Published:Updated:

கரூர்: ''5,000 பனை நட்டாச்சு, ஒரு லட்சம் இலக்கு!'' - திருமண நாளில் அசத்திய தம்பதி

பனைவிதை நடும் ராஜ்குமார், கங்கை அபிராமி
பனைவிதை நடும் ராஜ்குமார், கங்கை அபிராமி ( நா.ராஜமுருகன் )

''முன்னூர், மோளபாளையம் மரகதீஸ்வரர் கோயிலைச் சுற்றியுள்ள இடங்கள்னு 5,000 பனை விதைகளை நட்டோம். எங்க ஊராட்சியில ஒரு லட்சம் பனைவிதைகளை நட்டு வளர்த்து, பனைக்காடுகள் நிறைஞ்ச ஊரா எங்க ஊரை மாத்துறதுதான் இலக்கு.''

கரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தின் ஊராட்சிமன்றத் தலைவர் ராஜ்குமார், தன் மனைவியின் ஆலோசனையின் பேரில், தங்களது திருமண நாளன்று ஊராட்சியைச் சுற்றி 5,000 பனைவிதைகளை நட்டு, இயற்கை ஆர்வலர்களின் பாராட்டைப் பெற்றிருக்கிறார்.

பனைவிதை நடும் பெண்கள்
பனைவிதை நடும் பெண்கள்
நா.ராஜமுருகன்

கரூர் மாவட்டம், க.பரமத்தி ஒன்றியத்தில் இருக்கிறது முன்னூர். இதன் ஊராட்சிமன்றத் தலைவர், ராஜ்குமார். க.பரமத்தி பகுதியைச் சுற்றி கல்குவாரிகள் அதிகம் இருப்பதால், மிகவும் வறட்சியான பகுதியாக உள்ளது. கடந்த மூன்று வருடங்களாக, வேலூரைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, தமிழகத்திலேயே அதிகம் வெயில் அடிக்கும் பகுதியாக க.பரமத்தி மாறியிருக்கிறது. இதனால், இந்தப் பகுதியில் மழையும் குறைவாகத்தான் பெய்கிறது.

இந்நிலையில், பல வருடங்களுக்குப் பிறகு, தற்போது தொடர்ச்சியாக இங்கே மழைபெய்து வருகிறது. இதனால், பூமி குளிர்ந்துபோய் உள்ளது. இந்த நிலையில்தான், தனது ஊராட்சியான வறண்ட முன்னூர் ஊராட்சியை, இந்த மழையைப் பயன்படுத்தி பசுமையாக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார், ஊராட்சிமன்றத் தலைவர் ராஜ்குமார். அதற்காக, மரக்கன்றுகளை நட்டு வருகிறார்.

கரூர்: `சுடாத கல்; வீட்டுக்குள் சூரிய வெளிச்சம்!' - பசுமை இல்லத்தில் வாழும் இளம் தம்பதி

ராஜ்குமாரின் 15-வது திருமணநாளையொட்டி, அவரின் மனைவி டாக்டர் கங்கை அபிராமி கொடுத்த ஆலோசனையின்படி, முன்னூர் ஊராட்சியைச் சுற்றி முதல் கட்டமாக 5,000 பனைவிதைகளை நட்டு அசத்தியிருக்கிறார். க.பரமத்தி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வி, இந்த விழாவில் கலந்துகொண்டார். முன்னூர் ஊராட்சியைச் சேர்ந்த 130 பெண்களைக் கொண்டு, ஒரே நாளில் 5,000 பனைவிதைகளை நட்டு, முன்னூர் ஊராட்சியின் சூழலை செம்மையாக்கும் முயற்சியில் முதல் அடியை எடுத்து வைத்திருக்கிறார் ராஜ்குமார். தன் மனைவி கங்கை அபிராமியோடு சேர்ந்து அவர் முதலில் பனைவிதைகளை நட்டுவைக்க, தொடர்ந்து 5,000 விதைகள் நடப்பட்டன.

ராஜ்குமார்
ராஜ்குமார்
நா.ராஜமுருகன்

முன்னூர் ஊராட்சிமன்றத் தலைவர் ராஜ்குமாரிடம் பேசினோம்.

"நான் அடிப்படையில விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன். அதனால, ஒவ்வொரு வருஷமும் வறட்சி அதிகரிச்சுட்டே வரும் இந்தப் பூமியை செப்பனிட நெனச்சேன். கல்குவாரிகள் ஒருபக்கம்னா, உயர்மின்கோபுரங்கள் மூலம் மின்சாரம் கொண்டுபோறதால இங்குள்ள மரங்கள் அழியுற அவலம் ஒருபக்கம். இதனால, எங்கள் ஊராட்சி வறட்சிமிகுந்த ஊராட்சியா மாறிடுச்சு.

1,000 அடிக்கு ஆழமா போர் போட்டாலும் தண்ணீர் கிடைக்கிறதில்ல. குடிநீருக்கும் அல்லாட வேண்டிய நிலைமை. அதுக்குக் காரணம், இங்க இயற்கை சூழல் குறைஞ்சுபோனதுதான். மழையளவும் குறைஞ்சிடுச்சு. அதனால, எங்க ஊராட்சியை இயற்கை கொஞ்சும் ஊராட்சியா மாற்ற என்னென்ன செய்யலாம்னு யோசிச்சேன்.

இந்த நிலையிலதான், எங்களோட 15-வது திருமண நாளை நிலத்துக்கு நல்லது செய்ற விதமா கொண்டாடலாம்னு என் மனைவி கங்கை அபிராமி சொன்னாங்க. அதன்படி, எங்க ஊராட்சியில 5,000 பனைவிதைகளை நட்டுவைக்க முடிவெடுத்தோம். க.பரமத்தி பி.டி.ஓ செல்வி மேடம்கிட்ட சொன்னப்போ, அவங்க ஆர்வமா வந்து கலந்துக்கிட்டாங்க. பக்கத்துல உள்ள கோடந்தூரில் 5,000 பனைவிதைகளை வாங்கிவந்தோம்'' என்றவரைத் தொடர்ந்தார், அவரின் மனைவி கங்கை அபிராமி.

 பனைவிதை நடும் கங்கை அபிராமி
பனைவிதை நடும் கங்கை அபிராமி
நா.ராஜமுருகன்

''நானும் என் கணவரும் முதல்ல பனைவிதைகளை நட்டோம். தொடர்ந்து, 100 நாள் வேலைத்திட்டப் பெண்கள் 130 பேர், 5,000 பனைவிதைகளையும் நட்டு முடிச்சாங்க. முன்னூர், மோளபாளையம் மரகதீஸ்வரர் கோயிலைச் சுற்றியுள்ள இடங்கள்னு 5,000 பனைவிதைகளை நட்டோம். இது ஆரம்பம்தான். எங்க ஊராட்சியில ஒரு லட்சம் பனைவிதைகளை நட்டு வளர்த்து, பனைக்காடுகள் நிறைஞ்ச ஊரா எங்க ஊரை மாத்துறதுதான் இலக்கு. அதையும் நிச்சயம் சாதிப்போம்" - கையில் அப்பியிருந்த செம்மண்ணைத் தட்டிவிட்டபடி சொல்கிறார் கங்கை அபிராமி.

விதைகள் வேர்பிடிக்கட்டும், ஊரில் பசுமை திரும்பட்டும்!

அடுத்த கட்டுரைக்கு