வனவிலங்குகள் நிறைந்த நீலகிரி காடுகளில் வேட்டை, வன விலங்கு நடமாட்டம், வனத்துக்குள் அத்துமீறும் நபர்களைக் கண்காணிக்க எனப் பல்வேறு காரணங்களுக்காக வனத்துறையினர் தொடர் ரோந்து பணிகளில் ஈடுபடுவது வழக்கம். இதன் அடிப்படையில் கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நீலகிரி மாவட்டம் பந்தலூர் சேரம்பாடி பகுதியில் வனத்துறை பணியாளர்கள் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். சேரம்பாடி - எருமாடு காப்புக்காட்டுக்கு இடையில் உள்ள ஒரு தனியார் தோட்ட வனப்பகுதியில் ரோந்து மேற்கொள்கையில், கடுமையாயன துர்நாற்றம் வீசியுள்ளது.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
சந்தேகித்த வனத்துறை ஊழியர்கள், துர்நாற்றம் வீசும் இடத்துக்குச் சென்று பார்த்தனர். அந்த இடத்தில் ஒரு ஆண் காட்டுயானை, 4 காட்டுப் பன்றிகள், 2 கீரிகள், 3 பாம்புகள் ஒரு காகம் என உடல் கருகிய நிலையில் ஒரே இடத்தில் கூட்டமாக இறந்துகிடந்தன. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த வனத்துறை ஊழியர்கள், உடனடியாக உயர் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர். நேரில் வந்து பார்வையிட்ட அதிகாரிகளுக்கு இந்த கோரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வன விலங்குகள் உடல் கருகி உயிழந்த காரணம் குறித்து விசாரணை மேற்கொள்கையில், மின்சாரம் தாக்கியதால்தான் உயிரிழந்தன என்பதை உறுதி செய்தனர். சிங்காராவில் உற்பத்தி செய்யப்பட்டு சேரம்பாடி வழியாக கேரளாவுக்குச் செல்லும் உயர்மின் அழுத்த கோபுரத்தில் மின் கசிவு ஏற்பட்டதால், யானை முதல் காகம் வரை பல காட்டுயிர்கள் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளன என்பதைக் கண்டறிந்தனர். இது குறித்து நமது விகடன் டிஜிட்டலிலும் செய்தி வெளியிட்டிருந்தோம்.
இது குறித்து வன விலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். செய்திகள் அடிப்படையில் சென்னையில் உள்ள தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியது. இந்த வழக்கில் வனத்துறை செயலர், முதன்மைத் தலைமை வனப்பாதுகாவலர், மின்வாரிய தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர், கூடலூர் கோட்ட மாவட்ட வன அலுவலர், நீலகிரி மின்பகிர்மான வட்ட மேற்பார்வைப் பொறியாளர் ஆகியோரை எதிர் மனுதாரர்களாகச் சேர்க்கப் பட்டனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் `வீடியோ கான்ஃபரன்ஸ்' வாயிலாக விசாரணை நடைபெற்றது.

இந்த விசாரணைக்கு பின் நீதிபதி ராமகிருஷ்ணன் மற்றும் நிபுணர் குழு உறுப்பினர் சத்தியகோபால் ஆகியோர் பிறப்பித்த உத்தரவில், ``மின்சாரம் தாக்கி வன விலங்குகள் பலியாவதைத் தடுக்க உரிய வழிமுறைகளை மின் வாரியமும் வனத்துறையும் மேற்கொள்ள வேண்டும். வனப் பகுதிகளில் மின்சார ஒயர்கள் அறுந்து விழும்போதும், மின் ஒயர்கள் இருக்கும் பகுதிகளை வன விலங்குகள் கடக்கும் போதும், தானாகவே மின்சாரம் தடைபடும் வகையில், சென்ஸார் போன்ற பாதுகாப்புச் சாதனங்களைப் பொருத்த வேண்டும். தரைக்கு அடியில் மின்சார ஒயர்களைக் கொண்டு செல்ல வழிவகை செய்ய வேண்டும். இது தொடர்பாக அறிவியல், தொழில்நுட்பம் சார்ந்த நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி தீர்வு காண வேண்டும்.
மின்சாரம் தாக்கி வன விலங்குகள் பலியாகும் சம்பவங்களுக்கு, மின் வாரியம்தான் பொறுப்பேற்க வேண்டும். எனவே, வனவிலங்குகள் மின்சாரம் தாக்கி உயிழந்த இந்த விவகாரத்தில் ரூ.75 லட்சம் இழப்பீட்டுத் தொகையை மின் வாரியம், மூன்று மாதங்களுக்குள் வனத்துறைக்கு வழங்க வேண்டும். மனித-வன விலங்கு எதிர்கொள்ளல், மின்சாரம் பாய்ந்து வன விலங்குகள் பலியாவதைத் தடுக்கவும், மனித வேட்டையில் இருந்து பாதுகாக்கவும் இந்தத் தொகையை வனத்துறைப் பயன்படுத்த வேண்டும். இனி, இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க உரிய நடவடிக்கைகளை மின் வாரியமும் வனத்துறையும் எடுக்க வேண்டும். மின் வாரியம் மற்றும் வனத்துறை அதிகாரிகள் அடிக்கடி காடுகளுக்குச் சென்று ஆய்வு நடத்த வேண்டும். வன விலங்குகளைப் பாதுகாக்க தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் செய்ய வேண்டும்" என உத்தரவிட்டனர்.
தென் மண்டல பசுமைத் தீர்ப்பாயம் வழங்கிய இந்த தீர்ப்பு சூழலியல் செயல்பாட்டாளர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.