Published:Updated:

`2 லட்சம் பனைவிதைகள்... எல்லோருக்கும் இலவசம்!' - வறண்ட கிராமங்களை வளமாக்க நினைக்கும் மனிதர்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பனைவிதைகளை வழங்கும் சாதுராஜன்
பனைவிதைகளை வழங்கும் சாதுராஜன் ( நா.ராஜமுருகன் )

2 லட்சம் பனை விதைகளையும் மலைபோல் குவித்து வைத்து, அதைக் கேட்பவர்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறார் கரூர் மாவட்டம், க.பரமத்தி ஒன்றியத்தில் உள்ள கோடந்தூரைச் சேர்ந்த சாதுராஜன்.

கரூர் மாவட்டம், க.பரமத்தி ஒன்றியத்தில் உள்ள கோடந்தூரைச் சேர்ந்தவர் `ராஜயோகம்' சாதுராஜன். அந்தக் கிராமத்தில் உள்ள ராஜலிங்கமூர்த்தி கோயில் முன்பு உள்ள திடலில், 2 லட்சம் பனை விதைகளையும் மலைபோல் குவித்து வைத்து, அதைக் கேட்பவர்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறார். கோடந்தூர் கிராமத்தில் தன் பங்குக்கு சில பனை விதைகளை விதைத்து, இந்த அற்புதப் பணியைத் தொடங்கியிருக்கிறார். `ராஜயோகம்' சாதுராஜனை சந்தித்துப் பேசினோம்.

 மலைபோல் பனைவிதைகள்
மலைபோல் பனைவிதைகள்
நா.ராஜமுருகன்

``சைக்கிள் மார்ட், பர்னிச்சர் கடைனு கரூர்ல அப்பா காலத்துலேயே செட்டிலாயிட்டோம். ஆனா, எனக்கு பூர்வீகம் கோடந்தூர்தான். நான் படிக்கிற காலத்துல கோடந்தூரில் 10,000-க்கும் மேற்பட்ட பனை மரங்கள் இருந்துச்சு. கரூரிலேயே அதிக பனை மரங்கள் உள்ள ஊரா எங்க ஊர்தான் அப்போ பேர் பெற்று விளங்குனுச்சு. நான் சிறுவனமா இருக்கும்போது, பனை மரத்துல ஏறி நுங்கு பறிப்பது, பனை மட்டையில காத்தாடி செஞ்சு விளையாடுறது, பனைமரத்துல இறக்குன கள்ளை அப்படியே மிச்சம் வைக்காம கடகடன்னு குடிக்கிறதுனு, பனையோடு இணைஞ்ச வாழ்க்கை வாழ்ந்தேன்.

வீட்டுக்கு வீடு அப்போ பனை மரங்கள் இருந்ததால, கடந்த 70 வருஷத்துக்கு முன்னால திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வீரசோழபுரத்தில் போய், மரம் ஏற நாடார் குடும்பங்களை அழைச்சுட்டு வந்திருக்காங்க. அவங்க நிரந்தரமா எங்க ஊர்ல தங்குறதுக்காக, ஊர் விவசாயிகள் அனைவரும் அவங்களுக்கு 40 ஏக்கர் நிலம் கொடுத்திருக்காங்க. பதனி இறக்குறது, கருப்பட்டி தயாரிக்கிறது, வீடு முடைய பனை மட்டைகளைப் பயன்படுத்துறனு பனை சார்ந்துதான் எங்க ஊர் பொருளாதாரமே இருந்துச்சு. ஆனா, காலப்போக்கில் கொஞ்சம் கொஞ்சமா பனை அழிக்கப்பட்டு, கடந்த 15 வருஷத்துக்கு முன்னாடி, எங்க ஊர்ல சுத்தமா பனை மரங்கள் அழிஞ்சுப்போச்சு.

  'ராஜயோகம்' சாதுராஜன்
'ராஜயோகம்' சாதுராஜன்
நா.ராஜமுருகன்
மாணவர்களுக்கு இயற்கை விவசாய விழிப்புணர்வு, கல்லூரியில் 50 சென்ட் தோட்டம்... கலக்கும் தாளாளர்!

ஊர்ல தங்கியிருந்த நாடார் குடும்பங்களும் மாத்துபொழப்பைத் தேடி வெளியூர்களுக்கு போயிட்டாங்க. எங்க குடும்பமும் விவசாயக் குடும்பம்தான் என்றாலும், அப்பா சௌண்டப்பன் காலத்திலேயே கரூர்ல போய் சொந்தமா தொழில் பண்ணினாங்க. தொழிலை பெருசா டெவலெப் பண்றதுல நானும் யோசிச்சதால, ஊரைப் பத்தி பெருசா யோசிக்கலை. ஆனா, கடந்த 8 வருஷத்துக்கு முன்பு, ஊர் ரொம்ப வறட்சியா போனதைக் கேள்விப்பட்டு, நொந்துபோயிட்டேன். கடந்த நாலு வருஷமா தமிழகத்திலேயே அதிகமா வெயில் அடிக்கிற பகுதியா க.பரமத்தி பகுதி மாறிட்டு.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதுக்கு காரணம், இங்கு மரங்கள் குறைஞ்சுபோய், கல் குவாரிகள் பெருகியதுதான். அதனால், எங்க ஊரை பழையபடி பனை மரங்கள் நிறைஞ்ச ஊரா மாத்த நினைச்சேன். அதுக்காக, கடந்த எட்டு வருஷமா பனை விதைகள் வாங்க பல பகுதிகளிலும் முயற்சி பண்ணினேன். ஆனா, இரண்டு லட்சம் பனை விதைகள் ஒரே இடத்துல சேர்ந்தாப்புல கிடைக்கலை. இரண்டு வருஷமா கடுமையா முயற்சி பண்ணி, ஒரு மாசத்துக்கு முன்னாடி திருநெல்வேலி மாவட்டத்துல உள்ள ஓர் ஊர்ல, ஒரு கொட்டை ஒரு ரூபானு இரண்டு லட்சம் பனைவிதைகளை வாங்கி, லாரியில் ஏத்திக்கிட்டு வந்தேன். ஊர் பொது இடத்துல விதைக்க நினைச்சேன். ஆனா, எப்படி விதைச்சாலும், அதிகப்பட்சம் ஊர் சாலைகளின் ஓரங்களில் 12,000 விதைகள் மட்டுமே விதைக்க முடியும்னு தெரியவந்துச்சு.

முன்னூர் ஊராட்சியில் பனை விதைப்பு
முன்னூர் ஊராட்சியில் பனை விதைப்பு
நா.ராஜமுருகன்

அதனால, கோயிலுக்கு முன்பு கொட்டி வச்சுக்கிட்டு, வறட்சி மிகுந்த பகுதியாக உள்ள க.பரமத்தி, அரவக்குறிச்சி, கடவூர் ஒன்றியங்களைச் சேர்ந்த யாரும் பனை விதைகளை இலவசமா வாங்கிகிட்டு போகலாம்னு அறிவிச்சேன். பலரும் ஆர்வமா வந்து வாங்கிட்டுப் போறாங்க. தென்னிலை கீழ்பாகம், மேல்பாகம், க.பரமத்தி, முன்னூர், குப்பம்னு பல ஊராட்சிகளின் சார்பில் வந்து 2,000, 5,000-ம்னு பனைவிதைகள் வாங்கிட்டுப் போறாங்க. அதேபோல், தனிநபர்களும் விவசாயிகளும், இயற்கை ஆர்வலர்களும் தேவையான பனை விதைகளை வாங்கிட்டுப் போறாங்க. இதுவரை, ஒண்ணேமுக்கால் லட்சம் பனைவிதைகள் தீர்ந்துட்டு" என்றவர், ``கொஞ்ச நேரம் வெயிட் பண்ணுங்க" என்றபடி சென்றார். பனை விதைகள் வாங்க வந்திருந்த அனைவருக்கும் பழங்கள், டீ, போண்டா என்று தனது செலவில் தயார் செய்து, உபசரித்தார்.

பிறகு வந்து நம்மிடம் தொடர்ந்து பேசிய சாதுராஜன்,

``பனை மரங்களை தரிசு நிலங்களிலும் பயிரிடலாம். அதேபோல், பனை மரத்தால் ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கும். மரம் ஒன்று, பூமிக்கு அடியில் 2,000 லிட்டர் தண்ணீரை தேக்கி வைக்கும்னு சொல்றாங்க. அதேபோல, மழையை ஈர்த்து பொழிய வைக்கும் ஆற்றல் பனைக்கு உண்டு. பனம்பழம் ஜூஸ், க்ரீம், நுங்கு, நுங்கு பாயசம், கருப்பட்டி, கள், பதநீர், உத்தரத்துக்கு பனைமரங்கள், வீடுகட்ட தேவையான பொருள்கள், விசிறி, கூடை மாதிரியான பொருள்கள்னு பனையால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம்.

பனைவிதைகளை வண்டியில் ஏற்றும்போது...
பனைவிதைகளை வண்டியில் ஏற்றும்போது...
நா.ராஜமுருகன்

கரூர் மாதிரி வானம் பார்த்த பூமியைக் கொண்ட நிலங்களில் பனைகளை நட்டால், இந்தப் பகுதி வளமாகும். அதேபோல, சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறையும். புயலைக்கூட பனைமரங்கள் தடுக்கும். பல கிராமங்களில் வருமானத்துக்காக நகர்ப்புறங்களுக்கு குடிபெயர்றாங்க. ஒவ்வொரு கிராமத்திலும் 20 வீடுகள் சும்மா பூட்டியே கிடக்கு. ஊருக்கு ஊர் பனை மர வளர்ப்பை அதிகப்படுத்தினால், அவர்கள் எல்லோரும் கிராமத்துக்கு திரும்பும் சூழல் ஏற்படும்.

புதிதாகப் பனைவிதைகளை நட தயங்கும் பலரும், இருக்கும் பனை மரங்களையும் அழிக்கிறாங்க. அதனால், `இருப்பதை காப்போம்; வருவதை வளர்ப்போம்'னு பனை இயக்கமாகவே நடத்தலாம்னு முடிவெடுத்திருக்கிறேன். வரும் வருஷமும் ஒரு லட்சம் பனைவிதைகளை வாங்கி இலவசமாகக் கொடுக்க இருக்கிறேன். வறட்சி அதிகமா நிலவும் க.பரமத்தி, அரவக்குறிச்சி, கடவூர் ஒன்றியங்களில் உள்ள தரிசு நிலங்களை பயனுள்ள நிலங்களாக மாற்ற முயற்சி பண்ண இருக்கிறேன். என் சார்பாக, என் வாழ்நாளுக்குள் அதிகபட்சம் ஒரு கோடி பனைவிதைகளை வாங்கி, அனைவருக்கும் கொடுக்கணும்னு நினைக்கிறேன்.

மலைபோல் பனைவிதைகள்
மலைபோல் பனைவிதைகள்
நா.ராஜமுருகன்

என் வருமானத்தில் அதுக்காகப் பெரிய பங்கை செலவிட இருக்கிறேன். அதேபோல், ஒரு ஏக்கரில் பனை விதைகளை நட ஆர்வம் காட்டும் விவசாயிகளுக்கு, என் சார்பாக அதற்கான பனை விதைகளை இலவசமாகக் கொடுத்து, அவர்களை ஊக்கப்படுத்த ரூ.1,000-த்தையும் பரிசா தர்றதா அறிவிச்சுருக்கேன். அங்கங்கே பனைக்காடுகளை பார்க்கிற வரைக்கும் ஓயமாட்டேன்" என்று உறுதியான வார்த்தைகளில் கூறி முடித்தார்.

சாதுராஜனிடம் பனை விதைகள் வாங்கிச் செல்ல வந்திருந்த, தென்னிலை கீழ்பாகம் ஊராட்சிமன்றத் தலைவியான சௌந்தரத்திடம் பேசினோம்.

``எங்க ஊராட்சி மிகவும் வறட்சியான ஊராட்சி. மழை இங்கு அதிகம் பெய்யாது. வானம் பாத்த்த பூமி. இதனால, விவசாயிகள் அதிகம் வெள்ளாமை செய்ய முடியாது. தரிசாகக் கிடக்கும் நிலங்களில் ஆடு, மாடுகளை மேய்ச்சு, சம்சாரிகள் காலத்தை தள்ளிக்கிட்டு வர்றாங்க. எங்க ஊராட்சியில் உள்ள ஏரி, குளங்கள், கண்மாய்களெல்லாம் நிரம்பி, பத்து வருஷத்துக்கு மேல் ஆகுது. அதனால், நான் ஊராட்சி மன்றத் தலைவரானதும், எங்க ஊர் இயற்கை சூழலை சிறப்பாக்க, மரக்கன்றுகள் நடத்தொடங்கினேன். இந்தச் சூழல்லதான், சாதுராஜன் சார் இலவசமா பனை விதைகள் தர்றதைக் கேள்விப்பட்டு, அவர்கிட்ட 4,000 பனை விதைகளை வாங்கிகிட்டுப் போகப் போகிறேன்.

சௌந்தரம்
சௌந்தரம்

அதை, எங்க ஊராட்சியில் உள்ள எல்லா ஏரி, குளம், கண்மாய், வாய்க்கால் கரைகள், சாலை ஓரங்கள் என்று நட்டு, அத்தனை விதைகளையும் மரமாக்குவேன். சாதுராஜன் சார் பனைவிதைகளை மட்டும் தராமல், எங்களுக்கு இயற்கை குறித்த பெரிய புரிதலையே ஏற்படுத்தியிருக்கிறார். வறண்ட எங்க ஊராட்சியை அவர் காட்டிய வழியில் நின்று, பசுமையாக்கி காட்டுவேன்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு