Published:Updated:

`மாணவ விவசாயிகள் விளைவித்த காய்கறிகள்; பெற்றோர்கள் அறுவடை!'-கரூர் அரசுப் பள்ளியில் சமத்துவப் பொங்கல்

மாணவர்களும் ஆர்வமாகி, அய்யம்பாளையம் பள்ளியில், பரங்கிக்காய், சுரைக்காய், அவரைக்காய், பச்சைமிளகாய், தக்காளி, வெண்டைக்காய், கொத்தவரை மற்றும் கீரைகளைப் பயிரிட்டு, அவர்களே அவற்றை வளர்த்துவருகிறார்கள்.

காய்கறி அறுவடை
காய்கறி அறுவடை

கரூர் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் படிக்கும் மாணவர்கள், விவசாயிகளாக மாறி விளைவித்த காய்கறிகளை ஊர்மக்களே திரண்டுவந்து அறுவடைசெய்து, பள்ளியில் சமத்துவப் பொங்கல் கொண்டாடிய நிகழ்ச்சி, மாணவர்களை மகிழ்ச்சிக்கடலில் தள்ளியிருக்கிறது.

காய்கறி அறுவடை
காய்கறி அறுவடை

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் இருக்கிறது, அய்யம்பாளையம். இந்தக் கிராமத்தில் செயல்பட்டுவரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், 50 மாணவ மாணவிகள் கல்வி பயின்றுவருகின்றனர். இந்தப் பள்ளியில் தலைமை ஆசிரியர் குமரவேலும் மற்றும் ஓர் இடைநிலை ஆசிரிரும் பணியாற்றுகின்றனர். பள்ளியின் தலைமை ஆசிரியர் குமரவேல், பள்ளியில் படிக்கும் 50 மாணவர்களையும் இயற்கை விவசாயிகளாக மாற்றியிருக்கிறார். வெறும் ஏட்டுக்கல்வியை மட்டும் போதிக்காமல், பள்ளி வளாகத்தில் காய்கறிகளை இயற்கை முறையில் விளைவிக்கும் பயிற்சியையும் கொடுத்து வருகிறார்.

காய்கறி அறுவடை
காய்கறி அறுவடை

ஊரைச் சுற்றி மரக்கன்றுகளை நட வைத்தல், பனைவிதைகளை விதைத்தல், விதைப்பந்துகளைத் தூவுதல், மரக்கன்றுகளை உற்பத்திசெய்ய வைத்தல் என மாணவர்களை இயற்கை விரும்பிகளாக மாற்றிவருகிறார். இதனால், மாணவர்களும் ஆர்வமாகி, அய்யம்பாளையம் பள்ளியில், பரங்கிக்காய், சுரைக்காய், அவரைக்காய், பச்சைமிளகாய், தக்காளி, வெண்டைக்காய், கொத்தவரை மற்றும் கீரைகளைப் பயிரிட்டு, அவர்களே வளர்த்துவருகிறார்கள்.

`149 மாணவர்களுக்கு சுரை விதை; முதல் அறுவடையைச் செய்து பரிசு பெற்ற மாணவி' - அரசுப் பள்ளியில் அசத்தல்!

அங்கே, இயற்கை முறையில் விளைவிக்கப்படும் காய்கறிகளைக் கொண்டே, பள்ளியில் மதிய உணவு தயாரித்து, மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. பொங்கல் விழாவைச் சிறப்பிக்கும் வகையில், இப்பள்ளியில் அறுவடைத் திருவிழா மற்றும் சமத்துவப் பொங்கல் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு, கிருஷ்ணராயபுரம் ஒன்றியப் பெருந்தலைவர் சந்திரமதியும், வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடாச்சலமும் தலைமையேற்றனர். ஊர் மக்கள் அனைவரும் திரண்டுவந்து, பள்ளி வளாகத்தில் உள்ள தோட்டத்தில் விளைந்த பரங்கிக்காய், சுரைக்காய், அவரைக்காய், பச்சைமிளகாய், தக்காளி, வெண்டைக்காய், கொத்தவரை உள்ளிட்ட காய்கறிகளைத் தங்கள் கைகளால் அறுவடைசெய்தனர்.

பொங்கல் சாப்பிடும் மாணவர்கள்
பொங்கல் சாப்பிடும் மாணவர்கள்

அதற்கு முன்பாக, கிருஷ்ணராயபுரம் ஒன்றியப் பெருந்தலைவர் சந்திரமதி, காய்கறிகள் அறுவடையைத் தொடங்கிவைத்தார். அந்தக் காய்கறிகளைக்கொண்டே சமத்துவப் பொங்கல் சமைக்கப்பட்டு, மாணவ மாணவிகள் மற்றும் ஊர் பொதுமக்களுக்கு விருந்தளிக்கப்பட்டது. அதோடு, பொங்கல் திருநாளை முன்னிட்டு, மாணவர்களின் பெற்றோர்களுக்கு நடத்தப்பட்ட பாரம்பர்ய விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

பிறகு பேசிய கிருஷ்னராயபுரம் ஒன்றியப் பெருந்தலைவர் சந்திரமதி, "இதுபோன்று ஓர் அரசுப்பள்ளியை நான் பார்த்ததில்லை. மாணவர்களை இயற்கை விவசாயிகளாக மாற்றிவரும் ஆசிரியர்களைப் பார்த்து எனக்கு வியப்பாக உள்ளது. மாணவர்களுக்குக் கொடுப்படவேண்டிய வாழ்வியல் கல்வி இதுதான். மாணவர்களுக்கு இந்தக் கல்வியை விடாமல் கொடுக்க வேண்டும். இங்கே விளைந்த காய்கறிகளைக் கொண்டு கூட்டு தயாரித்து, அதை சாப்பிட வழங்கினார்கள்.

காய்கறி அறுவடை
காய்கறி அறுவடை

நான் இதுவரை சாப்பிடாத ருசியில், அவ்வளவு அற்புதமாக இருந்தது. அதை விளைவித்த இந்த பிஞ்சுக் கைகளுக்கு வாழ்த்துகள்" என்று பாராட்டிப் பேசினார்.

அய்யம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியர் குமரவேலிடம் பேசினோம். "இந்தக் கிராமமே விவசாயத்தை அடிப்படைத் தொழிலாகக்கொண்ட கிராமம்தான். இங்கு படிக்கும் அனைத்து மாணவர்களின் பெற்றோர்களும் விவசாயம் பார்ப்பவர்களாகத்தான் உள்ளனர். அதனால், மாணவர்களுக்கு இயற்கை மீதும், இயற்கை விவசாயத்தின் மீதும் ஆர்வம் ஏற்படுத்த, அவர்களைக் கொண்டே இப்படி இயற்கையைக் கட்டமைப்பது, இயற்கை முறையில் காய்கறிகளை விளைவிக்க வைப்பதுனு செயல்பட ஆரம்பித்தேன்.

 குமரவேல் (தலைமை ஆசிரியர்)
குமரவேல் (தலைமை ஆசிரியர்)

தங்கள் பிள்ளைகள் விளைவித்த காய்கறிகளை அவர்களின் பெற்றோர்களைக் கொண்டே அறுவடை செய்யவைத்து, அவற்றில் கூட்டு மற்றும் பொங்கல் தயாரித்து, ஊர்மக்கள் அனைவருக்கும் வழங்கினோம். ஊர்மக்களை இந்த நிகழ்ச்சி ஆச்சர்யப்பட வைத்தது. இந்த முயற்சி தொடர்ந்துகிட்டே இருக்கும்" என்றார், மகிழ்ச்சியாக.