Published:Updated:

பிளாஸ்டிக் பாட்டிலுக்குப் பதிலாக மூங்கில் குடுவை... கரூர் பள்ளி மாணவிகளின் கூல் யோசனை!

"இந்த மாநாட்டில் கலந்துகொண்டு வெல்வதன் மூலம், தமிழக மக்களிடம் மூங்கில் குடுவை பயன்பாட்டை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த நினைத்தோம். அதற்காகதான், இந்த புராஜெக்டை கையில் எடுத்தோம்."

மூங்கில் குடுவையுடன் ரிதன்யா, ஹேமஸ்ரீ
மூங்கில் குடுவையுடன் ரிதன்யா, ஹேமஸ்ரீ ( நா.ராஜமுருகன் )

'பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு மாற்றாக மூங்கிலில் பாட்டில் செய்து பயன்படுத்தலாம்' என்று, கரூர் மாணவிகள் இருவர் மூங்கிலில் பாட்டில் செய்து மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சியில் வைத்திருந்தது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. மாணவிகளின் இந்த முயற்சி மாவட்ட அளவில் சிறந்த ஒன்றாகத் தேர்வானதுடன், மாநில அளவிலான அறிவியல் கண்காட்சிக்கும் தேர்வாகியுள்ளது.

மூங்கில் குடுவை
மூங்கில் குடுவை
நா.ராஜமுருகன்
`ஒரு சொட்டுத் தண்ணீர்கூட வெளியில் கசியாது'- இயற்கையைக் காக்கும் மூங்கில் பாட்டில்கள்!

உலகமே இன்று பிளாஸ்டிக் குப்பைகளால் நிறைந்திருக்கிறது. ஆயிரம் வருடங்களைக் கடந்தாலும் மக்காத பிளாஸ்டிக்குகளை இந்த பூமிப்பந்தில் நாம் எங்கும் நிரப்பி வைத்திருக்கிறோம். இதனால், பிளாஸ்டிக்குகளால் ஏற்படும் தீமைகளை நாம் ஒவ்வொன்றாக அனுபவித்துக்கொண்டிருக்கிறோம். உலக அளவிலான சூழலியல் விஞ்ஞானிகள், பிளாஸ்டிக் குப்பைகளை அழிப்பது சம்பந்தமாக மூளையைக் கசக்கி யோசித்து வருகிறார்கள். பிளாஸ்டிக் பயன்பாட்டின் தீமைகளை உணர்ந்த தமிழக அரசும், கடந்த ஜனவரி 1-ம் தேதியில் இருந்து தமிழகத்தில் குறிப்பிட்ட மக்காத பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தடை விதித்தது. ஆனாலும், நம்மில் பலர் பிளாஸ்டிக் புட்டிகளில் அடைக்கப்பட்ட தண்ணீர் மற்றும் குளிர்பானங்களை வாங்கி அருந்திகொண்டுதான் இருக்கிறோம்.

இந்நிலையில்தான், கரூர் மாவட்டத்தில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் படிக்கும் ரிதன்யா மற்றும் ஹேமஸ்ரீ என்ற இரண்டு மாணவிகள், மூங்கிலில் பாட்டில் செய்து, 'பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு மாற்று' என்கிற தலைப்பில் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் காட்சிக்கு வைத்திருக்கிறார்கள். மாணவிகளின் இந்த முயற்சி மாவட்ட அளவில் தேர்வாகி, அடுத்து வரும் 17-ம் தேதி நடைபெற இருக்கும் மாநில அளவிலான போட்டியில் கலந்துகொள்ள தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அவர்களின் ஆசிரியர் ராஜசேகரன் வழிகாட்டுதலோடு, மாணவிகள் இருவரும் இந்த மூங்கில் தண்ணீர் குடுவையை வடிவமைத்திருக்கிறார்கள்.

ஆசிரியர் ராஜசேகரனுடன் மாணவிகள்
ஆசிரியர் ராஜசேகரனுடன் மாணவிகள்
நா.ராஜமுருகன்

'வாழ்த்துகள்' சொல்லி, தனியார் பள்ளி மாணவிகள் ரிதன்யா மற்றும் ஹேமஸ்ரீயிடம் பேசினோம்.

"காற்றைப்போல எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பிளாஸ்டிக் கழிவுகளால், இந்தப் பூமிபந்து குலுங்கிகொண்டிருக்கிறது. அதன் நேரடி பாதிப்புகளை இந்த மண்ணும், அதனை உருவாக்கிய மனித குலமும் ஒருசேர எதிர்கொள்கிறார்கள். கடலில் மனிதர்களால் குவிந்துள்ள பிளாஸ்டிக் கழிவுகளால், மீன் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்கள் உயிரிழந்துகொண்டிருக்கின்றன.

'இதுவரை குவிந்துள்ள பிளாஸ்டிக் கழிவுகளை எப்படிச் சூழலுக்கு கெடுதல் ஏற்படாமல் அழிப்பது' என்று உலக அளவிலான விஞ்ஞானிகள் யோசித்து வருகிறார்கள். அதனால், நாம் செய்ய வேண்டியது, 'இனி பிளாஸ்டிக்குகளைப் பயன்படுத்த கூடாது. அதற்கு மாற்றாக வேறு பொருள்களைப் பயன்படுத்த வேண்டும்' என்று உறுதிமொழி எடுத்து, அதை உடனே செயல்படுத்துவதுதான்.

மாவட்ட அளவில் பரிசு
மாவட்ட அளவில் பரிசு
நா.ராஜமுருகன்

அதனால்தான், தேசிய அறிவியல் குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக, நாங்க ரெண்டு பேரும் பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு மாற்றாக இந்த மூங்கில் குடுவைகளை உருவாக்கினோம். இதுமாதிரி ஏற்கனவே அஸ்ஸாம் மாநிலத்தில் உருவாக்கி, அந்த மாநில அரசு மூலம் மாநிலம் முழுக்க இதன் பயன்பாட்டை நடைமுறையில் கொண்டுவந்திருக்கிறார்கள்.

ஆனால், மூங்கில் குடுவை பற்றி தமிழகத்தில் பலரும் அறியாமல் இருக்கிறார்கள். அதனால், இந்த மாநாட்டில் கலந்துகொண்டு வெல்வதன் மூலம், தமிழக மக்களிடம் மூங்கில் குடுவை பயன்பாட்டை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த நினைத்தோம். அதற்காகதான், இந்த புராஜெக்டை கையில் எடுத்தோம். எங்கள் வழிகாட்டி, ஆசிரியர் ராஜசேகரன் சார், எங்களுக்கு முழு ஊக்கமும், ஆக்கமும் கொடுத்தார். எங்கள் பள்ளியில் ஓவிய ஆசிரியராக பணிபுரியும் ராஜசேகரன் சார், மூங்கில் குடுவையை நாங்கள் வடிவமைக்க பெரும் உதவிபுரிந்தார். எங்களின் இந்த முதல் முயற்சி, மாவட்ட அளவிலான போட்டியில் தேர்வாகி இருக்கு.

`பிளாஸ்டிக் ஃப்ரீ' என வரவேண்டும் - கூகுளுக்கு கடிதம் எழுதிய நீலகிரி ஆட்சியர்!

அடுத்து வரும் 17-ம் தேதி நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் கலந்துகொள்ள இருக்கிறோம். மாநில அளவிலும் வென்று, கண்டிப்பாக தேசிய அளவிலும் வெல்வோம். அதன்மூலம், பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு பதிலாக பெருவாரியான மக்களை இந்த மூங்கில் குடுவையை பயன்படுத்த வைப்போம். பிளாஸ்டிக் அரக்கனை ஒழிக்க எங்களால் ஆன சின்ன முயற்சி இது" என்றார்கள் மகிழ்ச்சியாக!

ஆல் தி பெஸ்ட், சிங்கப்பெண்களே!