Published:Updated:

`இயற்கையை இவங்க புரிஞ்சுக்கணும்!' - மாணவர்களுக்கு களத்திலேயே பாடம் எடுக்கும் ஆசிரியை

உயிர்வேலி பற்றி மாணவர்களிடம் விளக்கும் திலகவதி
உயிர்வேலி பற்றி மாணவர்களிடம் விளக்கும் திலகவதி ( படம்: நா.ராஜமுருகன் )

இயற்கை சமநிலைக்குக் காரணமான இட்டேரி வழித்தடம், உயிர்வேலி, அதையொட்டி வாழும் உயிரினங்கள் எனப் பல விஷயங்களில் மாணவர்களுக்கு, இயற்கை சார்ந்து தெளிவு ஏற்படுத்தி வருகிறார், அரசுப் பள்ளி ஆசிரியை ஒருவர்.

மனிதர்களின் சுயநலம், இயற்கையை வேண்டிய மட்டும் சீரழித்துவிட்டது. அதன் விளைவு, சுவரில் அடித்த பந்துபோல், இயற்கை சீற்றம், வறட்சி, வெள்ளம், புயல் என்று பல்வேறு இயற்கை பேரிடர்களை மனித இனம் எதிர்கொள்ளத் தொடங்கியிருக்கிறது. காடுகளை அழித்ததால், பல்லுயிர்ப் பெருக்கம் தடைபட்டிருக்கிறது. பல உயிர்கள் அருகிப்போய்விட்டன. இயற்கை சமநிலை சீர்குலைந்துவிட்டது.

மாணவர்களுடன் திலகவதி
மாணவர்களுடன் திலகவதி
படம்: நா.ராஜமுருகன்

அதேபோல், மயில் உள்ளிட்ட சில உயிர்கள் பெருகிவிட்டன. ஓர் உயிரினம் அழிவது எப்படி இயற்கை சமநிலைக்கு தீங்கோ, அதேபோல் ஓர் உயிரினம் பெருகுவதும் இயற்கை சமநிலைக்கு ஊறுசெய்யும் விஷயம்தான். அப்படி, இயற்கை சமநிலைக்குக் காரணமான இட்டேரி வழித்தடம், உயிர்வேலி, அதையொட்டி வாழும் உயிரினங்கள் எனப் பல விஷயங்களில் மாணவர்களுக்கு, இயற்கை சார்ந்து தெளிவு ஏற்படுத்தி வருகிறார், அரசுப் பள்ளி ஆசிரியை ஒருவர்.

கரூர் மாவட்டம், காந்தி கிராமத்தில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இடைநிலை ஆசிரியையாகப் பணியாற்றிவரும் திலகவதிதான் அந்த ஆசிரியை. தனது பள்ளி மாணவர்களுக்கு மட்டுமன்றி, சில தனியார் பள்ளி மாணவர்களுக்கும் இயற்கை குறித்த பல புரிந்துணர்வுகளை ஏற்படுத்தி வருகிறார். நேரடியாக மாணவர்களைக் களத்துக்கு அழைத்துச் சென்று, அவர்களுக்கு இயற்கை குறித்த பாடத்தைப் போதித்து வருகிறார்.

உயிர்வேலி பற்றி மாணவர்களிடம் விளக்கும் திலகவதி
உயிர்வேலி பற்றி மாணவர்களிடம் விளக்கும் திலகவதி
படம்: நா.ராஜமுருகன்
500 மரக்கன்றுகள், 1000 பனை விதைகள்... வறட்சி கிராமத்தை `பசுமை'யாக்கும் கரூர் இளைஞர்கள்!

கரூரில் இயற்கை சூழ்ந்த சுமார் 50 ஏக்கர் நிலப்பரப்பில் கிட்டத்தட்ட 30 வருடங்களாக இயங்கி வரும் மகளிர் கலைக்கல்லூரிக்கு, தனது பள்ளி மாணவர்கள் மற்றும் தனியார் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் என்று 30-க்கும் மேற்பட்ட மாணவர்களைத் திலகவதி அழைத்துப்போனார். அவருடன் நாமும் சென்றோம்.

இந்தக் கல்லூரி வளாகத்தில் ஏராளமான பறவைகள், மயில்கள், உடும்பு, காட்டுப்புறாக்கள், பசுக்கள், ஆடுகள், வாத்துகள் உள்ளிட்ட உயிரினங்கள் வாழக்கூடிய இயற்கைசூழல் உள்ளது. அங்கு மாணவர்கள் உயிர்வேலி, இட்டேரித்தடம், பல்லுயிர் பெருக்கத்திற்கான சூழல் தேவைகள் ஆகியவற்றை அறியும்பொருட்டு களத்தில் நேரடிக் கற்றலில் ஈடுபட்டனர்.

சிறு உயிரினம்
சிறு உயிரினம்
படம்: நா.ராஜமுருகன்

அங்கு 50-க்கும் மேற்பட்ட மயில்கள் இருந்தன. அதைப் பார்த்த ஆசிரியை திலகவதி, ``கிராமத்தில் உள்ள இயற்கையை அழித்துவிட்டோம். அதனால், மயில் உள்ளிட்ட பல பறவைகள், உணவிற்காக நகர்ப்புறத்துக்கு நகர்ந்து வருகின்றன. மரங்களை நட்டுப் பராமரிப்பது, வனங்களைப் பராமரிப்பது மட்டுமல்லாது, வன உயிர்களை பாதுகாப்பதும் நமது கடமை" என்று கூறினார். மாணவர்கள் மயில்களுக்கும் காட்டுப் புறாக்களுக்கும் அரிசி, சிறுதானியங்களை உணவாக அளித்தனர்.

நம்மிடம் பேசிய ஆசிரியை திலகவதி, ``காடும்,காடுசார்ந்த நிலப்பரப்பும் முல்லை. இதில் வாழக்கூடிய கோழி இனத்தைச் சேர்ந்த மிகப்பெரிய பறவை மயில். இது மனிதர்களையொட்டி வாழக்கூடிய பறவை இல்லை. ஆனால், இன்றோ மயில்கள் நாம் வாழும் இடத்திற்கும், விளைச்சல் செய்யக்கூடிய வயல்வெளிகளுக்கும் அதிகமாக வரத்தொடங்கியுள்ளன. இதற்குக் காரணம், மயில் இனம் கணக்கு வழக்கில்லாமல் பெருகியதுதான். இப்படி மயில்கள் பெருகுவதற்குக் காரணம் காடுகள், பல்லுயிர்கள் வாழக்கூடிய இட்டேரி வழித்தடங்கள் அழிக்கப்பட்டதே.

இட்டேரி வழிகளில் சிறு, குறுஞ்செடிகள் வளர்ந்திருக்கும். இது புதர் போன்று காணப்படும். அதை உயிர்வேலி என்றும் சொல்லலாம். இதில் பாம்பு, அரணை, பல்லிகள், ஓணான், சிறு பூச்சிகள், குள்ளநரிகள் எனப்பல்வேறு உயிரினங்கள் வாழும். ஓர் உயிரினம் மற்ற உயிரினத்தை சாப்பிட்டு, உயிர்சங்கிலியை சமநிலையில் வைத்திருக்கும். அங்குள்ள சிறு பூச்சிகளை உண்டு வாழ்ந்தன மயில்கள். மயில் முட்டைகளை குள்ளநரி சாப்பிடும். இப்படி ஒரு விலங்கின் சமநிலையை மற்றொரு விலங்கினம் அல்லது பறவையினம் கட்டுப்படுத்தி வைத்திருந்தது.

திலகவதி
திலகவதி
படம்: நா.ராஜமுருகன்

ஆனால், நாம் இட்டேரி, உயிர்வேலிகளை அழித்துவிட்டோம். கம்பிகளில் வேலிகள் அமைத்ததால், மயில்கள் இப்போது பெருகிவிட்டன. மனிதன் செய்த மிகப்பெரிய தவறு இது. விலங்குகளை மனிதன் பாதுகாக்க வேண்டாம். விலங்குகளை நாம் பாதுகாக்க வேண்டிய அவசியமெல்லாம் இல்லை. மனிதனின் வாழ்வியல் சூழலுக்கு முக்கியக் காரணியாக இருந்து, விலங்குகள்தான் மனிதர்களை பாதுகாத்து வருகின்றன. மனிதன் விலங்குகளை பாதுகாக்கவில்லை என்றாலும், அவற்றின் அழிவுக்குக் காரணமாக இல்லாமல் இருந்தாலே போதும்.

இயற்கையும், விலங்குகளும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்த சூழலே மனிதர்களின் வாழ்வியல் சூழலை சிறப்பாக வழிநடத்துகிறது. நாம் நம் இந்தியாவில் உள்ள விலங்கினங்களைப் பற்றி அறிந்து கொள்வது அவசியம். நம் நாட்டின் மொத்தக் காடுகளின் பரப்பளவு 6 லட்சம் ச.கி.மீட்டர். இதில் சுமார் 89,450-க்கும் மேற்பட்ட விலங்கு இனங்கள் வாழ்வதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இது உலகில் காணப்படும் விலங்கினங்களில் 7.31% ஆகும். இவற்றில், 372 வகை பாலூட்டி இனங்களும், 1,330 வகை பறவை இனங்களும், 399 வகை ஊர்வன இனங்களும், 60,000 பூச்சி இனங்களும், 181 வகை நிலம் மற்றும் நீரில் வாழும் விலங்குகளும், 1,693 மீன் இனங்களும் உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

உயிர்வேலி பற்றி மாணவர்களிடம் விளக்கும் திலகவதி
உயிர்வேலி பற்றி மாணவர்களிடம் விளக்கும் திலகவதி
படம்: நா.ராஜமுருகன்

நாம் வாழ்வதற்கு, விலங்குகள் வாழ்வது மிக அவசியம். ஏனெனில், விலங்குகள் நம் உயிர் சூழல் தொகுப்பின் ஓர் அங்கம்'' என்றவர்,

``நம் அடுத்த சந்ததிகளான மாணவர்களிடம் இதுகுறித்த போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அதற்காகத்தான், மாணவர்களுக்கு இயற்கை, உயிர்வேலி, இட்டேரி தடம், விலங்குகள், பறவைகள் என்று சூழல் சார்ந்த அறிவை போதித்து வருகிறேன். அவர்கள் மனதில் அந்த விஷயங்களை பசுமரத்தாணியாகப் பதிய வைக்க ஏதுவாக, மாணவர்களை நேரடியாகக் களத்துக்கு அழைத்துப்போய், அவர்களுக்கு இயற்கை குறித்த பலவற்றையும் புரிய வைக்கிறேன். நாம் சீரழித்த இயற்கையை, அடுத்த சந்ததியினரைக் கொண்டு மீட்க முயல வேண்டும். அதற்காகத்தான் இந்த முயற்சி. மாணவர்களுக்குத் தேவையான இந்தப் பாடத்தைத் தொடர்ந்து போதிப்பேன்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு