பொதுவாக வீடுகளில் மனிதக் கழிவுகளை செப்டிக் டேங்கில் சேகரித்து, அது நிறைந்ததும் குளங்களிலும் குட்டைகளிலும் கொட்டுவதுதான் நடைமுறையில் உள்ளது. ஆனால், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கருங்குழி பேரூராட்சியில் வீடுகளிலிருந்து வெளியேற்றப்படும் மனிதக் கழிவுகளை கசடு மேலாண்மை செய்து உரமாகவும், பாசன நீராகவும் பயன்படுத்துகின்றனர்.இதுகுறித்துக் கழிவு மேலாண்மைப் பணியில் ஈடுபட்டு வரும் கருங்குழி பேரூராட்சி செயல் அலுவலர் கேசவனிடம் பேசினோம்.

‘‘கழிவு மேலாண்மை திட்டமானது 2017-ம் ஆண்டு கருங்குழியில் தொடங்கப்பட்டது. தமிழ்நாட்டில் இரண்டு இடங்களில் (கருங்குழி மற்றும் கோயம்புத்தூரில் உள்ள பெரியநாயக்கன்பாளையம்) மட்டுமே கசடு கழிவு மேலாண்மை திட்டம் நடைமுறையில் உள்ளது. கருங்குழி மற்றும் மதுராந்தகத்தில் உள்ள வீடுகளில் வெளியேறும் கழிவுகள் சேமிக்கப்படுகின்றன. இப்படிச் சேமிக்கப்பட்ட கழிவுகளை இங்குள்ள தொட்டிகளில் செலுத்துவார்கள். தொட்டிகளில் சேமிக்கப்படுவதற்கு முன்பே ‘ஸ்கிரீனிங் சேம்பர்’ (Screening Chamber) மூலம் கழிவு நீரில் உள்ள நாப்கின், ஷாம்பு பாக்கெட், போன்றவை வடிகட்டப்படும். பிறகு, கழிவு நீர்த் தொட்டிகளில் சேமிக்கப் படும். இந்தத் தொட்டியில் சுமார் 23,000 லிட்டர் சேமிக்கலாம். இப்படிச் சேமிக்கப் பட்ட கழிவுகள் 12 முதல் 20 நாள்கள்வரை உலர வைக்கப்படும். சோலார் கூரையில் (Solar Roof) உள்ளிருக்கும் தொட்டிகளில் 12 நாள்களிலேயே கழிவு நீர் உலர்ந்துவிடும். சோலார் கூரை பெங்களூருவைச் சேர்ந்த ஒருவரால் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. இதன் மதிப்பு 50 லட்சம் ரூபாய். இந்த முறையைப் பயன்படுத்த தொடங்கி மூன்று மாதங்கள் ஆகின்றன.

கழிவுநீர் தனியாகப் பிரிக்கப்பட்டு சுத்தம் செய்யப்படுகிறது. கழிவு நீர் நிலத்தடியில் செல்லாமல் தடுப்பதற்குக் கழிவு நீர் செல்லும் வழிநெடுகிலும் கீழே கூழாங்கற்களால் நிரப்பப்பட்டுக் கல்வாழை நடவு செய்திருக்கிறோம். கழிவு நீரில் உள்ள கழிவுகளைக் கல்வாழைச்செடி உறிஞ்சும். அதன் பிறகு, ஒரு பெரிய தொட்டியில் இந்த நீர் சேமிக்கப்பட்டு வெயிலில் உலர வைக்கப்படும். வெயில் படும்போது நீரில் உள்ள கிருமிகள் இறந்து விடும்.

பிளாக் வாட்டர் (Black Water) இயற்கை முறையில் கிரே வாட்டர் (Grey Water) ஆக மாற்றப்படும். அந்த நீரைத் தீவனப்புல் வளர்ப்பதற்கும் செடிகள் வளர்ப்பதற்கும் பயன்படுத்துகிறார்கள். இந்த நீரை ஆர்.ஓ (RO) மூலம் சுத்திகரித்துக் குடிக்கவும் செய்யலாம். ஆனால், மக்கள் தயங்குகிறார்கள். அதேபோல் தொட்டியில் சேமிக்கப்படும் கசடுகள் உரமாக்கப்படுகின்றன. கசடால் உருவாக்கப்பட்ட உரத்துடன் மட்கும் குப்பையால் கிடைக்கப்பெறும் உரத்தையும் சேர்த்தால் ஊட்டமேற்றிய தொழுஉரம் தயாராகிவிடும். இந்த உரம் செடிகளுக்குப் பயன்படும்.

இங்கு வளரக்கூடிய புற்கள் வெட்ட வெட்ட வளரக்கூடியவை. காய்கறிகள் வளர்க்கப்பட்டாலும் அதை உண்பதற்கு மக்கள் தயங்குகிறார்கள். தீவனப்புற்கள் மாட்டுக்குத் தீவனமாகப் பயன்படுகிறது. காய்கறிகளை உண்பதற்குத் தகுதியானவை என்று வல்லுநர்களிடம் சான்றிதழ் வாங்கும் முயற்சியில் உள்ளோம். அதன் பிறகு, மக்கள் உண்பதற்கு வாய்ப்பிருக்கிறது’’ என்ற கேசவன், கசடு கழிவு மேலாண்மையில் உள்ள சவால்கள் குறித்துப் பேசினார்.

‘‘இந்த மேலாண்மை திட்டத்தைத் தொடங்கும்போது மட்டுமே அரசு இதற்கெனத் தனி நிதி ஒதுக்கியது. இதைத் தொடர்ந்து செயல்படுத்த பேரூராட்சி நிதியைச் செலவிடுகிறோம். இதில் வரும் வருமானம் செலவுக்கே சரியாகிவிடும். வேலையாட்களுக்குச் சம்பளம், இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை தொட்டியில் உள்ள மண் மாற்றுவது எனச் செலவுகளைச் சமாளிப்பது கடினமாக உள்ளது. இதற்காக அரசு, நிதி ஒதுக்கீடு செய்து தர வேண்டும்.

ஒன்றிய அரசின் ஸ்வாச் பாரத் (Swachh Bharat) திட்டத்தில் ஒரு லட்சம் வரை மக்களுள்ள பகுதிகளில் கசடு கழிவு மேலாண்மை திட்டத்தைச் செயல்படுத்தலாம். சென்னை போன்ற மாநகரில் இது சாத்தியமா என்றால் கேள்விக்குறிதான். சென்னையில் மக்கள் தொகை அதிகமாக உள்ளது. அதற்கேற்றவாறு மனிதக் கழிவுகளை மேலாண்மை செய்ய பெரிய அளவில் இடமும், முதலீடும் தேவைப்படும். அவை கிடைத்தால் சென்னையிலும் கருங்குழி போல கசடு கழிவு மேலாண்மையைச் செயல்படுத்தலாம்’’ என்று சொல்லி முடித்தார் கேசவன்.
கசடு கழிவு மேலாண்மை திட்டத்தைத் தமிழகமெங்கும் பெரிய அளவில் செயல்படுத்தினால் கழிவுகள் நீர்நிலைகளில் கொட்டப்படுவதைத் தடுக்கலாம். பெரும்பான்மையான நீர்நிலைகள் காப்பாற்றப்படும்.
தொடர்புக்கு, கேசவன்,
செல்போன்: 95247 43526