Published:Updated:

கரூர்: `அமராவதி ஆற்றுக்குள் கழிவுநீர் கால்வாய்?!' - கொதிக்கும் சமூக ஆர்வலர்கள்

அமராவதி ஆற்றுக்குள் கால்வாய் வெட்டும் பணி
அமராவதி ஆற்றுக்குள் கால்வாய் வெட்டும் பணி ( நா.ராஜமுருகன் )

`கரூர் மாவட்ட ஆட்சியர் மலர்விழி எங்கள் புகாரை மனுவாக அளிக்கச் சொன்னதால், அதன் அடிப்படையில் அவருக்கு புகார் மனுவும் அனுப்பப்பட்டிருக்கிறது. அப்படியும் அந்தக் கால்வாய் வெட்டும் பணி தொடர்ந்தால், மக்களைத் திரட்டிப் போராட்டத்தில் குதிப்போம்.''

`அமராவதி ஆற்றுக்குள் கரூர் நகரின் கழிவுநீரை சுத்திகரிக்காமல் அப்படியே திறந்துவிட ஏதுவாக, விதிகளை மீறி, 15 அடி அகலத்தில் கால்வாய் வெட்டிவருகிறார்கள். இதைப் பற்றி விசாரிக்கையில், கரூர் நகர சாக்கடைக் கழிவுநீரைச் சுத்திகரிப்பு செய்யாமல் நேரடியாக ஆற்றில் கலக்கும் முயற்சியாக இது இருக்கிறது. இதை மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, உடனே தடுக்க வேண்டும்" என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அபயக்குரல் எழுப்புகிறார்கள்.

அமராவதி ஆற்றுக்குள் கால்வாய் வெட்டும் பணி
அமராவதி ஆற்றுக்குள் கால்வாய் வெட்டும் பணி
நா.ராஜமுருகன்
கரூர்: `வாக்காளர் சேர்ப்பு விண்ணப்பம் அமைச்சர் வீட்டுக்கு அனுப்பப்பட்டதா?’ - பகீர் கிளப்பும் தி.மு.க

கரூர் நகராட்சியை ஒட்டி ஓடும் அமராவதி ஆறு, தொடர்ந்து சாயப்பட்டறை கழிவுகள் கலந்ததாலும், சாக்கடைநீர் கலந்ததாலும் மாசுபட்டு, யாரும் பயன்படுத்த முடியாத அவல நிலையில் இருக்கிறது. இந்தநிலையில், எந்தத் துறையின் அனுமதி இல்லாமலும், சட்ட விரோதமாக அமராவதி ஆற்றுக்கு உள்ளேயே ஒரு கால்வாய் வெட்டும் பணி நடந்துவருவதாக சொல்லப்படுகிறது. இது குறித்து, நம்மிடம் பேசிய காவிரி ஆறு பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான இராஜேஷ் கண்ணன்,

அமராவதி ஆற்றுக்குள் கால்வாய் வெட்டும் பணி
அமராவதி ஆற்றுக்குள் கால்வாய் வெட்டும் பணி
நா.ராஜமுருகன்

``அரசு அனுமதியின்றி யாரோ சிலர் சமூகச் சொத்தான, பொதுச் சொத்தான அமராவதி ஆற்றைச் சேதாரம் செய்துவருகிறார்கள். அரசுக் கட்டடங்களின் சுவரில் அனுமதியின்றி ஒரு சுவரொட்டி ஒட்டினால்கூட, வி.ஏ.ஓ-விடம் புகார் மனு வாங்கி, கைதுசெய்து சிறையில் அடைக்கும் காவல்துறையும், அரசும் இதைக் கண்டுகொள்ளாமல் வேடிக்கை மட்டும் பார்த்துவருகின்றன. அமராவதி ஆற்றுக்குள் கழிவுநீரைக் கலக்க கால்வாய் வெட்டும் பணியைத் தடுப்பதற்கான முயற்சியை நாங்கள் கடந்த இரண்டு நாள்களாக மேற்கொண்டுவந்தாலும், அரசு இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இதற்குத் துணைபோகிறது.

இதைப் பற்றி விசாரிக்கையில், கரூர் நகர சாக்கடைக் கழிவுநீரைச் சுத்திகரிப்பு செய்யாமல் நேரடியாக ஆற்றில் கலக்கும் முயற்சியாக இது இருக்கிறது. இன்று சுற்றுச்சூழல் பாதிப்புகளால் மிகக் கொடூரமான கொரோனா நோய் போன்றவற்றை மனிதகுலம் எதிர்கொண்டுவரும் நிலையில், கரூர் மாவட்டத்தில் புற்றுநோய், ஆஸ்துமா, மலட்டுத்தன்மை, தோல்நோய், தைராய்டு உட்பட பல எண்ணற்ற நோய்கள் பெருகுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திவருகிறார்கள். இது போன்ற செயல் அமராவதியையும், நொய்யல் போன்ற ஆற்றையும் சாகச் செய்வதோடு, கரூர் மாவட்ட மக்களையும் எண்ணற்ற நோய்களால் பாதிக்கும் அபாயம் இருக்கிறது. இதைத் தடுக்க பொதுமக்கள் அங்கு சென்றபோது, ஆளுங்கட்சியினர் சிலர் வந்து அவர்களை மிரட்டி அப்புறப்படுத்திவிட்டு, மேற்கொண்டு கால்வாய் வெட்டும் பணியைத் தொடரவைத்திருக்கிறார்கள்.

அமராவதி ஆற்றுக்குள் கால்வாய் வெட்டும் பணி
அமராவதி ஆற்றுக்குள் கால்வாய் வெட்டும் பணி
நா.ராஜமுருகன்

15 அடி அகலத்தில், சுமார் ஆறடி ஆழத்தில் கால்வாயை சட்டவிரோதமாக ஹிட்டாச்சிவைத்து வெட்டிக்கொண்டிருக்கிறாகள். நிவர் புயலை ஒட்டி அரசு விடுமுறை நாளான (25-11-2020) இன்றும், இப்போதும் வெட்டிக்கொண்டிருக்கிறார்கள். இது தொடர்பாக, பலரும் அதிகாரியிடம் பேசி எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், இன்று சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்த நாங்கள், கரூர் மாவட்ட ஆட்சித் தலைவரை அலைபேசியில் பேசி, இதன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரினோம். மாவட்ட ஆட்சியர் மலர்விழி எங்கள் புகாரை மனுவாக அளிக்கச் சொன்னதால், அதன் அடிப்படையில் அவருக்குப் புகார் மனுவும் அனுப்பப்பட்டிருக்கிறது. அப்படியும் அந்தக் கால்வாய் வெட்டும் பணி தொடர்ந்தால், மக்களைத் திரட்டி போராட்டத்தில் குதிப்போம்" என்றார் ஆவேசமாக!

இது குறித்து, கரூர் மாவட்ட ஆட்சியர் மலர்விழியிடம் பேசினோம். `கரூர் பசுபதீஸ்வரர் ஆலயத்தில் வரும் 4-ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கவிருக்கிறது. அதற்காக, அமராவதி ஆற்றில் தற்காலிகமாக கால்வாய் அமைக்கிறார்கள். காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கத்தினர் புகார் சொன்னதால், ஆர்.டி.ஓ-வைவிட்டு ஆய்வு பண்ணச் சொன்னேன். விதிமுறைகளை மீறாமல் பார்த்துக்கொள்ளச் சொல்லி, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறேன்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு