இதற்கான திட்டப் பணியில் ஈடுபட்டிருந்த நெல்லை மாவட்டம் மகேந்திரகிரி இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மைய திட்ட இயக்குநர் மூக்கையா, சென்னையிலிருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தார்.

பேட்டியளிக்கும் மகேந்திரகிரி இஸ்ரோ தலைவர் 
 மூக்கையா
பேட்டியளிக்கும் மகேந்திரகிரி இஸ்ரோ தலைவர் மூக்கையா

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”சந்திரயான்-2 செயற்கைக்கோளை விண்ணில் ஏவ ஏற்கெனவே திட்டமிட்டிருந்த நேரத்தில், கடைசி கட்டத்தில் தொழில்நுட்பக் கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதால், விண்ணில் ஏவப்படுவது தள்ளிவைக்கப்பட்டது. கோளாறு சரிசெய்யப்பட்டு, நேற்று சந்திரயான்-2 செயற்கைக்கோள் மீண்டும் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டுள்ளது.

சந்திரயான்-2 செயற்கைக்கோள், மூன்று நிலைகளில் தனது ஆய்வை மேற்கொள்ளும். முதல் நிலையான ஆர்பிட்டரில் இருந்து லேண்டர் எனும் நிலை தனியே பிரிந்து, வரும் செப்டம்பர் 7-ம் தேதி அதிகாலை 2.43 மணிக்கு நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கும்.

அதனைத் தொடர்ந்து, அதிலிருந்து ரோவரானது தனியே பிரிந்து, நிலவில் 500 மீட்டர் பரப்பளவில் ஆய்வை மேற்கொள்ளும். லேண்டர் பகுதி, நிலவின் தென் துருவத்தில் தரை இறங்கியதும் பெங்களூருவில் உள்ள விண்வெளி ஆய்வு மையத்திற்கு சமிக்ஞை அனுப்பும். அதனைத் தொடர்ந்து, நிலவுப் பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்படும்.

சந்திரயான் -2 செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்படுவதற்காக, எல்-100 மற்றும் சி-25 ஆகிய நிலையிலான இயந்திர வடிவமைப்பில் மகேந்திரகிரி இஸ்ரோ ஈடுபட்டது. இதற்கு முன்பு, நிலவுக்கு அனுப்பப்பட்ட சந்திரயான்-1 செயற்கைகோள், 170/45 ஆயிரம் கிலோ மீட்டர் சுற்றளவில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால், சந்திரயான்-2 செயற்கைக்கோள் நிர்ணயிக்கப்பட்ட இலக்கைக் காட்டிலும் 6 ஆயிரம் கிலோ மீட்டர் அதிகமான தூரத்தில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. மகேந்திரகிரி இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையத்தில், ராக்கெட் விண்ணில் செலுத்துவதற்கான எரிபொருள் தயாரிப்புப் பணி தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.

சந்திரயான் - 2 செயற்கைகோள்
சந்திரயான் - 2 செயற்கைகோள்

வருங்காலத்தில், பி.எஸ்.எல்.வி, ஜி.எஸ்.எல்.வி மற்றும் ஜி.எஸ்.எல்.வி மார்க்-3 உள்ளிட்ட மூன்று இன்ஜின்களைக் கொண்டு செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட உள்ளன. வரும் செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதங்களில் பி.எஸ்.எல்.வி, ஜி.எஸ்.எல்.வி செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படும் என்ற நம்பிக்கை உள்ளது.

அடுத்த கட்டமாக, மனிதனை விண்வெளிக்கு அனுப்பி ஆராய்ச்சி மேற்கொள்ளும் திட்டமான, 'ககன்யான்' திட்டத்தை மேற்கொள்ளும் பணியில் விண்வெளி ஆராய்ச்சி மையம் ஈடுபட உள்ளது. இதற்காக, இயந்திரம் வடிவமைப்பு மற்றும் எரிபொருள் நிரப்புவதற்கான திட்டங்களையும் மகேந்திரகிரி மையம் மேற்கொண்டுவருகிறது” என்றார்.