Published:Updated:

`அதுகளுக்கு என்னைவிட்டால் ஆதரவில்லை!’-சிட்டுக்குருவிகளிடம் கரிசனம் காட்டும் பெண்

சிட்டுக்குருவி கூடுகளோடு வனிதா
சிட்டுக்குருவி கூடுகளோடு வனிதா ( நா.ராஜமுருகன் )

`எங்க பகுதி முழுக்க தினமும் 200-க்கும் மேற்பட்ட சிட்டுக்குருவிகள் பறக்குதுங்க. அதோடு, எண்ணற்ற பறவைகளும் வருகின்றன. கொரோனா ஊரடங்கு காலத்தில் மக்கள் நடமாட்டம் குறைந்ததால், பறவைகள் தண்ணீர் இன்றியும், உணவு இன்றியும் தவித்தன’.

இந்தக் கொரோனா ஊரடங்கு காலத்தில், மனிதர்களுக்கு ஏற்பட்டிருக்கும் பிரச்னையைத் தீர்க்கவே வழியில்லை. இந்த நிலையில், கரூர் மாவட்டத்தில் உள்ள ஓர் ஆசிரியை, தனது வீட்டைச் சுற்றி வசிக்கும் சிட்டுக்குருவிகள் உள்ளிட்ட பறவைகளுக்குத் தண்ணீர் வைப்பது, கூடு அமைப்பது, உணவு வைப்பது என்று ஜீவகாருண்யத்தோடு செயல்படுவது, அங்குள்ள மக்கள் மத்தியில் பாராட்டுகளைப் பெற்றுத் தந்திருக்கிறது.

தண்ணீர் வைக்கும் வனிதா
தண்ணீர் வைக்கும் வனிதா
நா.ராஜமுருகன்

கரூர் மாவட்டம், டி.செல்லாண்டிபாளையத்தைச் சேர்ந்த வனிதா என்பவர்தான், சிட்டுக்குருவிகளுக்கும் பறவைகளுக்கும் அடைக்கலம் தரும் அந்த ஆசிரியை. இவரும், இவரது கணவர் ராஜசேகரனும், கரூரில் உள்ள தனியார் பள்ளிகளில் ஆசிரியர்களாகப் பணிபுரிகிறார்கள்.

`நள்ளிரவில் பற்றியெரிந்த வைக்கோல் போர்!' - தீயணைப்பு வீரர்களோடு போராடி அசத்திய கரூர் இளைஞர்கள்

தனது வீட்டுப் பால்கனியில் சிட்டுக்குருவிகள் தங்குவதற்கு வைக்கப்பட்டிருந்த பானைகளில் கம்பையும் வீட்டு மொட்டை மாடியில் பறவைகள் அருந்த பாத்திரங்களில் நீரையும் வைத்துக்கொண்டிருந்த, வனிதாவிடம் பேசினோம்.

வனிதா கணவர் ராஜசேகரனுடன்..
வனிதா கணவர் ராஜசேகரனுடன்..
நா.ராஜமுருகன்

``விதை பரப்புதல், மகரந்தச் சேர்க்கைக்கு வழிபண்ணுதல், உணவுச் சங்கிலியில் முக்கியப் பங்குவகித்தல், இயற்கை சமநிலைக்கு ஒத்துழைத்தல் என்று இந்தச் சின்னஞ்சிறிய உயிரினமான சிட்டுக்குருவிகள் செய்யும் உதவிகள் அளவில்லாதவை. ஆனால், நமது வளர்ச்சி மோகம் அவை அழிவதற்குக் காரணமாயிட்டு. ஆனால், கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு, என்னோட வீட்டுச் சமையலறையில் உள்ள காற்றை வெளியேற்றும் ஃபேன் உள்ள துவாரத்தில் ஒரு சிட்டுக்குருவி கூடு கட்டியிருந்தது. அதைப் பார்த்ததும், நானும், என் கணவரும் குழந்தைகள்போல குதூகலமாயிட்டோம். அதுக்கு, தண்ணி, உணவெல்லாம் கொடுத்தேன்.

அதனால், அந்தக் குருவி கீச் கீச் ஒலியுடன் எங்க வீட்டுக்குள், வீட்டைச் சுத்தி உலா வந்துச்சு. உடனே, எங்க வீட்டுல சிட்டுக்குருவிகளுக்கு அடைக்கலம் கொடுக்க முடிவு பண்ணினேன். அவை வசிப்பதற்கு ஏதுவான பானைகளால் செய்யப்பட்ட கூடுகளை வாங்கிவந்து, வீட்டு பால்கனி, மொட்டைமாடின்னு பல இடங்களில் வைத்தேன். 50-க்கும் மேற்பட்ட பானைகளை வைத்ததோடு, அந்தப் பானைகளில் கம்பு, தினைன்னு உணவையும் வைத்தேன்.

வனிதா வீட்டில் சிட்டுக்குருவிகள்
வனிதா வீட்டில் சிட்டுக்குருவிகள்
நா.ராஜமுருகன்

வீட்டைச் சுத்தி அங்கங்கே சிறுசிறு பாத்திரங்களில் தண்ணீர் வைத்தோம். ஆரம்பத்துல, குருவிகள் வரலை. ஆனால், போகப்போக ஒவ்வொரு சிட்டுக்குருவியா எங்க வீட்டுக்கு வர ஆரம்பிச்சது. இப்போ, ஐம்பதுக்கும் மேற்பட்ட சிட்டுக்குருவிகளும், இருபதுக்கும் மேற்பட்ட அரியவகை பறவைகளும் வர ஆரம்பிச்சிருக்கு.

காலையிலும், மாலையிலும் அதிகமான சிட்டுக்குருவிகள் எங்க வீட்டுக்கு வரும். சிட்டுக்குருவிகள் எங்க வீட்டுக்கு அதிகம் வருவதால், பக்கத்து வீட்டுச் சிறுவர்கள் ஆர்வமுடன் வந்து பார்ப்பாங்க. எங்க பகுதி முழுக்க தினமும் 200-க்கும் மேற்பட்ட சிட்டுக்குருவிகள் பறக்குதுங்க. அதோடு, எண்ணற்ற பறவைகளும் வருகின்றன. கொரோனா ஊரடங்கு காலத்தில் மக்கள் நடமாட்டம் குறைந்ததால், பறவைகள் தண்ணீர் இன்றியும், உணவு இன்றியும் தவித்தன.

தண்ணீர் வைக்கும் வனிதா
தண்ணீர் வைக்கும் வனிதா
நா.ராஜமுருகன்

அதனால், என் வீட்டு மொட்டை மாடியில் நான்கு இடங்களில் சில்வர் பாத்திரங்களை வைத்து, அதில் தண்ணீர் ஊற்ற ஆரம்பித்தேன். அதோடு, கூடுதலாக கம்பு, தினை, ரேஷன் அரிசியை வாங்கி, பறவைகளுக்கும் சிட்டுக்குருவிகளுக்கும் வழங்கத் தொடங்கியிருக்கிறேன். நாம் பறவை இனங்களைப் பாதுகாக்க வேண்டும். இல்லையென்றால், பல இயற்கைச் சீர்கேடுகளை நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்’’ என்று எச்சரித்து முடித்தார்.

அடுத்த கட்டுரைக்கு