Published:Updated:

`ஒண்ணேகால் ஏக்கர் நிலம்; 300 பழ மரங்கள்!' -விதை பரவலுக்காக `உணவுக்காடு’ அமைக்கும் இன்ஜினீயர் இளைஞர்

தண்ணீர் பாய்ச்சும் கார்த்திக்
தண்ணீர் பாய்ச்சும் கார்த்திக்

தன் வேலையை உதறிவிட்டு, இயற்கை விவசாயம், முருங்கை விவசாயிகள் சம்பந்தப்பட்ட கம்பெனிக்கு சி.இ.ஓ என்று மாறியவர், 4 மாதங்களுக்கு முன்பு தனது நிலத்தில், இயற்கை முறையிலான உணவுக்காட்டை அமைத்து, பலருக்கும் வழிகாட்டியாக அவதாரம் எடுத்திருக்கிறார்.

இன்ஜினீயரிங் படித்து, தான் பார்த்துவந்த வேலையை உதறித்தள்ளிவிட்டு, தற்சார்பு வாழ்வியலுக்காகவும், பறவைகள் மூலம் விதைபரவல் நடக்க ஏதுவாகவும், தனது ஒன்றேகால் ஏக்கர் நிலத்தில், இயற்கை முறையில் உணவுக்காடு அமைத்து, அசத்தியிருக்கிறார், இளைஞர் ஒருவர்.

கார்த்திக் அமைத்த உணவுக்காடு
கார்த்திக் அமைத்த உணவுக்காடு
'மாவட்டத்துக்கு ஒரு விவசாயி; மருந்தில்லா விவசாயம்!' -சகாயம் ஐஏஎஸ் முன்னெடுக்கும் 'கலப்பைத் திட்டம்'

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி ஒன்றியத்தில் இருக்கிறது, இடையப்பட்டி. இந்தக் கிராமத்தைச் சேர்ந்த கார்த்திக் என்ற இளைஞர், மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் முடித்துவிட்டு, அதுசம்பந்தப்பட்ட வேலைகளில் பணிபுரிந்துவந்தார். இந்த நிலையில், அந்த வேலை மனஅழுத்தத்தைத் தந்ததால் அதை உதறிவிட்டு, இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் காட்டிய தற்சார்பியல் வாழ்வியலுக்கு மாறினார்.

உணவுக்காட்டில் உள்ள நாவல் மரக்கன்று
உணவுக்காட்டில் உள்ள நாவல் மரக்கன்று

இயற்கை விவசாயம், முருங்கை விவசாயிகள் சம்பந்தப்பட்ட கம்பெனிக்கு சி.இ.ஓ என்று மாறியவர், நான்கு மாதங்களுக்கு முன்பு தனது ஒன்றேகால் ஏக்கர் நிலத்தில், இயற்கை முறையிலான உணவுக்காட்டை அமைத்து, பலருக்கும் வழிகாட்டியாக அவதாரம் எடுத்திருக்கிறார்.

தான் அமைத்துள்ள உணவுக்காட்டில் வேலையாக இருந்த கார்திக்கிடம் பேசினோம். "கடந்த 2015 -ம் ஆண்டு, இன்ஜினீயரிங் படிச்சு முடிச்சேன். உடனே, புதுச்சேரியில ஒரு கம்பெனியில் ரூ.12,000 சம்பளத்துக்கு வேலை கிடைச்சுச்சு. ஆனால், அந்த வேலை தந்த மனஅழுத்தம் என்னை வாட்டுச்சு. 'இதுவல்ல நல்ல வாழ்க்கை'னு முடிவுபண்ணினேன். என்னோட பெரியம்மா, தன்னோட ஊர்ல நம்மாழ்வார் மூலமா வந்த பாதிப்புல இயற்கை விவசாயம் பண்ணிக்கிட்டு இருந்தாங்க. அதனால், வீட்டு எதிர்ப்பையும் மீறி அந்த வேலையை ஒருவருடத்திலேயே ரிசைன் பண்ணிட்டு, ஊருக்கு வந்துட்டேன்.

வேலை செய்யும் கார்த்திக்
வேலை செய்யும் கார்த்திக்

பள்ளபட்டியில் நாட்டு மாட்டுப் பால் விற்பனை நிலையம் நடத்தியதோடு, 'இயல்வழி உணவகம்' என்ற பெயரில் இயற்கை உணவகத்தையும் நடத்தினோம். சில பிரச்னைகளால, ஒன்றரை வருஷத்துக்கு மேல அதை தொடர்ந்து நடத்த முடியலை. மறுபடியும், 'படிச்ச படிப்புக்கு ஏத்த வேலை பார்ப்போம்'னு நினைச்சு, பெங்களூருக்குப் போனேன். அங்கே கிடைத்த ரூ. 25,000 சம்பள வேலை ஒரே வாரத்துல வெறுப்பைத் தந்தது.

'நம் வாழ்க்கை இனி நம்மாழ்வார் காட்டிய வழியில்தான்'னு உறுதியா முடிவு பண்ணிட்டு, ஊருக்கு வந்துட்டேன். எங்க பெரியம்மா சேர்மனா இருந்த முருங்கை விவசாயிகளை உள்ளடக்கிய கம்பெனியில் சி.இ.ஓவாக வேலைக்குச் சேர்ந்தேன். இன்னொரு பக்கம், எங்களுக்குச் சொந்தமான நிலத்தில் இயற்கை உணவுக்காட்டை அமைக்க நினைத்தேன். கடந்த பிப்ரவரி மாதம், ஒண்ணேகால் ஏக்கர் நிலத்துல, உணவுக்காட்டை அமைத்தேன். அத்தி, இலுப்பை, நாவல், நெல்லி, மாதுளை, இலந்தை, நறுவிழி, கொடுக்காபுளி என்று 14 வகையான, 300 பழ மரங்களை நட்டேன். எல்லாம் 9 மாத கன்றுகளாக இருந்து நடப்பட்டன.

உணவுக்காட்டில் ஊடுபயிராக வெண்டைச் செடி
உணவுக்காட்டில் ஊடுபயிராக வெண்டைச் செடி

நேரடி குழாய் பாசனம் மூலம் தண்ணீர் பாய்ச்ச ஆரம்பித்தேன். ஆர்கானிக் உரங்களைக்கூட பயன்படுத்தவில்லை. இலைதழைகளைக்கொண்டு வெறும் மூடாக்கு மற்றும் தண்ணீர் பாய்ச்சுறது மட்டும்தான் செய்தேன். இந்த பழமரக் காட்டுக்கு அரணா கொழுக்கட்டைப் புல்லை வளர்த்தேன். பூச்சித்தாக்குதலை இது ஓரளவு கட்டுப்படுத்த உதவியது. அதேபோல், அங்கங்கே நுனா கன்றுகளையும் நட்டேன்.

இதற்கிடையில், ஊடுபயிராக, வீட்டுக்குத் தேவையான கத்திரி, மிளகாய், வெண்டைனு காய்கறி விதைகளையும் விதைத்தேன். நான் நட்டுள்ள மரங்களில் பெரும்பாலானவை பலன்தர குறைந்தப்பட்சம் மூன்று வருடங்கள் ஆகும். ஆனால், இந்த உணவுக்காட்டில் ஒரே வருடத்தில் பலன்தரக்கூடிய ஆமணக்குச் செடியையை அங்கங்கே நட்டுள்ளேன். ஒரு வருடத்தில் பலன் தரும் ஆமணக்கு கிலோ 35 ல் இருந்து 60 வரை மாறாமல் அப்படியே இருக்கும். விவசாயிகளுக்கு ஆமணக்கு இன்சூரன்ஸ் பலன் மாதிரி. அதேபோல், எனது உணவுக்காடு பயன்பாட்டுக்கு வந்துவிட்டால், வருடத்தில் 12 மாதங்களும் ஏதாவது ஒரு பழவகை மரங்கள் பயன்தரும்படி அமைத்துள்ளேன்.

உணவுக்காட்டில் உள்ள பழமரம்
உணவுக்காட்டில் உள்ள பழமரம்

இதன்மூலம், உணவுக்காக நாம் யாரையும் சார்ந்திருக்க வேண்டியதில்லை. அதேபோல், இந்த உணவுக்காடு தற்சார்பு வாழ்வியலை மீட்டுத் தரும். சூழலுக்கும் உகந்தது. அதேபோல், மழையை அறுவடை செய்யும். அதேபோல், இந்த உணவுக்காடு மூலம் பறவைகள் வழியாக விதைபரவல் நடந்து, சுத்துப்பட்டு 100 கிலோமீட்டர் சுற்றளவில் நிறைய மரங்கள் உருவாகும். இதனால், வறண்டு கிடக்கும் எங்க பகுதியே பசுமையாகும். இப்போதுதான், நான் பிறந்த பயனை அடைந்திருக்கிறேன். எனது இந்த இயற்கைப் பாதையிலான பயணமும், இயற்கை நோக்கிய எனது முன்னெடுப்புளும், விடாது தொடரும்" என்றார், மகிழ்ச்சியாக.

அடுத்த கட்டுரைக்கு