Published:Updated:

`4 டன் பிளாஸ்டிக் சிமென்ட் ஆலைக்கு விற்பனை!'- கரூர் மாவட்ட நிர்வாகத்தின் சூப்பர் முயற்சி

அவ்வாறு இருப்பு வைக்கப்பட்டிருந்ததில் சுமார் 4 டன் அளவிலான பிளாஸ்டிக் கழிவுகள் பாதுகாப்பாக அழிக்கப்படுவதற்காக, டால்மியாபுரத்தில் உள்ள சிமென்ட் ஆலையின் எரிகலனுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது

கரூர் பிளாஸ்டிக் கழிவு
கரூர் பிளாஸ்டிக் கழிவு ( நா.ராஜமுருகன் )

கரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் மூலம் கிராம ஊராட்சிகளில் இருந்து, `தூய்மையே சேவை' இயக்கத்தின் கீழ் சேகரிக்கப்பட்ட 4 டன் அளவிலான பிளாஸ்டிக் கழிவுகள், பாதுகாப்பாக அழிக்கப்படுவதற்காக டால்மியாபுரம் சிமென்ட் ஆலைக்கு அனுப்பிவைக்கப்பட்டது பாராட்டைப் பெற்று வருகிறது.

பிளாஸ்டிக் கழிவு
பிளாஸ்டிக் கழிவு
நா.ராஜமுருகன்

இன்று உலகையே அச்சுறுத்தும் எமனாக மாறியிருக்கும் வஸ்து, நீக்கமற எங்கும் நிறைந்திருக்கும் பிளாஸ்டிக் கழிவுகள்தான். அதனால், மனிதர்களுக்கும், பிற உயிர்களுக்கும் ஏற்படும் அல்லல்களை வெறும் வார்த்தைகளில் விவரித்துவிட முடியாது. பிளாஸ்டிக் கழிவுகளை அழிப்பது பற்றி உலக சூழலியாளர்கள் பலரும் மூளையைக் கசக்கி யோசித்து வருகிறார்கள். இந்த நிலையில், இதன் தீமைகளை உணர்ந்த தமிழக அரசும் பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடை விதித்து உத்தரவிட்டது. பல மாவட்டங்களில் அதை சீரியஸாக செயல்படுத்தி வருகிறார்கள்.

Vikatan

அதில் ஒரு மாவட்டம், கரூர். இம்மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் வீடுகள்தோறும், பிளாஸ்டிக் கழிவுகளைச் சேகரித்து, அதை முறையாக அழித்து வருகிறார்கள். அந்த வகையில்தான், கரூர் மாவட்டத்தில் சேகரித்த 4 டன் பிளாஸ்டிக்களை பாதுகாப்பாக அழிக்க, டால்மியாபுரத்தில் இயங்கிவரும் சிமென்ட் ஆலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் கழிவு
பிளாஸ்டிக் கழிவு
நா.ராஜமுருகன்

இதுபற்றி, பேசிய கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன், ``சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் வகையிலான பிளாஸ்டிக் எனப்படும் நெகிழிப்பொருள்களைப் பயன்படுத்துவது தமிழ்நாட்டில் தடைசெய்யப்படுவதாக, தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்தார். அந்த அடிப்படையில், கரூர் மாவட்டத்தில் பிளாஸ்டிக் பயன்பாடு தடுப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பயன்பாட்டால் வரும் தீமைகள் குறித்து, தொடர்ந்து பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

வணிக நிறுவனங்கள், மளிகைக்கடைகள், காய்கறிக் கடைகள் போன்ற இடங்களிலும் பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுவதை தடுக்கும் வகையில், துறைசார்ந்த அலுவலர்கள் அவ்வப்போது களஆய்வுகள் மேற்கொண்டு வருகிறார்கள். அந்த ஆய்வின்போது தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாடு கண்டறியப்பட்டால், அவை அப்புறப்படுத்தப்பட்டு, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மற்றும் கடை உரிமையாளர்களுக்கு சட்ட விதிகளுக்குட்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டும் வருகின்றது.

அன்பழகன் (கரூர் மாவட்ட ஆட்சியர்)
அன்பழகன் (கரூர் மாவட்ட ஆட்சியர்)
நா.ராஜமுருகன்

கரூர் மாவட்ட ஊரகவளர்ச்சி முகமையின் சார்பில், கிராம ஊராட்சிகளில் தூய்மைப்பணிகளை மேற்கொள்ளும் வகையில், `தூய்மையே சேவை' என்ற திட்டத்தின் மூலம், `தூய்மைக் காவலர்கள்' என்று அழைக்கப்படுகின்ற துப்புரவுப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். கிராம ஊராட்சிகளில் குடியிருப்புகள் நெருக்கமாக உள்ள பகுதிகளில், 150 வீடுகளுக்கு ஒருவரும், குடியிருப்புகள் பரவலாக உள்ள பகுதிகளில் 75 வீடுகளுக்கும் ஒருவரும் என தூய்மைக்காவலர்கள் நியமிக்கப்பட்டு தினந்தோறும் வீடுவீடாகச் சென்று குப்பைகளை சேகரித்து தூய்மைப்பணிகளில் ஈடுபடுகின்றனர்.

அவ்வாறு, சேகரிக்கப்படும் குப்பைகளில் மக்கும் குப்பை, மக்காத குப்பைகளைப் பிரித்தெடுக்கும் பணிகளையும் தூய்மைக்காவலர்கள் மேற்கொள்கின்றனர். பிரித்தெடுத்த குப்பைகளில் இருந்து எடுக்கப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளிட்ட மக்காத குப்பைகள் குளித்தலை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கே.பேட்டை ஊராட்சியில் உள்ள கிடங்கில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இருப்பு வைக்கப்பட்டிருந்ததில் சுமார் 4 டன் அளவிலான பிளாஸ்டிக் கழிவுகள் பாதுகாப்பாக அழிக்கப்படுவதற்காக, டால்மியாபுரத்தில் உள்ள சிமென்ட் ஆலையின் எரிகலனுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது" என்றார்.