Published:Updated:

`இயற்கையைப் பாதுகாக்கும் மிகப்பெரும் சக்தி!’- அசத்தும் அரிட்டாபட்டி கிராம சிறுவர்கள்

பூச்சி, பறவைகளைக் கணக்கெடுப்பதும் இயற்கையை நேசிப்பதும் எங்களுக்குப் பிடித்திருக்கிறது என்கின்றனர் கிராமத்துச் சிறுவர்கள்.

அரிட்டாபட்டி சிறுவர்கள்
அரிட்டாபட்டி சிறுவர்கள்

மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த கிராமம்தான் அரிட்டாபட்டி. ஏழு மலைகளைச் சூழ்ந்த இந்தக் கிராமம் மதுரை மாவட்டத்தில் அறியப்படாத சுற்றுலாத்தலமாக விளங்குகிறது.

பறவைகள் பற்றி கற்றுக்கொள்ளும் சிறுவர்கள்
பறவைகள் பற்றி கற்றுக்கொள்ளும் சிறுவர்கள்

இங்குள்ள குடைவரைக் கோயில்களுக்கு பல்வேறு இடங்களில் இருந்து ஆன்மிக அன்பர்கள் வந்துசெல்கின்றனர். கோடைக்காலத்திலும் வற்றாத தர்மகுளம் இப்பகுதி மக்களின் குடிநீர் ஆதாரமாக இருந்துவருகிறது. அரிட்டாபட்டி கிராமத்தில் பல்வேறு வகையான மூலிகைச் செடிகள் உள்ளன.

நெல், கரும்பு, வாழை, கோழிக்கொண்டை பூ, செவ்வந்தி மற்றும் பல்வேறு வகையான பணப்பயிர்களும் விளைகின்றன. மலைகளைச் சுற்றி ஏராளமான சுனைகள் பறவைகளுக்கும் கால்நடைகளுக்கும் மனிதர்களுக்கும் சுவையான குடிநீரை வழங்குகிறது.

பாறையில் உணவு அருந்துதல்
பாறையில் உணவு அருந்துதல்

இப்படிப்பட்ட இயற்கைச் சூழல் காரணமாக அரிய வகை பறவை இனங்கள் இங்குள்ள மலைகளில் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கின்றன. இந்த இயற்கையான கிராமத்தின் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டும் எனக் கிராமத்துச் சிறுவர்களும் தற்போது களம் இறங்கியுள்ளனர்.

கிராமத்து மாணவர்களுக்கு தொடர்ந்து பயிற்சி அளித்துவரும் பறவைகள் பல்லுயிர் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் அரிட்டாபட்டி ரவி கூறுகையில், ``எங்கள் கிராமத்தில் தொழில்தொடங்க கிரானைட் அதிபர்கள் களமிறங்கினர். மக்கள் ஒற்றுமையாக இருந்ததால், அவர்களால் உள்ளே நுழைய முடியவில்லை. அதேபோல், மத்திய அரசு அதிகாரிகள் இரவு நேரத்தில் தொடர்ந்து 15 நாள்கள் ஆய்வு செய்தனர். அதையும் தடுத்து நிறுத்தினோம்.

விவசாய பணியில் ஈடுபடுதல்
விவசாய பணியில் ஈடுபடுதல்

இப்படித் தொடர்ந்து ஆபத்தை சந்திக்க விரும்பாமல், கிராமத்தில் உள்ள வளங்கள் மற்றும் உயிரினங்களைக் காப்பாற்ற உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளேன். இந்தநிலையில், எங்கள் கிராமத்தில் ஆர்வம் உள்ள பள்ளிச் சிறுவர்களுக்கு இயற்கையைப் பற்றியும் உடற்பயிற்சியைப் பற்றியும் கற்றுக்கொடுத்து வருகிறேன்.

இதனால் விவசாயம், பறவை காணுதல், பூச்சிகளை வகைப்படுத்துதல், இயற்கை மூலிகைகள் அறிதல், மீன் பிடித்தல், பனை விதைகள் திரட்டிக்கொடுத்தல் என்று அவர்களது விடுமுறை நாள்களை இயற்கையோடு கழிக்கின்றனர். இந்த மாணவர்கள் இயற்கையைப் பாதுகாக்கும் மிகப்பெரும் சக்தியாக உருவெடுப்பார்கள் என்ற நம்பிக்கை உண்டு.

இயற்கை விவசாயம் செய்து தற்சார்பு வாழ்க்கை வாழ்ந்து, மனிதர்களும் பிற உயிரினங்களும் வாழ வேண்டும் என்பதே எங்கள் நோக்கம் அதை நோக்கிப் பயணப்படுகிறோம்” என்றார் உற்சாகக் குரலில்.

பனை ஓலையில் உணவருந்தும் சிறுவர்கள்
பனை ஓலையில் உணவருந்தும் சிறுவர்கள்

அரிட்டாபட்டி கிராமத்து மாணவர்கள் கூறுகையில், ``பறவைகள் காணுதல், பூச்சிகளை கணக்கெடுத்தல், சிலம்பம், கராத்தே, விவசாயம் கற்றுக்கொள்வது மிகவும் பிடித்திருக்கிறது. விடுமுறையை முறையாகச் செலவு செய்வதாக திருப்தி ஏற்பட்டுள்ளது” என ஒரே குரலில் தெரிவித்தனர்.