Published:Updated:

250 தாவரங்கள்; 25 மூலிகைகள்... மணிப்பூரில் தனி ஒருவன் உருவாக்கிய 300 ஏக்கர் காடு!

Loiya
News
Loiya

ஒரு தனிமனிதன் நினைத்தால் எதுவும் சாத்தியமே என்று நிரூபிக்கும் வகையில் ஒரு காட்டையே உருவாக்கிக் காட்டியிருக்கிறார் மணிப்பூரைச் சேர்ந்த லோயா.

250 தாவரங்கள்; 25 மூலிகைகள்... மணிப்பூரில் தனி ஒருவன் உருவாக்கிய 300 ஏக்கர் காடு!

ஒரு தனிமனிதன் நினைத்தால் எதுவும் சாத்தியமே என்று நிரூபிக்கும் வகையில் ஒரு காட்டையே உருவாக்கிக் காட்டியிருக்கிறார் மணிப்பூரைச் சேர்ந்த லோயா.

Published:Updated:
Loiya
News
Loiya

புவி வெப்பமயமாதலும் பருவநிலை மாற்றமும் எதிர்கால ஆரோக்கியமான வாழ்க்கை குறித்த பெரும் அவநம்பிக்கையை நம்முள் ஆழ்த்தியிருக்கும் தருணம் இது. இந்த அவநம்பிக்கை உருவாக முழுக் காரணமும் மனிதச் செயற்பாடுகள்தான். ஒரு தனிமனிதன் இதற்காக என்ன செய்ய முடியும் என்பதே பெரும்பான்மை மக்களின் கேள்வியாக இருக்கிறது. ஆனால், ஒரு தனிமனிதன் நினைத்தால் எதுவும் சாத்தியமே என்று நிரூபிக்கும் வகையில் ஒரு காட்டையே உருவாக்கிக் காட்டியிருக்கிறார் மணிப்பூரைச் சேர்ந்த லோயா.

Loiya with Children
Loiya with Children

மேற்கு இம்பாலில் உள்ள உரிப்போக் கைதெம் லேகை என்னும் இடத்தைச் சேர்ந்தவர் மொய்ரங்தம் லோயா. வயது 45. சிறு வயதிலிருந்தே மணிப்பூரின் மலை உச்சிகளில் நின்று பச்சை பசேலென்ற காடுகளையும் மரங்களையும் பார்ப்பதில் பூரித்துப்போவாராம். 2000-ம் ஆண்டில் வெளியூரில் தங்கி கல்லூரிப் படிப்பை முடித்து, சொந்த ஊருக்குத் திரும்பிய லோயாவுக்குப் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அங்கே ஒரு மரத்தைக்கூடப் பார்க்க முடியவில்லை. பசும்போர்வை மூடிய இடங்களெல்லாம் அழிக்கப்பட்டு வெற்றிடமாகியிருந்தது. காடுகள் மீது பெரும் பற்றுக்கொண்டிருந்த லோயாவால் இதைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

2002-ல் தன் சொந்த முயற்சியால் காடுகளை உருவாக்க முடிவெடுத்தார். இதற்காக முதலில் அவர் தேர்ந்தெடுத்த இடம் புன்ஷிலாக் என்னும் மலைப்பகுதி. நெற்பயிர் சாகுபடிக்காக அந்த நிலத்தில் ஒரு மரத்தைக்கூட விட்டுவைக்காமல் முற்றிலும் தீயினால் அழித்திருந்தார்கள். அங்கே மீண்டும் பசுமை பூத்துக்குலுங்க வேண்டுமென லோயா முடிவெடுத்தார்.

மருந்து விற்பனை பிரதிநிதியாக, நல்ல சம்பளத்துடன் பார்த்துக்கொண்டிருந்த வேலையை உதறித் தள்ளினார். கொஞ்சம் துணிகளையும் உணவுப்பொருள்களையும் எடுத்துக்கொண்டு புன்ஷிலாக்கில் தனக்கென ஒரு வீட்டை அமைத்துக்கொண்டு அங்கேயே வசிக்க ஆரம்பித்தார். ஆறு வருடங்கள் அங்கேயே தங்கியிருந்து, தன் முழு உழைப்பையும் அந்த நிலத்துக்காகவே செலுத்தத் தொடங்கினார். தொடக்கத்தில் மூன்று விதமான மரங்களுக்கு மட்டும் விதைகளை வாங்கிய லோயா, தன் நண்பர்கள் மற்றும் தன்னார்வலர்கள் உதவியோடு ஓர் அமைப்பாகச் செயல்பட்டு அதை நட்டுமுடித்து செயல்படுத்தினார். அவரின் நம்பிக்கை துளிர் விடத்தொடங்கியது. இயற்கையும் கைகொடுக்க மிக வேகமாக வளர்ந்த அம்மரங்களைப் பார்த்து உற்சாகம் கொண்டார். அவர் மேலும் தொடர்ந்து மூங்கில், ஓக், பலா, தேக்கு போன்ற மரங்களை நட்டார்.

Loiya with Volunteers
Loiya with Volunteers

2003-ம் ஆண்டு தன் தோழர்களோடும் தன்னார்வலர்களோடும் இணைந்த லோயா "Wildlife and Habitat Protection Society" (WAHPS) என்கிற ஒரு குழுவை உருவாக்கி, அதன் வழியாக புன்ஷிலாக்கை மீட்டுருவாக்கம் செய்துகொண்டிருக்கிறார்.

மொபி சிங் என்கிற அப்பகுதியின் வனச்சரக அதிகாரி லோயா குறித்து கூறுகையில், "பொதுவாக, காடுகளுக்கு உள்ளே நடக்கும் எல்லா விதமான கட்டுமானங்களும் சட்டவிரோதமான குற்றமாகவே கருதப்படும். ஆனால், லோயா வனத்தைப் பாதுகாக்கவும் மீட்டெடுக்கவும் உதவுவதால் அவரை நாங்கள் ஊக்குவிக்கவே செய்கிறோம்.

இந்திய அரசியலமைப்புச் சாசனத்தின் விதி 51A-ன் கீழ் ஒவ்வொரு குடிமகனும் காடுகளையும் ஏரிகளையும் நதிகளையும் வனவிலங்குகளையும் காக்க வேண்டியது கடமையாகிறது. லோயாவும் அவரின் அமைப்பும் இப்படியான முயற்சிகளின் வழியாக, பொறுப்புள்ள குடிமக்களாக அறியப்படுகின்றனர்'' என்கிறார்.

Loiya in Fieldwork
Loiya in Fieldwork

18 வருடங்கள் கழித்து புன்ஷிலாக் தற்போது 300 ஏக்கர் நிலப்பரப்பில் செடிகொடிகளுடனும் மூலிகைகளுடனும் காட்டுவிலங்குகளுடனும் அடர்வனமாகக் காட்சியளிக்கிறது. 250-க்கும் மேற்பட்ட தாவரவகைகளும் 25-க்கும் மேற்பட்ட மூங்கில் வகைகளும் இங்கு காணப்படுகின்றன. பல வகையான பறவைகள், பாம்புகள், மான்கள், எறும்புத் திண்ணிகள், முள்ளம்பன்றிகள், கீரிப்பிள்ளைகள், சிறுத்தைகள் போன்ற விலங்குகளுக்கும் புன்ஷிலாக் இன்று புகலிடமாக மாறியிருக்கிறது.

பத்தாண்டுகளுக்கு முன்பு இருந்த சுற்றுச்சூழலுக்கும் தற்போதைய சுற்றுச்சூழலுக்குமான வித்தியாசத்தை அப்பகுதி மக்களால் நன்கு உணரமுடிகிறது.

"வெப்பநிலை வெகுவாக இங்கே குறைந்திருக்கிறது. ஆண்டு முழுமைக்கும் நாங்கள் இப்போது பறவைகளின் கீச்சொலியைக் கேட்டுக்கொண்டிருக்கிறோம்" என்கின்றனர் அப்பகுதி மக்கள்.

இப்பகுதி மக்களின் கவனத்தை இந்த வனம் ஈர்த்திருக்கிறது. உள்ளூர்வாசிகளும் வெளிநாட்டுப் பார்வையாளர்களும் இங்கே வந்து இவ்விடத்தைப் பார்வையிட்டுச் செல்கின்றனர். லோயாவைப் பொறுத்தவரை புன்ஷிலாக் அவரின் வாழ்நாள் கனவு. வருமானத்துக்காகத் தன் சகோதரரின் மருந்தகத்தில் வேலை பார்த்து வருகிறார். கூடவே அங்கு வேளாண்மையையும் செய்துவருகிறார்.

Punshilok
Punshilok

"நான் என்னை ஓர் ஓவியனாகத்தான் கருதிக்கொள்கிறேன். மற்ற கலைஞர்கள் தூரிகைகளையும் வண்ணங்களையும் பிரயோகித்து வரைகிறார்கள். நானோ இந்த மலையையே கேன்வாஸாகத்தான் நினைக்கிறேன். மரங்களையும் பூக்களையும் கொண்டு இதற்கு வண்ணமிடுகிறேன். உயிர்ப்புள்ள உயிர்கள் பூத்துக்குலுங்குகின்ற இந்த ஓவியத்தை வரைய எனக்கு என் வாழ்நாள் முழுமையும் தேவைப்படுகிறது" என்கிறார் லோயா.