Published:Updated:

`ஊர் மக்களுக்காக இயற்கை வழி காய்கறிகள்!'- அமெரிக்க வாழ் கரூர் இளைஞரைப் பாராட்டிய வேளாண் விஞ்ஞானி

சமுதாயக் காய்கறித் தோட்டத்தில் திரவியம்
சமுதாயக் காய்கறித் தோட்டத்தில் திரவியம்

சமுதாயக் காய்கறித்தோட்டத்தை உருவாக்கியுள்ளார். முழுக்க முழுக்க இயற்கை விவசாய முறையில் அந்தக் காய்கறித் தோட்டத்தை உருவாக்கியுள்ளார்.

கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது கிராமத்தில் உள்ள பொது இடத்தில், ஒரு ஏக்கரில் ஊர் மக்கள் பயன்பாட்டுக்காக இயற்கை முறையில் காய்கறிகள் மற்றும் கீரைகளைப் பயிர்செய்து, சமுதாயக் காய்கறித் தோட்டத்தை அமைத்திருக்கிறார்.

 சமுதாயக் காய்கறித் தோட்டம்
சமுதாயக் காய்கறித் தோட்டம்

இதைப் பார்வையிட வந்த வேளாண் விஞ்ஞானி ஒருவர், `வாவ், இதுதான் உண்மையான பசுமைப் புரட்சி!' என்று பாராட்டியதோடு, தகுந்த ஆலோசனையும் வழங்கியது, அந்த இளைஞருக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

`149 மாணவர்களுக்கு சுரை விதை; முதல் அறுவடையைச் செய்து பரிசு பெற்ற மாணவி' - அரசுப் பள்ளியில் அசத்தல்!

கரூர் மாவட்டம், கடவூர் ஒன்றியத்தில் இருக்கிறது, வ.வேப்பங்குடி. இந்த கிராமத்தைச் சேர்ந்தவர், நரேந்திரன். இவர் அமெரிக்காவில் உள்ள பன்னாட்டு நிறுவனத்தில் தொழில்நுட்ப ஆலோசகராக இருந்து வருகிறார். ஏழ்மை நிலையில் இருந்து தனது அயராத படிப்பு மற்றும் அசராத முயற்சி மூலம் இந்த நிலையை அடைந்திருக்கிறார். தான் வளர்ந்ததைப் போலவே தனது கிராமமும் பல வகையிலும் வளர்ச்சி பெற வேண்டும் என்று நரேந்திரன் நினைத்தார்.

 சமுதாயக் காய்கறித் தோட்டம்
சமுதாயக் காய்கறித் தோட்டம்

அதற்காக, தனது சம்பளத்தில் குறிப்பிட்ட தொகையை ஒதுக்கி, அந்த நிதியில் தனது ஊர்ப் பள்ளியை மேம்படுத்த உதவினார். அதோடு, 1000 -க்கும் மேற்பட்ட மரங்களின் போத்துகளை (கிளைகளை) வெட்டி, அவற்றை தகுந்த முறையில் தயாரித்து, ஊர் முழுக்க நட வைத்து, வறட்சியின் கோரப்பிடியில் இருந்த வ.வேப்பங்குடியைப் பசுமைக் குடியாக உருமாற வைத்தார். அதோடு, வீட்டுக்கு வீடு நமது பாரம்பர்ய ரக காய்கறி விதைகளைக் கொடுத்து, அவற்றைக் கொண்டு இயற்கை காய்கறித் தோட்டம் அமைக்க வைத்தார்.

உச்சக்கட்டமாக, தனது கிராமத்தில் ஒரு ஏக்கர் பொது நிலத்தில் பலவகையான காய்கறி விதைகளையும் கீரை விதைகளையும் விதைக்க வைத்து, சமுதாயக் காய்கறித்தோட்டத்தை உருவாக்கியுள்ளார். முழுக்க முழுக்க இயற்கை விவசாய முறையில் அந்தக் காய்கறித் தோட்டத்தை உருவாக்கியுள்ளார். கிராம மக்கள் தங்களுக்குத் தேவையான காய்கறிகளை இந்தச் சமுதாயத் தோட்டத்தில் பறித்துக்கொள்ளலாம் என்பதுதான் நரேந்திரன் செய்துள்ள ஏற்பாடு. தான் அமெரிக்காவில் இருந்தாலும், தனது கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்களான வேல்முருகன், முருகேசன், ஈஸ்வரன், வெங்கடாஜலபதி மற்றும் ரதிப்பிரியா ஆகியோரைக் கொண்டு இந்தச் சமுதாயக் காய்கறித் தோட்டத்தைச் சாத்தியப்படுத்தியிருக்கிறார்.

சமுதாயக் காய்கறித் தோட்டத்தில் திரவியம்
சமுதாயக் காய்கறித் தோட்டத்தில் திரவியம்

இந்தச் சமுதாயக் காய்கறித் தோட்டத்தைப் பற்றிக் கேள்விப்பட்ட இனாம் புழுதேரியில் உள்ள இந்திய வேளாண் ஆயாய்ச்சி மையத்தில் வேளாண் விஞ்ஞானியாக இருக்கும் முனைவர் திரவியம் தனது குழுவினரோடு பார்வையிட வந்தார். தமிழகத்திலேயே எடுக்கப்பட்ட இந்த முதல்முயற்சியைப் பார்த்து வியந்த திரவியம், இந்த விசயத்தைச் சாத்தியப்படுத்திய நரேந்திரன் உள்ளிட்ட இளைஞர்களையும் கிராம மக்களையும் வெகுவாகப் பாராட்டினார்.

அமெரிக்காவில் இருக்கும் நரேந்திரனிடம் வாட்ஸ் அப் மூலம் பேசினோம். ``ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. வறட்சி மிகுந்த கிராமமான வ.வேப்பங்குடியை இளைஞர்கள், ஊர் மக்கள் ஒத்துழைப்போடு பசுமையாக மாற்றிக்கொண்டிருக்கிறேன். அதேபோல், எங்க ஊர் மக்கள் நல்ல உணவை உண்ண வேண்டும் என்பதற்காக இயற்கை முறையில், ஒரு ஏக்கர் நிலத்தில் இந்தச் சமுதாயக் காய்கறித் தோட்டத்தை அமைத்தோம். எல்லா விதைகளும் நன்றாக முளைத்து, இப்போது தோட்டத்தில் காய்கறிகள் காய்க்கத் தொடங்கிவிட்டன. மக்களும் அதைப் பறித்து, தங்கள் உணவில் சேர்த்துக்கொள்கிறார்கள்.

நரேந்திரன்
நரேந்திரன்

இதனால், எங்க கிராமம் முழுக்க இயற்கை விவசாயத்தின் மீதான ஆர்வம் அதிகரிச்சுருக்கு. இதைக் கேள்விப்பட்ட வேளாண் விஞ்ஞானி திரவியம் சார், எங்க ஊருக்கு வந்து பார்த்துட்டு, எங்களைப் பாராட்டினார். அந்தத் தோட்டத்தைத் தொடர்ந்து பராமரிக்க ஆலோசனைகளை வழங்கியுள்ளார். இதனால், எங்களுக்கு உற்சாகம் பெருகி இருக்கு. தொடர்ந்து, ஊரைச் சுற்றிப் பழங்கள் தரும் மரங்களை நட இருக்கிறோம்" என்றார், மகிழ்ச்சியாக...

பின் செல்ல