Published:Updated:

சுற்றியும் வறட்சி; ஆனால், இவர் தோட்டம் மட்டும் சோலைவனம்... கரூர் ஆய்வாளரின் `பலே' பராமரிப்பு!

பனைவிதைகளோடு மனோகரன்
பனைவிதைகளோடு மனோகரன் ( நா.ராஜமுருகன் )

வருங்கால சந்ததிக்கு நல்ல சூழலையும் கருப்பட்டி, நொங்கு, பதநீர், பனைபழம், வீடுகட்ட தேவையான பனைபொருள்கள் என்று பனை சம்பந்தப்பட்ட பல்வேறு பொருள்களையும் விட்டுச் செல்லணும்னு நினைக்கிறேன்.

"எங்க பகுதியே வறட்சியான பகுதி. இந்தப் பூமியில்தான், கிடைக்கிற சொற்ப தண்ணீரை வச்சு, செம்மையா இயற்கை விவசாயம் பார்த்துக்கிட்டு இருக்கேன். இந்தப் பகுதியில் இயற்கையை மீட்டெடுக்கவும் பனைக்காட்டை உருவாக்கவும், என் தோட்டத்தில் 2,500 பனைவிதைகளை நட்டிருக்கேன். அதை கண்ணும் கருத்துமாக வளர்த்து, இங்கு நீர்வளத்தைப் பெருக்குவேன்" என்று உறுதியாகப் பேசுகிறார், ஓய்வுபெற்ற காவல்துறை ஆய்வாளரான மனோகரன்.

பனைவிதைகளோடு மனோகரன்
பனைவிதைகளோடு மனோகரன்
நா.ராஜமுருகன்

கரூர் மாவட்டம், க.பரமத்தி ஒன்றியத்தில் இருக்கிறது, இவருக்கு சொந்தமான 'ஜெயகவின் இயற்கை வேளாண் பண்ணை.' மொத்தம் இவருக்கு 25 ஏக்கர் நிலமிருந்தாலும், அதில் 9 ஏக்கரில் வெள்ளாமை செய்கிறார். தமிழகத்திலேயே அதிகம் வெயில் அடிக்கும் பகுதியாக க.பரமத்தி, கடந்த மூன்று வருடங்களாகப் பதிவாகி வருகிறது. இதனால், இவரது தோட்டத்தைச் சுற்றி 'பாலைவன வறட்சி' தென்பட, இவரது தோட்டம் மட்டும் பசுமை போர்த்திய சோலைவனமாகக் காட்சி தருகிறது.

500 மரக்கன்றுகள், 1000 பனை விதைகள்... வறட்சி கிராமத்தை `பசுமை'யாக்கும் கரூர் இளைஞர்கள்!

அவர் தன் தோட்டத்தில் 110 மரங்களை வளர்த்து வைத்திருக்கிறார். அதில், ஆப்பிள், வாட்டர் ஆப்பிள், ருத்ராட்சம், திருவோடு, ஏரெழிஞ்சல், அவகாடோ, சீதா, பிஸ்தா உள்ளிட்ட அரியவகை மரங்களையும் வைத்து, வளர்த்து வருகிறார். தவிர, 29 வயதுடைய நாட்டு நெல்லி மரமும் 50 வயதுடைய இளவம் பஞ்சு மரமும் இவரது தோட்டத்தில் உள்ளன. அதோடு, 29 ரக நாட்டுக்கத்திரிகளைப் பயிர்செய்துள்ளார். 31 வகையான நாட்டுச்சுரைகளையும் வெள்ளாமை செய்துள்ளார். இந்தச் சூழலில்தான், பனைக்காட்டை உருவாக்கும்விதமாக அவரது தோட்டத்தில் 2,500 பனைவிதைகளை விதைத்திருக்கிறார்.

பனை விதைக்கும் மனோகரன்
பனை விதைக்கும் மனோகரன்
நா.ராஜமுருகன்

இதுகுறித்து, மனோகரனிடம் பேசினோம்.

"இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் மீதுள்ள ஈர்ப்பினால், இயற்கை விவசாயம் செய்துகிட்டு வருகிறேன். மா, பலா, நெல்லி, நாவல், கொய்யா என்று மரப் பயிர்களையும் காய்கறிகளையும் பூக்களையும் வெள்ளாமை பண்ணிக்கிட்டு வர்றேன். எங்க பகுதி மிகவும் வறட்சியான பகுதி. என் தோட்டத்தில் உள்ள கிணறு மூலம் சொட்டுநீர் பாசன முறையில் தண்ணீர் பாய்ச்சுகிறேன்.

நீர்மேலாண்மையை துல்லியமாகச் செய்வதால்தான், வறண்ட இந்தப் பிரதேசத்தில் என்னால் வெற்றிகரமாக விவசாயம் செய்ய முடியுது. இருந்தாலும், அவ்வப்போது தண்ணீர் பிரச்னை வாட்டும். பனைக்கு மழையை ஈர்க்கும் சக்தி உள்ளது. கிணற்றைச் சுற்றி 10 பனை மரங்களை நட்டு வளர்த்தால், கிணற்றில் தண்ணீர் வற்றாதுனு சொல்றாங்க.

பனைவிதைகளோடு மனோகரன்
பனைவிதைகளோடு மனோகரன்
நா.ராஜமுருகன்

அதனால், முதல்கட்டமாக 2,500 பனைவிதைகளை நட்டுள்ளேன். தொடர்ந்து பனைவிதைகளை அடுத்தடுத்த வருடங்களில் விதைத்து, பனைக்காட்டை உருவாக்க இருக்கிறேன். இதன்மூலம், வருங்கால சந்ததிக்கு நல்ல சூழலையும் கருப்பட்டி, நொங்கு, பதநீர், பனைபழம், வீடுகட்ட தேவையான பனைபொருள்கள் என்று பனை சம்பந்தப்பட்ட பல்வேறு பொருள்களையும் விட்டுச் செல்லணும்னு நினைக்கிறேன். கண்டிப்பாக என்னோட எண்ணம் நிறைவேறும்" என்றார் உறுதியாக.

அடுத்த கட்டுரைக்கு