Published:Updated:

Kame Gowda: 16 ஏரி, குளங்களை வெட்டிய ஆடு மேய்க்கும் தொழிலாளி... வியக்கவைத்த `லேக்மேன்’!

தன் வாழ்நாளில் இதுவரை 16 குளங்களை சொந்த செலவில் வெட்டிய `லேக்மேன்’ காமேகவுடாவுக்கு கர்நாடக பேருந்து போக்குவரத்து கழகமானது வாழ்நாள் முழுவதும் இலவசமாக பேருந்தில் பயணிக்க இலவச பாஸ் வழங்கியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

இந்தியா முழுவதும் ஏராளமான நீர் நிலைகள், ஏரி, குளங்கள் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கி சீரழிந்து கிடக்கின்றன. தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடும் இந்தக் காலக்கட்டத்தில் அரசுகள் நீர்நிலைகளுக்காக ஒதுக்கும் நிதிகள் அனைத்தும் விழலுக்கு இறைத்த நீராகிக்கொண்டிருக்கின்றன. சுதந்திரத்துக்குப் பிறகு இந்தியாவில் புதிதாக உருவாக்கப்பட்ட நீர்நிலைகளின் எண்ணிக்கையைக் கணக்கிட்டோமானால் ஏமாற்றமே மிஞ்சும். நீர் நிலைகளின் மேல் அரசு அமைப்புகளே அக்கறை காட்டாத சூழலில் ஒர் தனி மனிதன், அதுவும், கடும் ஏழ்மையில் தவிக்கும் ஒருவர், 16 நீர் நிலைகளை உருவாக்கியிருக்கிறார் என்பது வியப்பு. அந்த மாமனிதர் பெயர் காமேகவுடா.

யார் இந்த காமேகவுடா?

கர்நாடக மாநிலம், மாண்டியா மாவட்டம், மாலவல்லி தாலுகாவில் தாசனதொட்டியைச் சேர்ந்தவர் காமேகவுடா. 82 வயதான இவர் ஆடு மேய்க்கும் பணி செய்து வருகிறார். அப்பகுதியில் கடந்த 40 ஆண்டுகளாக தரிசு நிலங்களிலும், அதையொட்டி அமைந்துள்ள கரடு மலையடிவாரங்களிலும் ஏரி, குளங்களை வெட்டி, மழைநீரை சேமிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

காமேகவுடா
காமேகவுடா
Photo: Twitter

குளங்கள், ஏரிகள், கால்வாய்கள், கண்மாய்கள் என இருந்த நீர் ஆதாரங்கள் எல்லாம் அழிந்து வரும் சூழலில், தனிஒருவராக தனது குடும்பத்தினர், உறவினர்கள் எதிர்ப்புகளை மீறி இயற்கையை நேசித்து குளங்களை வெட்டியிருக்கிறார். இவர் வெட்டிய குளங்களில் தேங்கியிருக்கும் மழைநீர், கால்நடைகள், வனவிலங்குகள் என பலவற்றின் தாகத்தை தணித்துக்கொண்டிருக்கிறது. இதுதவிர, மழைநீர் சேமிப்பின் மூலம் அப்பகுதியின் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து, வறட்சி நீங்கி பாசனம் பெருகியிருக்கிறது. கடந்த 2018-ம் ஆண்டு இவரது சாதனையையும், சேவை மனப்பான்மையையும் பாராட்டி அவரை கவுரவிக்கும் விதமாக கர்நாடக அரசு மாநிலத்தின் மிக உயரிய விருதுகளின் ஒன்றான `கர்நாடக ரஜோட்சவா’ என்ற விருதை வழங்கி கௌரவித்தது.

வறுமையில் வாடினாலும், தன்னுடைய சொந்த செலவில் 40 ஆண்டுகளாக 14 குளங்களை வெட்டியிருக்கிறார். அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ள விருதோடு 1 லட்சம் ரூபாய் பணம் மற்றும் 25 கிராம் தங்கமும் வழங்கப்பட்டது. அதை வாங்கிய காமேகவுடா அந்த பணத்தைக்கொண்டு மேலும் இரண்டு குளங்களை வெட்டியிருக்கிறார்.

இவர் ஏற்கனவே, கர்நாடகத்தின் இன்னொரு உயரிய விருதான `பசாவாஸ்ரி’ என்னும் விருதும் பெற்றுள்ளார். அப்போது கிடைத்த பணத்தையும், ஏரி குளங்களை தூர்வாரும் பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்தியிருக்கிறார். சில நாட்களுக்கு முன்னர், மத்திய ஜல் சக்தி துறை அமைச்சரிடம் இவர் ``அனைத்து ஏரி குளங்களையும் ஒன்றிணைத்து நீர்நிலைகளை காக்க வேண்டும்" என வேண்டுகோள் வைத்திருக்கிறார். இவரது இந்த சேவை மனப்பான்மை காரணமாக இவரை `லேக் மேன்’ என அனைவரும் அழைக்கின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கடந்த ஜூன் 28-ம் தேதி இதுகுறித்து வானொலியில் `மனதின் குரல்' நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ``காமேகவுடாவின் தன்னலமற்ற இந்த சேவையை பாராட்டுகிறேன். காமேகவுடா 16 குளங்களை வெட்டி மழைநீரை சேமிப்பதற்காக தன்னுடைய முழு உழைப்பையும் வழங்கி, அந்த ஏரி, குளங்களை நாட்டுக்காக அர்ப்பணித்திருக்கிறார். காலத்தே செய்த அவரது இந்தப்பணி மிகவும் பாராட்டப்பட வேண்டியது" என்றார்.

இதுபோக காமேகவுடாவுக்கு பக்கத்து மாவட்டங்களில் உள்ள கோயில்களை சென்று தரிசிக்க வேண்டும் என்ற ஆசை இருந்திருக்கிறது. பிரதமர் மோடியே புகழ்ந்து பேசும் வகையில் சேவையாற்றியதற்காகவும், இவரது ஆசையை நிறைவேற்றும் வகையிலும், கர்நாடக பேருந்து போக்குவரத்து கழகமானது இவருக்கு இலவச பாஸ் வழங்கியுள்ளது. இவர் தனது வாழ்நாள் முழுவதும், கர்நாடக மாநிலத்தில் எங்கே வேண்டுமென்றாலும் எந்தவிதமான கட்டணமின்றி எந்த பேருந்திலும் எந்த வகுப்பிலும் இலவசமாக பயணிக்கலாம். இதன் மூலம் காமேகவுடாவின் அண்டை மாவட்ட கோயில் பயணம் விரைவில் நிறைவேறும்.

ஏரி மனிதனுக்கு வாழ்த்துக்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு