Published:Updated:

`149 மாணவர்களுக்கு சுரை விதை; முதல் அறுவடையைச் செய்து பரிசு பெற்ற மாணவி' - அரசுப் பள்ளியில் அசத்தல்!

உச்சக்கட்டமாக, தங்கள் பள்ளியில் படிக்கும் 149 மாணவ, மாணவிகளுக்கும் சுரை விதையைக் கொடுத்து, மாணவர்களை அவரவர் வீட்டில் வளர்க்கச் சொல்லி, யார் முதல் சுரை அறுவடையை பெறுகிறார்களோ, அவர்களுக்கு பரிசு கொடுத்து அசத்தியிருக்கிறார்கள்.

 சுரைக்கொடியோடு மோனிகா
சுரைக்கொடியோடு மோனிகா ( நா.ராஜமுருகன் )
Vikatan

தங்கள் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு வெறுமனே வெறும் பாடப்புத்தகத்தில் உள்ள கல்வியை மட்டும் பயிற்றுவிக்காமல், இயற்கை விவசாயம், வாழ்வியல் முறை என்று வாழ்கையை எதிர்கொள்ள வேண்டிய விஷயங்களையும் சேர்த்து, கரூர் மாவட்ட அரசுப் பள்ளி ஒன்றில் போதித்து வருவது, மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

சுரைக்காய் அறுவடை
சுரைக்காய் அறுவடை

உச்சக்கட்டமாக, தங்கள் பள்ளியில் படிக்கும் 149 மாணவ, மாணவிகளுக்கும் சுரை விதையைக் கொடுத்து, மாணவர்களை அவரவர் வீட்டில் வளர்க்கச் சொல்லி, யார் முதல் சுரை அறுவடையைப் பெறுகிறார்களோ, அவர்களுக்கு பரிசு கொடுத்து அசத்தியிருக்கிறார்கள்.

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் இருக்கும் புனவாசிப்பட்டியில் இயங்கி வருகிறது, ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி. இந்தப் பள்ளியில் 149 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகிறார்கள். இந்தப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வரும் கோபிநாதன், பள்ளியின் தலைமை ஆசிரியை விஜயகுமாரியின் அறிவுறுத்தலோடு, பல புதுமையான முயற்சிகளைச் செய்துவருகிறார். கடந்த தீபாவளிக்கு வீட்டில் வெடி வெடிக்காமல் சூழலைக் காத்த மாணவர்களுக்கு பரிசு, வித்தியாசமான முறையில் மாணவர்களை வரவேற்பது, பள்ளியின் பிறந்த நாளைக் கொண்டாடுதல், பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு சர்ப்பரைஸாக பிறந்தநாள் பரிசு வழங்குவது, பள்ளியின் ஆண்டுவிழாவை ஐம்பெரும் விழாவாகக் கொண்டாடுவது, ஊர்மக்களின் கவனத்தை பள்ளி நோக்கி திருப்பி, அவர்களை வைத்து பள்ளிக்குத் தேவையான பொருள்களை வழங்க வைக்கும் கல்விசீர் விழாவை நடத்துதல் என்று கோபிநாதன் எடுக்கும் அத்தனை முயற்சிகளும், `அட' போட வைப்பவை; மாணவர்களை காந்தமாக கவர்ந்திழுப்பவை.

முதல் பரிசு பெற்ற மோனிகா
முதல் பரிசு பெற்ற மோனிகா
நா.ராஜமுருகன்

இதற்காக, தனது பெயருக்கு முன்னே, `புதுமை விரும்பி ஆசிரியர்' என்ற அடைமொழியை இணைத்துக்கொண்டுள்ளார். மாணவர்களுக்கு இயற்கை விவசாயம் குறித்த போதிய அறிவை வளர்க்க வேண்டும் என்பதற்காக, கோபிநாதன் பல்வேறு முயற்சிகளை செய்துவருகிறார். அந்த வகையில், புனவாசிப்பட்டி பள்ளியில் படிக்கும் 149 மாணவ, மாணவிகளுக்கும் ஆளுக்கொரு சுரை விதையைக் கொடுத்தார். மாணவர்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் அதை ஊன்றி, இயற்கை முறையில் தாங்களே வளர்க்க வேண்டும் என்பதுதான் டாஸ்க். அந்த டாஸ்க்கில் வென்று சுரைக்காயை அறுவடை செய்து, முதல் பரிசைத் தட்டிசென்றுள்ளார், நான்காம் வகுப்பு படிக்கும் மோனிகா. இரண்டாவதாக சுரைக்காயை அறுவடை செய்து, மோகன்ராஜ் என்ற மாணவர் இரண்டாவது பரிசை வென்றுள்ளார்.

மாணவர்களிடம் நல்லதொரு முனைப்பை ஏற்படுத்திய சந்தோஷத்தில் இருந்த ஆசிரியர் கோபிநாதனிடம் பேசினோம். ``மாணவர்களுக்கு வெறும் ஏட்டுக்கல்வியை மட்டும் நான் தரவிரும்பலை. இயற்கை மீதான காதலையும், விவசாயத்தின் மீதான பிடிப்பையும் அவர்களுக்கு அதிகப்படுத்த வேண்டும்னு நினைச்சேன். அதனால், அவர்களுக்கு சுரைக்காய் விதையை வளர்க்கும் டாஸ்க்கை அறிவிச்சேன். எங்க பள்ளியில் படிக்கும் 149 மாணவ, மாணவிகளுக்கும் தலா ஒரு சுரை விதையை, கடந்த 29.7.2019 அன்று வழங்கினோம். அதை அவர்களே தங்கள் வீடுகளில் உள்ள தோட்டத்தில் விதைத்து, சுரைக்கொடியை வளர்த்தெடுக்க வேண்டும். தினமும் வீட்டுப்பாடம் செய்வதுபோல், அவர்களை அதற்கு தண்ணீர் ஊற்றி, இயற்கை முறையில் வளர்க்க வேண்டும் என்று அறிவித்தோம். அத்தனை மாணவர்களும் இந்த டாஸ்க்கை ஆர்வமாக ஏற்றுக்கொண்டு, அவ்வளவு அர்ப்பணிப்போடு செயல்படுத்தினாங்க.

கோபிநாதன்
கோபிநாதன்

அதில் நான்காம் வகுப்பு படிக்கும் மோனிகா வென்று, சுரைக்காயை அறுவடை செய்து, முதலாவது பரிசைப் பெற்றார்; மோகன்ராஜ் என்ற மாணவர் இரண்டாவது பரிசைப் பெற்றார். அவர்களுக்கு தலா ஒரு சீத்தாப்பழ மரக்கன்றை, எங்கள் பள்ளி தலைமை ஆசிரியை விஜயகுமாரியின் கரங்களால் பரிசாக வழங்க வைத்தோம். தொடர்ந்து மாணவர்களிடம் இதுபோல் இயற்கை விவசாயம் சம்பந்தமான அறிவையும், ஆர்வத்தையும் வளர்த்தெடுக்க இருக்கிறோம்" என்றார்.

முதல் பரிசை வென்ற மகிழ்ச்சியில் இருந்த மாணவி மோனிகாவிடம் பேசினோம். ``இந்த டாஸ்க்கை சார் சொன்னதும், ரொம்பவும் ஆர்வமாயிட்டு. எங்கப்பாகிட்ட தினமும், எப்படி சுரை விதையை நடுவது, அதை எப்படி பராமரிப்பது, தண்ணீர் ஊற்றுவது எப்படி, பூச்சிகள் வந்தால் அதை இயற்கை முறையில் அழிப்பது எப்படினு எல்லா விஷயத்தையும் கவனமாகக் கேட்டு, மனசுல பதிச்சுகிட்டேன். அந்த அறிவோடு, சார் கொடுத்த சுரை விதையை நல்ல மண் உள்ள இடத்தில் ஊன்றி, வளர்த்தேன். தினமும் தண்ணீர் ஊற்றுவேன். களை பறிப்பேன். வீட்டில் மாடுகள் போடும் சாணத்தை கொட்டி வைத்திருக்கும் குப்பையைக் கொண்டு, சுரை கொடிக்கு உரமிட்டேன்.

சீத்தாப்பழ செடியோடு மோனிகா
சீத்தாப்பழ செடியோடு மோனிகா

நல்லா புசுபுசுனு வளர ஆரம்பிச்சு. நான் முழுகவனிப்பையும் செய்ததால், மற்ற மாணவர்களைவிட, நான் வளர்த்த சுரை செடி முதல்ல சுரைக்காயை காய்ச்சுச்சு. அதனால், எனக்கு முதல் பரிசு கிடைச்சுச்சு. விடுமுறை நாள்களில் அப்பாவோடு சேர்ந்து வயல்ல விவசாய வேலைகளையும் பார்க்கலாம்னு இருக்கேன்" என்று பெரிய மனுஷிபோல் பேசி, நம்மை வியக்க வைத்தார்.