Published:Updated:

``சைபர் அட்டாக்... உயிர்களோடு விளையாடுகிறது கூடங்குளம் அணுஉலை நிர்வாகம்..!’’- சுப. உதயகுமாரன்

``கூடங்குளத்தில் பிரச்னை இருக்கிறது என்று இதையெல்லாம் முதலிலேயே மக்கள் மத்தியில் எடுத்து வைத்தோம். ஆனால், கவனிக்க வேண்டிய அரசோ மௌனம் சாதித்து எங்களைத் தேசத் துரோகிகள் என்கிறது."

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

இணையத் தகவல்களும், கணினியில் சேமிக்கும் தரவுகளும் நூறு சதவிகிதம் பாதுகாப்பாக இருக்கும் என உறுதியாகச் சொல்ல முடியாது. இது, கணினி உலகில் இணையம் பயன்படுத்தும் பயனாளர்கள் எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான். முக்கியமான வல்லரசு நாடுகளான அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகள்கூடத் தகவல்களைப் பாதுகாக்கும் விஷயத்தில் தடுமாறிக் கொண்டுதான் இருக்கின்றன. இணையப் பாதுகாப்பில் அந்நாடுகளுக்கு ஈடு கொடுக்கக்கூடிய சைபர் செக்யூரிட்டி இந்தியாவிடம் இல்லை என்பதையும் இங்கே மறுக்க முடியாது.

இந்நிலையில் கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பான தகவல்கள், இணைய வழியாக ஹேக்கர்களால் திருடப்பட்டு விட்டதாகச் சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகிப் பரவின. இதைக் கூடங்குளம் அணுமின் நிர்வாகம் மறுத்தது. ஆனால், அதற்கு மறுநாளே இந்திய அணுசக்தி கழகம், தகவல்கள் திருடப்பட்டதை உறுதி செய்தது.

இதுகுறித்து, கூடங்குளம் அணு உலைக்கு எதிராகத் தொடர்ந்து போராடிவரும் அணு உலை எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமாரனிடம் பேசினோம்.

  சுப. உதயகுமாரன்
சுப. உதயகுமாரன்

``கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இப்போது நடந்திருக்கும் தகவல் திருட்டு பற்றி என்ன நினைக்கிறீர்கள்?"

``கூடங்குளம் குறித்த பிரச்னைகள் வெளிவரும்போதெல்லாம், அணுஉலை நிர்வாகம் மௌனம் சாதிக்கிறது. பொதுவெளியில் பிரச்னைகள் குறித்து எப்போதுமே கருத்துச் சொல்ல மறுக்கிறது. அரசியல் தலைவர்கள் கேள்விகேட்டாலும் அவற்றையும் கண்டுகொள்வதில்லை. மக்களைப் பற்றியும் அவர்களுக்கு அக்கறையில்லை. ஆரம்ப காலகட்டத்திலிருந்தே இது போன்ற எதேச்சதிகாரப் போக்கு தொடர்ந்துகொண்டிருக்கிறது.

செப்டம்பர் 3-ம் தேதி இந்திய அரசுக்காகத் தொழில்நுட்பத் தகவல்கள் சேகரிக்கும் ‘தேசிய தொழில்நுட்ப ஆய்வு நிறுவனம்’ (NTRO) பணியமர்த்திய இணையப் பாதுகாப்பு வல்லுநர் புக்ராஜ் சிங் என்பவர் ஒரு தகவலை அரசுக்குத் தெரிவித்திருக்கிறார். அரசு வழக்கம்போல இதைக் கண்டுகொள்ளவில்லை. கடந்த செப்டம்பர் 23-ம் தேதி ‘காஸ்பெர்ஸ்கி’ (Kaspersky) எனும் இணையப் பாதுகாப்பு நிறுவனம் ‘டிடிராக்’ (DTrack) எனும் வைரஸ், இந்திய நிதி நிறுவனங்களின் கணினிகளிலும், ஆய்வு மையங்களின் கணினிகளிலும் பரவுவதாகச் செய்தி வெளியிட்டது.

அக்டோபர் 28 அன்று, உலகம் முழுவதுமுள்ள கணினிகளைத் தாக்கும் பல்வேறு வைரஸ்களைக் கண்காணிக்கும் நிறுவனமான ‘வைரஸ்டோட்டல்’ (VirusTotal.com) வெளியிட்ட அறிக்கை ஒன்று, ட்விட்டரில் வெளியானது. இதை ட்விட்டரில் பதிவு செய்தவர்கள் ‘கூடங்குளம் அணுஉலை நிர்வாகம்’ (‘KKNPP\\administrator’) என்ற பெயரிலேயே பதிவிட்டிருந்தார்கள். அதாவது கூடங்குளம் அணுஉலைக் கணினிகளை அத்துமீறிக் கைப்பற்றி, அவற்றினுள்ளே ஊடுருவி, அங்கேயிருந்து அந்தப் பதிவினைப் போட்டிருந்தார்கள்.

புக்ராஜ் சிங் எனும் மூன்றாம் நபர் ஒருவர் தனக்கு அளித்த தகவலைத் தேசிய இணையப் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் (NCSC) ராஜேஷ் பந்த் என்பவரிடம் தெரிவித்ததாகவும், இருவரும் மின்னஞ்சல் மூலமாகத் தகவல் பரிமாற்றம் செய்துகொண்டதாகவும், இப்போது தெரிவித்திருக்கிறார். அக்டோபர் 19-ம் தேதி கூடங்குளம் அணுஉலையின் இரண்டாம் அலகு மூடப்பட்டதுகூட இந்தப் பிரச்னையால்தான் எனும் தகவல் இப்போது வெளிவருகிறது."

"தகவல் திருட்டு விஷயத்தில் அணு உலை நிர்வாகத்தின் செயல்பாட்டைப் பற்றி..."

" 'தமது கட்டுப்பாட்டு அமைப்பின் கணினிகளை யாரும் அத்துமீறித் தாக்கவில்லை, இங்கே எல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது' என்று கடந்த 29-ம் தேதி ஒரு கடைநிலை ஊழியரை வைத்து அறிக்கை விட்டது கூடங்குளம் அணுஉலை நிர்வாகம். அதற்கு மறுநாளே மும்பை இடைநிலை அதிகாரி ஒருவர், 'ஓர் அணுமின் நிலையத்தில் கம்ப்யூட்டர் வைரஸ் பரவியிருக்கிறது' என்று பொத்தாம்பொதுவாக ஓர் அறிக்கை வெளியிடுகிறார்.

கூடங்குளம் அணுசக்தி அதிகாரிகள் நேற்று சொன்னது பொய்யா அல்லது இன்றைக்குச் சொல்வது பொய்யா என்கிற கேள்வி மக்கள் மனங்களில் எழுகிறது. இவர்கள் பல கோடி மக்கள் உயிர்களுடன் தொடர்ந்து விளையாடிக் கொண்டிருக்கிறார்கள் என்பது மட்டும் உண்மை."

kudankulam
kudankulam

"கூடங்குளம் அணுமின் நிலையத்தில் என்னென்ன பிரச்னைகள் இருக்கின்றன?"

"கூடங்குளம் அணுஉலை கட்டுமானத்தின்போதே பல குளறுபடிகள் நடந்தன. உலைக் கட்டுமானம், முறையற்ற மின் உற்பத்தி, அடிக்கடி பழுதாகும் உலைகள் உள்ளிட்ட பல விஷயங்களில் ஊழல்கள் நடந்திருக்கின்றன. கூடங்குளத்தில் பிரச்னை இருக்கிறது என்று இதையெல்லாம் முதலிலேயே மக்கள் மத்தியில் எடுத்து வைத்தோம். ஆனால், இதையெல்லாம் கவனிக்க வேண்டிய அரசோ மௌனம் சாதித்து எங்களைத் தேசத் துரோகிகள் என்கிறது."

"இந்த விஷயத்தில் கூடங்குளம் நிர்வாகம் என்ன மாதிரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும்?"

``வைரஸ்மூலம் ஹேக்கிங் நடந்திருக்கிறது. ஒரு அலுவலகத்தில் இருக்கும் தகவல்களைத் திருடும் குற்றச் செயல்போல அல்ல, இது. அணுஉலை சம்பந்தப்பட்ட விஷயம். வைரஸ் தாக்கியவுடன் குறைந்தபட்சம் அணு உலை நிர்வாகம் அருகில் குடியிருக்கும் மக்களுக்கு எச்சரிக்கை செய்திருக்க வேண்டும். ஒரு ஹேக்கர் கணினியை முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் எடுத்து வேலை செய்யும்போது, தகவல்களை எடுக்கவும், அவரே இயக்கவும் முடியும். அணு உலையில் குளிர்விக்கும் பகுதி தொடங்கி அணுக் கழிவுகள்வரை பல பாகங்களைச் செயலிழக்கச் செய்யமுடியும்..."

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

"அணு உலை 'ஹேக்கிங்' என்ன மாதிரியான ஆபத்துகளை உண்டாக்கும்?"

"இதுதான் எனக் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. கணினியில் இருந்துதான் அணு உலையைக் கையாள முடியும். கணினி மூலமாகவே அணுஉலை இயங்குவதற்கான கட்டளைகள் பிறப்பிக்கப்படும். அந்தக் கட்டளைகளுக்கு ஏற்பவே அணு உலை செயல்படும். இதில், ஹேக்கர்கள் முதலில் வேலை செய்யும் விஞ்ஞானிகளைக் குறிவைத்து மெயில் அனுப்புவார்கள். அதன் மூலம்தான் கணினியை ஹேக் செய்வார்கள். உதாரணமாக 100 டிகிரிக்கு மேல் அணு உலையின் வெப்பம் இருக்கக்கூடாது என்றால் கணினி மூலமாகத்தான் அதற்கான கட்டளைகள் கொடுக்கப்படும். அந்த இடத்தில் ஹேக்கர்கள் நுழைந்துவிட்டால் பெரிய விபரீதங்கள் ஏற்படலாம்"

கூடங்குளம் அணுஉலைகள் பாதுகாப்பாக இல்லை. அதனுடைய கட்டுப்பாட்டு அமைப்பு அத்துமீறப்பட்டிருக்கிறது என்றால், மிக முக்கியமான தகவல்கள் இரண்டாம் நபர்களின் கைகளுக்குப் போயிருக்கின்றன என்று பொருள்.

"உலகில் இது போன்ற அணு உலை ஹேக்கிங் சம்பவங்கள் இதற்கு முன்பு நடந்திருக்கின்றனவா?"

"ஆம், கடந்த 2017-ம் ஆண்டு மே மற்றும் ஜூன் மாதங்களில் மட்டும் அமெரிக்காவில் உள்ள 12 அணு உலைகளை ஹேக்கர்கள் கைப்பற்றியிருந்தனர். எந்நேரமும் அணு உலைகளின் முழுக் கட்டுப்பாடுகளும் ஹேக்கர்களின் கைகளுக்கு வந்துவிடலாம் எனும் நிலையும் அப்போது இருந்தது. ஒரு நாட்டின் மீது போர் தொடுத்து அழிப்பதைவிட இந்த முறையில் அணுஉலைகளைத் தன்வசம் கொண்டுவந்து வெடிக்கச் செய்தால் மிகப்பெரிய இழப்பை ஒரு நாடு சந்திக்கும். உலகின் எந்த மூலையிலும் இருந்து கொண்டும் இந்தச் செயலைச் செய்யலாம்.

அமெரிக்காவின் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை, ரஷ்யாவை காரணம் காட்டியது. மேலும், எதிர்காலத்தில் நடத்தப்போகும் தாக்குதலுக்கான ஆரம்பகட்ட செயல்தான் இது எனவும் உள்நாட்டுப் பாதுகாப்புத்துறை தகவல் தெரிவித்திருந்தது. அந்த 12 அணு உலைகளிலும் ஹேக்கர்கள் வைத்ததுதான் சட்டம் என்பதைத் தடுக்க அமெரிக்கா தீவிர நடவடிக்கை எடுத்துத் தங்களைக் காப்பாற்றிக் கொண்டது.

ஹேக்கிங் விஷயத்தில் அமெரிக்காவும் சளைத்தது அல்ல. அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து இரானின் அணுசக்தி திட்டக் கணினிகளை "stuxnet" என்ற வைரஸ்மூலம் ஊடுருவிப் பெரிய விபத்தை ஏற்படுத்தின. ஊடுருவிய வைரஸ்கள் அணு சக்தியின் சென்டிரிஃபியூஜ் குழாய்களை, எப்போதும் சுற்றுவதைவிட அதிக வேகத்தில் சுற்றவைத்து உலைகளுக்குப் பெரும் சேதத்தை ஏற்படுத்தின. ஆனால், 12 அணு உலைகளை ஹேக்கிங் செய்த விஷயத்தில் அமெரிக்காவே ஆடிப்போனதுதான் நிதர்சனமான உண்மை."

"கூடங்குளம் அணுமின் நிலைய பாதுகாப்பு விஷயத்தில் இந்திய அணுசக்தி கழகத்தின் செயல்பாட்டை எப்படிப் பார்க்கிறீர்கள்?"

"இந்தியாவின் நிலை மிக மோசமாகத்தான் இருக்கிறது. நம் நாட்டில் இருக்கும் அணுஉலைகளால் இவ்வளவு நாள் சுற்றுச்சூழல் பாதிப்பு, இயற்கை வள அழிப்பு, சுனாமி எனப் பல பாதிப்புகள் இருக்கும்போது, ஹேக்கிங் அதைவிடப் பெரிய பாதிப்பாக இருக்கும். நம் தமிழ்நாட்டில் உள்ள கூடங்குளம் அணுஉலையில் மேலும் புதிய யூனிட்களும் திறக்கப்பட உள்ளன. இனி புதிதாக இந்திய அரசு கொண்டுவரப்போகும், அணுஉலைகளை எப்படிப் பாதுகாக்கப் போகிறது என்பதும் கேள்விக்குறிதான்.

இறந்து பிறந்த குழந்தைகள் மாதிரியான இரண்டு அணுமின் நிலையங்களையும் பற்றி ஒரு சார்பற்ற விசாரணை வேண்டும். இவைகுறித்த ஒரு வெள்ளை அறிக்கை வேண்டும் என்று நாங்கள் தொடர்ந்து கோரிக்கைவைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், கூடங்குளம் நிர்வாகமோ, அணுசக்தித் துறையோ, அணுசக்தி அமைச்சரான பிரதமரின் அலுவலகமோ எதையும் கண்டுகொள்வதில்லை."

கூடங்குளம் அணு உலையை குறிவைத்த `சைபர் அட்டாக்?!' 
- என்ன நடந்தது?
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு