Published:Updated:

கரூர்: அமராவதி ஆற்றுக்குள் சாக்கடைக் கால்வாய்... தாமாக வழக்கை எடுத்த உயர் நீதிமன்றக் கிளை

அமராவதி ஆற்றுக்குள் சாக்கடைக் கால்வாய்
அமராவதி ஆற்றுக்குள் சாக்கடைக் கால்வாய்

சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, இந்த வழக்கை பத்திரிகையில் வெளிவந்த செய்தியை வைத்து, தானே முன்வந்து எடுத்து நேற்று 1.12.2020 அன்று WP 17508/2020 SUO MOTO வழக்காகப் பதிவு செய்துள்ளது.

கரூர் அமராவதி ஆற்றில் சட்டவிரோதமாக ஒரு கிலோமீட்டர் நீளத்துக்கு, 15 அடி அகலத்தில், 5 அடி ஆழத்தில் சாக்கடைக்கான கால்வாய் கடந்த 25-ம் தேதி வெட்டப்படுவதாக, காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் புகார் தெரிவித்தனர். அமராவதி ஆற்றுக்குள் சாக்கடை கால்வாய் வெட்ட தொடங்கியவுடன், காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம், அமராவதி சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம், சாமானிய மக்கள் கட்சி தோழர்கள் ஆகியோர் சென்று தடுத்தும், அப்பகுதி மக்கள் ஹிட்டாச்சியை மறித்துப் போராடியும், பல்வேறு துறை அதிகாரிகளுக்கு புகார் அளித்தும் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அவர்கள் தெரிவித்தனர்.

அமராவதி ஆற்றுக்குள் சாக்கடைக் கால்வாய்
அமராவதி ஆற்றுக்குள் சாக்கடைக் கால்வாய்

அதற்குப் பதிலாக, 'உள்ளூர் அ.தி.மு.க-வினர் போராடும் மக்களை மிரட்டி அச்சுறுத்தி அப்புறப்படுத்தினர்' என்று குற்றம்சாட்டினர். அதன்பிறகு, காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்தவர்கள், மாவட்ட ஆட்சியர் மலர்விழியை அலைபேசியில் அழைத்து பேசியவுடன், மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டபடி, வாட்ஸ்அப் வழியாக அவருக்கு புகார் மனுவும், பல்வேறு புகைப்பட வீடியோ ஆதாரங்களும் அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், 'அதன்பிறகும் மாவட்ட ஆட்சியர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை' என்று காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் அதிரடியாகக் குற்றம்சாட்டினர்.

கரூர்: `அமராவதி ஆற்றுக்குள் கழிவுநீர் கால்வாய்?!' - கொதிக்கும் சமூக ஆர்வலர்கள்

இந்த விவகாரத்தைப் பத்திரிகைகள் செய்தியாக வெளியிட்டன. விகடன் இணையதளத்திலும், கடந்த 25-ம் தேதி, கரூர்: 'அமராவதி ஆற்றுக்குள் கழிவுநீர் கால்வாய்?!' - கொதிக்கும் சமூக ஆர்வலர்கள் என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டோம். அந்த செய்திக்காக விளக்கம் கேட்டு, கரூர் மாவட்ட ஆட்சியர் மலர்விழியிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டபோது, 'கரூர் பசுபதீஸ்வரர் கோயிலில் டிசம்பர் 4-ம் தேதி நடைபெற இருக்கும் குடமுழுக்கு நிகழ்வுக்காக இந்தக் கால்வாய் தற்காலிகமாக வெட்டப்படுகிறது' என்று தெரிவித்தார். அதையும் செய்தியில் குறிப்பிட்டிருந்தோம்.

அமராவதி ஆற்றுக்குள் சாக்கடைக் கால்வாய்
அமராவதி ஆற்றுக்குள் சாக்கடைக் கால்வாய்

இந்நிலையில், இது தொடர்பாகப் பல்வேறு துறை அதிகாரிகளுக்கு மனு அனுப்பிவிட்டு, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம் மற்றும் சாமானிய மக்கள் நலக் கட்சி மாவட்ட செயலாளர் சண்முகம், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையை அணுகினார். இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, இந்த வழக்கை பத்திரிகையில் வெளிவந்த செய்தியை வைத்து, தானே முன்வந்து எடுத்து நேற்று 01.12.2020 அன்று WP 17508/2020 SUO MOTO வழக்காக (சாத்தான்குளம் இரட்டைப் படுகொலை வழக்கை எடுத்ததுபோல்) பதிவு செய்துள்ளது.

இதுகுறித்து, நம்மிடம் பேசிய சாமானிய மக்கள் நலக் கட்சியின் கரூர் மாவட்டச் செயலாளர் சண்முகம்,

"கரூர் நகரத்தில் சேகரமாகும் சாக்கடையை அமராவதி ஆற்றுக்குள் விடுவதற்குதான் அந்தக் கால்வாய் வெட்டப்படுது. ஆனால், கலெக்டர் விகடன் இணையதளத்திடம், 'கோயில் குடமுழுக்கு விழாவுக்காக தற்காலிகமாக கால்வாய் வெட்டப்படுது'னு பொய்யான தகவலைச் சொன்னார். ஏற்கெனவே, அமராவதி ஆறு சாயப்பட்டறை கம்பெனிகள் திறந்துவிட்ட ரசாயனக் கழிவுகளால் கடுமையாக மாசுப்பட்டிருக்கு.

சண்முகம்
சண்முகம்

இந்த நிலையில், எரியிற தீயில் எண்ணெய்யை விட்டதுபோல், ஏற்கெனவே மாசுப்பட்ட அமராவதி ஆற்றில், கரூர் சாக்கடையைக் கொண்டு வந்து விடப்பார்ப்பது கொடுமை. அதைத் தடுக்க, நாங்க கடுமையாக முயற்சி செய்தோம். பத்திரிகைகளில் வந்த செய்திகளின் அடிப்படையில், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தாமாக முன்வந்து இந்த விவகாரத்தை வழக்காக எடுத்துள்ளது. அமராவதி ஆற்றுக்குள் அமைக்கப்படும் கால்வாய் வெட்டும் பணியை கோர்ட் மூலம் தடுத்து நிறுத்துவோம். இனியாவது அரசு மற்றும் தனியார் கம்பெனிகளால் மாசடைந்த அமராவதி ஆற்றுக்கு ஒரு விடிவுகாலம் வருதானு பார்ப்போம்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு