Published:Updated:

100 கேமராக்கள்; 6 கும்கிகள்!- `ஆட்கொல்லி' புலியைப் பிடிக்க தீவிரம் காட்டும் வனத்துறை

கடந்த இரண்டு மாதங்களில் இரண்டு பேரைக் கொன்று, பல மாடுகளை வேட்டையாடியதாகச் சொல்லப்படும் புலியைத் தேடும் பணியில் 6 கும்கி யானைகள் வனத்துக்குள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

man eater tiger
man eater tiger

கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் மாவட்டம், பந்திப்பூர் புலிகள் காப்பகம் அருகில் உள்ள மங்களா பகுதியில், கடந்த நான்கு நாள்களாகப் புலி ஒன்றை ஒட்டுமொத்த கர்நாடக வனத்துறையும் தேடிவருகிறது.

கடந்த இரண்டு மாதங்களில் இரண்டு பேரைக் கொன்று, பல மாடுகளை வேட்டையாடியதாகச் சொல்லப்படும் புலியைத் தேடும் பணியில் 6 கும்கி யானைகள் வனத்துக்குள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. அதேபோல், புலியை மயக்கஊசி செலுத்திப் பிடிக்க 6 கால்நடை மருத்துவக் குழுவினரும் களம் இறங்கியுள்ளனர். மேலும், இருநூற்றுக்கும் அதிகமான வனத்துறை ஊழியர்கள் தொடர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுவருகின்றனர்.

man eater tiger combing operation
man eater tiger combing operation

அதுமட்டுமின்றி, வனத்தை ஒட்டிய பகுதிகளில் சுமார் 100 தானியங்கி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. புலிகள் குறித்த நிபுணர்கள், ஆய்வாளர்கள் வரவழைக்கப்பட்டு கால்தடம், நடமாட்டம் போன்றவற்றைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

புலியை சுட்டுப்பிடிக்க கர்நாடக வனத்துறை முனைப்பு காட்டிவந்த நிலையில், பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் வலுத்தன. இதனால் மயக்க ஊசி செலுத்தி உயிருடன் பிடிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, தேடுதல் வேட்டை தீவிரமாக்கப்பட்டுள்ளது.

man eater tiger combing operation
man eater tiger combing operation

இந்த நிலையில், சவுதஹள்ளி கிராமத்தை ஒட்டிய வனப் பகுதிகளில் மூன்று புலிகளின் நடமாட்டம் இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் மனிதர்களைத் தாக்கும் புலி எது என்பதை உறுதிசெய்ய முடியாமல் திணறிவருகின்றனர்.

இதுகுறித்து பந்திப்பூர் புலிகள் காப்பக வனத்துறை அதிகாரி ஒருவர் நம்மிடம் பேசும்போது, "கால்தடம் மற்றும் கேமரா பதிவு மூலம் இந்தப் பகுதியில் மூன்று புலிகளின் நடமாட்டம் இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. கடந்த 8-ம் தேதி, சிவலிங்கப்பா என்பவரைத் தாக்கிக் கொன்ற புலியை தூரத்தில் மட்டுமே பார்க்க முடிந்தது.

man eater tiger combing operation
man eater tiger combing operation

இதனால், குறிப்பிட்ட புலியின் படங்கள் ஏதும் தெளிவாக இல்லை. இருந்தும் அவற்றின் உடலில் உள்ள கோடுகளின் அடிப்படையில் கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டுவருகிறோம்" என்றார்.