Published:Updated:

`யானை இறப்பு வழக்குகள் அனைத்தையும் இனி சி.பி.ஐ விசாரிக்கும்!’ - உயர் நீதிமன்றம் உத்தரவு

உயர் நீதிமன்ற மதுரைக் கிளை
உயர் நீதிமன்ற மதுரைக் கிளை

தமிழகத்தில் யானைகள் தொடர்ச்சியாக உயிரிழந்துவரும் சூழலில், யானைகள் இறப்பு தொடர்பான அனைத்து வழக்குகளையும் சி.பி.ஐ விசாரிக்க உத்தரவிட்டுள்ளது உயர் நீதிமன்ற மதுரைக் கிளை.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலைச் சேர்ந்த மனோஜ் இமானுவேல் என்பவர், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், ``யானைகளின் எண்ணிக்கை தமிழகத்தில் வேகமாகக் குறைந்துவருகிறது. அதை சமீபத்திய பல ஆய்வுகள் மூலம் அறிய முடிகிறது. தந்தம், பல், முடி என யானையின் உடல் பாகங்களுக்காக அவை கொடூரமான முறையில் கொல்லப்படுகின்றன.

யானை
யானை
படம்: தி.விஜய்

இதனால் தமிழக காடுகளில் யானைகளின் இனமே இல்லாத நிலை உருவாகும். தற்போது யானை வேட்டை தொடர்பாக விசாரித்து வரும் தேசிய வன விலங்கு குற்றத் தடுப்புப் பிரிவுடன், சி.பி.ஐ இணைந்து யானை வேட்டை தொடர்பான வழக்குகளை விசாரிக்க வேண்டும்” எனத் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

மனோஜ் இமானுவேல் போலவே, திருச்சியைச் சேர்ந்த நித்திய செளமியா என்பவர் தாக்கல் செய்திருந்த மனுவில், ``தமிழக வனப்பகுதிகளில் உள்ள அரிய பல வன விலங்குகள் தொடர்ச்சியாக வேட்டையாடப்பட்டு வருகிறது. இது தொடர்பான வழக்குகளை சி.பி.ஐ அல்லது சி.பி.சி.ஐ.டி விசாரிக்க வேண்டும்” என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இருவரது மனுவும், நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் சதீஷ்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தேசிய வனவிலங்கு குற்றத் தடுப்பு சிறப்புப் பிரிவு சார்பில் அறிக்கை ஒன்று சமர்பிக்கப்பட்டது. அதில், ``மனுதாரர்கள் தெரிவிக்கும் சம்பவங்கள் சர்வதேச அளவில் நடைபெறுகிறது. இதில் மிகப்பெரிய மாபியாக்கள் ஈடுபட்டு இதை நடத்துகின்றனர்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ``யானை இனம் நமது சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் முக்கிய பங்குவகிக்கிறது. யானை வேட்டை தொடர்பான குற்றச் சம்பவத்தில் ஈடுபடுவோர், வெவ்வேறு மாநிலங்களில் உள்ளனர். எனவே, தமிழகத்தில் யானை இறப்பு தொடர்பான அனைத்து வழக்குகளையும் சி.பி.ஐ விசாரிக்க வேண்டும். காட்டுயிர் குற்றத் தடுப்பு” என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் 23-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

யானை
யானை

இது தொடர்பாக நம்மிடையே பேசிய வன விலங்கு ஆர்வலர்கள், ``வன விலங்கு வேட்டை காரணமாக, நம்முடைய காட்டில் நாம் பல அரிய விலங்குகளைத் தொலைத்திருக்கிறோம். யானையைத் தொலைத்துவிடக் கூடாது. யானைகள் இல்லையென்றால், காடுகளே இல்லை. காட்டின் அரசன் சிங்கம் இல்லை. யானைகள் தான். ஆனால், கடந்த 10 ஆண்டுகளில், தமிழக எல்லையில் உள்ள மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் யானைகளின் எண்ணிக்கை குறைந்துவருகிறது. காடுகளின் ஆக்கிரமிப்பு, போதிய உணவு கிடைக்காததால், மனித - யானை மோதல்கள் உருவாகின்றன. இதனால் இருதரப்பிலும் உயிர்சேதம் ஏற்படுகிறது.

மேகமலை: 5 யானைகளைப் பலிகொண்ட மின்கம்பி விவகாரம்! -கிடப்பில் போட என்ன காரணம்?

சமீபத்தில் யானையை எரித்துக்கொன்ற கொடூர சம்பவத்தையும் நாம் பார்த்தோம். இவை ஒரு புறம் என்றால், சர்வதேச கடத்தல் சந்தையில், யானை தந்தத்துக்கு உள்ள மதிப்பு காரணமாக ஆண் யானைகள் வேட்டையாடப்படுவது அதிகரித்துவருகிறது. ஆண் யானைகளின் எண்ணிக்கை குறைவதால், யானை இனமே ஒரு கட்டத்தில் இல்லாமல் போய்விடும். வனக்குற்றத்துக்கான சட்டங்கள் கடுமையாக இருந்தாலும், அதை மேலும் வலுப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது.

மசினகுடி யானை
மசினகுடி யானை

உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவானது, தற்போதைய சூழலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. யானைக்கான கள்ளச்சந்தை ஏஜெனன்டுகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதால் நிச்சயம் நல்ல மாற்றம் கிடைக்கும். வனத்துறை நடவடிக்கை தாண்டிய ஒரு விசாரணை மற்றும் அவர்களுக்கான தண்டனை என்பது ஆரோக்கியமான விஷயம்” என்றனர்.

Vikatan
அடுத்த கட்டுரைக்கு