Published:Updated:

அமராவதி ஆற்றில் சாயக்கழிவு கலப்பு விவகாரம்: 3-வது முறையாக ஆய்வு மேற்கொண்ட பசுமை தீர்ப்பாயக்குழு!

'மேக்னாவுக்கு இந்தி, ஆங்கிலம் மட்டும் தெரியும் என்பதால், தமிழ் தெரியாத அதிகாரியை அனுப்பி ஆய்வு செய்யச் சொல்வது தவறு. இதனால், ஆய்வு முறையாக நடக்காது' என்று சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.

கரூர் அமராவதி ஆற்றில் சாயக்கழிவும், நகராட்சிக் கழிவுநீரும் கலப்பது குறித்து, தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயக்குழு மூன்றாவது முறையாக ஆய்வு செய்திருக்கிறது.

அமராவதி ஆற்றில் சோதனை
அமராவதி ஆற்றில் சோதனை
`தேர்தல் புறக்கணிப்பு' அறிவித்த கிராம மக்கள்; படையெடுத்த அதிகாரிகள்; தொடங்கப்பட்ட பணிகள்!

கரூர் நகரின் வழியாகச் செல்லும் அமராவதி ஆறு, திருப்பூர் மாவட்டத்திலுள்ள அமராவதி அணையிலிருந்து தொடங்கி, கரூர் மாவட்டம், திருமுக்கூடலூரிலுள்ள காவிரியில் கலக்கிறது. இந்தநிலையில், அமராவதிக் கரைகளில் இருந்த சாயப்பட்டறை ஆலைக் கழிவுகளால், இந்த ஆறு விஷமானது. நிலத்தடி நீரும் கெட்டுப்போனது என்ற குற்றச்சாட்டு நெடுங்காலமாக இருக்கிறது. இதனால், விவசாயிகள் வழக்கு தொடர்ந்ததையடுத்து, 15 வருடங்களுக்கு முன்பு நூற்றுக்கணக்கான சாயப்பட்டறைகள் இழுத்து மூடப்பட்டன. ஆனால் தற்போதும், 60-க்கும் மேற்பட்ட சாயப்பட்டறைகள் இயங்கிவருகின்றன. இந்தநிலையில், மறுபடியும் அமராவதி ஆற்றில் சாயக்கழிவை ஆலைகள் திறந்துவிடுவதாகத் தொடர் குற்றச்சாட்டு எழுந்தது.

 ஆய்வு மேற்கொள்ளும் மேக்னா
ஆய்வு மேற்கொள்ளும் மேக்னா

அதனால், கரூர் அமராவதி ஆறு, கிளை வாய்க்கால்களில் சாயக்கழிவும், கரூர் நகராட்சிக் கழிவுநீரும் கலப்பது தொடர்பாக ஊடகங்களில் வெளியான செய்தியை அடுத்து, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் ஆகியவை சுமோட்டாவாக இந்த விவகாரத்தை விசாரணைக்கு எடுத்தன. தொடர்ந்து, தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் அனைத்துத்துறையினர் அடங்கிய குழுவை அமைத்து அமராவதி ஆறு, கிளை வாய்க்கால்கள், சாயக்கழிவு, கரூர் நகராட்சிக் கழிவுநீர், திடக்கழிவுகள் கலப்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதையடுத்து, கடந்த பிப்ரவரி மாதம் 11, 12-ம் தேதிகளில் ஆய்வுசெய்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கையில் நீதிமன்றம் திருப்தி அடையாததால், கடந்த ஜூன் மாதம் மாசு கட்டுப்பாடு வாரியம் சாயப்பட்டறைகளில் மட்டுமே தனியே ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்தது. நகராட்சிக் கழிவுநீர், திடக்கழிவுகள் அமராவதி ஆற்றில் கலப்பது குறித்து மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம், தமிழக மாசு கட்டுப்பாடு வாரியம், பொதுப்பணித்துறை மறு ஆய்வு செய்து, ஆகஸ்ட் 18-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து, கடந்த ஜூலை 22-ம் தேதி மறு ஆய்வு நடைபெற்றது. அதன் பிறகு, தென்னிந்திய பசுமைத் தீர்ப்பாயம் மூன்றாவது முறையாக கரூர் அமராவதி ஆற்றில் நேற்று ஆய்வு மேற்கொண்டது.

ஆய்வு மேற்கொள்ளும் மேக்னா
ஆய்வு மேற்கொள்ளும் மேக்னா

மத்திய மாசு கட்டுப்பாடு வாரிய விஞ்ஞானிகள் மேக்னா, கார்த்திகேயன், மாசு கட்டுப்பாடு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ரவிச்சந்திரன், அமராவதி ஆறு நீர்வள ஆதாரத்துறை செயற்பொறியாளர் முருகேசன், நகராட்சிப் பொறியாளர் நக்கீரன் அடங்கிய குழுவினர் இந்த ஆய்வில் கலந்துகொண்டனர். அவர்கள், கரூர் அமராவதி ஆற்றின் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வுக்குப் பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய, மத்திய மாசு கட்டுப்பாடு வாரிய விஞ்ஞானி மேக்னா, "தென்னிந்திய தேசிய பசுமைத் தீர்ப்பாயம் சார்பிலான குழு அமராவதி ஆற்றில் இரு நாள்கள் ஆய்வைத் தொடங்கியிருக்கிறோம். கடந்த இரு முறை நடந்த ஆய்வுகளின்போது விடுபட்ட சில தகவல்களை சேகரிப்பதற்காக, தற்போது ஆய்வு மேற்கொள்ளப்பட்டுவருகிறது. கரூர் நகருக்குள் அமராவதி ஆறு வருவதற்கு முன்புள்ள செட்டிப்பாளையம், அமவராதி கதவணை தொடங்கி நகரில் அமராவதி செல்லும் பகுதிகளிலிருந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. அப்படி, ஆறு இடங்களில் நீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. அமராவதி ஆற்றங்கரையில் உள்ள 11 தொழிற்சாலைகளின் கழிவுநீர், திடக்கழிவு எதுவும் அமராவதி ஆற்றில் கலக்கவில்லை.

பேட்டியளிக்கும் மேக்னா
பேட்டியளிக்கும் மேக்னா

ஆய்வை முடித்து, ஆய்வறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்வோம். ஆய்வு முறையாக நடத்தப்படுகிறது. அக்டோபர் 22-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்வோம்" என்றார். ஆனால், `மேக்னாவுக்கு இந்தி, ஆங்கிலம் மட்டும் தெரியும் என்பதால், தமிழ் தெரியாத அதிகாரியை அனுப்பி ஆய்வு செய்யச் சொல்வது தவறு. இதனால், ஆய்வு முறையாக நடக்காது' என்று சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு