Published:Updated:

EIA 2020: `1,000 விதைப்பந்துகள் மூலம் விழிப்புணர்வு!' - கரூர் இளைஞரின் புது முயற்சி

விதைப்பந்துகள் வீசப்பட்டபோது...
விதைப்பந்துகள் வீசப்பட்டபோது... ( நா.ராஜமுருகன் )

'இயற்கை காக்க வேண்டும் என்று சிறுவர்களுக்கு இருக்கும் உணர்வுகூட, அரசுக்கு இல்லை' என்று உணர்த்தவே, அவர்களை வைத்து விதைப்பந்துகளை மலையில் வீசினோம். இன்னும் 1,000 விதைப்பந்துகளை உருவாக்கி, வீச இருக்கிறோம்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள இ.ஐ.ஏவை எதிர்த்து, நாடு முழுவதும் கொந்தளிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. இந்த நிலையில், இ.ஏ.ஐயை வித்தியாசமான முறையில், தங்கள் பகுதியில் உள்ள மலையில் 1,000 விதைப்பந்துகளைத் தூவி எதிர்த்திருக்கும் இளைஞரின் முயற்சி, சூழலியல் ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

விதைப்பந்துகள்
விதைப்பந்துகள்
நா.ராஜமுருகன்

'இந்திய அரசு கொண்டு வந்துள்ள, இ.ஐ.ஏ - 2020-க்கு எதிராக நாடு முழுவதும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. யார் வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும், எத்தகைய தொழிற்சாலையையும் ஆரம்பிக்கலாம் என்று நிறுவனங்களுக்கு 'முழுசுதந்திரம்' அளிக்கும் வரைவுதான் இது.

கரூர்: `ஆடிப்பட்டம் தேடி விதை!’ - மாணவர்களை இயற்கை விவசாயி ஆக்கிய ஆசிரியர்

அதனால்தான் இதை எதிர்க்கிறோம்' என்று சூழலியலாளர்கள் எதிர்த்து வருகிறார்கள்.`இந்த இ.ஐ.ஏ 2020-ஐ மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும்' என்கிற ஹேஷ்டாக் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.

விதைப்பந்துகள் வீசப்பட்டபோது...
விதைப்பந்துகள் வீசப்பட்டபோது...
நா.ராஜமுருகன்

நடிகர் சூர்யா அதற்கு எதிராக, ``காக்க காக்க' என்ற செய்த ட்வீட்டும், டிரெண்டானது. இந்த நிலையில், கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த தினேஷ் என்ற இளைஞர் 1,000 விதைப்பந்துகளைத் தயாரித்து, அதை கடவூர் மலைப்பகுதிகளில் வீசி எறிந்து, இ.ஐ.ஏ-வுக்கு எதிராக வித்தியாசமான போராட்டத்தைச் செய்திருக்கிறார்.

கரூர் மாவட்டம், கடவூர் ஒன்றியத்தில் உள்ள செம்பியநத்தம் ஊராட்சியில் உள்ள அரசகவுண்டனூரைச் சேர்ந்தவர், வி.கே.பி.தினேஷ். இவர் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் கரூர் மாவட்டக் குழு உறுப்பினராக உள்ளார். கடவூர், அரசகவுண்டனூர் உள்ளிட்ட 32 கிராமங்களைச் சுற்றி, இயற்கையே வட்ட வடிவில் மலைகளை அமைத்திருக்கிறது. வெளியில் இருந்து இந்தக் கிராமங்களுக்கு வந்து செல்ல மூன்று வழிகள்தாம் உள்ளன. இந்த மலைகளில்தான், இளைஞர்கள், சிறுவர்கள் என்று 15 பேரை வைத்து விதைப்பந்துகளைத் தயாரித்து வீசி எறிந்து, இ.ஐ.ஏவை நூதன முறையில் எதிர்த்திருக்கிறார். இதுகுறித்து, தினேஷிடம் பேசினோம்.

வி.கே.பி.தினேஷ்
வி.கே.பி.தினேஷ்
நா.ராஜமுருகன்

``கடவூர் பகுதியில் கடந்த 10 வருடங்களாக சரிவர மழை பெய்யவில்லை. அதனால், எங்கள் பகுதி வறட்சியின் பிடியில் சிக்கியது. 10 வருஷத்துக்குப் பிறகு இப்போது நல்ல மழை பெய்துவருகிறது. அதுவும், தொடர்ச்சியாக பெய்து வருகிறது. அதனால், கடவூர் மலையில் விதைகளைத் தூவ நினைத்தோம். கடந்த ஒருவாரத்துக்கு முன்பு, இளைஞர்கள் சிறுவர்கள் என்று 15 பேர்களை வைத்து 1,000 விதைப்பந்துகளை உருவாக்க ஆரம்பித்தேன். வேப்பம், புளிய விதைகளை, மண், எருவில் வைத்து, உருண்டையாகப் பிடித்து 1,000 விதைப்பந்துகளை உருவாக்கினோம்.

2,000 விதைப்பந்துகளை உருவாக்குவதான் எங்கள் ஐடியா. ஆனால், அதற்குள் மத்திய அரசு கொண்டு வந்த இ.ஐ.ஏ - 2020 -ஐ, எதிர்க்க நினைத்தோம். அதுபற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தவும், எங்களின் எதிர்ப்பை வித்தியாசமான முறையில் காட்டவும், முதல்கட்டமாக உருவாக்கிய 1,000 விதைப்பந்துகளை மொட்டைப் பாறையில் நின்று கடவூர் மலையில் வீசினோம். இதன்மூலம், மத்திய அரசு கொண்டு வந்துள்ள இ.ஐ.ஏ - 2020-ன் பாதகங்களை மக்களுக்கு சிம்பிளாக விளக்கியுள்ளோம். அதாவது, 'மரங்கள் குறைவாக உள்ளதால், கடவூர் பகுதியில் மழை குறைவாக இருக்கிறது.

விதைப்பந்துகள் வீசப்பட்டபோது...
விதைப்பந்துகள் வீசப்பட்டபோது...
நா.ராஜமுருகன்

மத்திய அரசு கொண்டுவந்துள்ள இ.ஐ.ஏ - 2020 -ஐ அனுமதித்தால், இயற்கை வளங்கள் சுத்தமாக அழிக்கப்படும். கொஞ்சநஞ்சம் பெய்யுற மழையும் பெய்யாது'னு உணர்த்தினோம். சிறுவர்களை வைத்து எதற்காக விதைப்பந்துகளை எறிய சொன்னோம் என்றால், 'இயற்கை காக்க வேண்டும் என்று சிறுவர்களுக்கு இருக்கும் உணர்வுகூட, மத்திய அரசுக்கு இல்லை' என்று உணர்த்தவே, அவர்களை வைத்து விதைப்பந்துகளை மலையில் வீசினோம். அடுத்தடுத்து, இன்னும் 1,000 விதைப்பந்துகளை உருவாக்கி, கடவூர் மலையில் வீச இருக்கிறோம். கடவூர் பகுதியை வனமாக்குவது, பசுமையாக்குவதுதான் எங்களின் உச்சப்பட்ச இலக்கு" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு