Published:Updated:

கரூர்: `500 பனைவிதைகள் விதைச்சாச்சு; 2,500 விதைகள் ரெடி' - களமிறங்கிய நாம் தமிழர் கட்சியினர்

பனைவிதைகள் விதைக்கும் இளைஞர்கள்
பனைவிதைகள் விதைக்கும் இளைஞர்கள் ( நா.ராஜமுருகன் )

'வருங்காலச் சந்ததியினருக்கு, குளித்தலைப் பகுதியைச் சுற்றி பார்க்கும் இடங்களில் எல்லாம் பனைமரங்களைப் பார்க்கும் பாக்கியத்தை ஏற்படுத்துவதே, எங்களின் இந்தத் தொடர் பனைவிதை விதைக்கும் முயற்சியின் நோக்கம்.’

வறட்சிமிகு பகுதியான தோகைமலையில் உள்ள பெரிய குளத்தில், பசுமையான சூழலைக் கட்டமைக்க ஏதுவாக, 400 பனைவிதைகளை விதைத்து அசத்தியிருக்கிறார்கள், நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த இளைஞர்கள்.

 பனைவிதைகள் விதைத்த இளைஞர்கள்
பனைவிதைகள் விதைத்த இளைஞர்கள்
நா.ராஜமுருகன்

கரூர் மாவட்டம், குளித்தலை ஒன்றியத்தில் இருக்கிறது தோகைமலை. மிகவும் பின்தங்கியப் பகுதியான இந்தப் பகுதியில் இருக்கும் நீர்நிலைதான் பெரிய குளம். தோகைமலை பகுதியில் சரிவர மழை பெய்யாத காரணத்தால், இந்தப் பெரிய குளம் பெரும்பாலும் வறண்டே கிடக்கும்.

கரூர்: `கிரீன் குளித்தலை சேலஞ்ச்; 60 கிராமங்களில் மரக்கன்றுகள்!’ அசத்தும் விஜய் ரசிகர்கள்

இந்தநிலையில், சமீபத்தில் இங்கே சிறிதளவு மழை பெய்ய, இந்தக் குளம் சிறிதளவு நிரம்பி, இங்குள்ள விவசாயிகள் மனதில் கொஞ்சம் நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது. `இப்போதே மழை பெய்கிறது. ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் மழை இன்னும் கூடுதலாகப் பெய்து, இந்தப் பெரிய குளம் நிரம்ப வாய்ப்பிருக்கிறது' என்று மகிழ்ந்துபோயிருக்கிறார்கள் விவசாயிகள். இந்த நிலையில், மரங்கள் ஏதுமின்றி வறண்டுகிடக்கும் இந்தப் பெரிய குளத்தில், 500 பனைவிதைகளை விதைத்து அசத்தியிருக்கிறார்கள், நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த இளைஞர்கள்.

பனைவிதைகள் சேகரிப்பு
பனைவிதைகள் சேகரிப்பு
நா.ராஜமுருகன்

அந்தக் கட்சியைச் சேர்ந்த குளித்தலை சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த நிர்வாகிகள், தோகைமலை ஒன்றிய நிர்வாகிகள், நாம் தமிழர் கட்சியின் உப அமைப்புகளான சுற்றுச்சூழல் பாசறை, வீரத்தமிழர் முன்னணி உள்ளிட்டப் பிரிவுகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கூடி, இந்தப் `பனைவிதை விதைப்பு மேளா'வை நடத்தி, பெரிய குளத்தின் சுற்றுச்சூழலை பெருக்கும் காரியத்துக்குப் பிள்ளையார்சுழி போட்டிருக்கிறார்கள்.

கோவை:`1 லட்சம் பனை விதைகள்; 2 ஆண்டு காத்திருப்பு!' -துளிர்த்தெழும் குளக்கரைகள்

இதுகுறித்து, நாம் தமிழர் கட்சியின் குளித்தலை சட்டமன்றத் தொகுதியின் பொருளாளர் கோபியிடம் பேசினோம்.

``எங்கள் கட்சி சார்பில் குளித்தலைப் பகுதியைச் சுற்றி தொடர்ந்து பனைவிதைகளை விதைத்து வருகிறோம். கடந்த வருடம், ஒரு லட்சம் பனைவிதைகளை விதைத்தோம். தமிழகத்திலேயே மூன்றாவது பெரிய ஏரியான பஞ்சப்பட்டி ஏரியில் கடந்த வருடம் 1,500 பனைவிதைகளை விதைத்தோம். தொடர்ந்து, குளித்தலை தொகுதி முழுவதையும் பசுமைப் போர்த்திய இயற்கை சீரமைப்புள்ள பகுதியாக மாற்றும் முயற்சியில் இறங்கி, ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகிறோம்.

கோபி
கோபி
நா.ராஜமுருகன்

இந்தச் சூழலில்தான், தோகைமலைப் பகுதியில் உள்ள பெரிய குளத்தில் 500 பனைவிதைகளை விதைத்திருக்கிறோம். நூற்றுக்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சித் தொண்டர்கள் இந்த நிகழ்வில் பங்கெடுத்துக்கிட்டோம். வரிசையாக நின்று, தகுந்த முறையில் பனைவிதைகளை விதைத்தோம்.

``நாலு பனைமரத்தை நட்டுட்டுப் போங்க... உங்க சந்ததி நல்லா இருக்கும்!'' - `பனை' பாண்டியன்

தோகைமலை பெரிய குளத்தில் பனைவிதைகளை விதைத்த கையோடு, பரளிங்கிற கிராமத்தில் உள்ள குளத்தில் 50 பனைவிதைகளை விதைத்தோம். கூடவே, அந்தக் கிராமத்திலேயே 20 மரக்கன்றுகளை நட்டோம். திருச்சி மாவட்டம், முசிறி பகுதியில் போய் தேவையான பனை விதைகளைப் பொறுக்கி, அதை உலர்த்தி, விதைகளாக தயார்படுத்துகிறோம். அவற்றைதான், தேவையான இடங்களில் விதைக்கிறோம். மேற்கொண்டு, 2,500 பனைவிதைகளை சேகரித்துக் கையிருப்பு வைத்துள்ளோம்.

பனைவிதைகள் விதைக்கும் இளைஞர்கள்...
பனைவிதைகள் விதைக்கும் இளைஞர்கள்...
நா.ராஜமுருகன்

அதைக் குளித்தலைப் பகுதியில் உள்ள கண்மாய்கள், குளம், ஏரி கரைகளில் விதைக்க இருக்கிறோம். வருங்காலச் சந்ததியினருக்கு, குளித்தலைப் பகுதியைச் சுற்றிப் பார்க்கும் இடங்களில் எல்லாம் பனைமரங்களைப் பார்க்கும் பாக்கியத்தை ஏற்படுத்துவதே, எங்களின் இந்தத் தொடர் பனைவிதை விதைக்கும் முயற்சியின் நோக்கம். அப்படி, `எங்கெங்கு காணினும் பனைமரங்களடா' என்ற நிலையை உருவாக்கும்வரையில், ஓயமாட்டோம்" என்றார் உறுதியாக.

அடுத்த கட்டுரைக்கு