Published:Updated:

`மக்கும் குப்பைக்கு பச்சை; மக்காத குப்பைக்கு நீலம்!' - கரூர் இளைஞரின் அசத்தல் முயற்சி

கூடை வழங்கும் நிகழ்வு
கூடை வழங்கும் நிகழ்வு

தனது வார்டான 26-வது வார்டில் உள்ள வீடுகள் மூலம் சேகரமாகும் குப்பைகளைச் சேகரிக்க வசதியாக ஒவ்வொரு வீட்டுக்கும் பச்சை மற்றும் நீலநிற கூடைகளை வழங்கி, மக்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார்.

தனது வார்டில் உள்ள 1,000 வீடுகளுக்கும் அவர்கள் வீடுகளில் சேகரமாகும் மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகளைத் தரம் பிரித்து சேமிக்க ஏதுவாக, கரூர் இளைஞர் ஒருவர் பச்சை, நீல நிறத்தில் கூடைகள் வழங்கியிருப்பது, பலதரப்பிலும் பாராட்டை பெற்றுத் தந்திருக்கிறது.

கூடை வழங்கும் நிகழ்வு
கூடை வழங்கும் நிகழ்வு
Vikatan

கரூர் நகராட்சியின் 26-வது வார்டைச் சேர்ந்தவர் ராஜேஷ் கண்ணன். சமூக ஆர்வலரான இவர், இயற்கையை சீரழிக்கும் சக்திகளுக்கு எதிராகப் பல போராட்டங்களை நடத்தியவர். தவிர, கரூர் காவிரியில் நடக்கும் மணல் கொள்ளைக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர். இவர் நம்மாழ்வார் மன்றம் என்ற அமைப்பை ஆரம்பித்து, இயற்கை மற்றும் சூழலைக் காக்கும் பல முன்னெடுப்புகளைத் தொடர்ந்து செய்து வருகிறார். சமீபத்தில், நம்மாழ்வாரின் 6-வது நினைவு தினத்தையொட்டி, கபடி விளையாட்டுப் போட்டி நடத்தி, மக்களின் கவனத்தை ஈர்த்தார்.

கூடை வழங்கும் நிகழ்வு
கூடை வழங்கும் நிகழ்வு

இந்நிலையில், தனது 26 வது வார்டில் உள்ள வீடுகள் மூலம் சேகரமாகும் குப்பைகளை சேகரிக்க வசதியாக ஒவ்வொரு வீட்டுக்கும் பச்சை, நீலநிற கூடைகளை வழங்கி, மக்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார். 26-வது வார்டில் நடைபெற்ற இந்தக் குப்பைக்கூடைகள் வழங்கும் விழா, கரூர் நகராட்சி ஆணையர் சுதாவின் ஆலோசனையோடு நடைபெற்றது. இந்த விழாவில், கரூரின் பிரபல மருத்துவர் ஜெயம்மாள் மோகன்ராஜ், விஷ்ணுகுமார் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

விழா நிறைவடைந்ததும், நாம் ராஜேஷ் கண்ணனிடம் பேசினோம். "இன்னைக்கு கரூரை மட்டுமல்ல, உலகத்தையே அச்சுறுத்திக்கொண்டிருக்கும் வஸ்து, இந்தக் குப்பைகள்தாம். அதிலும் குறிப்பாக, மக்காத குப்பைகளான பிளாஸ்டிக்குகள் இன்று எங்கும் நீக்கமற நிறைந்து, மனிதகுலத்தின் நலவாழ்வுக்கு எமனாக மாறிக்கொண்டிருக்கிறது. எல்லா பிளாஸ்டிக்குகளும் கடைசியில் கடல்களை ஆக்ரமித்து, உலகத்தின் மிகப்பெரிய குப்பைத்தொட்டிகளாகக் கடல்களை மாற்றிக் கொண்டிருக்கின்றன. அங்கு வசிக்கும் உயிரினங்களுக்கு அழிவை ஏற்படுத்துக்கின்றன. மனிதர்களாகிய நாம் செய்த இந்தத் தவற்றின் வீரியம், இன்று சுவரில் அடித்த பந்தாக நம்மிடமே திரும்பிக்கொண்டிருக்கிறது. ஆனால், குப்பைகளின் வீரியத்தைப் பற்றித் தெரியாமல் நாம் இன்னமும் பொது இடங்களில் அலட்சியமாக வீசி எறியும் சூழலே உள்ளது.

ராஜேஷ் கண்ணன்
ராஜேஷ் கண்ணன்

அதனால், நான் சார்ந்த 26 வது வார்டில் உள்ள 1,000 வீடுகளிலும் வசிக்கும் மக்களிடம் குப்பைகளைத் தரம் பிரித்து சேகரிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த இப்படி குப்பைக் கூடைகளை வழங்க முடிவு செய்தேன். கரூர் நகராட்சி ஆணையரிடம் ஆலோசனைப் பெற்று, ஆயிரம் வீடுகளுக்கும் மக்கும் குப்பைகளைச் சேகரிக்க பச்சை நிறக் கூடைகளையும், மக்காத குப்பைகளைத் தரம் பிரித்து சேகரிக்க நீலநிறக் கூடைகளையும் வழங்கினேன். அதை நகராட்சியிலிருந்து சேகரித்துப் போகிறார்கள். வருங்காலத்தில் இப்படி மக்கள் சேகரிக்கும் குப்பைகளை விற்பனை செய்து, அதன்மூலம் கிடைக்கும் பணத்தை வார்டின் வளர்ச்சி சம்பந்தப்பட்ட செயல்களுக்குப் பயன்படுத்தலாம்னு முடிவு பண்ணி இருக்கிறேன். அடுத்தடுத்த வார்டுகளையும் இணைத்து, கரூர் நகராட்சி முழுக்க இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த இருக்கிறோம்" என்றார்.

பின் செல்ல