Published:Updated:

ஆப்பிரிக்காவை அச்சுறுத்தும் படைவெட்டுக்கிளிகள்... விரைவில் இந்தியாவையும் பாதிக்கும் அபாயம்!

Locusts
Locusts ( AP )

வெட்டுக்கிளிகள், இதே வேகத்தில் வளர்ந்துகொண்டிருந்தால், வரும் ஜூன் மாதத்திற்குள் இப்போது இருப்பதைவிட 500 மடங்கு அதிகரித்துவிடும்.

பூச்சிகள், பயிர்களுக்கு சேதம் விளைவிப்பது வழக்கமாக நடப்பதுதான். ஆனால், பூச்சிகள் மொத்தக் காட்டையுமே அழிப்பதைப் பார்த்துள்ளீர்களா... இந்தக் கட்டுரையைப் 'பாகுபலி'யில் வரக்கூடிய ஒரு வசனத்தோடு தொடங்கலாம்.

வெட்டுக்கிளிக் கூட்டம் கடந்துபோன காடும் காலகேயர் கூட்டம் கடந்துபோன நாடும் சுடுகாடாகிவிடும்.
`பாகுபலி' படத்திலிருந்து...

'பாகுபலி' திரைப்படத்தில் மகிழ்மதி சாம்ராஜ்யத்தின் போர் ரகசியங்களைத் திருடிச்சென்ற ஒற்றன் பிடிபட்டு விசாரிக்கப்படும்போது, இந்த வசனத்தைக் கூறுவான். இப்படி கூட்டம் கூட்டமாக வந்து, பயிர்களுக்கு சேதம் விளைவிக்கின்றவற்றைப் படை வெட்டுக்கிளிகள் என்று அழைக்கப்படுகின்றன. அவை, ஒருகாலத்தில் அமெரிக்கக் கண்டத்தில் மிகப் பிரபலமாக இருந்துள்ளன. அவற்றை அரக்கர்களுக்கு நிகராகக் கற்பனை செய்து, அவற்றை அழிப்பதற்காகத் தொழில்நுட்பங்களைத் தயாரித்தது முதல் தேவாலயங்கள் சிறப்புப் பிரார்த்தனை நடத்துவது வரை அனைத்தையும் அமெரிக்க மக்கள் செய்தார்கள். ஏனென்றால், அவர்கள் ராக்கி மலைத்தொடரிலிருந்து வந்துகொண்டிருந்த அந்தப் படை வெட்டுக்கிளிகளைக் கண்டு அவ்வளவு தூரம் பயந்துபோயிருந்தார்கள்.

இப்போது, அதேபோன்ற வெட்டுக்கிளிகள் கூட்டம் கூட்டமாக வந்து, கிழக்கு ஆப்பிரிக்காவின் பயிர்களை அழித்துக் கொண்டிருக்கின்றன. மக்கள், அதேபோல் மிரண்டு போயிருக்கிறார்கள். கடந்த நவம்பர் மாதமே, இந்தப் படை வெட்டுக்கிளிகள் குறித்த எச்சரிக்கை கொடுக்கப்பட்டது. எத்தியோப்பியாவில் பரவலான சேதங்களை விளைவித்துக் கொண்டிருந்த இதைக் கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கவில்லையெனில், கென்யா, எரித்ரியா, சூடான், சோமாலியா என்று மேலும் பல நாடுகள் அந்தச் சேதங்களை அனுபவிக்க வேண்டுமென்று ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்தது. எத்தியோப்பிய அரசும் உடனடியாக நடவடிக்கைகளை முடுக்கிவிட்டது. ஆனால், காலம் கடந்திருந்தது. வடக்கே அம்ஹாரா என்ற மாகாணத்தில் வாழ்ந்த விவசாயிகள், தங்களுடைய 100 சதவிகிதப் பயிர்களுமே துடைத்தழிக்கப்பட்ட மோசமான நிலையில் நின்றிருந்தனர்.

படைவெட்டுக்கிளிகள்
படைவெட்டுக்கிளிகள்
AP

நவம்பர் மாத கணக்குப்படி, எத்தியோப்பிய விவசாய நிலப்பரப்பில், சுமார் 350 சதுர கிலோமீட்டருக்கு இருந்த 1.8 மில்லியன் டன் விளைச்சலைப் படை வெட்டுக்கிளிகள் சாப்பிட்டுத் தீர்த்தன. இவை, தம் உடல் எடைக்கு நிகரான உணவை எடுப்பவை. படை படையாக வந்த வெட்டுக்கிளிகள் அப்படிச் சாப்பிட்டு, 350 ச.கி.மீட்டரிலிருந்த மொத்த உற்பத்தியையும் அழித்திருந்தன.

கடந்த ஜனவரி மாதம் 9-ம் தேதியன்று, இந்த வெட்டுக்கிளிகள் படை, ஒரு விமானத்தையே விபத்துக்கு உள்ளாக்கும் அபாயத்திற்குள் தள்ளி, தரையிறங்க வைத்துள்ளது. எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த ஒரு விமானம் பறந்துகொண்டிருந்தபோது, அதன் இன்ஜின், காற்றுத்தடுப்புக் கண்ணாடி, விமானத்தின் மூக்குப் பகுதி என்று அனைத்திலுமே கூட்டமாகப் பறந்துவந்த இவை மோதி, விமான ஓட்டத்தைப் பாதிக்கவே, கிட்டத்தட்ட நிலை தடுமாறி விபத்திற்குள்ளாகும் ஆபத்திற்குள் அது தள்ளப்பட்டது. அதிர்ஷ்டவசமாக, விமானிகளின் சாதுர்யத்தால் அது தரையிறக்கப்பட்டு, விபத்திலிருந்து காப்பாற்றப்பட்டது.

இந்த வெட்டுக்கிளித் திரள், குறைந்தபட்சம் ஒரு சதுர கி.மீ முதல் சில நூறு ச.து.கி.மீட்டர்கள் வரை பரந்துள்ளன. கற்பனை செய்துபாருங்கள், ஒரு சதுர கி.மீ பரப்பளவு இடத்தைக் கூட்டம் கூட்டமாக வெட்டுக்கிளிகள் நிறைத்திருந்தால் எப்படியிருக்கும்! ஒவ்வொரு ச.கி.மீட்டரும் குறைந்தபட்சம் 40 மில்லியன் வெட்டுக்கிளிகளைக் கொண்டிருந்தன என்று கூறுகிறது, ஐக்கிய நாடுகள் அமைப்பின் உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO).

இப்படித் திரளாகப் பறந்துகொண்டிருக்கும் படை வெட்டுக்கிளிகள், எத்தியோப்பியாவிலிருந்து ஏமெனுக்கும், எத்தியோப்பியாவிற்கு அருகிலிருக்கும் சோமாலியாவிற்கும்கூட பரவிவிட்டது.

150 கிலோமீட்டர்
படை வெட்டுக்கிளிகள், ஒரு நாளைக்கு பயணிக்கக்கூடிய தூரம்.
பாதிக்கப்பட்ட விமானம்
பாதிக்கப்பட்ட விமானம்
பாதிக்கப்பட்ட விமானம்
பாதிக்கப்பட்ட விமானம்

இப்போது சோமாலியா, படைவெட்டுக்கிளிகளின் படையெடுப்பால் கதிகலங்கித் தவித்துக்கொண்டிருக்கிறது.

எத்தியோப்பியா, கென்யா, சோமாலியா என்று வெட்டுக்கிளிகளின் படையெடுப்பால் விவசாய உற்பத்திகளை இழந்துகொண்டிருக்கும் நாடுகளின் பட்டியல் வளர்ந்துகொண்டே போகின்றன. ஐ.நா சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு, இவை இதே வேகத்தில் வளர்ந்துகொண்டிருந்தால், வரும் ஜூன் மாதத்திற்குள், இப்போது இருப்பதைவிட 500 மடங்கு அதிகரித்துவிடும் என்று அஞ்சுகிறது. கென்யா, கடந்த 75 ஆண்டுகளில் இப்படியொரு பூச்சிகள் படையெடுப்பைச் சந்தித்தது கிடையாது. எத்தியோப்பியாவும் சோமாலியாவும் கடந்த 25 ஆண்டுகளில் வெட்டுக்கிளிகளால் இப்படியொரு அழிவைச் சந்திக்கவில்லை. இவற்றின் அதீத வளர்ச்சி, தெற்கு சூடான் மற்றும் உகாண்டவையும் அபாய வளையத்திற்குள் கொண்டுவந்துள்ளது.

விமானம் மூலமாகப் பூச்சிக்கொல்லிகளைத் தெளித்து, கட்டுக்குள் கொண்டுவருவதே அவர்களுக்கு இருந்த ஒரேயொரு தீர்வாகச் சொல்லப்பட்டது. ஆனால், இப்போது அதுவும் முடியாதென்ற நிலைக்கு பிரச்னையின் தீவிரம் அதிகரித்துவிட்டது. படை வெட்டுக்கிளிகள், ஒரு நாளைக்கு 150 கிலோமீட்டர் பயணிக்கக்கூடியவை. நன்கு வளர்ந்த ஒவ்வொரு வெட்டுக்கிளியும் அதன் உடல் எடைக்கு நிகரான உணவைச் சாப்பிடும் என்பதால், மில்லியன் கணக்கில் இருக்கும் வெட்டுக்கிளிகளுக்குத் தீனி போட, தெற்கு ஆப்பிரிக்கா போதுமானதாக இருக்காது. ஆகவே, அவை செங்கடலையும் தாண்டிப் பரவும் எனக் கணிக்கப்படுகிறது.

படையெடுப்பு
படையெடுப்பு
AP
சோமாலியா
சோமாலியா

இதன் ஆபத்து, அடுத்தடுத்த ஆண்டுகளில் தீவிரமாகலாம் என்று சொல்லப்படுகிறது. தெற்கு ஆப்பிரிக்காவில் அவை அதிகரிப்பதையும் தாண்டி, இந்தியா, இரான் மற்றும் பாகிஸ்தானிலும் அவை இனப்பெருக்கத்தில் ஈடுபடத் தொடங்கிவிட்டன. அவை, வரும் இலையுதிர் காலத்திற்குள்ளாகவே திரள்திரளாக இங்கும் படையெடுத்துப் பயிர்களை அழிக்கும் ஆபத்து நம்மை எதிர்நோக்கியுள்ளது. இன்று தெற்கு ஆப்பிரிக்கா... நாளை இந்தியா!

இந்தப் பிரச்னை புதிதல்ல. ஏற்கெனவே, படைவெட்டுக்கிளிகள் இப்படிப் பல கிலோமீட்டர் பரப்பளவுக்குத் திரள் திரளாக வந்து மக்களையும் அவர்களுடைய உணவு பாதுகாப்பையும் அச்சுறுத்திய நிகழ்வுகள் வரலாற்றில் பதிவாகியுள்ளன. இதுபோன்ற படை வெட்டுக்கிளிகள் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள், 1830-களில் இருந்தே தொடங்குகின்றன. 'உயிர்' இதழில், சூழலியல் எழுத்தாளர் லிங்கராஜா வெங்கடேஷ் ராக்கிமலை படை வெட்டுக்கிளிகள் குறித்து எழுதிய கட்டுரையின் மூலம் மீட்டெடுத்துள்ள சில மக்கள் வழக்காற்றுப் பதிவுகளின்படி,

வானத்தை மறைத்துப் பறக்கும் வெட்டுக்கிளிகளின் படை
வானத்தை மறைத்துப் பறக்கும் வெட்டுக்கிளிகளின் படை
AP
விவசாய நிதி, தான்ய லட்சுமி திட்டம்... 2020-21 பட்ஜெட்டின் சிறப்பம்சங்கள் #VikatanPhotoCards

"படைவெட்டுக்கிளிகள் அடிவானத்திலிருந்து திரண்டு மேலெழுந்து வருவதைப் பார்த்த மக்கள், தங்களது களைக் கொத்திகளையும் மண்வெட்டிகளையும் அப்படியே போட்டுவிட்டு ஓடுவிடுகின்றனர். மரத்தாலான அந்தக் கைப்பிடிகளில் ஏறியிருந்த வியர்வை நெடியால் ஈர்க்கப்பட்ட ஆயிரமாயிரம் வெட்டுக்கிளிகள், தொடர்ந்து அதன்மீது மோதிவிழுந்து, ரம்பம் போன்ற விளிம்புகளைக் கொண்ட கால்களால் தேய்த்தபடியே கடந்துபோய்விடுகின்றன. மக்கள், ஓரிரு நாள்கள் கழித்து வந்து அவற்றை எடுத்துப் பார்க்கையில், உப்புத்தாள் போட்டு நெடுநேரம் தேய்த்தாலும் வராத மினுமினுப்போடு அந்த மரக் கைப்பிடிகள் மின்னிக்கொண்டிருந்ததைப் பார்த்துள்ளனர்" என்று கூறப்படுகிறது. மரக் கைப்பிடிகளை ரம்பம் போன்ற கால்களால் தேய்த்துத் தேய்த்து பொலிவுறச் செய்யும் அளவுக்கு அவற்றின் வேகமும் எண்ணிக்கையும் இருந்துள்ளன என்று அந்த நாட்டுப்புறப் பதிவின் மூலம் புரிகின்றது.

அதேபோல், இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்த பூச்சியியலாளர் ஜெஃப்ரி லாக்வுட், இவற்றின் படையெடுப்பு குறித்த தன் விவரணையில், "விவசாயி ஒருவருடைய நிலத்தில் ஏக்கருக்கு 940,896,000 முட்டைகள் காணப்பட்டன. அவருடைய ஏழு ஏக்கர் நிலத்தில் மொத்தமாக, 6,586,272,000 முட்டைகள் இருந்தன" என்று பதிவுசெய்துள்ளார்.

படை வெட்டுக்கிளிகள்
படை வெட்டுக்கிளிகள்
AP

கற்பனை செய்துபாருங்களேன். பாரிஸ் நகரத்தினுடைய பரப்பளவுக்கு நிகராகத் திரண்டிருக்கும் படைவெட்டுக்கிளிகள், பிரான்ஸ் நாட்டின் பாதி மக்கள்தொகைக்கு, ஒரு நாளைக்குத் தேவைப்படும் உணவை ஒரேநாளில் சாப்பிட்டுவிடும். இப்படியொரு பேராபத்தைச் சந்தித்துக்கொண்டிருக்கும் நாடுகளில், சோமாலியாதான் முதன்முறையாக, பூச்சிகளால் ஏற்படும் பேரழிவை அதிகாரபூர்வமாக அவசர காலமாக அறிவித்து நடவடிக்கை எடுத்துக்கொண்டிருக்கிறது.

"சோமாலியாவின் உணவுப் பாதுகாப்பிற்கு வந்துள்ள ஆபத்து இது. இதை அவசர காலமாகக் கருதி, உடனடி நடவடிக்கைகளில் ஈடுபடுகிறோம்" என்று அறிவித்துள்ளது, சோமாலியாவின் விவசாயத்துறை அமைச்சகம். அறுவடைக் காலமான ஏப்ரல் மாதத்திற்குள், இந்தப் பிரச்னையைச் சரிசெய்ய முடியும் என்ற நம்பிக்கையை அந்நாட்டு மக்கள் மற்றும் நிர்வாகம் இழந்துகொண்டிருக்கிறது.

இந்தப் பிரச்னையைச் சரிசெய்ய, அமெரிக்கக் கண்டத்தில் அப்போது தொழில்நுட்பங்கள் உருவாக்கப்பட்டன. அவற்றை அழிக்க நெருப்புக் கங்குளைப் பயன்படுத்தினார்கள். அந்தப் பதிவுகளை மீட்டெடுத்து ஆராய்வதன்மூலம், இந்தப் படை வெட்டுக்கிளிகளை அழித்து, தெற்கு ஆப்பிரிக்க மக்களுடைய உணவுப் பாதுகாப்பை உறுதிசெய்ய நடவடிக்கை எடுப்பது சிறந்த திட்டமாக இருக்கும்.

பயிர்ச்சேதம்
பயிர்ச்சேதம்
AP
வறட்சி, வெள்ளம், புயல்... பருவநிலை மாற்றம் மட்டும்தானா விவசாய வீழ்ச்சிக்குக் காரணம்?  ஓர் அலசல்!

அதோடு, இந்தியா, இரான் மற்றும் பாகிஸ்தானும் விரைந்து நடவடிக்கை எடுத்து, வெட்டுக்கிளிகளின் முட்டைகள் பொரிந்து, அவை நம் நிலத்தில் ஊடுறுவி பிரச்னையை விளைவிக்கும் முன்னரே நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏனெனில், படை வெட்டுக்கிளிகளின் பசியைத் தீர்த்துவைக்கப் போதுமான நிலம் இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் இருக்கின்றன. அனைத்தையும் தின்றுதீர்க்கும் திறன் அவற்றுக்கும் இருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு