Published:Updated:

`100 ஆண்டுகளைக் கடந்த 15 புளிய மரங்கள்!' - கரூரில் விதிகளை மீறி வெட்டிச் சாய்த்த அதிகாரிகள்?

 வெட்டப்பட்ட மரம் முன்பு சமூக ஆர்வலர்கள்
வெட்டப்பட்ட மரம் முன்பு சமூக ஆர்வலர்கள்

இரவோடு இரவாக, 100 ஆண்டுகளைக் கடந்த 15 புளியமரங்களை நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் வெட்டிச் சாய்க்க, இருபதுக்கும் மேற்பட்ட சமூக ஆர்வலர்கள் அதற்கு எதிராகப் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

`சாலை விரிவாக்கத்துக்காக விதிமுறைகளை மீறி நூறாண்டுகளைக் கடந்த பழைமையான மரங்களை வெட்டிக்கிட்டு இருக்காங்க. ஏற்கெனவே கரூர் மாவட்டத்தில் 4 சதவிகிதம் மட்டுமே காடுகள் உள்ளன. மழைப்பொழிவும் குறைவாக உள்ளது. இப்படிப்பட்ட சூழலில் நூறாண்டுகளைக் கடந்த மரங்களை வெட்டிச் சாய்த்தால், நிலைமை இன்னும் மோசமாகும்" எனக் கொதிக்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

வெட்டப்பட்ட பழைமையான மரம்
வெட்டப்பட்ட பழைமையான மரம்

கரூர் மாவட்டம் முடக்குச் சாலையிலிருந்து புலியூர் வரை சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்ற உள்ளனர். இதற்காக, கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு, புலியூர் பகுதியின் சாலையில் இரண்டு பக்கங்களிலும் உள்ள 100 ஆண்டுகளைத் தாண்டிய புளிய மரங்கள் மற்றும் வேம்பு மரங்களை நெடுஞ்சாலைத் துறை வெட்டியது.

`சாப்பாட்டுக்கே வழியில்லை; ஈழத் தமிழர்களைப் புறக்கணிக்கிறாங்க!’- கொதிக்கும் நாம் தமிழர் கட்சியினர்

இதைக் கண்டு கொதித்த, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் போராட்டம் நடத்தினார்கள். அதன் விளைவாகப் பத்து மரங்கள் வெட்டப்பட்டதோடு, மரம் மட்டும் பணி நிறுத்தப்பட்டது.

வெட்டப்பட்ட பழைமையான மரம்
வெட்டப்பட்ட பழைமையான மரம்

இந்தச் சூழலில், கொரோனா பாதிப்பால் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதால், மரம் வெட்டும் வேலை தொடர்ந்து நடக்கவில்லை. இந்த நிலையில், இரவோடு இரவாக, 100 ஆண்டுகளைக் கடந்த வயதுடைய 15 புளியமரங்களை நெடுஞ்சாலைத் துறை வெட்டிச் சாய்க்க, அதற்கு எதிராகப் போராட்டம் நடத்தி வருகிறார்கள் சூழல் ஆர்வலர்கள்.

இது குறித்து, நம்மிடம் பேசிய வழக்கறிஞர் குணசேகரன்,

"ஏற்கெனவே கரூர் மாவட்டத்தில் மரங்களின் அளவு குறைவாக உள்ளது. இதில், சாலை விரிவாக்கம் என்ற பெயரில் பழைமையான மரங்களை நெடுஞ்சாலைத் துறை வெட்டிக்கொண்டு வருகிறது. முடக்குச் சாலையிலிருந்து புலியூர் வரை சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றப் போகின்றனர். இந்த விரிவாக்கத்துக்குச் சம்பந்தம் இல்லாத மரங்களையும் வெட்டுகின்றனர். அதோடு, டெண்டரில் எந்த எண்ணுள்ள மரத்தை வெட்டப் போறோம் என்பதையும் குறிப்பிடுவதில்லை.

குணசேகரன்
குணசேகரன்

இதனால், கணக்கு வழக்கில்லாமல் மரங்களை வெட்டுவதற்குத் திட்டம் போடுகின்றனர். எவ்வளவு அகலத்துக்குச் சாலையை விரிவாக்கம் செய்கிறார்களோ, அதற்குள் உள்ள மரங்களை மட்டும் வெட்டாமல், அதற்குத் தள்ளி வெளியில் நிற்கும் மரங்களையும் வெட்டிச் சாய்க்கின்றனர். ஏற்கெனவே, மூன்று மாதங்களுக்கு முன்பு, மரம் வெட்டுவதற்கு எதிராக நாங்கள் போராடினோம்.

அப்போது ஒவ்வொரு மரத்தையும் வெட்டி, அதைச் சுத்தமாக வெட்டி அப்புறப்படுத்திவிட்டுதான், அடுத்த மரத்தை வெட்டினார்கள். ஆனா இப்போது, எங்களால் எதிர்ப்பு வரும் என்பதால் இரவோடு இரவாக 15 மரங்களையும் ஒரேநேரத்தில் வெட்டிச் சாய்த்துவிட்டனர். அவர்கள் வெட்டிய ஒவ்வொரு மரமும் 6 மீட்டர் சுற்றளவு கொண்ட பெரிய மரங்கள். சாலைகளில் அந்த 15 மரங்களும் வெட்டிச் சாய்க்கப்பட்டு கிடந்ததைப் பார்த்து, அதிர்ச்சியடைந்துவிட்டோம். அனைவரும் ஒன்றுதிரண்டு, அங்கேயே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினோம்.

போராட்டம் நடத்திய சமூக ஆர்வலர்கள்
போராட்டம் நடத்திய சமூக ஆர்வலர்கள்

உடனே, நெடுஞ்சாலைத் துறை ஆர்.ஐ ராமசாமி என்பவர், எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். 'முன்பு நீங்க மரங்களை வெட்டுவதற்காக விட்ட டெண்டர் காலம் முடிந்துவிட்டது. இப்போ எந்த அடிப்படையில் மரம் வெட்டுகிறீர்கள். நாங்க கோர்ட்டுக்குப் போகணும். அதுவரை நீங்க வெட்டக் கூடாது' எனச் சொன்னோம். 'மறுபடியும் நாங்க ஆர்டர் வாங்கி வந்து வெட்டுறோம்' எனப் பதில் சொன்னார். இப்போதைக்கு மரங்கள் வெட்டப்படுவது தடுக்கப்படுகிறதே என நாங்கள் மகிழ்ந்தோம். கோர்ட் மூலமா நிரந்தரமா புலியூர் பகுதியில் மரங்கள் வெட்டப்படுவதைத் தடுப்போம்" என்றார் உறுதியாக.

`மரம் மட்டும் இல்லையென்றால்..!’ - ஹைதராபாத் கார் விபத்தை விவரிக்கும் ஆட்டோ ஓட்டுநர்

இது குறித்து, நெடுசாலைத் துறை ஆர்.ஐ ராமசாமியிடம் பேசினோம்.

"சாலை விரிவாக்கம் செய்வதற்காக மரங்களை வெட்டுறோம். அந்த மரங்கள் எல்லாம் பழைமையான மரங்கள்தான். நாங்க மறுக்கவில்லை. ஆனால், அந்த மரங்களில் வாகனங்கள் மோதி, உயிர்ச்சேதமும் பொருள்சேதமும் ஏற்படுவதை எப்படி தடுப்பது. அதற்காகத்தான் மரங்களை வெட்டுறோம். அதற்குப் பதிலாக, புதிதாக நிறைய மரக்கன்றுகளை நெடுஞ்சாலைத் துறை சாலையோரங்களில் வைத்துக் கொண்டுதான் உள்ளது.

வெட்டப்பட்ட பழைமையான மரம்
வெட்டப்பட்ட பழைமையான மரம்
நா.ராஜமுருகன்

மரங்களை வெட்டாமல் எப்படி திட்டத்தைச் செயல்படுத்துறது? டெண்டர் பேப்பரில் சில மரங்களின் கிளை எண்களை மட்டுமே எழுதவில்லை. மரங்களின் எண்களைக் குறிப்பிடாமல், மரங்களை வெட்டுகிறோம் எனக் கூறுவது தவறான தகவல். விதிகளுக்கு உட்பட்டுதான் மரங்களை வெட்டுகிறோம்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு