Election bannerElection banner
Published:Updated:

கேரளா: தாய் யானையைத் தேடிய போராட்டம் தோல்வி... முகாமுக்கு மாற்றப்படும் குட்டி யானை!

elephant calf
elephant calf

தாயை பிரிந்து இரண்டு மாதமாக தவித்து வந்த குட்டி யானையைத் தாயுடன் சேர்க்க முடியாத காரணத்தால் முத்தங்கா சரணாலயத்தில் ஒப்படைக்க கேரள வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

கூடலூர் வனத்தை ஒட்டியுள்ள கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் வழிக்கடவு வனச்சரகத்துக்கு உட்பட்ட நெல்லிக்குத்து புத்திரி பாலம் பகுதியில் உள்ள ஒரு விளையாட்டு மைதானத்தில் கடந்த மார்ச் 13-ம் தேதி இந்தப் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் விளையாடிக்கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென யானைக்குட்டி ஒன்று இந்த மைதானத்துக்குள் நுழைந்தது. மிகச்சிறிய இந்த யானைகுட்டி தனியாக இருப்பதைக் கண்ட இளைஞர்கள், உடனடியாகக் கேரள வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

elephant calf
elephant calf

நிகழ்விடத்துக்கு விரைந்து வந்த வனத்துறையினர், யானைக்குட்டியை மீட்டு தாயுடன் சேர்க்கும் முயற்சியாக அருகிலிருந்த வனப்பகுதிகளில் குட்டியை விடுவித்து கண்காணித்து வந்தனர். இந்தச் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்த எந்த யானைக் கூட்டமும் இந்தக் குட்டியை கூட்டத்தில் சேர்த்துக் கொள்ளவில்லை.

கடந்த 2 மாதமாக இந்தக் குட்டியை தாய் யானையுடன் சேர்ப்பதற்கான முயற்சி தொடர்ந்து நடைபெற்று வந்தது. தாய் யானையைக் கண்டுபிடிக்க முடியாததால் இந்த முயற்சி தோல்வியிலேயே முடிந்தது. இந்த யானைகுட்டி வனச்சரக அலுவலகத்தில் வைத்து பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் வைத்து தொடர்ந்து பராமரிக்க முடியாது என்பதால், கேரளாவில் உள்ள முத்தங்கா சரணாலயத்தில் உள்ள வளர்ப்பு யானைகள் முகாமில் குட்டியை ஒப்படைக்க வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

elephant calf
elephant calf

இந்த யானைக்குட்டி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வழிக்கடவு வனத்துறையினர், ``தாயைப் பிரிந்து தவித்து வந்தாலும், இந்தக் குட்டி நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளது. தாயுடன் சேர்க்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டோம். ஆனால், தாய் யானையுடன் சேர்க்க முடியவில்லை. இதற்குப் பிறகு இதை முத்தங்காவில் உள்ள வளர்ப்பு யானைகள் முகாமில் வைத்து பராமரிப்பதே சரியானது" என்றனர்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு