Published:Updated:

அமைச்சரின் அறிவிப்பால் மகிழ்ச்சியில் கரூர் விவசாயிகள்; விரைவில் நடைமுறைக்கு வருமா திட்டங்கள்?

பஞ்சப்பட்டி ஏரி
பஞ்சப்பட்டி ஏரி

கரூர் மாவட்டத்தில் காவிரி, அமராவதி, நொய்யல் உள்ளிட்ட ஆறுகள் பாய்ந்தாலும், 70 சதவிகித நிலங்கள் வானம் பார்த்த பூமியாகவே உள்ளது. இதனால், அங்குள்ள நிலங்கள் அனைத்தும் மானாவாரி நிலங்களாக உள்ளன. மழைப்பொழிவும் குறைவாக உள்ள மாவட்டம் இது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

``கரூர் மாவட்டத்தில் உள்ள வறண்ட நீர்நிலைகள் அமராவதி ஆறு மற்றும் காவிரி ஆற்றின் உபரி நீரைக் கொண்டு நிரப்பப்படும். அதேபோல், கரூர் மாவட்டத்தில் 8 ஊராட்சி ஒன்றியங்களில் வறண்டு காணப்படும் வேளாண் நிலங்களை பசுமையாக்க, 10 புதிய நுண்ணீர் ஏற்றப் பாசனத் திட்டம் செயல்படுத்தப்படும்" என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

கரூர் மாவட்டத்தில் காவிரி, அமராவதி, நொய்யல் உள்ளிட்ட ஆறுகள் பாய்ந்தாலும், 70 சதவிகித நிலங்கள் வானம் பார்த்த பூமியாகவே உள்ளது. இதனால், அங்குள்ள நிலங்கள் அனைத்தும் மானாவாரி நிலங்களாக உள்ளன. மழைப்பொழிவும் குறைவாக உள்ள மாவட்டம் என்பதால், அதிகம் விவசாயம் நடப்பதில்லை. மேலும், தமிழகத்தில் அதிகம் வெயிலின் தாக்கம் அதிகம் உள்ள மாவட்டங்களில் ஒன்றாகவும் கரூர் மாறியிருக்கிறது.

நிகழ்ச்சியில் செந்தில் பாலாஜி
நிகழ்ச்சியில் செந்தில் பாலாஜி
`கால்நடைத் தீவனமான சூப்பர் நேப்பியர் புல்லில் ரசாயனமா?' -  உலவும் தகவல்கள்; உண்மை என்ன?

இந்த மூன்று ஆறுகளைவிட, உயர்வான பகுதிகளில் 70 சதவிகித நிலங்கள் இருப்பதால், அங்குள்ள ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளுக்குத் தண்ணீர் கொண்டுபோக முடியாத சூழல் ஏற்படுகிறது. தமிழக அளவில் மூன்றாவது பெரிய ஏரியான பஞ்சப்பட்டி ஏரியும் கடந்த 10 வருடங்களாக வறண்டு கிடக்கிறது. இதனால், முக்கிய ஏரிகளில் தண்ணீர் நிரப்ப வழிவகை செய்ய வேண்டும் என்று இங்குள்ள விவசாயிகள் தொடர் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி 10 புதிய நுண்ணீர் ஏற்றப் பாசனத் திட்டங்கள் செயல்படுத்துப்படும் என்று அறிவித்திருப்பது, விவசாயிகளை மகிழ்ச்சியடைய வைத்திருக்கிறது.

கரூர் நகராட்சி திருமண மண்டபத்தில், சுகாதாரத் துறையின் சார்பில் பெருநிறுவனங்களின் சமூக பொறுப்புணர்வு நிதியின் கீழ், தடுப்பூசி செலுத்தும் முகாம் தொடக்க விழா, கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபுசங்கர் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளராகத் தமிழக மின்சார மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி கலந்துகொண்டார்.

நிகழ்ச்சியில் செந்தில் பாலாஜி
நிகழ்ச்சியில் செந்தில் பாலாஜி
``தென்னை மரத்திற்கான சிறந்த நீர் மேலாண்மை முறை இதுதான்!" - விளக்கும் வேளாண் அதிகாரி

இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், ``கரூர் மாவட்டத்தில் விவசாயத்தைப் பலப்படுத்தி, அதை முன்னெடுத்துச் செல்ல மாவட்டத்தில் உள்ள முக்கிய வறண்ட ஏரிகளான தாதம்பாளையம் ஏரி, பஞ்சப்பட்டி ஏரி, வெள்ளியணை ஏரி, கடவூர் ஏரி ஆகிய ஏரிகள் காவிரி மற்றும் அமராவதி ஆற்றில் செல்லும் உபரி நீரைக் கொண்டு நிரப்பும் திட்டம் தயார் செய்யப்பட்டு, அதற்கான திட்ட மதிப்பீடு கணக்கிடும் பணியை அரசு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல, கரூர் மாவட்டத்தில் உள்ள 8 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள விவசாய நிலங்களுக்கு பாசன வசதி பெற, குழாய்கள் மூலம் விவசாய நிலங்களுக்குத் தண்ணீர் பாய்ச்சுவதற்கு, 10 புதிய நுண்ணீர் ஏற்றுப் பாசனத் திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளன. இதன்மூலம், அனைத்துப் பகுதிகளும் பசுமை நிறைந்த பகுதிகளாக மாறும். விவசாயத்தை மேம்படுத்தும் பணியை அரசு முன்னெடுத்து வருகிறது. இதை, அனைத்து நிலைகளிலும் முன்னெடுக்க வேண்டும்.

அதேபோல, கரூர் மாவட்டத்துக்கு அரசு வேளாண்மைக் கல்லூரி மற்றும் அரசு கால்நடை மருத்துவமனை ஆகிவற்றைத் தேவை அடிப்படையில் விரைவில் தமிழக முதலமைச்சர் அறிவிக்க உள்ளார்" என்று பேசினார்.

ஆனால் விவசாயிகளோ, ``இதை வெறும் காற்றில் கரையும் வாக்குறுதியாக இல்லாமல், உண்மையில் அமைச்சர் நிறைவேற்றினால், கரூர் மாவட்டம் முழுக்க விவசாயம் நடைபெற வழி ஏற்படும். நாங்களும் மகிழ்ச்சியடைவோம்" என்று சொல்கிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு